Advertisement

“இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.

“ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன்.

“ஆமா நான் கனகராஜ் தான் பேசுறேன். நீங்க யாரு சார்?”

“என்னோட பேர் மதியழகன். நான் கல்யாண விஷயம் பேச தான் கால் பண்ணுனேன். உங்க பொண்ணோட புரொபைலை மேட்ரிமோனியல்ல பாத்தேன். எங்க மகனுக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு. அதனால தான் பேசினேன். நான் என் பையனோட போட்டோ, மத்த டீட்டெயில் எல்லாம் வாட்சப்ல அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு புடிச்சிருந்தா நாங்க நாளைக்கு பொண்ணு பாக்க வரலாமான்னு சொல்லுங்க”

“கண்டிப்பா சார், நீங்க அனுப்பி வைங்க. நான் பாத்துட்டு சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.

“யாருங்க போன்ல?”, என்று கேட்டாள் வசந்தா.

“நீ முதல்ல சமையலை முடி சொல்றேன்”, என்றவர் போனைப் பார்க்க ஆரம்பித்தார். வசந்தா சமையல் செய்ய போக “அம்மா நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்”, என்று சொன்னாள் மாலினி.

“பரவால்ல, நீ ரெஸ்ட் எடு அம்மு”

“எனக்கு தலை வலி போச்சு மா. ஆமா இன்னைக்கு பஜ்ஜி சுட்டியே எனக்கு தந்தியா? போ மா, எல்லாத்தையும் உன் மகனுக்கே கொடுத்துருப்பியே? அவனும் நல்லா மொக்கிருப்பான்?”

“நான் இன்னைக்கு பஜ்ஜி சுடலை டி”

“ஏன் மா?”

“அப்பாவும் பாலாவும் நீ வந்த பிறகு சுடுன்னு சொன்னாங்க. ஆனா நீ தலை வலின்னு சொன்னதுனால ரெண்டு பேரும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க”, என்று வசந்தா சொன்னதும் நெகிழ்ந்து போனாள். அவள் கண்கள் கூட கலங்கி போனது.

“என்ன ஆச்சு டி? இன்னைக்கு இல்லைன்னா என்ன? நாளைக்கு சுட்டுத் தரேன். அப்புறம் இப்ப உனக்கு பிடிச்ச சோழாப் பூரியும் சென்னா மசாலாவும் செய்யப் போறேன். அப்பா தான் உனக்கு புடிச்சதா செய்யச் சொன்னாங்க. சரி உக்காந்து இந்த மாவை உருட்டு”, என்று சொல்லி வேலை கொடுத்தாள். இருவரும் பேசிய படியே சமையலைச் செய்தார்கள்.

அருணின் புகைப்படம் முதலில் வர அதை ஆவலாக பார்த்தார் கனகராஜ். அருண் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அவனை அவருக்கு பார்த்ததும் பிடித்துப் போனது. கற்பனையில் அவன் அருகே மகளை நிற்க வைத்துப் பார்த்தார். இருவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய படி அவனது பெயர் மற்றும் மத்த விவரங்களைப் பார்த்தார்.

அருண், வயது இருபத்தி ஆறு,  படிப்பு மெக்கானிக்கல் இன்ஜினியர், தொழில் மீன் மற்றும் இறால் பண்ணை என்று போட்டிருக்க அவருக்கு நிறைவாக இருந்தது. அருகில் பாலா அமர்ந்திருந்ததால்  போனைத் தூக்கிக் கொண்டு மாடிக்குச் சென்றவர் தனக்கு தெரிந்தவருக்கு அழைத்து அந்த மீன் மற்றும் இறால் பண்ணையைப் பற்றி விசாரித்தார். அருணைப் பற்றியும் விசாரித்தார்.

அவரும் அவருக்கு தெரிந்ததை வைத்துச் சொல்ல கனகராஜ்க்கு திருப்தியாக இருந்தது. சந்தோஷமாக மதியழகனை அழைத்து பெண் பார்க்க வரும் படி சொன்னார். அவரும் சரி என்று சொல்லி போனை வைத்தார்.

அவர் கீழே வரும் போது சமையல் தயாராக இருக்க “இப்ப எங்க போனைத் தூக்கிட்டு அலையுறீங்க? பிள்ளைங்க பசியோட இருக்காங்க. வாங்க சாப்பிடலாம்”, என்று அழைத்தாள் வசந்தா.

“வந்துட்டேன். வந்துட்டேன்”, என்ற படி அவரும் சாப்பிட அமர அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

தனக்கு பிடித்த உணவு வகைகளை மாலினியும் பாலாவும் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க பிள்ளைகள் சாப்பிடுவதை நிறைவாக பார்த்தாள் வசந்தா.

சாப்பிட்டு முடித்த பிறகு “நான் இப்ப உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்ல போறேன்”, என்று ஆரம்பித்தார் கனகராஜ்.

“என்னப்பா?”, என்று மாலினி கேட்க “சொல்றேன் டா. அதுக்கு முன்னாடி ஒரு விசயம். நீ நாளைக்கு லீவ் போடணும் சரியா?”, என்றார்.

“லீவா? நாளைக்கா? எதுக்குப்பா? நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கே?”, என்று அவரிடம் சொன்னவள் “உங்க மாப்பிள்ளை அங்க தவிச்சிட்டு இருப்பார் பா. நான் நாளைக்கு போகலைன்னா மனுஷன் கலங்கிருவார்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

“அப்பா சொன்னா கேப்ப தானே குட்டி? நீ வேலைக்கு சேந்ததுல இருந்து லீவ் போடவே இல்லையே? அப்புறம் என்ன? நாளைக்கு ஒரு நாள் போடு”

“சரிப்பா போடுறேன் போதுமா? என்ன விசயம்னு சொல்லுங்க. எங்கயாவது டூர் போறோமா?”

“இல்லை, நாளைக்கு உன்னைப் பொண்ணு பாக்க வரப் போறாங்க”, என்று அறிவித்தார். அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி திக்கென்று இருந்தாலும் “ஒரு வேளை வரப் போறது செழியனா இருக்குமோ? நான் பதில் சொல்லலைன்னு நேரடியா அப்பா கிட்டயே பேசிட்டானா?”, என்று உள்ளுக்குள் குஷியானவள் சாதாரணமாகவே அமர்ந்து விட்டாள். அவள் வெட்கத்தில் அமைதியாகி விட்டாள் என்று மற்றவர்களும் நினைத்துக் கொண்டார்கள்.

“என்னங்க சொல்றீங்க? நிஜமாவா? யார் என்ன? மாப்பிள்ளை என்ன பண்ணுறார்? அவர் பேர் என்ன?”, என்று வசந்தா ஆவலாக கேட்க அதே ஆவலை மகளின் கண்களிலும் கண்டார் கனகராஜ்.

“மாப்பிள்ளை பேர் அருண். மீன் பண்ணை வச்சிருக்காங்க. மெக்கானிக்கல் இன்ஜினீயர் படிச்சிருக்கார். வீட்டுக்கு ஒரே பையனாம்”, என்று சொல்லி மாலினி தலையில் இடியை தூக்கிப் போட்டார்.

“கடவுளே, இது என்ன புது குழப்பம்?”, என்று மனதுக்குள் அதிர்ந்து போனாள். அதை முகத்தில் காட்டாமல் இருப்பதற்குள் கஷ்டப் பட்டுப் போனாள்.

“மாப்பிள்ளை போட்டோவை நான் பாக்கணும்”, என்று சொன்னான் பாலா.

“அதெல்லாம் நாளைக்கு நேர்ல பாத்துக்கலாம். இப்ப நீ உள்ள போய் படி. மாலு, உள்ள போய் தம்பியை படிக்க வை”, என்று சொல்லி இருவரையும் விரட்டி விட்டாள் வசந்தா.

விட்டால் போதுமென்று மாலினி உள்ளே செல்ல பாலாவோ அன்னையை முறைத்து விட்டுச் சென்றான்.

அறைக்குள் வந்ததும் பாலா புத்தகத்தை எடுக்க “பாலா, உனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாரு டா. எனக்கு ரொம்ப தலை வலிக்குது”, என்றாள்.

“அப்பாடி நான் தப்பிச்சிட்டேன். உன் தலைவலி வாழ்க. எனக்கு ரெக்கார்ட் எழுதணும்”, என்ற படி அமர்ந்து விட்டான். அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து மீண்டும் அருவி உற்பத்தி ஆனது.

“கடவுளே, நான் கொஞ்சம் முந்திருக்கணும். செழியன் சொன்னப்பவே வீட்ல வந்து பேசுங்கன்னு சொல்லிருக்கணும். ஏன் சொல்லாம வந்தேன்?”, என்று மனம் குமுறினாள்.

கூடவே “அவனிடம் எப்படி சொல்வேன் இந்த விசயத்தை? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எனக்கு இன்னொருவனுடன் திருமணம் என்று சொன்னால் செழியன் என்ன ஆவான்? முதலில் என்னால் செழியனை மறக்க முடியுமா?”, என்று எண்ணி மனதுக்குள் போராட ஆரம்பித்தாள்.

அவள் மனப் போராட்டத்தை அறியாமல் சந்தோஷமாக அருணின் புகைப்படத்தை வசந்தாவிடம் காட்டிக் கொண்டிருந்தார் கனகராஜ்.

“பையன் ரொம்ப நல்லா இருக்காங்க. நம்ம அம்முவுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். நல்ல பையனா? நீங்க விசாரிச்சீங்களா? குடும்பம் எப்படி?”, என்று தாய்க்குரிய கவலையோடு கேட்டாள்.

“விசாரிச்சேன் டி. நல்ல படியா தான் சொல்றாங்க. கவலைப் படாதே, இன்னும் விசாரிப்பேன். முதல்ல அவங்க வந்து பாத்துட்டு போகட்டும். அவங்களுக்கு நம்ம குட்டிமாவை புடிச்சா மேற்கொண்டு நல்ல விசாரிக்கிறேன்”

“சரிங்க, இவங்க பெரிய இடமா? ரொம்ப கேப்பாங்களா? நம்மளால செய்ய முடியுமா?”

“இப்பவே ரொம்ப யோசிக்காதே வசந்தா. இந்த பையன் தான் நம்ம மாலினிக்கு வரப் போற மாப்பிள்ளையான்னு பாப்போம். அப்புறம் அவங்க எப்படி, அவங்க குடும்பம் எப்படின்னு எல்லாம் பாத்துட்டு முடிவு பண்ணுவோம்?”

“சரிங்க, இப்ப தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சு முதல் குழந்தை பிறந்த மாதிரி இருந்தது. அதுக்குள்ள நம்ம பொண்ணுக்கே கல்யாண பேச்சு வந்துருச்சு”, என்று அவள் பூரிப்புடன் சொல்ல மகளுக்கு திருமணம் என்றதும் அவளது சந்தோஷம் அவளை அழகாக காட்டியது.

“இப்பவும் புது பொண்ணு மாதிரி தான் டி இருக்க”, என்று அவர் சரசமாக கேட்க “யோவ், பேரன் பேத்தி எடுக்குற வயசுல பேச்சைப் பாரு”, என்று சடைத்துக் கொண்டாலும் அவள் குரலில் வெட்கமே மிளிர்ந்தது.

அதே நேரம் லேசாக மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தான் அருண். “இன்னைக்கு மா குடிச்சிட்டு வர?”, என்று கேட்டாள் அவனது தாய் கோமளா.

“லைட்டா தான் மா”

“என்ன லைட்டோ? சரி நாளைக்கு பொண்ணு பாக்க அந்த பொண்ணு வீட்ல வரச் சொல்லிட்டாங்க. அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க. நீயும் வா டா”

“நான் வரலை. நீங்க மட்டும் போயிட்டு வாங்க. அங்க போய் எதுவும் அவங்களை கஷ்டப் படுத்துற மாதிரி பேசக் கூடாது”

“இப்பவே வரப் போற பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா?”

“நான் ஏன் சொல்றேன்னு ஒரு நாள் உனக்கும் அப்பாவுக்கும் புரியும்? அப்புறம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்கணும். அப்படி அவங்க வீட்ல பேசனும். அப்பா கிட்ட சொல்லிரு. சாப்பாடு எடுத்து வை, எனக்கு பசிக்குது”, என்ற படி சாப்பிடச் சென்றான்.

அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது. காலை பதினொரு மணிக்கு பெண் பார்க்க வருவதாக மதியழகன் சொல்லியிருந்ததால் மாலினி வீடு பரபரப்பாகவே இருந்தது. ஆனால் அவள் மட்டும் ஏதோ போல இருந்தாள். மனதில் இருப்பதை மறைக்கவும் முடியாமல், வெளியே காட்டவும் முடியாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். பெற்றோர்கள் இருவரும் அதை திருமணப் பதட்டம் என்று எண்ணிக் கொண்டார்கள்.

காலையில் எழுந்து மேனேஜருக்கு அழைத்து லீவ் மட்டும் சொல்லி விட்டு படுத்துக் கொண்டாள்.

பாலா எப்போதும் போல பள்ளிக்குச் செல்ல இன்று அவனுக்கு கூட மாலினி உணவு செய்ய வில்லை. வசந்தா தான் செய்து கொடுத்தாள். அதற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் சென்றான் அவன்.

தொடரும்….

Advertisement