Advertisement

“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவனைக் கடந்து சென்றாள். அவனை நோக்கி அவள் சிந்திய ஒற்றைப் புன்னகை அவன் மனதைக் கவர்ந்தது. பியூன் என்ற நினைவோடு அவனை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் அவனை நோக்கி அவள் சிந்திய அந்த ஒற்றைப் புன்னகை அவனுக்கு விலை மதிப்பானது அல்லவா?

“இந்த அண்ணா எம்.டி சாருக்கு எதுக்கு இவ்வளவு பயப்படுறாங்க? அன்னைக்கு சும்மா ஹீரோ கணக்கா சிரிச்சாப்ல தானே இருந்தார்?”, என்று மாலினி எண்ண “சும்மா ஹீரோன்னு சொல்லி இன்னைக்கும் அவரை சைட் அடிச்சு தொலைக்காத டி மாலினி. இன்னைல இருந்து அவர் உனக்கு முதலாளி”, என்று இடித்துரைத்தது அவள் மனது.

செழியன் என்ற அறைக் கதவுக்கு முன்னர் நின்னதும் அவளை அறியாமலே அவள் மனது தடதடத்தது. நிச்சயம் அது பயத்தினால் அல்ல. ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு அவளை ஆட்கொண்டது. அது அவனைக் காணப் போவதால் வந்த படபடப்பு தான். ஆனால் அதை அவள் உணரவில்லை.

மூச்சை ஆழ்ந்து இழுத்துக் கொண்டு அந்த அறைக் கதவை தன்னுடைய விரலால் இரண்டு முறை தட்டினாள்.

“யெஸ் கமின்”, என்று உள்ளே இருந்து சத்தம் வந்ததும் திகைத்துப் போனாள். ஏனென்றால் அது ஒரு பெண்ணின் குரல். “அவன் இல்லையா?”, என்று சிறு ஏமாற்றத்தொடு அவள் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவள் நினைத்தது போல அங்கே செழியன் இல்லை. ஒரு நாப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தான் அமர்ந்திருந்தார்.

அவன் இல்லாமல் போனதும் மனதில் ஒரு ஏமாற்றம் அவளை அறியாமலே பரவியது. அது ஏனென்று அவளுக்கு தெரியவில்லை. அந்த ஏமாற்றத்தை அவள் உணர கூட இல்லை.

அவள் யாரென்று தெரிந்தாலும் தெரியாதது போல “யாரும்மா நீ?”, என்று கேட்டார் சாரதா.

“என்னோட பேர் மாலினி மேம். வேலையில் சேரச் சொல்லி ஆர்டர் வந்துருக்கு”

“ஓ பெர்ச்னல் செக்கரட்டரிக்கு செலக்ட் ஆகிருக்குற மாலினியா?”

“யெஸ் மேம்”

“வெல்கம் டூ அவர் ஆபீஸ் மா. உக்காரு”

“தேங்க் யூ மேம்”, என்ற படி அவர் எதிரில் அமர்ந்தாள்.

செழியன் இல்லாதது ஏமாற்றமாக இருந்தாலும் சாந்தம் தவழும் சாரதாவைக் கண்டது மாலினி மனதுக்கு அமைதியைத் தந்தது. ஒளி வீசும் அவரின் கண்களும் நட்பாக புன்னகைக்கும் அவரது உதடுகளும் “எப்பா இந்த அம்மா கூட எவ்வளவு அழகா இருக்காங்க? அப்ப இவங்க பையன் தான் அவனா? அதான் அவனும் அழகா இருக்கான்”, என்று அவளை எண்ண வைத்தது.

“எதை யோசிச்சாலும் கடைசில அவன் அழகா இருக்கான்னு வந்து நிக்குற. இப்ப அவனோட அம்மாவையும் நீ சைட் அடிக்க ஆரம்பிச்சிட்ட. இது சரி இல்லை”, என்று எச்சரித்தது அவள் மனது.

“உங்க வீட்ல எத்தனை பேர் மா? அப்பா என்ன பண்ணுறாங்க?”, என்று கேட்டார் சாரதா.

தன்னுடைய யோசனையில் இருந்து அவள் வெளியே வர நேரம் ஆனதால் அவள் சட்டென்று பதில் சொல்ல வில்லை.

“இண்டெர்வியூ பண்ணலை மா. சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்”, என்றார் சாரதா.

“பரவால்ல மேம்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள் மாலினி.

“சரி மா, இன்னைக்கு நல்ல நாள். நல்ல படியா உன் வேலையை ஆரம்பி”, என்று சாரதா சொன்னதும் திருதிருவென்று விழித்தாள்.

“என்ன ஆரம்பிக்கணும்? எங்க ஆரம்பிக்கணும்னு தெரியலையே?”, என்று அவள் எண்ணும் போதே “உன்னோட முதலாளி வந்து உன்னோட வேலையைப் பத்தி எல்லாம் சொல்வான் மா. என்ன பாக்குற? இந்த கம்பெனியைப் பொறுத்த வரைக்கும் என் மகன் செழியன் தான் எல்லாம். அவன் பெர்ச்னல் ரூம்ல சாப்பிட்டுட்டு இருக்கான். அதான் அவன் சீட்ல நான் உக்காந்துருக்கேன். அவனை அன்னைக்கு பாத்துருப்பியே இண்டர்வியுல?”, என்று கேட்டார்.

“யெஸ் மேம், சாரை பாத்தேன்”

“ஹிம், காலைல சீக்கிரம் வந்துட்டான். சாப்பிடக் கூட இல்லை. நான் தான் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். வேலை வேலைன்னு சாப்பாடை மறந்துருவான் மா. நீ கொஞ்சம் அவனைப் பாத்துக்கோ என்ன?”

“நான் எப்படி அவனை சாப்பிட வைக்க முடியும்?”, என்ற எண்ணம் வந்தாலும் “சரி மேம்”, என்றாள்.

“அவனைச் சொல்லியும் தப்பு இல்லை. எல்லாப் சுமையையும் அவன் தலையில் இறக்கிட்டேன். அவனுக்கு இந்த ஆபீஸ் மட்டும் இல்லை. எக்ஸ்போர்ட் கம்பெனி இருக்கு, ஆயில் கம்பெனி இருக்கு. அது போக ஒரு ஹோட்டலும் இருக்கு. அது எல்லாத்தோட கணக்கு வழக்கையும் நீ தான் பாத்துக்கணும்”

“கண்டிப்பா மேம்”

“செழியனுக்கு அதிகமா கோபம் வராது. ஈஸி பெர்சன் தான். ஆனா கோபம் வந்துச்சோ அவன் கண்ணு முன்னாடி யாரும் நிக்க முடியாது. முரடனா மாறிருவான். உன்னோட வொர்க்ல நீ சரியா இருந்தா எந்த பிரச்சனையும் வராது”

“சரி மேம், நான் கவனமா இருக்கேன்”, என்று சொன்னாலும் “அவனைப் பத்தி இவங்க எதுக்கு இவ்வளவு விளக்கம் சொல்றாங்க?”, என்ற எண்ணம் தான் மாலினிக்கு வந்தது. ஆனால் சாரதாவோ அவளை தன்னுடைய மகனின் வருங்கால மனைவியாக நினைத்து தான் அவனைப் பற்றிச் சொன்னார்.

“சரி நீ உக்காரு. அவன் இப்ப வந்துருவான். நான் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டார்.

“சரி மேம்”

“இல்லை இல்லை, ஆள் இல்லாத ரூம்ல தனியா உக்காந்து என்ன பண்ணப் போற? வா நான் உனக்கு ஆபீஸ் சுத்திக் காமிக்கிறேன்”

“இல்லை… வேலை….”, என்று இழுத்தாள் மாலினி.

“முதல்ல இங்க என்ன என்ன இருக்குனு தெரிஞ்சா தானே உனக்கு வேலை செய்ய ஈஸியா இருக்கும்? வா மா”, என்று சாரதா சொன்னதும் அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால் “சரிங்க மேம்”, என்று சொல்லி அவருடன் நடந்தாள்.

ஒவ்வொரு இடங்களையும் சுற்றிக் காட்டிய படி வந்தார் சாரதா. அனைத்தையும் பிரம்மாண்டமாக பார்த்த படி வந்தாள் மாலினி. பின் ஸ்டாப் எல்லாம் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்ததும் அனைவரும் எழுந்து நின்று “குட் மார்னிங் மேம்”, என்று சாரதாவுக்கு வணக்கம் வைத்தனர். .

“வெரி குட் மார்னிங். அப்புறம் இவங்க மிஸ் மாலினி. இன்னைல இருந்து நம்ம ஆஃபிஸ்ல தான் வேலை பாக்க போறாங்க”, என்று சாரதா சொன்னதும் அனைவரும் வரவேற்பாக மாலினியைப் பார்த்து சிரித்தார்கள். சாரதாவே வந்து அவளை அறிமுகப் படுத்தியது எல்லாருக்கும் வியப்பாக இருந்தது. மற்றவர்களைப் பார்த்து மாலினியும் அழகாக புன்னகைத்தாள். ஒரே ஒரு பெண் மட்டும் மாலினியை முறைத்துப் பார்த்தது போல இருந்தது.

“வா மாலினி, நான் பேக்டரியையும் சுத்திக் கட்டிறேன்”, என்று மாலினியை அங்கிருந்து அழைத்துச் சென்றார் சாரதா. “அந்த பொண்ணு என்னைப் பாத்து எதுக்கு முறைச்சா? உண்மைலே முறைக்க தான் செஞ்சாளா? இல்லை எனக்கு தான் அப்படித் தோணுச்சா? முறைச்ச மாதிரி தான் இருந்தது. ஆனா ஏன்? எதுக்கு என்னைப் பாத்து முறைக்கணும்”, என்று யோசித்த படியே சாராதாவுடன் நடந்தாள் மாலினி.

“அங்க ஒரு நீல கலர் சுடிதார் போட்டுட்டு நின்னாளே? அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் மாலினி”, என்று சொன்னாள் சாரதா.

தான் நினைத்த பெண்ணைப் பற்றிச் சொன்னதும் “ஏன் மேம்?”, என்று கேட்டாள் மாலினி.

“உனக்கு முன்னாடி அவ தான் உன் வேலையைப் பாத்தா. அவளை டீபுரோமோட் பண்ணிட்டு தான் உன்னை வேலைக்கு எடுத்துருக்கு. அதான் அவ உன்னை முறைச்சு பாக்குறா?”

“அவள் முறைத்ததை இவங்களும் கவனிச்சாங்களா?”, என்று எண்ணிக் கொண்டு “எதனால மேம் அவங்க இந்த வேலையில இல்லை? அவங்க எதுவும் தப்பு பண்ணிட்டாங்களா?”, என்று கேட்டாள்.

“கொஞ்ச நஞ்ச தப்பு இல்லை. நிறைய மிஸ்டெக் பண்ணுவா. ஏதாவது கிளைண்ட்க்கு மெயில் அனுப்ப சொன்னா தப்பு தப்பா டைப் பண்ணி வைப்பா. ஒரு வேலையை அவசரம்னு சொன்னாலும் ஆர அமர தான் செய்வா. செழியன் வேகத்துக்கு அவ சரி பட்டு வரலை. அவன் அவளை டிஸ்மிஸ் பண்ண தான் சொன்னான். நான் தான் அவ குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி வேற போஸ்டிங் கொடுக்கச் சொன்னேன். நீயும் கொஞ்சம் வேலைல கவனமா இருக்கணும் சரியா மா?”, என்று கேட்டார்.

தொடரும்…. 

Advertisement