Advertisement

அத்தியாயம் 5 

உன் இதயம் தொட

ஆவலாக காத்திருக்கிறேன்

உந்தன் அனுமதி வேண்டி!!!

செழியனின் கேள்வியிலே அவனுடைய ஆவல் புரிந்தது. ஆனாலும் அந்த பெண் தன்னுடைய மகனின் மனதில் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறாள் என்பதை காணவே அவர் பத்து நாள் கெடு வைத்தது. அவன் என்னடாவென்றால் ஒரு மணி நேரத்திலே வந்து கேட்கவும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது.

“செழியா, அது என்னோட முடிவுன்னு தானே சொன்ன? அப்ப எனக்கு எப்ப தோணுதோ அப்ப அனுப்புவேன். இல்லைன்னா வேற யாருக்கும் கூட அனுப்புவேன். இல்லை, நீ தான் முடிவு எடுப்பேன்னா நீயே அனுப்பிக்கோ. அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டேன்”, என்று கூறி மகனை ஆழம் பார்த்தார்.

தாய் அப்படிச் சொன்னதும் முகம் சுருங்க “உங்க இஷ்டம் மா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். சிறு சிரிப்புடன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார் சாரதா.

ஆபீஸ் விட்டு வெளியே வரும் போதும் சரி, பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து தாய் தந்தையாருக்கு அழைத்து இன்டர்வியூ பற்றிச் சொன்ன போதும் சரி அவள் மனதில் செழியனைப் பற்றிய சிந்தனைகள் உலா வந்து கொண்டே இருந்தது.

பள்ளி முடிந்து வந்து விசாரித்த பாலாவிடமும் அவனைப் பற்றி தான் பேசினாள். “சின்ன பையன் தான் டா. ஆனா அவ்வளவு பெரிய பேக்டரிக்கு எம்.டி. எனக்கு அப்படியே பிரம்மிப்பா இருக்கு. அப்படியே நம்ம கொரியன் சீரிஸ்ல எல்லாம் பாப்போமே. அப்படி ஒரு எம் டி”, என்று கண்களை விரித்து அவனைப் பற்றிச் சொன்னாள். அவள் கதை சொல்வதைப் பார்த்து பாலாவுக்கு சிரிப்பாக வந்தது.

“அது என்ன கொரியன் சீரிஸ் மாதிரி? நம்ம தமிழ் படத்துல இருக்குற பணக்காரங்க ஹீரோ மாதிரி இல்லையா?”, என்று கேட்டான்.

“நம்ம பணக்கார ஹீரோவுக்கு எல்லாம் முப்பத்தஞ்சு வயசு டா. ஆனா இவருக்கு இருபத்தியாறு இல்லைன்னா இருபத்தி எட்டு தான் இருக்கும்”

“அப்ப உன் வயசுன்னு சொல்லு”

“டேய் எனக்கு இருபத்தி நாலு வயசு தான் டா ஆகுது”

“இப்படி தான் நீயும் ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருக்க கா. சரி நம்ம ஹீரோ என்ன கேள்வி கேட்டார்? அதைச் சொல்லு”

“அதை ஏன் கேக்குற? முதல் கேள்வியே, நீங்க ஏன் இவ்வளவு நாள் வேலைக்கு போகலைன்னு தான்”

“ஹா ஹா, குட் கொஸ்டீன். இதுக்கு உண்மையான பதில் எங்களுக்கு தானே தெரியும்? சரி நீ அவர் கிட்ட என்ன சொல்லி சமாளிச்ச?”

“என்ன சொல்ல? உண்மையை தான் சொன்னேன்”

“என்னது உண்மையைச் சொன்னியா?”

“ஆமா டா”

“அட லூசு, உன்னை திண்ணிப் பண்டாரம்னு நினைச்சிருப்பார்”

“அதைச் சொல்லலைன்னா என்னை திறமை இல்லாதவள்ன்னு நினைச்சிருப்பார்ல?”

“எனக்கு இப்பவே ரிசல்ட் தெரிஞ்சுருச்சு. கண்டிப்பா திண்ணிப் பண்டாரத்துக்கு எல்லாம் வேலை கொடுக்க மாட்டாங்க”

“என்னையா திண்ணிப் பண்டாரம்னு சொல்ற? நாளைக்கு உனக்கு தயிர் சாதம் தான்”

“நீ வைக்கிற தயிர் சாதம் கூட எனக்கு தேவாமிர்தம் தான் அக்கா. அதுல கருவேப்பிலை, கடுகு, இஞ்சி, மிளகா, கேரட், கடைசியா கொத்தமல்லின்னு அப்படியே கன்னையே பறிக்கும். வாயில போடும் போது அல்வா மாதிரி உள்ள போகும்”, என்று ரசித்து சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.

தன்னுடைய சமையலுக்கு அடிமையாக இருக்கும் தம்பியை நினைத்து சிரித்த படி அவனது பையைத் திறந்து டிபன் பாக்ஸை எடுத்து வெளியே கழுவப் போட்டாள். அவன் குளித்து முடித்து வந்ததும் சூடான டீயும் சுண்டலும் இருவரும் சாப்பிட்டார்கள்.

அதன் பின் பாலாவை படிக்க வைப்பதில் அவள் செழியனை மறந்து விட்டாள். ஆனால் அவன் முகம் மட்டும் அவள் ஆழ் மனதில் பதிந்து விட்டது என்பதை அவள் அறிய வில்லை.

கனகராஜ் மற்றும் வசந்தா இருவரும் வீட்டை ஒரு போலீஸ்காரருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு ஊரில் இருந்து வந்து விட்டார்கள். மாலினியும் பாலாவும் ஓடிச் சென்று அவர்களைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களிடம் பிள்ளைகள் செல்லம் கொஞ்சுவது, நடந்ததை விசாரிப்பது என்று அந்த நாள் கடந்தது.

அடுத்த நாளே கனகராஜ் புஷ்பா அனுப்பிய பணத்தை அக்கவுண்ட்டில் இருந்து எடுத்து கொண்டு போய் சேது மாதவனிடம் அடைத்து விட்டார். கணக்கு முடிந்ததும் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.

“என்ன அண்ணே அதுக்குள்ள கடனை முடிச்சிட்டீங்க?”, என்று கேட்டான் சேது மாதவன்.

“நீ வட்டியை கூட்டிட்டே போவ? நான் கட்டிகிட்டே இருக்கவா?”, என்று மனதில் நினைத்துக் கொண்டு “வாங்கினவங்க பணத்தைக் கொடுத்துட்டாங்க சார். அப்புறம் எதுக்கு கையில் வச்சிட்டு இருக்கணும். அதனால் தான் வந்து கொடுத்துட்டேன்”, என்றார் கனகராஜ்.

“நாள பின்ன பணம் தேவை பட்டுச்சுன்னா வந்து வாங்கிக்கங்க?”

“எதுக்கு என் பொண்டாட்டி என்னை உரிச்சி உப்பு கண்டம் போடவா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “சரி சார் நான் கிளம்புறேன்”, என்றார்.

அப்போதும் “வாங்கண்ணே”, என்று சொல்லி விடை கொடுத்த சேது மாதவனிடம் மண்டையை மட்டும் ஆட்டி விட்டு வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் அதை சொல்லியும் விட்டார். “இனிமேலாவது இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா மாதிரி பொறுப்பா இருங்க. வீட்டு வாடகை பணத்தையும், நிலம் குத்தகைப் பணத்தையும் பாலா பேர்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி போட்டு வைங்க. உங்க சம்பள பணத்துல மிச்ச ரூபாயை ஏற்கனவே போட்டுருக்குற பணத்தோட மாலினி பேர்ல போட்டுருங்க”, என்று ஆர்டர் போட்டாள் வசந்தா.

சரி என்று தலையசைத்த கனகராஜ்க்கு மற்றொமொரு சோதனை வந்தது. அது அவளது அக்கா அவரை போனில் அழைத்துக் கொண்டே இருந்தாள்.

வீட்டை போலீஸ் காரனுக்கு வாடகைக்கு விட்டதையும், நிலத்தை குத்தகைக்கு விட்டதையும் அண்ணாமலை மூலம் தெரிந்து கொண்ட புஷ்பா அந்த சொத்தை திருப்பி வாங்க தம்பிக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.

துரோகம் செய்த அவளிடம் பேசவே கனகராஜ்க்கு பிடிக்க வில்லை. ஆனால் அவள் மீண்டும் மீண்டும் அழைக்கவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி அதை எடுத்தார்.

“தம்பி, நல்லா இருக்கியாப்பா?”, என்று அவள் உருக “சும்மா நடிக்காதே, என்ன விசயம்னு சொல்லு”, என்றார்.

“என்னப்பா இப்படி பேசுற? நான் உன் அக்கா”

“கடுப்பேத்தாம விசயத்துக்கு வரியா?”

“பாசத்துல எனக்கு கொடுத்த சொத்தை எல்லாம் திருப்பி எடுத்துக் கிட்டா எப்படிப்பா?”

“நீ சொன்ன பாசமும் எனக்கு இல்லை. நான் உன் தம்பியும் இல்லை”

“தம்பி”

“இப்படி மறுபடி மறுபடி நடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா? உன் குணம் தெரிஞ்சு தான் அம்மா முன்னாடியே உனக்கு ஒண்ணும் கொடுக்க கூடாதுன்னு சொல்லுச்சு. ஆனா நான் தான் கூடப் பிறந்தவள்ன்னு நிலம் கொடுத்தேன். அதை உன் புருஷன் பிஸ்னஸ் ஆரம்பிக்க போறாறுன்னு சொல்லி வித்து தின்னீங்க. அதனால தான் என் வீட்டையும் நிலத்தையும் கொடுத்தேன். ஆனா நீ அதையும் இல்ல விக்கப் பாத்த? நீ எல்லாத்தையும் வித்து தின்னுட்டு போவ? நான் விரலை சூப்பிட்டு நிப்பேன்னு பாத்தியா?”

“தம்பி”

“வாயை மூடு. அந்த உறவு நமக்குள்ள இனி இல்லை”

“பாரம்பரிய சொத்துல எனக்கும் பங்கு இருக்கு”

“எனக்கும் சட்டம் தெரியும். நீ வித்து தின்ன இடம் தான் பாரம்பரிய சொத்து. மத்தது எல்லாம் அப்பா பேர்ல தான் இருக்கு. அதுல உனக்கு பங்கு கொடுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இனி எனக்கு கால் பண்ணாதே”

“தம்பி, நான் உன் கிட்ட பேசக் கூடாதா?”

“கட்டாயம் பேசக் கூடாது. என்ன பேசிறப் போற? சொத்துன்னு தான் வந்து நிப்ப. அத்தைன்னு பாசத்துல என் பிள்ளைகளை கேக்க போறியா? இல்லை உனக்கே எல்லாத்தையும் கொடுத்தாளே, என் பொண்டாட்டி, அவளைப் பத்தி கேக்கப் போறியா? இல்லை தானே? இதுக்கு மேல எனக்கு போன் பண்ணி இதைப் பத்திப் பேசினால் உன்னோட மருமகன் கிட்ட உங்க துரோகம் எல்லாத்தையும் சொல்லிருவேன். அவர் உங்களை மாதிரி எல்லாம் இல்லை. நியாயம் நேர்மைன்னு நிக்குறவர். அவர் நம்பர் என் கிட்ட இருக்கு. உங்களைப் பத்தி ஒரு வார்த்தை சொன்னேன்னு வை, உன் பொண்ணு வாழ்க்கை அந்தரத்துல தொங்கும்”

Advertisement