Advertisement

அத்தியாயம்

எந்தன் உயிருக்கு உருவம்

கொடுத்தால் கண் முன்னே

நிற்பது நீ மட்டுமே!!!

அவளது சம்பள பணத்தை எடுக்க கூடாது என்று வசந்தா கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள். அதில் மாலினிக்கு வருத்தம் தான். “பாலாவுக்காவது ஏதாவது வாங்கிக் கொடுக்குறேன் மா”, என்று அவள் கெஞ்ச “பாலாவோ, எனக்கு இப்ப எதுவும் வேண்டாம் அக்கா. தேவையான அப்ப கேக்குறேன்”, என்று சொல்லி மறுத்து விட்டான். 

அதில் அவள் முகம் வாடிப் போய் அமர்ந்திருக்க “லூசு லூசு அம்மா முன்னாடி கேட்டா நான் என்ன கேக்குறது? தனியா இருக்கும் போது கேட்டா என்ன வேணும்னு சொல்லிருப்பேன்”, என்றான். 

அதில் அவள் முகம் மலர “நிஜமாவா டா? சரி இப்ப சொல்லு. உனக்கு என்ன வேணும்?”, என்று கேட்டாள். 

அவளது சந்தோஷம் அவனை நெகிழ்த்த “சும்மா இது வேணும், அது வேணும்னு எல்லாம் கேக்க மாட்டேன். ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு போய் ட்ரீட் வை. அது போதும், அங்க போனா தான் என்ன இருக்குனு தெரியும்”, என்றான். 

“அது பெரிய விஷயமா டா? வேற ஏதாவது கேளு”

“எனக்கு சாப்பாடு தான் வேணும். அதுவும் வெரைட்டி வெரைட்டியா. உன்னால முடியுமா முடியாதா?”, என்று அவன் கேட்க “என் தம்பி வேற எப்படி இருப்பான்?”, என்று எண்ணிக் கொண்டு எப்போது செல்லலாம் என்று இருவரும் பிளான் செய்தார்கள். 

பிளான் செய்தது போல ஒரு நாள் பாலாவுக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று வசந்தாவிடம் சொல்லி விட்டு இருவரும் வெளியே சென்று விட்டார்கள். 

ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து பாலாவுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்தாள் மாலினி. அவர்களை தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை. 

“பொண்டாட்டிக்கும் மச்சினனுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தே ஆண்டி ஆகிருவ போல டா?”, என்று அவனது மனசாட்சி அவனை எச்சரித்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான். 

“பொண்டாட்டியா? மச்சினனா? நான் என்ன இந்த அளவுக்கு யோசிக்கிறேன். இனி என்னால அவ இல்லாம இருக்க முடியாது. முதல்ல அவ கிட்ட என் காதலைச் சொல்லணும். அப்புறம் தான் உறவு கொண்டாடனும்”, என்று எண்ணிக் கொண்டான். 

கூடிய சீக்கிரம் அவளிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான். அதற்கான நேரத்திற்காகவும் காத்திருந்தான். 

அப்போது ஒரு நாள் ஆபீஸில் பணி புரியும் வினோத் என்பவன் குழந்தை பிறந்ததற்காக அனைவருக்கும் கேக் வாங்கிக் கொண்டு வந்தான். 

மாலினிக்கும் செழியனுக்கும் கூட கேக் கொடுக்க பட்டது. மாலினி அதை தந்த உடனே உண்ண ஆரம்பிக்க செழியன் அவளை கண்டு சிரித்து விட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான். 

அவன் அந்த கேக்கை உண்ண வில்லை என்பதை பார்த்த மாலினி சிறிது நேரம் கழித்து “சார்”, என்று அழைத்தாள். 

“என்ன மாலினி, ஏதாவது டவுட்டா?”

“இல்லை சார்… அது வந்து…”

“என்ன? சொல்லுங்க?”

“அந்த கேக்கை சாப்பிடலையா?”, என்று அவள் கேட்டதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ஏன் உங்களுக்கு வேணுமா?”, என்று கேட்டான்.

“ஐயோ வேண்டாம். உடனே சாப்பிட்டா டேஸ்ட் நல்லா இருக்கும். லேட் ஆச்சுன்னா காஞ்சு போயிரும். அதான் சொன்னேன்”

“இப்ப என்ன இதைச் சாப்பிடணும், அப்படி தானே? சரி சாப்பிடுறேன்”, என்ற படி அதை எடுத்து உண்டான். அவளும் சிரித்து விட்டு தன்னுடைய வேலையைப் பார்த்தாள். 

“அச்சோ”, என்று அவன் சத்தம் கேட்ட பிறகு தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மாலினி. 

“என்ன ஆச்சு சார்?”

“கேக்ல இருந்த கிரீம் சட்டைல பட்டுருச்சு. நான் கிளீன் பண்ணிட்டு வரேன். நீங்க வேலையைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு அவனுடைய பெர்சனல் அறைக்குள் சென்று விட்டான். 

“ஒரு கேக் கூட சரியா சாப்பிட தெரியலை. சின்ன பிள்ளை மாதிரி சட்டைல வடிச்சிட்டு இருக்கார்”, என்று எண்ணி சிறு சிரிப்புடன் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தாள். 

அப்போது அங்கே வந்தான் பரமசிவன். அவன் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்து “என்ன ஆச்சுண்ணா?”, என்று கேட்டாள். 

“சார் இல்லையா மா?”

“ரெஸ்ட் ரூம் போனாங்க அண்ணா, ஏதாவது அவசரமா?”

“ஆமா மா, சாரோட சித்தப்பா வந்துருக்காங்க”

“உள்ள வரச் சொன்னீங்களா?”

“இல்லை மா, அவங்க வந்தா சார் அவங்களை உள்ள விடக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. அவர் அங்க வெளிய நின்னு கத்திட்டு இருக்கார். செக்யூரிட்டி நிப்பாட்டி வச்சிருக்கார். சார் கிட்ட சொல்லி கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லுங்க மா”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

குழப்பத்துடன் அவனுடைய அறைக்குச் சென்றவள் “சார், உள்ள வரலாமா?”, என்று கேட்ட படி கதவைத் திறந்து உள்ளே சென்று விட்டாள்.  

சட்டையை கழட்டி காய வைத்திருந்த செழியன் அவள் உள்ளே வருவாள் என்று எதிர் பார்க்க வில்லை. மேல் சட்டை இல்லாமல் அவன் நிற்கும் போது தான் மாலினி உள்ளே வந்தாள். சட்டை இல்லாமல் பனியனுடன் இருந்த அவனைக் கண்டு பேவென்று அப்படியே நின்று விட்டாள். தன்னையே பார்த்த படி நின்ற அவளது தோற்றம் அவனுக்கு தான் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. 

“இவ என்ன ஷாக் ஆகாம இப்படி பாத்துட்டு நிக்குறா? அப்படின்னா இவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”, என்று அவன் எண்ண அவளோ அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். 

“என்ன மாலினி?”, என்று அவன் கேட்டதும் தான் நடப்புக்கு வந்தாள். அவனது தோற்றம் அவளுக்கு லஜ்ஜையைக் கொடுத்தது. “கடவுளே ஏன் நான் இப்படி நின்னுட்டேன்? என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான்?”, என்று எண்ணி தலை குனிந்தாள். 

தன் முன் வெட்கத்துடன் தலை குனிந்த அவளது தோற்றம் அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது. 

“சாரி சார். நான் அப்புறம் வரேன்”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள். 

“என்ன ஆச்சு, சொல்லுங்க மாலினி”

“உங்க சித்தப்பா வந்துருக்காங்களாம் சார். பியூன் அண்ணா சொல்லச் சொன்னாங்க”

“சரி நான் பாத்துக்குறேன்”, என்று அவன் சொன்னதும் அவசரமாக தன்னுடைய சீட்டுக்கு வந்து அமர்ந்தாள். ஆனாலும் அவளுக்கு படபடப்பு அடங்க வில்லை. அவள் பார்த்த அவனுடைய தோற்றமே நினைவில் வந்தது. 

மார்பு முழுவதும் மெலிதாக படர்ந்திருந்த ரோமங்களும், உருண்டு திரண்டிருந்த சதைக் கோளங்களும் அவனை அழகனாக காட்டியது. முதன் முதலாக ஒரு ஆண் மகனை இப்படிக் கண்டது மாலினிக்கு கூச்சத்தை தந்தது. 

“எப்பா எவ்வளவு அழகா இருக்கான்?”, என்று நினைத்து தன்னுடைய நினைவு போகும் திசையை எண்ணி வெறுத்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். 

கம்பீரமும் வசீகரமும் கொண்ட அவனுடைய முகமும், அகலமான நெற்றியும், அடர்த்தியான புருவமும், கூர்மையான கண்களும், நேர் நாசியும், தடித்த உதடுகளும், அகன்ற தோள்களும் கவர்ச்சியான தோற்றமும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டு தான் இருந்தது. 

சிறு வயதில் படித்த கதைகளில் வரும் ராஜ குமாரனைப் போல இருந்தவனின் தோற்றம் அவள் அடி மனதில் பதிந்தது நிஜம். 

அவள் அங்கிருந்து சென்ற பின்னரும் செழியன் அசையாமல் நின்றான். அவளது பார்வை அவனை எதுவோ செய்தது. இந்த நிலைமையில் அவள் முன்பு நின்றது சிறு சங்கடத்தையும் கொடுத்தது. 

“சே, இவ முன்னாடி இப்படி உடம்பைக் காட்டிட்டு நின்னுட்டோமே? கதவை ஏன் பூட்டாம போனோம்? என்ன நினைச்சிருப்பா?”, என்று நொந்து கொண்டான். கூடவே அவளது பார்வை அவனுக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. “இன்னைக்கே அவ கிட்ட காதலைச் சொல்லிறனும். இந்த ஆள் வேற பணம் பணம்ன்னு உயிரை வாங்குறார்”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய போனை எடுத்து செக்யூரிட்டியை அழைத்தான். 

“சார்”

“அந்த ஆளை உள்ள விட வேண்டாம்”, என்று அவன் சொல்லி விட்டு வைக்க அதை அப்படியே அவரிடம் சொன்னான் செக்யூரிட்டி. வன்மத்துடன் கிளம்பிச் சென்றார் மதியழகன். மகனுக்கு திருமணம் நடத்த போவதாக கூறி பணம் கரக்க தான் வந்தார் மதியழகன். ஆனால் செழியனோ ஓடும் தண்ணீரில் நழுவும் மீனாக இருந்தான். 

வேறு சட்டையை அணிந்து கொண்டு மீண்டும் அவன் அறைக்குள் வந்த போது மாலினி அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணிக் கொண்டு “மாலினி”, என்று அழைத்தான். 

“சார்”, என்ற படி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவன் ஆரம்பிக்கும் போது அவனது போன் அடித்தது. அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “ஒன் செகண்ட்”, என்று சொல்லி விட்டு போனை எடுத்துப் பேசினான். 

சிறிது நேரம் பேசி விட்டு வந்தவன் அவளைப் பார்த்தான். “சார், ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா, மாலினி”

“என்ன ஆச்சு சார்?”

“நம்ம பேக்டரில இருந்து தேங்காய் எண்ணைய் எக்ஸ்போர்ட் ஆகுதுல்ல?”

“ஆமா சார், நேத்து கூட வீ. கே கம்பெனிக்கு லோட் போச்சு”

“ஆமா, அதுல குவாலிட்டி சரியா இல்லையாம். சுத்தமா இல்லாம கொஞ்சம் டஸ்ட் இருக்குனு சொல்றாங்க. குவாலிட்டி கண்ட்ரோல் சுந்தர் சரியா செக் பண்ணலை போல?”

“சார், இப்ப அவங்க என்ன சொல்றாங்க?”

“இத்தனை நாள் நாம நல்ல புராடக்ட் கொடுத்ததுனால பெரிய பிராப்ளம் இல்லை. ஆனா அவங்களோட எம்.டி கிட்ட நாம பேசனுமாம். இன்னொன்னு அந்த லோடை திருப்பி வாங்கிட்டு வேற லோட் அனுப்பனுமாம்”

“அப்படின்னா ரொம்ப லாஸ் ஆகுமே சார்?”

“டிரான்ஸ்போர்ட் செலவு அதிகமாகும். வேற பெருசா ஒண்ணும் ஆகாது”

“பழைய லோடை என்ன பண்ண சார்?”

“அதை சுத்தப் படுத்தி வேற ஆள்க்கு கை மாத்தி விடணும். ரெட்டை வேலை. நாளைக்கு அவங்க ஓனர் கிட்ட போய் பேசணும். மன்னிப்பு கேக்கணும். வாங்க மாலினி, ஆயில் பேக்டரில கொஞ்சம் வேலை இருக்கு”, என்று அழைத்தான். 

அவளும் அவசரமாக சென்றாள். அவன் முகத்தில் இருந்து அவளால் எதுவும் கண்டு பிடிக்க முடியாவில்லை. ஆனால் அவன் கடுங்கோபத்தில் இருப்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. 

ஆயில் மில்லுக்கு சென்ற போது அந்த சுந்தர் என்பவன் போனைக் குடைந்து கொண்டிருக்க அடுத்த நொடி எந்த பார பட்சமும் பார்க்காமல் அவனை வேலையை விட்டுத் தூக்கினான். 

அவசரமாக அங்கே வந்த மேனேஜர் அவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டரைக் கொடுத்தார். வேறு ஒரு ஆளைப் போடச் சொல்லியும் அவரை ஏவி விட்டான். பின் அங்கு வேலை செய்யும் மற்றவர்களையும் எச்சரித்து விட்டே அங்கிருந்து கிளம்பினான். 

அவனது வேகத்தை மிரண்டு போய் பார்த்தாள் மாலினி. அவன் செய்தது அனைத்தும் சரியே என்று தான் அவள் மனது எண்ணியது. கூடவே எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நாளைக்கு அந்த ஒனரிடம் சென்று மன்னிப்பு தரும் படி பேச வேண்டும் என்பது அவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதும் புரிந்தது. 

எப்போதுமே கம்பீரமாக இருப்பவன் இன்னொருவரிடம் தலை குனிவது எவ்வளவு கஷ்டம் என்று அவனுக்காக கவலைப் பட்டாள். 

அன்று மாலை போகும் போது “மாலினி”, என்று அழைத்தான் செழியன். 

“சார்”

“நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு இங்க பக்கத்துல இருக்குற பார்க் ஹோட்டல்க்கு வந்துறீங்களா? மீட்டிங் அங்க வச்சு தான்”

“நானா சார்?”

“ஆமா, நீங்க தானே என்னோட செக்கரட்டரி? அப்படின்னா நீங்க தானே வரணும்? பைல் எல்லாம் நீங்க தான் மெயிண்டெயின் பண்ணுறீங்க? யாருக்கு எவ்வளவு ஸ்டாக் போகுதுன்னு உங்களுக்கு தானே தெரியும்?”

“ஆமா சார், சரி நான் வரேன்”, என்று அரை மனதாக சொல்லி விட்டுச் சென்றாள். 

Advertisement