Advertisement

“அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை வியப்பாக பார்த்தாள். ஒரு எம்.டி தன்னிடம் கெஞ்சுவதா என்று எண்ணிக் கொண்டு “சரி சார், நான் வெளிய வரேன்”, என்றாள். 

அவள் அப்படிச் சொன்னதும் ஆனந்தமாக அதிர்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும். “ஹேய் மாலினி நிஜமா தான் சொல்றீங்களா?”, என்று வியப்பாக கேட்டான். 

“நிஜமா தான் சார். வெளிய போய்ட்டே வீட்டுக்கு போய்க்கிறேன். ஆனா எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்”

“என்ன செய்யணும்? சொல்லுங்க”

“நீங்க டிரீட்க்கு உங்க மனைவி, குழந்தையை அழைச்சிட்டு வரணும். பெரிய மேடமும் வந்தா இன்னும் நல்லா இருக்கும்”

“வாட்?”, என்று கேட்டவன் அதிர்வாக அவளைப் பார்த்தான்.

அவன் அதிர்ச்சி அவளுக்கு திகைப்பைத் தான் தந்தது. “என்ன ஆச்சு சார்? என் கூட எல்லாம் அவங்க வர மாட்டாங்களா? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?”

“ஐயோ மாலினி.. மாலினி… ஹா ஹா”

“என்ன ஆச்சு சார்?”

“எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு யார் உங்களுக்கு சொன்னது?”, என்று கேட்ட படி அவளைப் பார்த்தான். பார்வை அவளிடம் என்றாலும் அவன் சிந்தனையோ “அப்ப இத்தனை நாள் என்னை கல்யாணம் ஆனவன்னு தான் நினைச்சியா? அப்படின்னா உன்னோட பார்வை என்னை ஆராய்ச்சியா தான் பாத்துச்சா? உன் மனசுல என் மேல காதல் இல்லையா?”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டான். 

“என்ன சார் சொல்றீங்க? அப்படின்னா உங்களுக்கு கல்யாணம் ஆகலையா?”, என்று அதிர்வுடன் கேட்டாள் மாலினி. 

“முதல்ல நீங்க சொல்லுங்க மாலினி. எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு யார் புரளியை கிளப்பினது? இதுல குழந்தைன்னு வேற சொல்றீங்க? எனக்கு இப்ப இருபத்தி ஏழு வயசு. அப்படின்னா நான் இருபத்தஞ்சு வயசுலே கல்யாணம் பண்ணிருப்பேன்னு நினைக்கிறீங்களா?”

“அதானே இவ்வளவு சின்ன வயசுல எப்படி கல்யாணம் பண்ணிருந்துருப்பான்?”, என்று எண்ணியவள் “யாரும் சொல்லலை சார். அன்னைக்கு தோட்டதுல நின்னு பேசிட்டு இருந்தது…. ?”, என்று தயங்கிய படி கேட்டாள். 

“அது என்னோட ஃபிரண்ட். அவ பேர் விஜி. என் கூட தான் காலேஜ் படிச்சா. அந்த குழந்தை அவளோட குழந்தை. அவ எனக்கு தங்கச்சி மாதிரி. அவ நாங்க படிச்ச காலேஜ்ல தான் இப்ப லெக்சரரா இருக்கா. இந்த வருஷம் அலுமினி மீட்டிங் இருக்கு. வரச் சொல்லி சொல்றதுக்காக வந்தா”, என்றதும் அவள் முகத்தில் சந்தோசத்துடன் கூடிய ஒரு தேஜஸ் வந்தது. அதை ஆவலாக பார்த்தான் செழியன். 

“எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னதுக்கு உனக்கு எதுக்கு டி இவ்வளவு சந்தோஷம்? உன் மனசுல என்ன தான் டி இருக்கு? உனக்கு என்னை கொஞ்சம் பிடிக்கும்னு தெரிஞ்சா கூட என் மனசை சொல்லிருவேனே? ஆனா நீ என்ன நினைக்கிறேன்னு தெரியாம என் மனசை சொல்லி நீ பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது”, என்று மனதுக்குள் பேசிக் கொண்டான். 

“நிஜமாவே அவங்க உங்க பிரண்டா சார்?”, என்று கண்கள் மின்ன கேட்டாள். 

“ஆமா”, என்று அவன் சொன்னதும் அவனைக் கண்டு புன்னகைத்தாள். 

“சாரி சார், நான் அப்படி நினைச்சதுக்கு”

“சரி இப்ப உண்மை கிளியர் ஆகிருச்சா? ட்ரீட் ஓகே தானே? வெளிய வறீங்களா? என் கூட தனியா வர ஒரு மாதிரி இருந்தா நான் அம்மாவை வேணும்னா வரச் சொல்றேன்”

“வேண்டாம் சார்”

“என்ன ஆச்சு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வறேன்னு சொன்னீங்க?”

“முதல் நாள் மேடம் என்னை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தினதுக்கே எல்லாரும் மேடம் என்ன உங்க அத்தையான்னு கேட்டு என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. இதுல நான் உங்க கூட வெளியே வந்தேன்னு தெரிஞ்சா கண்டிப்பா ஏதாவது நினைப்பாங்க. முதல்ல நான் ஏன் வறேன்னு சொன்னேன் தெரியுமா? உங்க பேமிலியோட வந்தா தப்பா தெரியாது. இப்ப வேண்டாமே”, என்று தன்மையாக மறுத்தாள். 

“சரி வெளிய வேண்டாம். இங்க ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா? இன்னைக்கு லஞ்ச் என்னோட பொறுப்பு? பிளீஸ்”, என்று அவன் கேட்டதும் அதற்கு மேல் மறுக்க தோன்ற வில்லை. 

“அப்படின்னா நான் கொண்டு வந்த வெஜ் பிரியாணியை யார் சாப்பிடுறது?”, என்று மறைமுகமாக தன்னுடைய சம்மதத்தைச் சொன்னாள். 

“அதான் நான் இருக்கேனே? நான் சாப்பிட்டுக்குறேன்”

“உங்களுக்கு கொண்டு வந்ததை நீங்க சாப்பிடுவீங்க. எனக்கு கொண்டு வந்ததை….?”

“கமான் மாலினி, நான் ஒண்ணும் சாப்பிடவே முடியாத அளவுக்கு எதையும் ஆர்டர் பண்ணப் போறதில்லை. எல்லாத்தையும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்”, என்றதும் அரை மனதாக தலையசைத்தாள். 

இது வரை இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது இல்லை. அவள் அவளுடைய டேபிளில் அமர்ந்து சாப்பிட அவனோ அவள் கொடுக்கும் உணவை வாங்கிக் கொண்டு அவனுடைய டேபிளில் அமர்ந்து சாப்பிடுவான். இன்று முதல் முறை அவனுடன் அமர்ந்து சாப்பிடப் போவது எப்படியோ இருந்தது. அதை நினைத்த படியே வேலையை செய்து கொண்டிருந்தாள். 

அன்றைய மதிய உணவு இடைவேளையில் அவன் ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்தது. “மாலினி, வாங்க சாப்பிடலாம்”, என்று அழைத்ததும் தயக்கத்துடன் எழுந்தாள். 

அறையின் ஓரத்தில் கிடந்த டேபிளை எடுத்து போட்ட செழியன் உணவு வகைகளை அதில் வைத்தான். மாலினி தட்டுகளை கழுவிக் கொண்டு வந்தாள். கை கழுவிவிட்டு வந்த செழியன் உணவு பார்சலைப் பிரித்தான். அதில் சில்லி பரோட்டா, பிரியாணி, ஐஸ்கிரீம் என்று இருந்தது. 

அதைப் பார்த்ததும் மாலினிக்கு நாவில் எச்சில் ஊறியது. “சார் இதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள். 

“அது… அது வந்து… எப்படியோ தெரியும். இப்ப வாங்க சாப்பிடலாம்”, என்று மழுப்பினான். 

“பிளீஸ் சொல்லுங்களேன்”, என்று அவள் கண்ணைச் சுருக்கி உதடு குவித்து கேட்க அவளது குவிந்த உதடுகளை தன்னுடைய விரலால் தீண்ட ஆசை கொண்டான். 

அதை அடக்கி விட்டு “சொல்லிருவேன், ஆனா நான் சொன்னா நீங்க வருத்தப் படுவீங்க. இல்லைன்னா கோபப் படுவீங்க”, என்றான். 

“நான் வருத்தமும் பட மாட்டேன், கோபமும் பட மாட்டேன். பிளீஸ் சொல்லுங்க”

“சும்மா கெஸ் பண்ணி தான் சொன்னேன் மாலினி”, என்றதும் அவள் சந்தேகமாக பார்த்தாள். 

“நிஜமாவே உங்களுக்கு இது பிடிக்கும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்”

“அந்த கெஸ்ஸும் எப்படி சரியா தெரிஞ்சது?”

“உங்களுக்கு பிடிக்காத சாப்பாடுன்னு ஏதாவது இருக்கா மாலினி?”, என்று அவன் கேட்டதும் அவள் திகைத்து போய் அவனைப் பார்த்தாள். “என்ன இவன் என்னை இப்படி அசிங்க படுத்திட்டான்?”, என்று எண்ணி அவனையே பேவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். 

“நீங்க முதல் நாளே உங்களுக்கு சாப்பிட பிடிக்கும்னு சொன்னீங்க. அதை வச்சு தான் முடிவு பண்ணேன், உங்களுக்கு எல்லாமே பிடிக்கும்னு”, என்றதும் “உண்மையிலே இவன் என்னை திண்ணிப் பண்டாரம்னு நினைச்சிட்டானே?”, என்று எண்ணி அவளுக்கு சங்கடமாக இருந்தது. 

அவள் அமைதியாக இருக்க “சாரி, நான் நிஜமாவே உங்களை கிண்டல் எல்லாம் பண்ணலை. பொதுவாவே இந்த உணவு எல்லாம் எல்லாருக்குமே பிடிக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் தான் ரொம்ப பிடிக்கும்”, என்று அவன் தணிவாய் பேசியதும் கொஞ்சம் தெளிந்தாள். ஆனாலும் அவள் சாப்பிடாமலே இருக்க அவள் புறம் உணவை நகட்டி வைத்தவன் “பிளீஸ் சாப்பிடுங்க”, என்றதும் உண்ண ஆரம்பித்தாள். 

இருவரும் பேசிய படியே சாப்பிட்டார்கள். ஆர்டர் செய்த உணவை உண்டதால் அவள் கொண்டு வந்திருந்த வெஜிடபுள் பிரியாணி எடுக்கப் படாமலே இருந்தது. 

“நான் கொண்டு வந்த சாப்பாடு வீணா போச்சு”, என்று அவள் சொல்ல “அது எல்லாம் வீணாகாது. இப்ப இது காலி ஆகணும். அவ்வளவு தானே?”, என்றவன் அங்கிருந்த போனில் இருந்து பியுனை அழைத்தான். 

பியூன் வரும் போது மாலினி அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்திருந்தாள்.

உள்ளே வந்த பரமசிவன் “சார் கூப்பிடீங்க?”, என்று கேட்டான்.

“சாப்பிட்டீங்களா பரமசிவன்?”

“இன்னும் இல்லை சார், இனி தான் போகணும்”

“வீட்ல இருந்து எடுத்துட்டு வந்துருக்கீங்களா?”

“இல்லை சார், நம்ம கேண்டீன்ல தான் சாப்பிடணும்”

“அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. இன்னைக்கு ஒரு நாள் இதுல இருக்குற சாப்பாடை சாப்பிடுங்க”, என்று சொல்லி பாத்திரத்தைக் கொடுத்தான். 

எம்.டி சொல்லி அதை கேட்காமல் இருப்பானா என்ன? அவசரமாக அதை வாங்கிக் கொண்டு சென்றவன் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்தில் உணவு டப்பாக்களையும் கழுவி கொண்டு வந்து கொடுத்தான். 

அது மாலினி செழியனுக்கு கொண்டு வந்த உணவு என்று தெரிந்தால் அவன் எல்லாருக்கும் விஷயத்தை சொல்லி விடுவான் என்பதால் அதைப் பற்றி பரமசிவனிடம் செழியன் மூச்சு கூட விடவில்லை. 

“உணவு வீணாகவில்லை, சந்தோஷமா?”, என்று கேட்டான் செழியன். அவளும் அவனைக் கண்டு அழகாக புன்னகைத்தாள். 

அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும் போது “தேங்க்ஸ்”, என்று சொன்னாள் மாலினி. 

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும்?”, என்ற படி அவள் பளிச்சென்று புன்னகைக்க அவன் தான் அவள் சிரிப்பில் சிதறிக் கொண்டிருந்தான். வீட்டுக்கு சந்தோஷமாக வந்த மாலினியைக் கண்டு மற்றவர்களும் சந்தோஷப் பட்டார்கள். முதல் மாதம் சம்பளம் வாங்கியதால் தான் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அனைவரும் நினைக்க மாலினியே கூட அப்படி தான் நினைத்தாள். 

ஆனால் அவள் உள் மனதோ செழியனுக்கு திருமணம் ஆக வில்லை என்பதால் தான் இந்த சந்தோஷம் என்று எடுத்துரைத்தது. ஆனால் அதை மாலினி ஒத்துக் கொள்ள வில்லை.  

தொடரும்….

Advertisement