Advertisement

அத்தியாயம்

என்னை வார்த்தையால்

சுட்டெரிப்பதால் நீ கூட

சூரியன் தான்!!!

அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது. 

தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு அவளது தடுமாற்றம் மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. தான் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதிக்கிறோம். அதுவும் முதல் நாளிலே என்று சந்தோஷப் பட்டான். 

வெகு நேரம் அவனை நினைத்து அவள் தடுமாறிக் கொண்டே தான் இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணிக் கொண்டு “மாலினி”, என்று அழைத்தான்.

“சார்”, என்ற படி அவனைப் பார்த்தாள். 

“ரிப்ளை அனுப்ப வேண்டிய மெயில் எல்லாம் பிரிண்ட் எடுத்துட்டு வாங்க. நான் பதில் சொல்றேன். அதை அனுப்பிருங்க”

“இதோ பத்து நிமிசத்துல எடுத்துறேன் சார்”, என்று சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தாள். அவளது கவனமும் வேலையின் பக்கம் திரும்பியது. 

சிறிது நேரம் கழித்து அனுப்ப வேண்டிய மெயில்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அவன் அதற்கான பதில் சொன்னான். அதைக் குறித்துக் கொண்டவள் அதை டைப் செய்து எடுத்து வந்து அவனிடம் காட்டினாள். 

அதில் எந்த தவறும் இல்லை என்று அவன் அவளைப் பாராட்டியதோடு அவளையே இனி மெயில் அனுப்பச் சொன்னான். அவன் பாராட்டியது சந்தோஷமாக இருந்தது மாலினிக்கு. அன்றைய நாள் அப்படியே கடந்தது. சரியாக ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் எப்படி கிளம்ப என்று யோசித்த படி அமர்ந்திருந்தாள் மாலினி. 

“டைம் ஆச்சு தானே? நீங்க கிளம்புங்க மாலினி”, என்று செழியன் சொன்னதும் தான் கிளம்பிச் சென்றாள். 

அன்று வீட்டுக்குச் சென்றதும் “இன்னைக்கு வேலை எப்படி போச்சுக்கா?”, என்று கேட்டான் பாலா. 

“ஒரு பொண்ணோட வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டதை தவிர மத்தது எல்லாம் நல்லா போச்சு டா”

“என்ன சொல்ற நீ?”, என்று அவன் கேட்டதும் விளக்கமாக வானதியைப் பற்றியும் இன்று நடந்ததையும் சொன்னாள். ஆனால் செழியனிடம் அவள் மனம் தடுமாறிப் போகிறது என்பதை பற்றி மட்டும் யாரிடமும் மூச்சு விட வில்லை. அவள் சிறிது தடுமாற்றத்துடன் சொல்லியிருந்தால் கூட வசந்தா அவளை வேலைக்கு அனுப்ப மாட்டாள். காதல் வந்தால் கள்ளமும் வரும் என்பது இயற்கையின் நியதி. 

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. உற்சாகமாக வேலைக்கு கிளம்பிச் சென்றாள் மாலினி. அன்று காலை பதினொரு மணி வரை அவளுக்கு தேவையான விசயங்களைச் சொல்லிக் கொடுத்த செழியன் “நீங்க வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க மாலினி”, என்றான். 

“சரி சார்”, என்று சொன்ன மாலினி வெளியே உள்ள பாத்ரூமை உபயோகித்து விட்டு உள்ளே வந்தாள். அது அவனுக்கு தெரிந்தாலும் எதுவும் சொல்ல வில்லை. “உள்ளே உள்ள பாத்ரூமை யூஸ் பண்ணிக்கோங்க”, என்று சொல்ல அவனுக்கு சங்கடமாக இருந்தது. அதனால் அவள் இஷ்டத்துக்கே விட்டுவிட்டான். 

ஒரு அரை மணி நேரம் அவளை ஓய்வெடுக்க விட்டவன் அதன் பின் அவளது குழப்பங்களுக்கு விடை சொன்னான். 

மதிய இடைவேளை வந்ததும் அவன் அவனை மறந்து வேலை செய்து கொண்டிருக்க “சார்”, என்று அழைத்தாள் மாலினி. 

“என்ன மாலினி?”

“லஞ்ச்”

“அதான், உங்களை சாப்பிட போகச் சொல்லிட்டேனே? போய் சாப்பிட்டு வாங்க”

“இல்லை சார், அது வந்து…. எப்படியும் நீங்க சாப்பிட போக மாட்டீங்க…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் பாத்துக்குறேன்”

“இல்லை சார், சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகும்? அதனால உங்களுக்கும் சேத்து எடுத்துட்டு வந்தேன். பிளீஸ் இன்னைக்காவது சாப்பிட்டு வேலையைப் பாருங்க. ஒரு வேளை நான் கொண்டு வந்த சாப்பாடு பிடிக்கலைன்னா வெளிய சாப்பிட்டு வாங்க”, என்றவள் அடுத்த ஒரு நொடி கூட அங்கே இருக்க வில்லை. உணவு பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டாள். அங்கேயே நின்றால் அவன் உணவை மறுத்து விடுவானோ என்று எண்ணி தான் அவள் வெளியே வந்தது.

அவள் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க செழியனோ வெகு நேரம் அவள் வைத்து விட்டுச் சென்ற டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ அவளது அக்கறை அவனை மயிலிறகாக தாலாட்டியது.

தான் விரும்பும் பெண் தன் மீது அக்கறை காட்டுவது மிகப் பெரிய விஷயம் அல்லவா? சந்தோஷமாக அந்த உணவு டப்பாவைப் பிரித்துப் பார்த்தான். 

உள்ளே தயிர் வெங்காயம் ஒரு சின்ன கிண்ணத்தில் இருந்தது. அதை வெளியே எடுத்துப் பார்த்தான். உள்ளே முட்டை பிரியாணி இருந்தது. வாசனை மூக்கைத் துளைத்தது. அப்போது தான் பசியே தெரிந்தது போல ஆவலாக அதை எடுத்து உண்டான். 

அந்த உணவு அவ்வளவு சுவையாக இருந்தது. அந்த சிறிய டப்பாவின் உணவு அவனுக்கு அரை வயிறுக்கு தான் பத்தும். அதனால் அவனுடைய வயிறு நிறையாமல் போனாலும் மனது நிறைந்தது. அவன் கடைசி வாய் உணவை வாயில் வைக்கும் போது அவள் உள்ளே வந்தாள். அவன் சாப்பிடுவதைக் கண்டதும் அவள் கண்களில் நிம்மதி வந்தது. அதைப் பார்த்தவனுக்கு இவளை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற எண்ணம் வந்தது. 

“ரொம்ப தேங்க்ஸ் மாலினி”, என்று உண்மையான நன்றியுடன் சொன்னான். 

“இதுல என்ன சார் இருக்கு? நல்லா இருந்ததா?”, என்று ஆர்வமாக கேட்டாள். 

“ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு வயிறும் மனசும் நிறைஞ்சு இருக்கு”, என்று உண்மையைச் சொன்னவன் பாத்திரத்தை எடுத்து கழுவப் போனான். 

“அதை கழுவ வேண்டாம் சார், நான் வீட்ல போய் கழுவிக்கிறேன்”

“சே, அது தப்பு”, என்றவன் அதை கழுவி அங்கிருந்த டேபிளில் கவிழ்த்து வைத்தான். 

அடுத்த நாளும் அவள் தான் உணவு எடுத்து வந்தாள். அவன் முன்பு பாத்திரத்தை வைத்தவள் “சாப்பிட்டு வேலையைப் பாருங்க சார்”, என்று சொல்லி விட்டு அவளுடைய டேபிளில் அமர்ந்தே உண்டு விட்டாள். 

“அவங்க கூட சாப்பிடப் போகலையா மாலினி?”, என்று கேட்டான் செழியன். 

“இல்லை சார், கொஞ்சம் வேலை இருக்கு. அவங்க கூட உக்காந்தா கதை பேசுறதுல நேரம் போறதே தெரிய மாட்டிக்குது. நீங்களும் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு அவள் உணவில் கவனமாக அவனும் அதை எடுத்து உண்டான். இன்று வெஜிடபுள் ரைஸ் மற்றும் முட்டை ஆம்ப்லேட் இருந்தது. 

அன்று உணவை முடித்து கழுவி வைத்தவன் “உங்க வீட்ல சாப்பாடு எடுத்துட்டு வரதுக்கு அம்மா ஒண்ணும் சொல்லலையா?”, என்று கேட்டான். 

“என்னோட பிரண்டுக்குன்னு சொல்லிட்டேன் சார். அதனால ஒண்ணும் சொல்லலை. எங்க வீட்ல இது சகஜம் தான். என் தம்பி அவனோட பிரண்டுக்கு எடுத்துட்டு போவான். அப்பா அவர் பிரண்டுக்கு கொண்டு போவாங்க. நான் என் பிரண்டுக்கு எடுத்துட்டு வந்தேன்”

“நான் உன் பிரண்டா டி?”, என்று அவளிடம் கேட்க ஆசை வந்தது. அதை அடக்கியவன் “சாப்பாடு ரொம்ப அருமையா இருக்கு. உங்க அம்மாவுக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க”, என்றான். 

“ஹலோ சார், இது நான் செய்யுற சாப்பாடு. செஞ்சது நான். தேங்க்ஸ் எங்க அம்மாவுக்கா?”

“வாட், நீங்களா செஞ்சீங்க?”

“ஆமா, அம்மாவுக்கு குழம்பு தான் செய்யத் தெரியும். அது போக லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் தான் தெரியும். எங்க பாலா காயே சாப்பிட மாட்டான். அவனை சாப்பிட வைக்க நான் இப்படி ஏதாவது செஞ்சு கொடுப்பேன். அவனும் ரசிச்சு சாப்பிடுவான். காயும் அவன் உடம்புல ஒட்டிரும். அதனால அம்மா என்னை தான் செய்ய சொல்லுவாங்க”

“உண்மைலே உங்க கை பக்குவம் ரொம்ப அருமையா இருக்கு. உங்களுக்கு வரப் போற ஹஸ்பண்ட் கொடுத்து வச்சவர்”

“யாருக்கு தெரியும்? ஒரு வேளை அவரே எனக்கு செஞ்சு கொடுப்பாரோ என்னவோ?”, என்று அவள் சொல்ல அவன் இதழ்கள் புன்னகையால் மலர்ந்தது. அதன் பின் அவனுக்கு உணவு கொண்டு வருவது தொடர்கதை ஆனது. விஷயம் அறிந்த சாரதாவும் நேரில் வந்து அவளுக்கு நன்றி சொன்னார். 

அதன் பின் ஒரு வாரம் நல்ல படியாகவே சென்றது. அவனுக்கு கீழே வேலை பார்ப்பதில் அவளுக்கு சந்தோஷமாக தான் இருந்தது. சில நேரம் மட்டும் தான் அவளை நினைத்தே அவளுக்கு எரிச்சல் வரும். அடிக்கடி அவனை பார்க்கச் சொல்லும் மனதை அடக்க முடியாமல் தவிப்பது மட்டும் தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது. மற்ற படி அனைத்தும் நல்ல படியாக தான் சென்றது. 

Advertisement