Advertisement

பதில் சொல்லாமல் அவன் விடப் போவதில்லை என்று அவளுக்கு புரிந்தது. 

“அது வந்து சார், யுஜி, பிஜி‌ எல்லாமே ஹாஸ்டல்ல இருந்து தான் நான் படிச்சேன். அங்க நல்ல சாப்பாடே கிடைக்காதா? அதனால…”

“அதனால?”, என்று சிறு ஆர்வமுடன் கேட்டான். 

“படிச்சு முடிச்சதும் அம்மா சமையலை ரசிச்சு சாப்பிடணும்னு சொல்லி…. எந்த கம்பெனிக்கும் வேலைக்கு அப்ளை பண்ணலை”

“வாட்?”

“யெஸ் சார்…. நல்லா சாப்பிடணும்னு தான் வேலைக்கு போகலை. திடீர்னு சும்மாவே இருக்கோமேன்னு தோணிச்சு. அதான் உங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணினேன்”, என்று அவள் மென்று விழுங்கி சொன்னதும் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் செழியன். அவள் முகத்தைப் பார்த்தால் பெரியதாக சிரித்து விடுவோம் என்று எண்ணி பைலைப் பார்த்து குனிந்து கொண்டான். 

எதுவும் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்த மாலினி “ஐயோ, கோபப் பட்டுட்டானோ? கண்டிப்பா என்னைத் திண்ணிப் பண்டாரம்னு நினைச்சிருப்பான்”, என்று எண்ணிய படி அவனையே பார்த்திருந்தாள். மீண்டும் அவள் கண்கள் அவனை ரசனையுடன் நோக்கியது. 

“கண்டிப்பா இந்த வேலை நமக்கு கிடைக்காது. ஹீரோ மாதிரி இருக்குற இவனையாவது சைட் அடிப்போம்”, என்று எண்ணி அவனை அளவிட்டாள். 

அமர்ந்திருப்பதால் அவனது உயரம் சரியாக தெரியாமல் போனாலும் நல்ல உயரம் என்று சொல்லும் படி இருந்தான் செழியன். 

அவனுக்கு அழகாக பொருந்திய நேர்த்தியான உடையும், ஸ்டைலாக அவன் சட்டை கையை முழங்கை வரை சுருட்டி வைத்திருந்ததும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்தது. கோதுமை நிறம், உறுதியான தேகம், ராஜ தோரணை கொண்ட முகம், பரந்த அகலமான நெற்றி, அலையலையான கேசம், கூர்மையான கண்கள், கண்களுக்குள் அங்கு இங்கு சுழலும் காந்தம் போன்ற கரு விழிகள், கூரான மூக்கு, சிவந்த உதடுகள் என்று அழகாக இருந்தான். 

அவனது முகத்தில் பயணித்த அவளது கண்கள் அவனுடைய இதழ்களில் சற்று நேரம் இளைப்பாறியது., “இவன் உதடு என்ன இவ்வளவு சிவப்பா இருக்கு? ஒரு வேளை லிப்ஸ்டிக் போட்டுருப்பானோ?”, என்று எண்ணினாள். 

“ஏன்டி இண்டர்வியூக்கு வந்துட்டு நீ என்ன வேலை பாத்துட்டு இருக்க?”, என்று அவள் மனம் அவளைக் கடிந்து கொண்டாலும் “பாத்தா தப்பில்லை”, என்று அதற்கு பதில் சொல்லி விட்டு அவனையே பார்த்தாள். 

அவனோ அவளது மதிப்பெண், அவளது திறமை, அவளது புராஜெக்ட் என்று அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். பின் அவளை நிமிர்ந்து பார்க்க அவளோ சட்டென்று பார்வையைத் திருப்பாமல் அவனையே பார்த்த படி மாட்டிக் கொண்டாள். அவள் பார்வையில் அவன் தான் ஒரு நொடி ஜெர்க் ஆகி விட்டான். “இவ என்ன என்னை சைட் அடிக்கிறாளா?”, என்ற கேள்வி அவனுக்குள் உருவானது. 

“சே சே இருக்காது”, என்று அவன் எண்ணினாலும் அவளது தடுமாற்றம் அது தான் உண்மை என்று அவனுக்கு எடுத்துரைத்தது. அவளது பார்வை முதல் முறையாக அவனை பாதித்தது. அவளை கூர்ந்து அளவிட்டான். அவளது அழகு அப்போது தான் அவன் கண்ணில் பட்டது. 

எந்த முகப்பூச்சும் இல்லாமல் இயல்பாக இருந்த அவளது முகம் அவனைக் கவரவே செய்தது. 

“கடவுளே, நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன்?”, என்று தன்னையே கடிந்து கொண்டவன் சிறு சிரிப்புடன் “கேள்வியை ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான். 

அவன் சிரிப்பை ஆவென்று பார்த்தவள் “ஓகே சார்”, என்று சொல்லி நிமிர்ந்து அமர்ந்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் அவளது பாடம் சம்மந்தமாக அதே நேரம் அவனுடைய கம்பெனிக்கு தேவையான சில கேள்விகளைக் கேட்டான். 

மாலினியும் அவளுக்கு தெரிந்ததை சொன்னாள். இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றும் சொல்லி விட்டாள். அவளது தெளிவான பதில்களும் நேர்மையான பதில்களும் அவனைக் கவர்ந்தது. ஏனோ மற்றவர்களை விட அவள் வித்தியாசமாக தெரிந்தாள். 

பின் பொது அறிவு, தற்போதைய நிகழ்வுகளில் இருந்து சில கேள்விகள் கேட்டான். கனகராஜ் அருகே அமர்ந்து நியூஸ் பார்ப்பதால் அதற்கெல்லாம் சரியாக விடையளித்தாள்.  

உண்மையில் அவள் திறமைசாலி தான் என்று அவனது மனம் ஒப்புக் கொண்டது. இந்த வேலைக்கு அவள் தான் சரியாக இருப்பாள் என்று முடிவு செய்து விட்டான். ஆனால் உடனே அதைச் சொல்ல மனதில்லாமல் “ஓகே மிஸ் மாலினி. நீங்க இப்ப போகலாம். செலக்ட் ஆகிட்டா உங்களுக்கு மெயில் அனுப்புவோம்”, என்று சொல்லி அவளிடம் பைலை நீட்டினான். 

“தேங்க் யு சார்”, என்று சொல்லி அதைப் பெற்றுக் கொண்ட மாலினி எழுந்து நின்று அவனைப் பார்த்தாள். அவன் அவளைக் கண்டு புன்னகைத்தான். அந்த வசீகரமான புன்னகையை ஒரு நொடி ரசித்து விட்டு வெளியே போக நடந்தாள். 

“மாலினி ஒரு நிமிஷம்”, என்று அழைக்கும் அவன் குரலில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

அவன் அவளையே பார்த்த படி இருக்கவும் “சார், கூப்பிட்டீங்களா?”, என்று கேட்டாள். 

“ஆமா, ஒரே ஒரு சந்தேகம் கேக்கணும்”

“என்ன சார்?”

“உங்களுக்கு இந்த ஊர் தானே?”

“ஆமா சார்”

“அம்மா அப்பா இங்க தானே இருக்காங்க?”

“ஆமா சார், சொந்த ஊர் வேறன்னாலும் நாங்க ரொம்ப வருஷமா இங்க தான் இருக்கோம். இங்க இருக்குறதும் சொந்த வீடு தான்”

“அப்புறம் ஏன் ஹாஸ்ட்டல்ல இருந்தீங்க? வீட்டு பக்கத்துல தானே காலேஜ்? வீட்ல இருந்து நல்ல சாப்பாடு சாப்பிட்டே படிச்சிருக்கலாமே?”, என்று அவன் கேட்டதும் திகைத்து போய் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையில் கண்டிப்பாக அவள் ஏதோ சுவாரசியமாக தான் பதில் சொல்லப் போகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. 

அவன் தன்னுடைய முகத்தையே பார்த்த படி பதிலுக்கு காத்திருப்பது புரிய “அது வந்து சார்…. வீட்ல இருந்தா…?”, என்று ஆரம்பித்தாள். 

“வீட்ல இருந்தா என்ன? ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா சார்… அது வந்து… வீட்ல இருந்தா பயங்கரமான சண்டை வரும்”

“சண்டையா? அம்மா அப்பா சண்டை போடுவாங்களா?”

“அம்மா அப்பா இடையே சண்டையே வராது சார்”

“அப்புறம்?”

“எனக்கும் என் தம்பிக்கும் இடையே தான் சார் வரும்”

“வாட்”

“ஆமா சார், எங்க சண்டையை தாங்க முடியாம தான் என்னை ஹாஸ்டல்ல போட்டுட்டாங்க”

“சரி நீங்க போங்க”, என்று சொன்னதும் அவள் திரும்பி நடந்தாள். அவள் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் அவள் சென்றதும் அவள் சொன்ன பதிலில் “ஹா ஹா, ஐயோ”, என்று அடக்க மாட்டாமல் சிரித்தான். 

“என்ன டா இப்படி ஒரு சிரிப்பு?”, என்று கேட்ட படி உள்ளே வந்த பெண்மணியைக் கண்டதும் அவன் முகம் மேலும் கணிந்தது. சாரதா தான் உள்ளே வந்து கொண்டிருந்தார்.  

“மாம்”, என்று அவன் சந்தோஷமாக அழைக்க “என்ன கண்ணா? உன் முகம் இவ்வளவு டால் அடிக்குது? எதுக்கு இவ்வளவு சந்தோஷம்?”, என்று கேட்ட படி அவன் எதிரே அமர்ந்தார். மகனின் பதிலுக்கு ஆவலாக காத்திருந்தாலும் அவருக்கு மகனின் இந்த சந்தோஷம் பிடித்தது. 

“ஒரு இண்டரெஸ்ட்டிங் பொண்ணை இண்டர்வியூ பண்ணினேன் மா. பயங்கர சிரிப்பா வருது”

மகனின் முகத்தில் இருந்த சந்தோஷம் அந்த தாய்க்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அவனை இந்த அளவுக்கு சிரிக்க வைத்த அந்த பெண்ணுக்கு ஒரு வேலை என்ன? இந்த கம்பெனியவே எழுதிக் கொடுக்கலாம் என்று தோன்றி வைத்தது அந்த தாய்க்கு. 

அவருக்கு தெரிந்து அவன் சிரித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. என்று அவனது தந்தை இவர்களை விட்டுச் சென்றாரோ, அப்போதே அவன் தலையில் மிகப் பெரிய சுமை ஏறி அமர்ந்து விட்டது. 

“என்ன சொன்னா செழியா? இந்த அளவுக்கு நீ சிரிக்கிற அளவுக்கு?”

“அந்த பொண்ணு பேர் மாலினி மா. அவ பி. ஜி‌ முடிச்சிட்டு மூணு வருஷமா எந்த வேலைக்கும் போகாம இருந்தா”

“சரி, அதுக்கு என்ன?”

“எதுக்கு மூணு வருஷமா வேலைக்கு போகலைன்னு கேட்டேன்”

“என்ன சொல்லிருப்பா? வேலை கிடைக்கலைன்னு சொல்லிருப்பா. அதுக்கா இந்த சிரிப்பு?”

“இல்லை மா”

“பின்ன? ஏதாவது குடும்ப பிரச்சனைன்னு சொன்னாளா? அப்படி சொன்னா எதுக்கு சிரிக்கணும்?”

“பிரச்சனை எல்லாம் இல்லை மா. அவ படிச்சது எல்லாமே ஹாஸ்ட்டல்ல தங்கித் தானாம்”

“சரி அதுக்கு என்ன டா?”

“ஹாஸ்டல்ல நல்ல சாப்பாடே கிடைக்காதாம். அதனால இந்த மூணு வருஷமும் வீட்ல உக்காந்து நல்லா சாப்பிடத் தான் எந்த வேலைக்கும் அப்ளை பண்ணலையாம்”

“என்ன டா சொல்ற?”

“ஆமா மா, அப்படி தான் சொன்னா”

“சரியான திண்ணிப் பண்டாரமா இருப்பா போல? என்ன யானை மாதிரி இருந்தாளா?”

“யானை மாதிரியா? சான்ஸே இல்லை. நீங்க படிக்கிற கதைகள்ல கொடி இடையாள்ன்னு வருமே அப்படி இருந்தா மா. அவ்வளவு அழகு”, என்று ரசித்து சொன்னான் செழியன். அவன் சொல்லிய விதமும் அவன் சொல்லும் போது அவன் கண்களில் இருந்த மயக்கமும் சாரதாவுக்கு வித்தியாசமாக இருந்தது. 

தன்னுடைய மகனும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ரசிப்பானா என்று வியந்து போய் பார்த்தார். 

“அந்த பொண்ணு ரொம்ப அழகா டா?”

“ரொம்ப ரொம்ப அழகு மா. குண்டும் இல்லாம ஒள்ளியும் இல்லாம அளவா இருந்தா. கண் பயங்கர ஷார்ப், புருவம் வில் மாதிரி இருந்தது. சாதாரண காட்டன் சுடிதார் தான் போட்டிருந்தா. ஆனா நீட்டா இருந்தது. முகம் குழந்தை தனமா கியூட்டா இருந்தது. இந்த காரணத்தைச் சொல்லும் போது அவ முகம் அவ்வளவு அழகா இருந்துச்சு மா. ஸோ சுவீட்ன்னு எனக்கே கொஞ்சனும் போல இருந்தது”

“நிஜமாவா டா செழியா?”

“யெஸ் மா, அப்புறம் இன்னொரு காமெடி தெரியுமா?”

“என்ன டா?”

“எதுக்கு ஹாஸ்டல்ல இருந்து படிச்சீங்கன்னு கேட்டேன்”

“இது என்ன டா கேள்வி?”

“அவசியம் இருந்துச்சு மா. அவளுக்கு இதே ஊர் தான். அம்மா அப்பா வீடு எல்லாம் இங்க தான் இருக்கு”

“அப்புறம் ஏன் ஹாஸ்டலாம்?”

“வீட்ல அவளுக்கும் அவ தம்பிக்கும் இடையே பயங்கர சண்டை  வருமாம். அதான் அவளை ஹாஸ்ட்டல்ல போட்டுட்டாங்களாம்”

“என்ன செழியா சொல்ற?”, என்று கேட்ட சாராதாவின் இதழ்களும் புன்னகைத்தது. 

“ஆமா மா, எனக்கு சிரிப்பே அடக்க முடியலை”

“நல்ல பொண்ணு தான். உண்மையா இருக்கா. ஒண்ணு பண்ணு டா. அவ இன்டர்வியூ நல்லா பண்ணலைன்னா கூட அவளை செலெக்ட் பண்ணிரு டா”

“நல்லா பண்ணலையா? எல்லா கேள்விக்கும் டான் டான்னு பதில் சொன்னா மா. அவ நாட்டி மட்டும் இல்லை. கிளவர் கேர்ள்”

“அப்ப என்ன? அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுத்துட்டியா?”

“அதை நீங்க தான் மா செய்யணும்”

“நான் அனுப்புனா என்ன, நீ அனுப்புனா என்ன டா?”

“நோ மா, இதுல எனக்கு உங்க முடிவும் அவசியம் தேவை. இதோ அவ பயோடேட்டா. உங்களுக்கு ஒகேன்னா நீங்களே மேனேஜர் கிட்ட சொல்லி  மெயில் அனுப்பச்  சொல்லிருங்க”

“சரி செழியா”, என்ற படி மாலினியின் பயோடேட்டாவை வாங்கிக் கொண்டு அவரது அறைக்குச் சென்றார். 

தன்னுடைய சீட்டில் அமர்ந்து அவளது பயோடேட்டாவை ஆராய்ந்து விட்டு மேனேஜரை அழைத்தார். 

உள்ளே வந்த மேனேஜரிடம் “ஒரு பத்து நாள் கழிச்சு இந்த பொண்ணுக்கு அப்பாயின்மேண்ட் ஆர்டர் அனுப்பிருங்க”, என்றார் சாரதா. 

“எதுக்கு மேம் பத்து நாள் கழிச்சு?”, என்று கேட்க வந்த மேனேஜர் அது தனக்கு தேவை இல்லை என்பதால் “சரி மேம்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பப் போனார். 

“சார் ஒரு நிமிஷம்”, என்று சாரதா அழைத்ததும் “சொல்லுங்க மேம்?”, என்றார். 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இண்டர்வியூக்கு வந்திருந்தாங்கல்ல? அவங்க எல்லாரையும் நான் பாக்கணும். அந்த டைம்க்கான சிசிடிவி புட்டேஜை எனக்கு மெயில் பண்ணி வைங்க”

“சரிங்க மேம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார். 

மெயில் வந்ததும் அவர் அனுப்பிய வீடியோவை பார்த்தார் சாரதா. துருதுருவென்ற கண்களும் எளிமையான அழகும் கொண்ட மாலினியை சாரதாவுக்கும் பிடித்தது. உடனேயே அவளை தன்னுடைய மகன் அருகில் நிற்க வைத்துப் பார்த்தது அவரது ஆசை மனம். இருவருக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டார். 

கூடவே “இவளை செழியனுக்கு பிடிச்சதில் ஆச்சர்யமே இல்லை. இப்படி ஒரு பொண்ணு கிட்ட எந்த பையன் தான் மயங்காம இருப்பான்? ”, என்று எண்ணிக் கொண்டார். 

அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அவரைத் தேடி வந்த செழியன் “மா, அப்பாயின்மேண்ட் ஆர்டர் அனுப்பிட்டீங்களா ?”, என்று கேட்டுக் கொண்டே அவர் அறைக்கு வந்தான். மகன் அப்படிக் கேட்டதும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது. 

தொடரும்…..

Advertisement