Advertisement

“அப்படி மட்டும் செஞ்சிறாத தம்பி”

“அப்ப என்னை தொந்தரவு செய்யுறதை விட்டுரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த போனும் அவருக்கு வரவில்லை.

ஷாலினியின் கணவன் நியாயமானவன். மனைவியின் தாய் தந்தை என்று கூட பாராமல் தன்னுடைய பெற்றோர்கள் போல கவனித்துக் கொள்பவன். அப்படிப் பட்டவனுக்கு இவர்களின் செயல் தெரிந்தால் நிச்சயம் மன்னிக்க மாட்டான். அதனால் இனி சொத்தைப் பற்றி புஷ்பா யோசிக்க கூட மாட்டாள் என்று கனகராஜ்க்கு தெரியும்.

சரியாக பத்து நாட்கள் கழித்து மாலினிக்கு வேலைக்கு வரச் சொல்லி மெயில் அனுப்பி இருந்தார்கள். எப்போதும் போல தன்னுடைய மெயிலை சாதாரணமாக பார்த்த மாலினி “அம்மா அம்மா”, என்று சந்தோஷமாக கத்திய படி தாயைத் தேடினாள்.

“என்ன டி இப்படி கத்துற?”, என்று கேட்டாள் வசந்தா.

“என்னை வேலைக்கு வரச் சொல்லிருக்காங்க”

“என்ன டி சொல்ற?”

“ஆமா மா, வர ஒன்னாம் தேதில இருந்து ஜாயின் பண்ணனும்”

“சம்பளம் எவ்வளவாம்?”

“முதல் மாசம் இருபத்தி மூணாயிரம் தான். அப்புறம் போக போக கூடுமாம்”

“அப்பா வந்ததும் சொல்லு, ரொம்ப சந்தோஷப் படுவார்”

“வர வரைக்கும் எல்லாம் காத்திருக்க முடியாது. நான் போன்ல சொல்லப் போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே விட்டாள்.

“அதானே, இவளாவது இவ அப்பா கிட்ட சொல்லாம இருக்குறதாவது?”, என்று சிறு சிரிப்புடன் புலம்பி விட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள். விஷயம் கேள்விப் பட்ட கனகராஜும் சந்தோஷப் பட்டார்.

செழியனுக்கு மெயில் அனுப்பிய விஷயம் தெரியாது. ஆனால் அவனுக்கு தாயிடம் கேட்கவும், எப்படியோ இருந்தது.

ஏனோ அவள் தன்னுடைய ஆஃபிஸ்க்கு வேலைக்கு வர வேண்டும் என்று அவன் மனது ஆசை கொண்டது. ஆசை கொண்ட மனது வெற்றியைத் தழுவ “அம்மா, அந்த பொண்ணு வேலைக்கு வருமா வராதா?”, என்று கேட்டே விட்டான்.

சாரதா எந்த பதிலும் சொல்லாமல் அவனைக் கூர்மையாக பார்க்க சிறு சஞ்சலத்துடன் “என்ன மா?”, என்று கேட்டான்.

“அந்த பொண்ணு வேலைக்கு வரணும்னு நீ எதுக்கு இவ்வளவு ஆசைப் படுற செழியா?”, என்று சாரதா கேட்டதும் திகைத்து போனான்.

இதற்கு அவன் என்ன பதிலைச் சொல்வானாம்? அந்த கேள்வியில் தான் அவன் மனதை அவனே உணர்ந்தான். முதல் பார்வையிலே அவள் மீது காதலில் விழுந்து விட்டோம் என்று புரிந்தது. அதனால் தான் அவள் வரவை இவ்வளவு எதிர் பார்க்கிறோம் என்று உணர்ந்து கொண்டான்.

தன்னுடைய காதல் மனதை தாயிடம் வெளிப் படுத்த முடியாமல் “வேலையை தனியா சமாளிக்க முடியலை மா. கூட ஒரு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அதனால தான் கேட்டேன். அந்த பொண்ணு தான் வரணும்னு சொல்லலை. வேற ஒரு ஆளையாவது அந்த போஸ்ட்க்கு போடுங்க”, என்று அரை மனதாக சொல்லி விட்டு திரும்பி நடந்தான்.

அவன் வேலைப் பளு சாராதாவுக்கு தெரியும் என்பதால் “செழியா”, என்று அழைத்தார்.

“என்ன மா?”

“ஒன்னாம் தேதில இருந்து அந்த பொண்ணு வேலைக்கு வரும். அப்பாயின்மேண்ட் ஆர்டர் அனுப்பியாச்சு. போதுமா?”, என்று கேட்டதும் அவன் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது. உடனே முக பாவனையை மாற்றிக் கொண்டவன் “ஓகே மா”, என்று சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்றான்.

“கடவுளே வேலைக்கு வரப் போற அந்த பொண்ணுக்கும் என் மகனைப் பிடிக்கணும்”, என்று வேண்டிக் கொண்டார் சாரதா. அவரது மகனோ எப்போதடா ஒன்றாம் தேதி வரும் என்று தவம் இருக்க ஆரம்பித்தான். அவன் உணர்ந்த காதலில் அவளைக் காண வேண்டும் என்ற ஆசைத் தீ அவனை கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருந்தது.

 

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அன்று மாலினிக்கு மனம் உற்சாகமாய் இருந்தது. அது முதல் நாள் வேலைக்கு செல்வதனால் கூட இருக்கலாம் என்று அவளே எண்ணிக் கொண்டாள். அதையும் மீறி புது வேலை எப்படி இருக்குமோ? அங்கு இருப்பவர்கள் தன்னுடன் எப்படி பழகுவார்களோ என்று பதட்டமாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு மாதத்தில் கத்தையாக தன்னுடைய கையில் சம்பளப் பணம் வரும் என்ற சந்தோஷமும் இருந்தது.

இத்தனை நாள் கஷ்டப் பட்டு படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு தன்னால் முடிந்ததை செய்யப் போகிறோம் என்ற நிம்மதி வந்தது.

பாலா ஆசைப் பட்டு கேட்கும் அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது. இது தான் மாலினி. அவளைப் பொறுத்த வரை அவளுக்கு அவளுடைய குடும்பம் தான் உலகம். அதை மீறி அவள் நினைவு செல்லாது. அவளுக்கு என்று கூட எதையும் வாங்க அவள் ஆசைப் பட மாட்டாள்.

இப்படி இருப்பவளை செழியனின் காதல் தீ சுற்றி வளைக்குமா? அவன் மீது அவள் மனதில் தோன்றி இருக்கும் ஈர்ப்பு காதலாய் மாறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

குளித்து கிளம்பி வீட்டில் இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள் மாலினி. அவளுடைய வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு அரை மணி நேரம் என்பதால் பஸ்ஸில் ஏறி ஜன்னல் சீட்டில் அமர்ந்தாள்.

சில்லென்று முகத்தில் மீது வந்து மோதியது தென்றல். அந்த காற்றின் இனிமையும் காதில் ஒலித்த காணமும் அவள் மனதை ரம்மியமாக்கியது. புது வேலையைப் பற்றிய பரவசம் அவளைச் சூழ்ந்தது.

இத்தனை நாள் அவள் வேலையைப் பற்றி சிந்தித்தே இல்லை. சிந்திக்கவும் அவளது பெற்றோர் விட வில்லை. ஒரு நாள் அவளது தோழியைப் பார்த்து பேசும் போது “படிச்சிட்டு சும்மாவா இருக்க?”, என்று கேட்ட ஒரு சொல் அவளை யோசிக்க வைத்தது.

திருமணம் வரைக்கும் வேலைக்கு செல்கிறேனே என்று சொல்லி தான் இந்த வேலைக்கு அப்ளை செய்தாள். இந்த வேலை சரி இல்லை என்றால் அவளது பெற்றோர் வேறு வேலைக்கு விட மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்ததே. அதனால் இந்த வேலை பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே தான் சென்றாள்.

பஸ்ஸில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்ததும் அவள் வேலை பார்க்கப் போகும் ஆபீஸ் வந்தது. அப்பாயின்மெண்ட் ஆர்டரை செக்யூரிட்டியிடம் காண்பித்து விட்டு உள்ளே நடந்தாள்.

அங்கிருந்த உயர்ந்த கட்டிடங்களும் சுற்றி இருந்த மரங்களும் தூய்மையும் அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது., இங்கு வேலை செய்ய போகிறோம் என்று சந்தோஷப் பட்டாள்.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் ஆர்டரைக் காட்ட “வாழ்த்துக்கள் மேம், நீங்களும் எங்க கூட வேலை பாக்க வந்ததுக்கு. முதல்ல எம்.டி சாரைப் பாத்துருங்க”, என்றாள் அந்த பெண்.

“மேம் எல்லாம் வேண்டாம். என்னை மாலினின்னே கூப்பிடுங்க”

“அப்படின்னா என்னையும் நீங்க நந்தினின்னு கூப்பிடுங்க”, என்று சொல்லி எம். டி அறைக்குச் செல்ல வழி காட்டினாள். ஏற்கனவே அவளுக்கு அவனது அறை தெரியும் தான். இருந்தாலும் நந்தினியிடம் சரி என்று சொல்லி விட்டு எம்.டி அறையை நோக்கிப் போகும் போது அவள் இண்டெர்வியூவுக்கு வந்த போது பார்த்த பியூன் எதிரில் வந்தான்.

“இங்க வேலை கிடைச்சிருச்சா மேடம்?”, என்று கேட்டான் அவன்.

“இவன் என்னை இன்னும் நினைவு வச்சிருக்கானா?”, என்று எண்ணிக் கொண்டு “ஆமாண்ணே, சாரைப் பாக்கணும்”, என்றாள்.

“சார் காலைல சீக்கிரமே வந்துட்டாங்க மேடம். ரூம்ல தான் இருப்பாங்க. கதவைத் தட்டிட்டு உள்ள போங்க. சார் எப்ப எந்த மன நிலைல இருப்பாங்கன்னு சொல்ல முடியாது”, என்று பயம் காட்டி விட்டுச் சென்றான்.

Advertisement