Advertisement

“இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது. 

“வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். பின் வெளியே வந்தவள் அங்கு வந்து கொண்டிருந்த வானதியைப் பார்த்தாள். 

சில சந்தேகங்கள் இருப்பதால் அவளிடம் தெளிவு படுத்திக் கொள்ள அவளை நோக்கிச் சென்றாள். இவள் வருவதைப் பார்த்ததும் வானதியோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். அதில் திகைத்துப் போனாலும் தனக்கு வேலையாக வேண்டும் என்பதால் “வானதி”, என்று அழைத்தாள். 

அவளோ திரும்பி கூட பார்க்காமல் சென்றாள். அதற்கு மேல் அவளை அழைக்க மாலினியின் தன்மானம் இடம் கொடுக்க வில்லை. “என்ன மனுஷி இவள்?”, என்று எண்ணிக் கொண்டு அவள் அப்படியே நிற்க “என்ன மாலினி, வானதி இன்சல்ட் பண்ணிட்டாளா?”, என்று கேட்ட படி வந்தாள் சிந்து. 

“ஆமா, கூப்பிட்டேன். காது கேக்காதது போல போயிட்டாங்க. நீங்க…”

“என் பேர் சிந்து”

“ஹாய் சிந்து, சில டவுட் இருக்கு. அதான் கேக்கலாம்னு பாத்தேன். ஆனா கூப்பிட்டும் என்னன்னு கேக்கலை”

“அவ அப்படி தான். சார் பழைய வேலையைக் காலி பண்ணியும் அவ திருந்தலை. சரி விடுங்க. உங்களுக்கு என்ன டவுட்?”

“முதல்ல லஞ்ச் எங்க வச்சு சாப்பிடணும்னு டவுட்?”

“நீங்க எங்க கூட வந்து சாப்பிடலாம். ஆனா சார் இருக்குற பிசிக்கு அது சரி பட்டு வராது. நீங்க இங்க சாப்பிட்டுட்டு இருக்கும் போது சார் கூப்பிட்டுருவாங்க. ஒரு நாள் வானதி பிரியாணி கொண்டு வந்துருந்தா. ஆசையா சாப்பிடணும்னு வாயில வைக்க போகும் போது சார் கூப்பிட்டாங்க. அதனால வானதி எப்பவும் அவ டேபிள்ல உக்காந்தே சாப்பிட்டுருவா”

“எம்.டி ரூம்லயா?”

“ஆமா, சார் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. பாத்ரூம் மட்டும் வெளியே வந்துருவா. அங்க சார் இல்லாதப்ப உள்ளவே யூஸ் பண்ணிக்குவா. சார் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க. ரொம்ப நல்ல பெர்சன். ஆனா வேலை மட்டும் சரியா இருக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு விஷயம் தெரிஞ்சிக்கோங்க. சார் ரொம்ப பிடிவாதம் பிடிப்பாங்க. ஒண்ணு வேணும்னா அதை எப்படி வேணும்னாலும் அடைஞ்சே தீருவாங்கலாம். இது வானதி சொன்னது தான். வேலையும் சரியா நடக்கனுமாம்”

“ஓ”

“வேற என்ன டவுட்?”

“வேற ஒண்ணும் இல்லை. மத்தது எல்லாம் எம்.டி சார் தெளிவா சொல்லிக் கொடுத்தாங்க”

“சரி மாலினி, சார் தான் இன்னைக்கு இல்லையே. எங்க கூட சாப்பிட வாங்களேன்”

“இல்லை சிந்து… வானதி… உங்க கூட உக்காந்து சாப்பிடுவா”, என்று தயங்கினாள் மாலினி. முகத்தை திருப்பிக் கொண்டு போகிறவள் எதிரில் அமர்ந்து எப்படி உண்ணவாம்?

“அவ கிடக்குறா. எங்க கேங்க்ல உள்ள மத்த எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாரும் நீங்க ரொம்ப கியூட்ன்னு பேசிட்டு இருந்தோம்”, என்று அவள் சொன்னதும் மாலினி முகம் சிவந்தது. 

“ஐயோ அழகா வெக்கப் படுறீங்க. சரி நீங்க லஞ்ச் பேக் எடுத்துட்டு இங்க வாங்க. நான் அதுக்குள்ள ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்”

“சரி”, என்று புன்னகைத்த மாலினி தன்னுடைய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தாள். வானதி அங்கே வரும் போது அங்கிருந்த அனைவரும் மாலினியுடன் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு புகைந்தது. அவளது புகைச்சலை யாருமே கண்டு கொள்ள வில்லை. மாலினி கூட அவளைப் பார்க்கவில்லை. 

மாலினி பாதி சாப்பாட்டில் இருக்கும் போதே செழியன் வந்து விட்டான். “இவன் என்ன அதுக்குள்ள வந்துட்டான்? சாப்பிட்டானா சாப்பிடலையான்னு தெரியலையே?”, என்று மாலினி எண்ணும் போதே “மாலினி, சீக்கிரம் சாப்பிட்டு போங்க. எம்.டி சார் வந்துட்டாங்க”, என்று அறிவுறுத்தினான் கிரிஷ் என்பவன். மற்றவர்களும் அதையே சொன்னார்கள். வானதியை டிபுரோமோட் செய்ததில் அனைவரும் செழியனிடம் பயம் கொண்டிருந்தார்கள். 

அனைவரும் சொன்னதாலா, இல்லை அவனை காத்திருக்க வைக்க கூடாது என்பதாலா? “சரி போறேன்”, என்று சொல்லி விட்டு பாதி சாப்பாடிலே எழுந்து சென்று விட்டாள் மாலினி. 

அறைக் கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு அவள் உள்ளே செல்ல அவனோ தன்னுடைய போனைக் குடைந்து கொண்டிருந்தான். 

“சார்”, என்று அவளை அழைக்க “என்ன மாலினி?”, என்று கேட்டான். “இல்லை மத்த விஷயம் மதியம் சொல்லித் தறேன்னு சொன்னீங்களே? ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டாள். 

“காலைல சொன்ன வேலைகளை செய்றீங்களா மாலினி? எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. மத்ததை நாளைக்குப் பார்க்கலாம்”, என்றான். அப்போது தான் அவனது சோர்வு அவள் கண்ணில் பட்டது. 

“சார்”

“என்ன?”

“நீங்க சாப்பிட்டீங்களா?”, என்று அவள் கேட்டதும் நெகிழ்ந்து போனான். “இப்படி எல்லாம் பாசமா கேக்காதே டி. நானே உன்னைப் பக்கத்துல வச்சிகிட்டு மொபைலை பாக்க வேண்டியதா இருக்கேன்னு நொந்து போய் இருக்கேன்”, என்று எண்ணிக் கொண்டு “பரவால்ல. நீங்க வேலையைப் பாருங்க”, என்றான். 

அவன் பதிலிலே அவன் சாப்பிட வில்லை என்று புரிந்து போனது. காலையில் சாரதா சொன்னதும் நினைவில் வந்தது. “சாப்பிட்டு வரலாமே?”, என்று தன்னுடைய தயக்கத்தை உதறி கேட்டாள். 

“பரவால்ல, எனக்கு பழக்கம் தான்”, என்று சொல்லி புன்னகைத்தான். 

அதற்கு மேல் என்ன சொல்ல என்று அவளுக்கு தெரிய வில்லை. முதல் நாளே அதிகம் பேச அவள் மனது இடம் கொடுக்க வில்லை. அது மட்டுமில்லாம “என்னைச் சொல்ல நீங்க யார்? உங்க வேலையைப் பாருங்க”, என்று அவன் சொல்லி விட்டால் அவ்வளவு தான். அதனால் அமைதியாக சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்து அவன் சொல்லிக் கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

அதில் முதல் வேலையாக கம்பெனிக்கு வந்திருந்த மெயில்களை பார்வையிட்டாள். இதற்கெல்லாம் அவனிடம் இருந்து பதில் வாங்கித் தான் அனுப்ப வேண்டும் என்பதால் அடுத்த வேலையைப் பார்த்தாள். 

ஒரு கணக்கு இடிக்க மண்டையைத் தட்டி யோசித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. சோர்வாக இருக்கிறது என்று சொன்ன பிறகு அவனை தொந்தரவு செய்யவும் மனதில்லை. 

செழியன் கவனம் போனில் இருந்தாலும் அவன் மனம் எல்லாம் அவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தது. அவளைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. ஆனால் தன்னுடைய பார்வை அவளை சிறியதாக கூட சலனப் படுத்தக் கூடாது என்பதால் மொபைலை பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நேரத்தைக் கடத்தினான். 

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெண்கள் தவறான பார்வையைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்ற உண்மை அவனுக்கு நினைவு வந்து அவனை இம்சித்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் கண்களையும் மனதையும் அடக்க முடியாமல் போனது. அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் ஏதோ யோசித்த படி இருந்தாள். அவளது புருவச் சுளிப்பை நீவி விட வேண்டும் போல இருந்தது. அவள் ஏதோ திணறுவது புரிந்து “ஐ அவ கிட்ட பேச சான்ஸ் கிடைச்சிருச்சு”, என்று குதூகலித்துப் போனான். 

பின் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு “என்ன ஆச்சு மாலினி, ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான். 

அமைதியான அறையில் அவன் குரல் திடீரென்று ஒலிக்கவும் திடுக்கிட்டு போனவள் “ஆன்.. சார்… இந்த கணக்கு சரியா வர மாட்டிக்கு சார்”, என்று உண்மையைச் சொன்னாள். கூடவே திட்டுவானோ என்று பயமாகவும் இருந்தது. 

“என்ன சந்தேகம் வந்தாலும் கேக்க வேண்டியது தானே? அதுக்கு தானே நான் இருக்கேன்”, என்ற படி அவனுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்தான். 

“இல்லை சார், நீங்களே டயர்டா இருக்கீங்க? பத்தாதுக்கு சாப்பிட வேற இல்லை. அதான் தொந்தரவு பண்ண வேண்டாம்னு….”

அவள் அருகே வந்து நின்றவன் “சரி, என்ன டவுட்?”, என்று பொறுமையாக கேட்டான். 

“இந்த கணக்கு தான் சார். டேலி ஆக மாட்டிக்குது”, என்று கணிணியைக் காண்பித்தவள் எழுந்து கொள்ள பார்த்தாள். 

“ஏன் எந்திக்கீங்க? உக்காருங்க”, என்றவன் கணக்கைப் பார்க்க அவள் சிஸ்டம் புறமாக குணிந்தான். அவன் அருகாமையில் திகைத்து போனாள் மாலினி. அவள் முகத்தருகே குனிந்து கீபோர்டில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான். இருவரின் முகமும் அருகருகே இருந்தது. அவளுக்கு இதயத் துடிப்பு வெகுவாக எகிறியது. அவனது வியர்வை வாசனை அவள் நாசிக்குள் குப்பென்று நுழைந்தது. 

“கடவுளே, இது வரைக்கும் எத்தனையோ ஆம்பளைங்களை பாத்துருக்கேன். பேசிருக்கேன். அப்ப எல்லாம் நான் இப்படி இல்லையே? இப்ப மட்டும் எனக்கு என்ன ஆச்சு? இவர் கிட்ட வந்தாலே எனக்குள்ளே ஏதோ மாதிரி ஆகுது?”, என்று யோசித்தாள். 

அவனோ கணக்கிலே கவனமாக இருந்தான். அவளுடைய கைக்குள் இருந்த மவுசை அவன் கை பற்ற அவள் கை மீது அவன் கை பட்டது. படக்கென்று கையை உருவிக் கொண்டாள். அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. வேலையை முடித்ததும் “அவ்வளவு தான், முடிஞ்சிருச்சு. ஒரு பிளஸ் மட்டும் அதிகமா போட்டுருந்தீங்க. அதனால தான் கணக்கு சரியா வரலை”, என்று சொல்லி விட்டு நிமிர்ந்தவன் அவளைப் பார்த்தான்.

அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க “மாலினி”, என்று குழப்பமாக அழைத்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒரு நொடிக்கு மேல் அவன் முகம் பார்க்காமல் நிலம் நோக்கினாள். அந்த ஒரு நொடியில் அவளது முகச் சிவப்பு அவன் பார்வையில் விழுந்தது. அவளது வெட்கம் அவனை ஊமத்தம் கொள்ளச் செய்தது. 

அவளது வெட்கம் எதற்கென்று தெரியாமல் குழம்பினான். ஆனாலும் அவளது முகத்தை கைகளில் ஏந்தி முத்தமிட ஆசை வந்தது. 

“நான் பக்கத்துல வந்து நின்னதுக்கா இவளுக்கு இவ்வளவு வெக்கம்? அப்ப இவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கா?”, என்று அவன் ஆசை கொண்ட மனது எண்ணியது. அவனுடைய மனது தான் அப்படி கற்பனை செய்கிறதா என்றும் அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

பின் முதல் நாளே அவளை தொல்லை செய்யக் கூடாது என்று எண்ணிக் கொண்டு “சரி, வேலையைப் பாருங்க மாலினி”, என்று சொல்லி விட்டு அவனுடைய இருக்கைக்குச் சென்று விட்டான். 

தொடரும்…..

Advertisement