Advertisement

அத்தியாயம்

துடிக்கின்ற இதயம் என்னுடையது

தான். ஆனால் அது பெயர்

சொல்வதோ உன்னைத் தான்!!!

“சரி மேம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் மாலினி. 

காலை உணவை முடித்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்த செழியன் அன்றைய வேலையை ஆராய்ந்தான். அப்போது தான் மாலினி அன்று வேலையில் சேர வேண்டிய நாள் என்று தெரிந்தது. ஏதோ ஒரு புத்துணர்ச்சி அவன் உடலில் வந்து அமர்ந்தது.  

“இன்னைக்கு தானே அவ வேலைக்கு வரணும்? ஏன் இன்னும் வரலை? முதல் நாளே லேட்டா? இல்லை, இந்த வேலையே வேண்டாம்னு நினைச்சிட்டாளா?”, என்று எண்ணினான். 

“வந்தா வரட்டும், இல்லைன்னா வேற ஆளை செலெக்ட் பண்ணிக்கலாம்”, என்று அவன் மூளை சொன்னாலும் அவள் வராதது அவன் மனதை பாதித்தது. “வருவாளா? வர மாட்டாளா?”, என்று எதிர் பார்க்க ஆரம்பித்தான்.

நேரம் ஆக ஆக எதிர் பார்ப்பு கோபமாக உருமாறியது. ஏதோ அவனை அறியாமலே அவள் மீது கோபம் அவனுக்குள் எழுந்தது. 

“சரி மாலினி, நீ கிளம்பு. செழியன் சாப்பிட்டு வந்துருப்பான். எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. ஆயில் மில்லை பாத்துட்டு நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சாரதா சொன்னதும் “சரி மேம்”, என்று சொல்லி விட்டு செழியனைத் தேடிச் சென்றாள். 

அவனைக் காணப் போகிறோம் என்றதும் அவளுக்குள் அடக்க முடியாத படபடப்பு எழுந்தது. எதனால் இப்படி இருக்கிறது என்று அவளே குழம்பிப் போனாள். தயக்கத்துடன் அவனுடைய அறைக் கதவை தட்டியதும் யாரோ என்று எண்ணிக் கொண்டு “யெஸ் கமின்”, என்று சற்று எரிச்சலுடன் மொழிந்தான் செழியன். 

ஏனோ அவன் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த மாலினி அதிகரித்த டென்சனுடன் தான் அந்த அறைக்குள் நுழைந்தாள். 

உள்ளே வந்த அவளை செழியன் சத்தியமாக எதிர் பார்க்க வில்லை. அவளைக் கண்டு ஒரு நிம்மதி உள்ளுக்குள் பரவினாலும் இது வரை இருந்த எரிச்சல் அவனை விட்டு போக மறுத்தது. இன்டர்வியூ செய்த நாளில் இருந்து அவனது தூக்கத்தை தின்றவள் ஆயிற்றே. அவனுடைய எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டு லேட்டாக வந்ததால் அவன் முகம் உர்ரென்று இருந்தது. 

அவன் முகத்தில் இருந்த கோபம் அவளைப் பாதித்தாலும் “குட் மார்னிங் சார்”, என்றாள் மாலினி. 

அவனோ அவளுக்கு பதில் வணக்கம் சொல்லாமல் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “இவன் என்ன இப்படி பாத்து வைக்கிறான்?”, என்று திகிலாகிப் போனாள். 

அவன் பார்வையை ஜீரணிக்க முடியாமல் “சார்”, என்ற படி அவள் தயங்க அவனோ “வாங்க மேடம், ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க போல? முதல் நாளே லேட்டா? என்ன, வேலை கிடைச்சிருச்சுன்னு மிதப்பா?”, என்று கேட்டான். 

அவன் கோபத்தில் மிரண்டு போனாள் மாலினி. அவளுக்கு பியூன் எதனால் அப்படிச் சொன்னான் என்று இப்போது புரிந்தது. முதல் நாள் புன்னகை முகமாக பேசியது இவன் தானா என்று திகைத்து போனாள். அவன் அவளையே பார்த்த படி இருக்கவும் “சார் அது வந்து…”, என்று ஆரம்பித்தாள். 

“என்ன வந்து போயின்னு உளறுறீங்க? இந்த வேலைக்கான மதிப்பு என்னன்னு தெரியுமா உங்களுக்கு? மத்தவங்களோட உங்களுக்கு தான் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் அதிகம். ஆனா முதல் நாளே நீங்க இப்படி இருந்தா இனி எப்படி இருப்பீங்களோ? இந்த கம்பெனி பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”

“முழுசா தெரியாது சார். ஆனா ஓரளவுக்கு தெரியும்”, என்று தயக்கத்துடனே சொன்னாள். 

“என்னது தெரியுமா? வந்த அன்னைக்கே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிட்டீங்களா? என்ன தெரியும் உங்களுக்கு? சொல்லுங்க பாப்போம்”, என்று நக்கலாக கேட்டான். 

சாரதா சொன்னதை வைத்து அங்கே என்ன வேலை நடக்கிறது என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னாள் மாலினி. அதைக் கேட்டு அவன் கண்களில் மெச்சுதலுடன் கூடிய வியப்பு வந்தது. 

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”, என்று சிறு ஆர்வத்துடன் கேட்டான். 

“நான் அப்பவே வந்துட்டேன் சார். பெரிய மேடம் தான் என்னை அழைச்சிட்டு போனாங்க”

“யார் அம்மாவா?”

“யெஸ் சார், கம்பெனியை சுத்திக் காமிச்சாங்க?”

“என்ன?”

“ஆமா சார், ஸ்டாப் கிட்ட அறிமுகப் படுத்தினாங்க”

“சாரி, நீங்க லேட்டா வந்தீங்கன்னு நினைச்சு கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டேன்”

“கொஞ்சம் கோபமா?”, என்று மனதில் எண்ணியவள் “இட்ஸ் ஓகே சார்”, என்றாள். 

அப்போது தான் அவள் நின்று கொண்டே இருப்பது அவனுக்கு உரைத்தது போலும். “ப்ளீஸ் டேக் யுவர் சீட்”, என்றான். 

“தேங்க் யு சார்”, என்ற படி அவன் எதிரில் அமர்ந்தாள். “சாரி, பிரேக் பாஸ்ட் சாப்பிட்டீங்களா?”, என்று கேட்டான் செழியன். 

அவன் கேள்வியில் ஒரு நொடி திகைத்தாலும் “யெஸ் சார்”, என்றாள் மாலினி. “உங்களுக்கு சாப்பிடப் பிடிக்கும்ல? அதனால தான் கேட்டேன்”, என்றதும் அவன் கிண்டலில் அவள் முகம் சிவந்து போனது. 

அவள் முகச் சிவப்பை ஆசையாக பார்த்தான் செழியன். அவளது மென்மை தெறிக்கும் பட்டுக் கன்னங்களை வருட ஆசை வந்தது. தனது மனது போகும் திசையை அறிந்து “சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். சரி வாங்க, வேலையை பாக்கலாம்”, என்றவன் தன்னுடைய கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். 

“மாலினி அந்த சேரை இங்க இழுத்து போட்டு உக்காருங்க. நான் பேசிக்ஸ் சொல்லித் தரேன்”, என்று சொன்னதும் தயக்கத்துடன் அவன் அருகே சேரை எடுத்துப் போட்டு அமர்ந்தாள். அந்த சேரை அவனே அவளுக்கு எடுத்துப் போட ஆசை தான். ஆனால் முதல் நாளிலே அவளுக்கு ஏதாவது சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

அதன் பிறகு மதிய இடைவேளை வரை அவளுக்கு மூச்சு விட நேரம் இல்லை. அவனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அங்கு என்ன என்ன வேலை நடக்கிறது, அவள் என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டும் என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இடையில் பல போன் கால்ஸ் அவனுக்கு வந்தது. ஆனால் அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அவன் எதையுமே எடுக்க வில்லை. 

அவனது வேலைப் பளுவை ஒரு நாளிலே மாலினி உணர்ந்து கொண்டாள். “சார் நீங்க வேணும்னா போங்க. நான் வானதி கிட்ட கேட்டு மத்ததை தெரிஞ்சிக்கிறேன்”, என்றாள் மாலினி. 

“இல்ல பரவால்ல. எனக்கு வொர்க் சரியா இருக்கணும். அவங்க வொர்க் சரி இல்லைன்னு முத்திரை குத்தின பிறகு அவங்க உங்களை டிரைன் பண்ணினா நல்லா இருக்காது. இன்னைக்கு ஒரு நாள் நான் டைம் ஸ்பெண்ட் பண்ணினா, இனி எனக்கு வொர்க் ஈஸியா இருக்கும்ல? நானே சொல்லித் தரேன்”, என்று சொல்லிக் கொடுத்தான். 

அவன் சொல்லிக் கொடுப்பது அவளுக்கு எளிதாகவே புரிந்தது. அவனது திறமை அவளை மெய் சிலிர்க்க வைத்தது. சில நேரம் தன்னை மறந்து அவனை ரசிக்கவும் அவள் மறக்க வில்லை. ஏதோ அவன் கண்களில் ஒரு வித காந்த சக்தி இருப்பது போல இருந்தது. அவனது பார்வை சிறு சங்கடத்தையும் அவளுக்கு அளித்தது. 

அவன் அருகில் இருப்பதால் இரு முறை இருவர் கால்களும் உரசியது. முதல் முறை உணர்ந்த அந்நிய ஆணின் பரிசத்தில் தவித்துப் போனாள். 

அவனும் தெரியாமல் தான் இடித்திருந்தான். ஆனால் இடித்த பிறகு அவன் உடல் சிலிர்த்தது. அவன் “சாரி”, என்று சொல்ல அவளது முகம் சிவந்தது. அவளது முகச் சிவப்பு அவனை அதிகம் பாதித்தது. 

அவன் அணிந்திருந்த பெர்ஃபியும் வாசனையை அவள் முகர்ந்த போது என்னவோ போல இருந்தது மாலினுக்கு. நிச்சயம் அவன் அருகே அவள் அவளாக இல்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.  

பஸ்ஸில் செல்லும் போது ஏதாவது ஆண் அருகே நிற்க நேர்ந்தால் அந்த இடத்தில் இருந்தே விலகிச் சென்றிருக்கிறாள். மற்ற படி அவளுக்கு வேறு எந்த உணர்வும் வந்ததில்லை. ஆனால் இப்போது அவனது அருகாமை அவளை அதிகம் பாதித்தது. அவன் வேண்டும் என்றே செய்தால் அவள் என்ன செய்திருப்பாளோ? இருவருமே வேலையில் கவனம் செலுத்தும் போது நடக்கும் தீண்டலை என்ன செய்வதாம்?

“கடவுளே எனக்கு என்ன ஆச்சு? எங்க வந்து என்ன வேலை பாக்குறேன். இவன் பக்கத்துல மட்டும் எதுக்கு என் மனசு இப்படி அலை பாயுது? நல்ல பிள்ளையா இருப்பேன்னு அம்மா அப்பா கிட்ட சொல்லிருக்க மாலினி. கடைசி வரை அப்படியே இரு”, என்று அவள் மனசாட்சி திட்டியும் அவளால் அவனிடம் தடுமாறத் தான் முடிந்தது. 

மதிய உணவு இடைவேளை வந்தும் கூட அவன் அவளை விட வில்லை. அவளுக்கோ காலையில் சாப்பிட்ட நான்கு பூரி செரிமானம் ஆகி இப்போது வயிறு வேறு ஏதாவது தா என்று கேட்டது. ஆனால் அவனிடம் எப்படிச் சொல்ல என்று தயக்கமாக இருந்தது. 

காலையில் ஆரம்பிக்கும் போதே தன்னை கிண்டல் செய்தான். இப்போது சாப்பிட வேண்டும் என்று சொன்னால் சாப்பாட்டு ராமி என்று தான் நினைப்பான் என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

ஆனால் அவள் கவனம் சிதறியதை ஒரு நொடியில் கண்டு கொண்டான் செழியன். “என்ன ஆச்சு மாலினி? ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான். 

“ஆன் ஆமா சார்… இல்லை சார்”, என்று உளறினாள் மாலினி. 

“என்ன ஆச்சு மாலினி? உங்க கவனம் இங்க இல்லை. என்னன்னு தயங்காம சொல்லுங்க. நாம தினமும் பன்னிரெண்டு மணி நேரம் ஒண்ணா தான் இருக்கணும். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு என்னால பாத்து கண்டு பிடிக்க முடியாது. என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு உங்க கிட்ட கேட்டுகிட்டும் இருக்க முடியாது. நீங்களே என்னன்னாலும் சொல்லுங்க. முதல்ல என்னை ஒரு பிரண்டா நினைச்சிக்கோங்க”

“அது வந்து சார், காலைல இருந்து…..?”

“என்ன தயக்கம் மாலினி? சொல்லுங்க”

“காலைல இருந்து நீங்க தண்ணி குடிக்கவும் விடலை. யூரின் போகவும் விடலை. எப்படியோ அடக்கிட்டு இருந்துட்டேன். இப்ப பசிக்க வேற செய்யுது. இதையெல்லாம் உங்க கிட்ட எப்படி சொல்லனு தெரியாம தான்…”, என்று அவள் சங்கடமான முக பாவத்துடன் சொன்னதும் அவனுக்கு என்னவோ போல ஆகி விட்டது. 

“சாரி, இப்படி எல்லாம் ஆகும்னு நான் யோசிக்கலை. எனக்கு இப்படியே பழகிருச்சு. நீங்க கிளம்புங்க. ரெஸ்ட் எடுத்துட்டு, சாப்பிட்டுட்டு வாங்க. நான் ஹோட்டல் வரைக்கும் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான். காரில் ஏறியதும் அவனுக்கே அவனை நினைத்து எரிச்சலாக வந்தது. “ஒரு பொண்ணை இந்த அளவுக்கா டார்ச்சல் பண்ணுறது? எதுக்கு டா இப்படி பண்ணிட்ட?”, என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டான். 

அவன் அந்த அறையில் இருந்து சென்றதும் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மாலினி. அவன் அருகே இருப்பது எதனால் இப்படி மூச்சு முட்டிப் போகிறது என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது. கூடவே அவள் கண்கள் அடிக்கடி அவனை நோட்டம் விடுவது வேறு அவளை என்னவோ செய்தது. தவறு செய்கிறாய் என்று அவளது மனசாட்சி குத்திக் கொண்டிருக்க மீண்டும் மீண்டும் அவள் அதையே செய்வது ஏனோ?

“என்ன பழக்கம் இது? வீட்ல கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு இங்க முதலாளியவே சைட் அடிச்சிட்டு இருக்கேன்? ஒரு வேளை இவன் ரொம்ப அழகா இருக்குறதுனால இப்படி செய்றேனா? இருந்தாலும் நான் சரியாவே இல்லை”, என்று தன்னையே நொந்து கொண்டாள். 

“போனவன் எப்ப வருவான்னு தெரியலை. அதுக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சிருவோம்”, என்று எண்ணிக் கொண்டு அந்த அறையில் இருந்த பாத்ரூமைப் பார்த்தாள். 

Advertisement