Advertisement

அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும் தெரியாமல் குழம்பினான். அவள் மனது தனது பக்கம் லேசாக திரும்பினால் கூட காதலைச் சொல்லலாம் என்று காத்திருந்தான். 

மாலினி தெளிவாக இருந்தாள். வீட்டில் பார்ப்பவர்களுக்கு தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்று. அதையும் மீறி செழியனை சைட் அடிப்பதையும் அவள் நிறுத்த வில்லை. தவறு செய்கிறேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டே அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்தாள். 

அழகை ரசிக்கிறது தப்பு இல்லை என்று அவளே அவளுக்குச் சொல்லிக் கொண்டாள். ஆனால் அவன் அவள் மனதில் அடியாழத்தில் பதிந்து விட்டான் என்பதை அவள் உணரவில்லை. 

அப்போது ஒரு நாள் அவள் ஆபீஸ் உள்ளே நுழையும் போது கம்பெனி தோட்டத்தில் ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தான் செழியன். அவன் அருகே ஒரு இளம் பெண் புன்னகையுடன் நின்றிருந்தாள். 

மாலினி மூவரையும் பார்த்ததும் திகைத்துப் போனாள். மாலினியின் கண்களுக்கு அவன் குடும்பமாக நிற்பது போல தோன்றி வைத்தது. “இவனுக்கு கல்யாணம் ஆகிருச்சா? இவங்க தான் இவனோட மனைவியா? குழந்தை வேற இருக்கா?”, என்று அவள் மனம் கூம்பி போனது. அவன் அவளைக் கவனிக்கவில்லை. 

“எம்.டிக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆகலைன்னா என்ன? உன் வேலையைப் பாரு”, என்று மனசாட்சி குரல் கொடுக்க அமைதியாக அவர்களை கடந்து சென்று விட்டாள். ஆனாலும் அந்த நினைவு அவளை அதிகம் இம்சித்தது. 

“போயும் போயும் கல்யாணம் ஆனவனையா இத்தனை நாள் சைட் அடிச்சிருக்கேன்? சரி விடு. இன்னும் அவனை நினைக்க கூடாது. ஆனா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? எல்லாம் சரியாப் போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு மனதைத் தேற்ற முயன்றாள். ஆனாலும் ஏதோ ஒரு பாரம் அவள் மனதைப் போட்டு அழுத்தியது. 

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தான் செழியன். அவன் முகம் மலர்ந்து இருக்க மாலினி முகமோ சோர்ந்து இருந்தது. 

“குட் மார்னிங் சார்”, என்றாள். 

“குட் மார்னிங் மாலினி, என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா? ஒரு மாதிரி இருக்கீங்க?”

“உன்னை உன் குடும்பத்தோட பாத்ததுனால தான் டா”, என்று எண்ணிக் கொண்டு “ஒண்ணும் இல்லை சார், சும்மா தலை வலி. அவ்வளவு தான்”, என்றாள். 

“தலைவலியோட ஏன் வேலைக்கு வந்தீங்க? ரெஸ்ட் எடுக்கலாம்ல?”, என்று உண்மையான அக்கறையில் கேட்டான். 

“பரவால்ல சார், கொஞ்ச நேரத்துல சரியாகிரும்”, என்று அவள் சொல்ல அதன் பிறகு அவன் அவளை எதுவும் தொந்தரவு செய்ய வில்லை. 

அன்று மாலை வரை ஒரு மாதிரி தான் இருந்தாள் மாலினி. அவனுக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. அவனிடம் அது உங்க மனைவி, பிள்ளையா என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதைக் கேட்பது அதிகப் படி என்பதால் அமைதியாக இருந்தாள். 

வீட்டுக்கு முகம் சோர்ந்து வந்தவளை வித்தியாசமாக பார்த்தான் பாலா. “என்ன இன்னைக்கு ரொம்ப வேலையா?”, என்று கேட்டாள் அவளது அம்மா வசந்தா. 

“இல்லை மா, தலை வலிக்குது. ஒரு டீ கொடு”, என்று சொல்லி விட்டு தளர்ந்து போய் அமர்ந்தாள். 

“இரு எடுத்துட்டு வரேன். டீ குடிச்சிட்டு அப்பா வர வரைக்கும் தூங்கு”, என்று சொல்லி விட்டு வசந்தா சென்றதும் “என்ன ஆச்சுக்கா? உன் ஹீரோ உன்னை திட்டிட்டாரா? திடீர்னு எதுக்கு தலைவலி?”, என்று கேட்டான் பாலா. 

“இன்னும் அவரை என் ஹீரோன்னு சொல்லாதே டா. அவர் இன்னொரு ஹீரோயின்க்கு ஹீரோ ஆகிட்டார்”, என்று சலிப்புடன் சொன்னாள்.

“என்னக்கா சொல்ற?”

“ஆமா டா, அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு. இன்னைக்கு தான் அவங்களை ஆஃபிஸ்க்கு கூட்டிட்டு வந்தார்”

“நிஜமாவா?”

“ஆமா”

“சரி சரி விடு. ஜோதிகா நயந்தாராவுக்கு கல்யாணம் ஆனப்ப எனக்கும் இப்படி தான் இருந்துச்சு”, என்று அசால்ட்டாக சொல்லி விட்டு அவன் செல்ல “அதானே, யாருக்கு கல்யாணம் ஆகி பிள்ளை இருந்தா எனக்கு என்ன?”, என்று மனதை தேற்றிக் கொண்டாள். 

ஆனாலும் “இவன் ஏன் இவ்வளவு சின்ன வயசுலே கல்யாணம் பண்ணினான்?”, என்று எண்ணம் தான் அவளுக்கு வந்து தொலைத்தது. அன்று உறக்கம் வராமல் தவித்தாள். அடுத்த நாள் வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் அவள் மனது அவனது அழகை, கம்பீரத்தை, ரசிக்க தான் தோன்றியது. 

ஆனால் “இன்னொருத்தியோட புருஷனை திரும்பிப் பாக்காதே”, என்று அவள் மனசாட்சி அவளை எச்சரித்துக் கொண்டிருக்க இரண்டு மனங்களுடன் போராடிக் கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்த செழியனுக்கு அவள் இயல்பாக இல்லை என்று புரிந்தது. “என்ன ஆச்சு மாலினி? இன்னும் தலை வலி சரியாகலையா? இன்னைக்கும் ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டான். 

“ஐயோ இவன் என்னையா கவனிச்சிட்டு இருக்கான்?”, என்று திடுக்கிட்டவள் “ஒண்ணும் இல்லை சார், சும்மா தலை வலி”, என்றாள். 

“ரெஸ்ட் எடுத்துட்டு வேணா வேலையைப் பாருங்க. ஹாஸ்பிட்டல் போயிருக்கலாமே?”

“பரவால்ல சார்”

“இதை இப்படியே வைக்க கூடாது மாலினி. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க”

அவளுக்கும் வீட்டுக்கு செல்வது தான் சரி என்று பட்டது. இங்கேயே இருந்தால் அவனைப் பற்றி யோசித்து யோசித்து தலை வலி தான் அதிகம் ஆகும் என்று யோசித்தாள். ஆனாலும் லீவ் எடுக்க மனதில்லை. 

“இந்த மெயில் முக்கியம்னு சொன்னீங்க சார். நான் இதை அனுப்பனும்”, என்றாள் மாலினி. 

“ஆனா தலை வலியோட எப்படி வேலை செய்வீங்க? சரி சரி சீக்கிரம் அனுப்பிட்டு வீட்டுக்கு கிளம்புங்க”

“லீவ் எல்லாம் வேண்டாம் சார்”

“பரவால்ல, சம்பளம் எல்லாம் குறைக்க மாட்டேன்”

“இல்ல சார் அது வந்து….”

“நானும் இப்ப கிளம்பிருவேன். இங்க தனியா என்ன பண்ண போறீங்க?”

“நீங்க கிளம்புறீங்களா சார்?”

“ஆமா ஒரு பங்ஷன் வீடு இருக்கு”

“அப்படின்னா நானும் இந்த மெயில் அனுப்பிட்டு கிளம்புறேன் சார்”, என்று சொன்னவளை வியப்பாக பார்த்தான். 

சொன்ன அவளுக்கும் ஏன் அப்படிச் சொன்னோம் என்று வியப்பு தான். அவன் வீட்டுக்கு போகச் சொன்ன போதெல்லாம் போக வில்லை என்று சொன்னவள் அவனும் செல்கிறான் என்றதும் வீட்டுக்கு போகிறேன் என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்? அவளுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது. ஆனால் அவன் இல்லை என்றால் அவளுக்கும் அங்கே இருக்க பிடிக்க வில்லை என்பது எதனால் என்று குழம்பிப் போனாள். பின் மனதை சரி செய்து மெயிலை அனுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டாள். 

இன்றோடு மாலினி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. அவளுக்கு அன்று சம்பளமும் ஏறி இருந்தது. “அக்கவுண்ட் செக் பண்ணிட்டீங்களா மாலினி? சம்பளம் கிரெடிட் ஆகிருச்சா?”, என்று கேட்டான் செழியன். 

“பாத்தேன் சார். சம்பளம் ஏறிருச்சு. ரொம்ப தேங்க்ஸ் சார்”

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்? நீங்க வேலை பாக்குறீங்க, சம்பளம் வாங்கிருக்கீங்க. நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்”

“நீங்க எதுக்கு சார் தேங்க்ஸ் சொல்றீங்க?”

“நீங்க வந்ததுக்கு அப்புறம் என்னோட வேலைப் பளு எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா? அதை விட முக்கியம்? என்னை மதியம் சாப்பிட வைக்கிறது”

“எனக்கு எடுத்துட்டு வரதுல இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன். இது பெரிய விஷயமா?”

“என்னது கொஞ்சம் எடுத்துட்டு வறீங்களா? எனக்குன்னு தனி டிபன் பாக்ஸ்ல எடுத்துட்டு வரீங்க. அது பெரிய விஷயம் இல்லையா? என்னை சாப்பிட வைக்கிறதுல அம்மாவுக்கு உங்க மேல கொள்ளை பிரியம்”

“அவங்க முதல் நாளே உங்களைப் பாத்துக்கணும்னு என் கிட்ட கேட்டுக்கிட்டாங்க சார்”, என்று சொன்னவளுக்கு “எதுக்கு இவங்க மனைவி சாப்பாடு கொடுத்து விடுறது இல்லை?”, என்ற கேள்வி வந்தது. ஆனால் அதற்கு விடை காண அவள் முயல வில்லை. 

“இப்ப பாத்துக்குற நீ என்னை வாழ்க்கை முழுக்க பாத்துக்குவியா டி? உன் கையால நான் காலம் முழுக்க சாப்பிடணும், கிடைக்குமா? எனக்கு மனைவியா வருவியா?”, என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கி விட்டு “அம்மாவுக்காகன்னாலும் நீங்க என்னை கவனிச்சிக்கிறதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்”, என்றான். 

“சரி மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டே இருக்க வேண்டாம் சார்”, என்று சொல்லி புன்னகைத்தாள். 

“சரி தேங்க்ஸ் வேண்டாம். பட் நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும். ஈவினிங் ட்ரீட் தரேன், உங்களால வெளிய வர முடியுமா? இல்லைன்னா என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. இங்கயே ஆர்டர் பண்ணுறேன்”, என்று ஆர்வமாக கேட்டான். இத்தனை நாள் தன்னை சாப்பிட வைத்தவளை ஒரு பொழுதாவது சாப்பிட வைக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. 

அவன் அவளை மட்டும் வெளியே அழைத்திருந்தால் என்ன நினைத்திருப்பாளோ? ஆனால் பிடித்ததை இங்கேயே ஆர்டர் செய்கிறேன் என்று சொன்னதும் அவளால் அவனை தவறாக நினைக்க முடியவில்லை. 

“அதெல்லாம் வேண்டாம் சார். நீங்க சொன்னதே போதும். அது மட்டுமில்லாம நான் நல்லா வொர்க் பண்ணுறேன்னு எனக்கு இந்த மாசம் ட்ரீட் வச்சா அடுத்த மாசம் எனக்கே திமிர் வந்து வேலை சரியா செய்ய மாட்டேன் சார்”, என்று தன்மையாக மறுத்தாள். 

Advertisement