காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.
அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை நாளும் எங்கேயும் வெளியே சென்றதில்லை. செழியனின் சொந்த ஹோட்டலுக்கு கூட அவன் சென்றதில்லை.
அவள் தான் அவனுடன் மீட்டிங் நடக்கும் போது இருக்க வேண்டும் என்று புரிந்தது. ஆனாலும் பயமாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச் சொல்ல “அவர் மன்னிப்பு கேக்க போறார். நீ கூட நிக்க போற? இதுக்கு எதுக்கு இவ்வளவு பயம்?”, என்று கேட்டான் பாலா. ஆனாலும் அவளது படபடப்பு அடங்க வில்லை.
அடுத்த நாள் எப்போதும் போல் அலுவலகம் வந்தாள். அவன் சொன்ன பைலை எல்லாம் தயாராக எடுத்து வைத்தாள்.
சரியாக பத்தரைக்கு வந்த செழியன் “கிளம்பலாமா மாலினி?”, கேட்டான்.
அவள் அவனைப் பார்த்து திகைத்து விழிக்க “நீங்க இங்க இருந்து அங்க வரணும்னா ஆட்டோ பிடிச்சு தான் வரணும். அதான் நானே உங்களைக் கூப்பிட வந்துட்டேன்”, என்றான்.
இந்த நேரத்திலும் தனக்காக பார்க்கும் அவனைக் கண்டு சந்தோஷமாக புன்னகைத்தவள் “எல்லாம் எடுத்து வச்சிட்டேன் சார். கிளம்பலாம்”, என்று அவனுடன் நடந்தாள்.
கார் அருகே வந்ததும் “முன்னாடி உக்காரணுமா? பின்னாடி உக்காரணுமா?”, என்று குழம்பினாள்.
“உக்காருங்க மாலினி”, என்று சொல்லி முன் சீட்டின் கதவை திறந்து விட அதில் ஏறி அமர்ந்தாள்.
போகும் போது அவன் எதையோ யோசித்த படியே வர அவளும் அவனை எதுவும் கேட்டு தொந்தரவு செய்ய வில்லை. ஒரு வழியாக அவர்கள் இருவரும் ஏற்கனவே புக் செய்திருந்த டேபிளில் சென்று அமர்ந்தார்கள்.
அவர்கள் சென்று பத்து நிமிடங்கள் வரை அவர்கள் வரவே இல்லை. இது செழியனுக்கு எவ்வளவு கோபத்தை வருவிக்கும் என்று அவள் உணர்ந்தே இருந்தாள். அந்த நிலைமையிலும் கூட “ஏதாவது ஆர்டர் பண்ணவா மாலினி? என்ன ஆர்டர் பண்ணட்டும்?”, என்று கேட்டான்.
“இல்லை சார், எதுவும் வேண்டாம். முதல்ல அவங்க வந்துட்டு போகட்டும்”, என்று மறுத்து விட்டாள்.
அங்கிருந்த மற்ற டேபிள்களில் லவ்வர்ஸ், குடும்பம் என்று அமர்ந்திருக்க செழியனுடன் அமர்ந்திருப்பது மாலினிக்கு எப்படியோ இருந்தது.
அடுத்த பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வந்தார் நிவாஸ். அவருடன் அவருடைய பி.ஏ, மற்றும் மேனேஜர் இருவரும் வந்திருந்தார்கள்.
நிவாஸின் பி.ஏவும் பெண்ணாக இருந்ததால் மாலினியின் சங்கடம் கொஞ்சம் அகன்றது. பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. நிவாசிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான் செழியன். கடந்த இருபது வருடமாக எந்த தவறும் நடக்க வில்லை என்று வலியுறுத்தினான். இனி இப்படி நடக்காது என்று உறுதி கொடுத்தான். அனைத்தையும் கேட்ட நிவாஸ் சமாதானமாகி விட்டார்.
பின் உணவு வரவழைக்கவா என்று செழியன் கேட்டதுக்கு மற்றொரு மீட்டிங் இருப்பதாக சொல்லி விட்டு அவர்கள் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் “அப்பாடா”, என்று மூச்சு விட்டான் செழியன். அவன் நிம்மதி சிந்தும் முகம் அவளுக்கும் நிம்மதியைக் கொடுத்தது.
“எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு. இனி இப்படி நடக்காம பாத்துக்கணும். சரி இப்பவாது ஏதாவது சாப்பிடலாமா? என்னோட பி.ஏ மேடம் முதல் முறையா என் கூட வெளிய வந்துருக்காங்க. இந்த நிகழ்வை கொண்டாடியே தீரனும்”, என்று புன்னகையுடன் சொல்ல அவளும் சிரித்தாள்.
“என்ன வேணும் மாலினி?”
“சார் என் கிட்ட கேட்டா இந்த ஹோட்டலையே கேட்டுருவேன். நீங்களா ஏதாவது சொல்லுங்க”
“நீங்க என்ன கேட்டாலும் என்னால வாங்கித் தர முடியும் மாலினி. எல்லாத்தையும் ஆர்டர் பண்ணவா?”
“எதுக்கு என் வயிறு வெடிக்கவா? கொஞ்சமா ஏதாவது சொல்லுங்க சார்”
“சரி”, என்றவன் அங்கே வந்த வெயிட்டரிடம் சில உணவுகளை ஆர்டர் செய்தான்.
உணவு வரும் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாலாவைப் பற்றிய பேச்சு வர தம்பியைப் பற்றி சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள். அவனும் புன்னகை முகமாக கேட்டுக் கொண்டிருந்தான். இருவரின் சந்தோசத்தையும் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். அருண் வேறு யாரும் அல்ல. செழியனின் தம்பி. மதியழகனின் மகன் தான்.
இருவரையும் தன்னுடைய போனில் போட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். அவன் கண்ணுக்கு இருவரும் லவ்வர்ஸ் போலவே தோன்றியது. இருவரின் முகத்தில் இருந்த புன்னகை அவனுக்கு காதலைத் தான் பறைசாற்றியது. ஏனென்றால் அவனுக்கு தெரிந்து செழியன் எந்த பெண்ணிடமும் இந்த அளவுக்கு சிரித்து பேசியதில்லை. அதனால் மாலினியை அவனுடைய லவ்வராக தான் நினைத்தான்.
மாலினியையும் பார்த்தான். அவளோ மெழுகு சிலை போல இருந்தாள். “சிரிச்சிக்கோ செழியா, இது தான் உன்னோட கடைசி சிரிப்பா இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு அவன் நேராக சென்று நின்றது தன்னுடைய நண்பனிடத்தில் தான். அந்த போட்டோவைக் காட்டி மாலினியின் அட்ரசை தேடச் சொன்னான்.
இங்கே மாலினியும் செழியனும் சந்தோஷமாக உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு விட்டு கை கழுவும் போது லேசாக அடி வயிறு வலித்தது அவளுக்கு.
“ரொம்ப சாப்பிட்டேன் போல? அதான் வலிக்குது”, என்று எண்ணிக் கொண்டு வெளியே வந்தாள்.
“போகலாம் சார்”, என்றதும் காரை அங்கே திருப்பினான். வரும் போது அமைதியாக வந்தது போல் இல்லாமல் இந்த முறை இருவரும் பேசிய படியே சென்றார்கள்.
சிறிது தூரம் சென்றதும் மாலினிக்கு வயிறு வலி அதிகமானது. அவளுக்குள் என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டாள். சட்டென்று நாள் கணக்கை எண்ணிப் பார்த்தாள். நாளைக்கு வர வேண்டிய மாதாந்திர பிரச்சனை அதிக டென்ஷன் காரணமாக இன்றே வந்து விட்டது என்று புரிந்தது.
“கடவுளே இப்பவா இப்படி ஆகணும்? இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணி அவள் முகம் சுருங்கிப் போனது. தேவையான பொருள் எல்லாம் ஆபீஸில் உள்ள அவளது கேண்ட் பேகில் இருக்க இப்போது என்ன செய்ய முடியும் அவளால்?
“என்ன ஆச்சு மாலினி? உங்க முகமே சரி இல்லை?”, என்று கேட்டான் செழியன். அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்”, என்று சொன்னவள் ஒரு மாதிரி அவஸ்தையில் நெழிந்தாள்.
“இல்லை, உங்க கிட்ட வித்தியாசம் தெரியுது. வேணும்னா ஹோட்டலுக்கு இன்னொரு நாள் போவோமா? இப்ப ஆபீஸ் போகலாம்”
“சரி சார், சரி சார். நம்ம ஆஃபிஸ்க்கே போகலாம்”, என்று அவள் அவசரமாக சொன்னதும் அவன் காரைத் திருப்பினான். இப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அவளை வித்தியாசமாக பார்த்த படி காரை ஓட்டினான் செழியன். ஆபீஸ் வந்ததும் அவசரமாக அவர்களின் அறைக்குச் சென்றாள். அவள் பின்னால் வந்தவன் “இவளுக்கு என்ன ஆச்சு? சாப்பாடு ஒத்துக்காம போச்சா?”, என்று எண்ணினான்.
உள்ளே சென்று அவன் அவனுடைய சீட்டில் அமர அவளோ தன்னுடைய ஹேன்ட் பேகைக் குடைந்து கொண்டிருந்தாள்.
“சார்”
“என்ன மாலினி?”
“இன்னைக்கு ஒரு நாள் இந்த ரெஸ்ட் ரூமை யூஸ் பண்ணிக்கவா?”, என்று கேட்டாள்.
“உங்களை எப்பவாது இதை யூஸ் பண்ணக் கூடாதுன்னு நான் சொல்லிருக்கேனா? போங்க பிளீஸ்”, என்றதும் அவசரமாக உள்ளே சென்றாள்.
உள்ளே இருந்து வந்தவள் தன்னுடைய சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள். குறுக்கு வலி உயிரை எடுக்க சாய்ந்து சாய்ந்து அதைப் போக்க முயன்றாள்.
அவனோ குழப்பமாக அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அவள் சோர்வாக தெரிய “என்ன ஆச்சு மாலினி?”, என்று கேட்டான்.
“ஆன்… ஒண்ணும் இல்லை சார்”
“ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுறீங்க? ஏதாவது பிரச்சனையா?”
அவன் தன் மீது கொண்ட அக்கறையால் தான் கேட்கிறான் என்று புரிந்தாலும் அவனுக்கு எப்படி பதில் சொல்ல என்று தெரியாமல் திணறினாள்.
அவளது திணறல் அவனுக்கு ஆர்வத்தைக் கொடுத்தது போலும். அவளையே பார்த்த படி இருந்தான். சிறிய நெற்றி, அதில் சின்ன பொட்டு, மீன் போன்ற விழிகள், பிறை போல புருவம், கூரான நாசி, எந்த வித சாயமும் இல்லாமல் சிவந்திருந்த இதழ்கள், ரோஜா வண்ண சுடிதார் என இருந்தவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.
“தேவதை போலவே இருக்க டி”, என்று அவன் மனம் கவுண்டர் கொடுத்தது.
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க “வயிறு வலிக்குது சார், வேற ஒண்ணும் இல்லை”, என்றாள்.
“ஐயோ, சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையோ? சாரி நான் நல்ல ஹோட்டல்ன்னு நினைச்சு தான் வாங்கிக் கொடுத்தேன். ஹாஸ்பிட்டல் போகலாமா?”, என்று வருத்தத்துடன் கேட்டான்.
“அதெல்லாம் இல்லை சார், இது வேற”
“வேறன்னா?”
“வேறன்னா வேற தான். ரெஸ்ட் எடுத்தா சரியாப் போகும். நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்குறேன்”, என்று சொன்னவள் அவனுக்கு பதில் சொல்லும் திராணியற்று கிளம்பியே விட்டாள்.
சிறிது நேரம் யோசித்தவனுக்கு அவள் நிலைமை புரிய தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டான்.
அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல பிரஷ்ஷாக வந்து வேலையை ஆரம்பித்தாள் மாலினி. “இன்னைக்கு உடம்புக்கு பரவால்லயா?”, என்று மட்டும் கேட்டான் செழியன்.
அவனுக்கு என்னவென்று புரிந்திருக்கிறது என்று உணர்ந்து சிவந்த முகத்துடன் “இப்ப பரவால்ல சார்”, என்று சொல்லி விட்டு கணினி புறம் திரும்பிக் கொண்டாள் மாலினி.
அன்று வீட்டுக்கு போன போது “செழியா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பா”, என்றார் சாரதா.
“சொல்லுங்க மாம்”, என்ற படி அவர் அருகில் அமர்ந்தான்.
“கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?”
“இப்ப என்ன மா அதுக்கு அவசியம்?”
“நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லைப்பா. அது அது காலாகாலத்துல நடக்கணும்”
“மாம்”
“உனக்கு மாலினியை பிடிச்சிருக்கா பா?”
“மா”, என்று அதிர்ச்சியாக அழைத்தான்.
“எனக்கு தெரியும் பா. அந்த பொண்ணு உனக்கு மனைவியா வந்தா அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. ஆனா அதுவும் சரியா நடக்கணும்ல? அவளுக்கு உன்னைப் பிடிக்குமா? அவ கிட்ட ஏதாவது பேசுனியா?”, என்று சாரதா கேட்டதும் அவன் முகம் சுருங்கிப் போனது.
அவனும் அவளிடம் பேச வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் சந்தர்பம் வரவில்லையே.
“அவ மனசுல என்ன இருக்குனு தெரியலை மா. நானும் ஒண்ணும் சொல்லலை”, என்றான்.