Advertisement

அத்தியாயம் 9 

ஆர்பாட்டம் இல்லாத

உந்தன் அழகுக்கு நான்

என்றுமே அடிமை தான்!!!

“அப்படின்னா, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கோ பா. அவளுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. இப்ப தான் அவ வீட்ல கல்யாணம் பத்தி முடிவு எடுப்பாங்க. அவங்க வேற மாப்பிள்ளை பாத்து சிக்கல் ஆகுறதுக்குள்ள நீ அவ மனசை தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லு. நான் அவங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குறேன்”, என்றார் சாரதா.

“சரி மா, நான் நாளைக்கே பேசுறேன் அவ கிட்ட”, என்று செழியன் சொன்னதும் “சரி குளிச்சிட்டு சாப்பிட வா. இன்னைக்கு என்ன சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தா என் மருமக?”, என்று கேட்டார்.

“இன்னைக்கு அவ கொண்டு வந்த சாப்பாடு எனக்கு பிடிக்காதது. ஆனா சாப்பிட்டேன்”, என்று செழியன் சொன்னதும் “கீரையா டா?”, என்று கேட்டார் சாரதா. ஏனென்றால் அவனுக்கு பிடிக்காத உணவு அது ஒன்று தான்.

“ஆமா மா, இன்னைக்கு அவளுக்கு உடம்பு சரி இல்லை. அவளுக்கு சத்தானதைக் கொடுக்கணும்னு அவங்க அம்மா செஞ்சிருப்பாங்க போல?”

“சரி சாப்பாடை என்ன செஞ்ச? உனக்கு தான் பிடிக்காதே?”

“அவ கொண்டு வந்ததாச்சே? அதான் மிச்சம் வைக்காம சாப்பிட்டேன்”, என்று சொல்லி விட்டு சிரித்தபடி அறைக்கு ஓடி விட்டான். “அடப்பாவி”, என்ற படி வாயை பிளந்தார் சாரதா.

அடுத்த நாள் எப்போதும் போல் அலுவலகம் வந்தாள் மாலினி. அன்று முழுவதுமே செழியன் பரபரப்பாகவே இருந்தான். இவனுக்கு என்ன ஆச்சு என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் கேட்க வில்லை.

அன்று மாலையில் “மாலினி”, என்று அழைத்தான்.

“சார்”

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வெளிய வர முடியுமா? இல்லை, இங்கயே கூட பேசலாம்”

அவன் முகத்தில் இருந்த தவிப்பு அவளை பாதித்ததோ என்னவோ? “நம்ம ஆபீஸ் பக்கத்துல ஒரு பார்க் இருக்கு தானே சார்? நாம அங்க போகலாம். நான் அங்க போய் வெயிட் பண்ணுறேன். நீங்க வாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

ஆனாலும் என்ன பேசப் போகிறானோ என்று எண்ணி அவளுக்கு தவிப்பாக தான் இருந்தது. பார்க் சென்றவுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் மாலினி. மாலை ஐந்து மணி ஆனாலும் வெயில் இன்னும் மிச்சமிருந்தது. அவன் வரவுக்காக காத்திருந்தாள்.

சரியாக ஐந்து நிமிடம் கழித்து அங்கே வந்த செழியன் அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான். அவள் குழப்பமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் மனதுக்குள் அவளிடம் காதலைச் சொல்ல ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க அப்போது “அப்பா, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று கேட்ட படி மதியழகன் எதிரே வந்து நின்றான் அவரது மகன் அருண்.

“என்ன அருண்? பணம் ஏதாவது வேணுமா?”, என்று கேட்டார் மதியழகன். ஏனென்றால் அவன் அதற்கு தான் வந்து நிப்பான் என்று அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் அப்படிக் கேட்டது.

“எனக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணினா இவளைத் தான் பண்ணுவேன். அவ வீட்ல போய் பேசுங்க. போட்டோக்கு பின்னாடி அவ வீட்டு அட்ரஸ் இருக்கு”, என்று அருண் சொல்ல “என்னப்பா சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் அவனது தந்தை.

“ஆமா பா, இவளைத் தான் எனக்கு பிடிச்சிருக்கு”, என்று அவன் உறுதியாக சொல்ல “சரி நாளைக்கே போய் பேசுறோம்”, என்றார் மதியழகன்.

கூடவே “இந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும் அருண்? நாம நேரடியா போய் அவங்க வீட்ல நின்னாலும் அந்த பொண்ணை எப்படி தெரியும்னு நாம காரணம் சொல்லணும்”, என்றார்.

“இதோ இவளுக்கு வரன் பாக்குறதா மேட்ரிமோனில போட்டு வச்சிருக்காங்க. இதைக் காட்டுங்க போதும். நம்ம இனம் தான். கட்டாயம் சரின்னு சொல்லுவாங்க. நான் என்ன பண்ணுறேன்னு கேட்டா பிஸ்னஸ் பண்ணுறேன்னு சொல்லுங்க. நம்ம மீன் பண்ணைல நானும் பார்ட்னர் தானே? அவங்க கண்டிப்பா என்னை மாப்பிள்ளையா தேர்ந்தெடுக்கணும். அந்த அளவுக்கு நீங்க பேசணும்”, என்றவன் மாலினியைப் பற்றி மேலும் பல தகவல்களைச் சொன்னான்.

அதே நேரம் “சார், ஏதோ பேசணும்னு சொன்னீங்க? இப்ப என்னடான்னா அமைதியா இருக்கீங்க?”, என்று செழியனிடம் கேட்டாள் மாலினி.

அவனோ சுற்றி இருந்த மக்களின் மீது பார்வையை பதித்திருந்தான். அங்கிருந்த மரங்களுக்கு கீழே இளம் ஜோடிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்களைப் போல அவனும் மாலினியும் அன்றில் பறவைகளாக வலம் வருவார்களா என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

மீண்டும் “சார், நேரம் ஆச்சு. என்னன்னு சொல்லுங்களேன்”, என்றாள் மாலினி.

அவள் அப்படிக் கேட்டதும் அவளைப் பார்த்து திரும்பினான். சட்டென்று அவளிடம் காதலைச் சொல்ல மனதில்லாமல் “ஏதாவது சாப்பிடுறியா?”, என்று கேட்டான்.

“இல்லை வேண்டாம் சார், அம்மா இன்னைக்கு பஜ்ஜி சுட்டு வச்சிருப்பாங்க. இப்ப ஏதாவது சாப்பிட்டா அதைச் சாப்பிட முடியாது”, என்று அவள் மறுத்ததும் அவளை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது. அவளும் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.

அவளது ஒற்றைப் புன்னகை அவன் இதயம் நனைத்தது. அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தது. அவளுடன் தன்னுடைய வாழ்க்கை பிணைக்கப் பட்டால் அவனது வாழ்க்கை கட்டாயம் சுவாரசியமாக இருக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அது நடக்குமா என்று குழப்பமாக இருந்தது.

அவனது பார்வை வித்தியாசமாக இருக்க அதில் தடுமாறிப் போனாள் மாலினி. “கடவுளே எப்பவும் நான் தான் இவனை சைட் அடிச்சு வைப்பேன். இன்னைக்கு இவன் என்ன இந்த பார்வை பாக்குறான்? ஒரு வேளை என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிருவானோ? சே சே இவன் எங்க? நான் எங்க? இவனுக்கு எல்லாம் நம்மளை எப்படி பிடிக்கும்? ஒரு வேளை பிடிக்கும்னு சொல்லிட்டா என்ன பண்ண? டேய் அப்படி எல்லாம் சொல்லிறாத டா. எனக்கும் உன்னைப் பிடிச்சு தான் தொலைக்குது. ஆனா என்னால அதை எல்லாம் ஒத்துக்க முடியாது. என் அப்பா செல்லத்தை எல்லாம் என்னால ஏமாத்த முடியாது. அதுக்கு நான் உன்னையவே ஏமாத்துவேன். ஐயோ நான் ரொம்ப ஓவரா தான் நினைக்கிறேன். ஒரு வேளை வேலை விஷயம் பேச வந்துருக்கானோ? என்னோட வேலையை இவன் சொந்தக்காரங்க யாருக்கிட்டயாவது கொடுக்கப் போறானோ? ஐயோ நல்ல வேலை போகப் போகுதா? என் மூளை இன்னைக்கு ஏன் இப்படி எல்லாம் யோசிக்குது? முதல்ல சீக்கிரம் இங்க இருந்து போகணும் பா”, என்று எண்ணிக் கொண்டு “சார், எதுக்கு இப்படி தயங்குறீங்க? தயவு செஞ்சு சொல்லுங்க. எனக்கு நேரம் ஆச்சு”, என்றாள்.

“ஐ லவ் யு மாலினி….”, என்று தயக்கத்துடனும் படபடப்புடனும் பட்டென்று சொல்லி விட்டான். அவன் அப்படிச் சொன்னதும் அவளுக்கு மூச்சடைத்தது போல இருந்தது.

“கடவுளே இவன் என்ன என்னை லவ் பண்ணுறேன்னு சொல்றான்? அப்படின்னா எனக்கும் இவன் மேல இருந்த உணர்வுக்கு பேர் காதல் தானா? இப்ப என்ன சொல்ல? ஒரு வேளை பொய் சொல்றானா? இல்லை நான் அப்படி நினைச்சதுனால எனக்கு அப்படி கேட்டுச்சா?”, என்று குழம்பிக் கொண்டிருந்தாள். அவன் அப்படிச் சொன்னதுக்கு எந்த உணர்வைக் கொடுக்க என்று கூட தெரியாமல் அவளுக்குள்ளே யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மாலினி.

“எனக்கு தெரியும் மாலினி. திடீர்னு நான் இப்படிச் சொன்னது உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது. ஆனா என்னோட காதலைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துருச்சு. நான் வெறும் வார்த்தையா இதை உன் கிட்ட சொல்லலை மாலினி. என் அடி மனசுல இருந்து தான் சொல்றேன். உன்னை முதல் தடவை பார்த்தப்ப எனக்குள்ள ஈர்ப்பு வந்துருச்சு. நாள் ஆக ஆக அது காதலா மாறிருச்சு. உன்னை நான் என் மனசார விரும்புறேன். ஒவ்வொரு நாளும் அதை உன் கிட்ட சொல்ல முடியாம எனக்குள்ள நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும். நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ என் கூட இருக்குற இந்த ஆபீஸ் டைம் எனக்கு பத்தவே மாட்டிக்குது. கல்யாணம் முடிஞ்சா நீ என் கூடவே இருப்பல்ல?”

…..

“உனக்கு என்னைப் பிடிக்குமான்னு எனக்கு தெரியாது மாலினி. சில நேரம் உன்னோட பார்வை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும். அது என்னோட கற்பனைன்னு நினைச்சுப்பேன். நீ என்னை காதலா பாக்கணும்னு நான் ஏங்காத நாளே இல்லை. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் மாலினி. உன்னோட அழகா, உன்னோட இயல்பா, பேச்சா இப்படி எது பிடிக்கும்னு என்னால பிரிச்சு சொல்லத் தெரியலை. உன்னை மொத்தமாவே எனக்கு அவ்வளவு பிடிக்கும்”

……

“நீ வேலைக்கு வரணும்னு நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும். உனக்கு மெயில் அனுப்ப சொல்லி அம்மா கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டேன் தெரியுமா? அதுல அம்மா என் மனசை கண்டு பிடிச்சிட்டாங்க”

Advertisement