Advertisement

….

“அதுக்காக என்னோட காதலை நீயும் ஏத்துகிட்டு தான் ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை. ஆனா என் மனசுல இருக்குறதை சொல்லணும்னு தோணுச்சு. உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. எங்க அம்மா உங்க வீட்ல வந்து பேசுவாங்க”

…..

“பிடிக்கலைன்னாலும் சொல்லிரு. உன்னை எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ எப்பவும் போல வேலைக்கு வரலாம். இவ்வளவு நாள் விட்டுட்டு எதுக்காக என்னோட காதலைச் சொல்லுறேன்னு உனக்கு சந்தேகம் வரலாம். நான் காதலை லேட்டா சொல்லி, அதுக்குள்ள உனக்கு வேற மாப்பிள்ளை பாத்துட்டா என்னால உன் கிட்ட எதுவுமே சொல்ல முடியாம போயிரும். அதனால தான் சொல்லிட்டேன். என்னோட மனசைக் கவர்ந்த முதல் பெண் நீ தான் மாலினி. வேற யார் மேலயும் எனக்கு இவ்வளவு காதல் வந்தது இல்லை. இனியும் வராது”

…..

“என்ன மாலினி, நான் பேசிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க? பிளீஸ் உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு மாலினி. இல்லை உனக்கு யோசிக்க டைம் வேணும்னா கூட சொல்லு. ஆனா இப்படி அமைதியா இருக்காதே. பிளீஸ், உன்னோட அமைதி என்னைக் கொன்னுட்டு இருக்கு”, என்று முடித்தான்.

“சார் இப்ப எனக்கு என்ன யோசிக்கன்னு கூட தெரியலை. மூளை எல்லாம் வேலை நிறுத்தம் செஞ்ச மாதிரி இருக்கு. இது வரை காதல் அது இதுன்னு எல்லாம் நான் யோசிச்சது இல்லை. ஆனா யோசிச்சிருக்கணும்னு இப்ப புரியுது. நான் உங்களை… எனக்கு சொல்லத் தெரியலை.. என் மனசுல என்ன நினைக்கிறேன்னு கூட எனக்கு சொல்லத் தெரியலை. பிளீஸ் நான் இப்ப கிளம்பனும். வேற எதுவும் சொல்ற மனநிலைல நான் இல்லை”, என்று உண்மையாக சொன்னாள். ஏனென்றால் அப்போது அவள் மனநிலை அப்படி தான் இருந்தது.

“சரி வீட்டுக்கு போயிட்டு யோசிச்சு உன் பதிலைச் சொல்லு மாலினி. நான் வெயிட் பண்ணுறேன், எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை”, என்று அவன் சொன்னதும் அவள் எழுந்து கொண்டாள்.

“வரேன் சார்”, என்று அவன் முகம் பார்த்து உரைக்க “பாத்து போயிட்டு வா”, என்று அவன் விடை கொடுத்தான். அவனைத் திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள். அவன் முகத்தில் இருந்த ஏக்கமும், சரி என்று சொல்லேன் என்ற எதிர்பார்ப்பும், என்னை விட்டு போகாதே என்ற தவிப்பும் அவளை வாள் கொண்டு அறுத்தது.

அவன் கை பற்றி அவன் அருகே அமர்ந்து அவனுடைய தவிப்பை போக்க வேண்டும் போல் ஒரு உணர்வு எழ விதிர்த்து போனாள். அவசர அவசரமாக அங்கிருந்து ஓடியவள் பஸ்ஸைப் பிடித்து ஏறி அமர்ந்தாள். அப்படி நினைத்ததற்கு அவளுக்கே அவளை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருந்தது.

“அப்பா, அம்மா, பாலாவை விட்டுட்டு இவன் கூடவே இருக்கணும்னு எனக்கு தோணிருச்சே? நான் இப்படி நினைச்சேன்னு என் குடும்பத்துக்கு தெரிஞ்சா அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? இந்த வயசுலயும் என்னை செல்லம் கொஞ்சுற அப்பா இதைக் கேட்டா துடிச்சிற மாட்டாங்களா? இவன் என் கிட்ட வந்து காதலைச் சொல்லாம நேரடியா எங்க அப்பா அம்மா கிட்டயே கல்யாணம் பேசிருந்தா சந்தோஷமா இருந்திருக்குமே? இப்ப எனக்கு குற்ற உணர்வா இருக்கே? என்னை நம்பி வேலைக்கு விட்டவங்களுக்கு என்னால எப்படி துரோகம் பண்ண முடியும்?”, என்று கலங்கிய படி வீட்டுக்கு சென்றாள்.

அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த கனகராஜ் மகளின் கலங்கிய முகத்தைக் கண்டு திகைத்துப் போனார். அவர் வீட்டுக்கு சீக்கிரம் வந்ததைக் கூட அவள் கவனிக்க வில்லை.

“என்ன டா பாப்பா? ஒரு மாதிரி இருக்க?”, என்று அவர் கேட்க “தலை வலிப்பா. கொஞ்ச நேரம் படுக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

மகளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தவரை வசந்தா குரல் தடுத்தது. “என்ன ஆச்சுங்க இவளுக்கு? நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்தா அவ்வளவு சந்தோஷப் படுவா. இன்னைக்கு அதைக் கூட கவனிக்காம போறா”, என்று கேட்டாள்.

“பிள்ளைக்கு தலை வலி போல? நைட் சாப்பாடு அவளுக்கு பிடிச்சதா செய். சாப்பிட்டு தூங்கினா சரியாகிருவா”, என்றார் கனகராஜ்.

இருவரும் பேசியதை உள் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மாலினிக்கு கண்களில் இருந்து அருவி பெருகியது. ஏதோ தவறு செய்து விட்டோம் என்று அவள் மனசாட்சி குத்தியது. கூடவே செழியனின் ஏக்கம் சுமந்த முகமும் அவள் மனக்கண்ணில் வந்து அவளை வாள் கொண்டு அறுத்தது. இரண்டு பக்கமும் சாய முடியாமல் ஓவென்று கதற வேண்டும் போல இருந்தது.

ஆனால் எப்போது வேண்டும் என்றாலும் பாலாவோ வசந்தாவோ அறைக்குள் வரலாம் என்பதால் அழக் கூட மனமின்றி படுத்திருந்தாள். ஆனால் சத்தம் இல்லாமல் அவள் வடிக்கும் கண்ணீர் சொன்னது செழியனின் மீது அவளுக்கு இருக்கும் காதலை. ஆம் அவள் இந்த நொடி தான் தெளிவாக புரிந்து கொண்டாள். அவன் மீது காதல் இல்லை என்றால் அவளுக்கு குற்ற உணர்வும் வராது, அவன் காதலை மறுக்கப் போகிறோம் என்று எண்ணி கண்ணீரும் வராது. சாரி எனக்கு பிடிக்கலை என்று சொல்லி விட்டு  வந்திருப்பாள்.

அவன் மீது காதல் இருப்பதால் தான் அவளது கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவனுடைய காதலுக்கு அவள் சமர்ப்பிக்கும் கண்ணீரை பற்றி தெரியாத செழியன் சாரதாவிடம் “அவ கிட்ட என் மனசை சொல்லிட்டேன் மா. அவ கோபப் படலை. வெறுப்பாவும் பாக்கலை. அப்படியே அதிர்ச்சியாகிட்டா. கொஞ்சம் சரியானதும் அவ சரின்னு சொல்லுவான்னு எனக்கு தோணுது”, என்றான்.

பரீட்சை எழுதி விட்டு முடிவுக்கு காத்திருக்கும் குழந்தை போன்ற மனநிலையில் இருக்கும் அவனை வாஞ்சையாக பார்த்து விட்டு “உனக்கு நல்லது தான் டா கண்ணா நடக்கும்”, என்று ஆறுதல் சொன்னார்.

யோசித்து யோசித்து கண்ணீர் விட்ட மாலினிக்கு நிச்சயம் செழியனை மறக்க முடியாது என்று புரிய அடுத்த நாளே அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள். அவனிடம் காதலை ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய வீட்டில் பேச சொல்ல வேண்டும் என்று மனதில் முடிவு எடுத்தாள். திருமணத்திற்கு பிறகு தான் அவனிடம் தன்னுடைய காதலைச் சொல்ல வேண்டும் என்றும் அது தான் அவளது பெற்றோருக்கு அவள் செய்யும் நியாயம் என்றும் எண்ணினாள்.

இப்படி முடிவு எடுத்த பிறகு தான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அவளுடைய கண்ணில் இருந்து கண்ணீரும் நின்றது. மனதும் அமைதியாக மாறியது. அப்போது வரை எல்லாம் நல்ல படியாக தான் சென்றது. ஆனால் விதி என்பது எப்போதும் ஒன்று போல இருக்காதே. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வாழ்க்கை விதியின் வசம் தானே? அதன் படி நடக்கும் பொம்மைகள் தானே நாம் எல்லாம்? அதற்கு மாலினி மற்றும் செழியன் இருவரும் விதி விலக்கா என்ன?

அவள் மனதை சரி செய்து கொண்டு முகம் கழுவி உடை மாற்றி வெளியே வர கனகராஜ் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். பாலா ஏதோ புராஜெக்ட் செய்து கொண்டிருந்தான். வசந்தா இரவு உணவு சமைக்க வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாள். இந்த காட்சியைப் பார்த்தவாறே வந்து கனகராஜ் அருகில் வந்து அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் மாலினி.

அவரும் வாஞ்சையாக அவளை அணைத்துக் கொண்டார். “இப்ப தலைவலி போயிருச்சா குட்டிமா?”

“ஆமாப்பா”, என்று அவள் சொல்ல “அம்மா அவளுக்கு தலை வலி போயிருச்சாம்? அவளை சமைக்க கூட்டிட்டு போங்க. இங்க இருந்தா என் உயிரை வாங்குவா”, என்றான் பாலா.

“என்னது இப்ப போல சமையல் வேலையா? எனக்கு இன்னும் தலை வலி போகலை. இப்ப தான் ரொம்ப வலிக்குது”, என்றாள் மாலினி.

“பாத்தியா மா இவ நடிக்கிறதை”, என்று அவன் போட்டுக் கொடுக்க அங்கே ஒரு போர்க்களம் ஆரம்பமானது. “இது தான் என் குடும்பம். நான் இயல்பா இருந்தா தான் இவங்க எல்லாரும் இயல்பா உயிர்ப்புடன் இருப்பாங்க. காதல்ன்னு ஒரு வார்த்தை சொல்லி அதை நான் கலைக்க மாட்டேன். என்னால அப்பா முன்னாடி நின்னு ஒருத்தரைக் காதலிக்கிறேன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி, என்னோட முதல் காதல் செழியன் மேல தான். அதை என்னால மறக்கவும் முடியாது. அவனை விட்டுக் கொடுக்கவும் முடியாது. நாளைக்கே அவன் கிட்ட பேசி வீட்ல பேசச் சொல்லணும்”, என்று மனதுக்குள் அவள் பேசிக் கொண்டிருக்க கனகராஜ் போன் ஒலித்தது.

Advertisement