Advertisement

அத்தியாயம்

நரகத்துக்கே நீ

சென்றாலும் உன்னைத்

தொடர ஆசை கொண்டேன்!!!

“நீ எழுதிக் கொடுத்ததை வாங்குறன்னு கேஸ் போடுவேன்“, என்று காட்டமான குரலில் பேசினாள் புஷ்பா. 

“அடங்க மாட்டல்ல நீ? நான் இப்ப வீட்டு பூட்டை உடைச்சு பத்திரத்தை பத்திரமா எடுத்துட்டு நான் எழுதிக் கொடுத்த வெள்ளைப் பேப்பரை கிழிக்கிறேனா இல்லையான்னு பாரு. அது தான் என் முதல் வேலை”, என்றார் கனகராஜ். 

“ஏய் ஏய் வேண்டாம்”

“நீ என்ன கத்தினாலும் இது தான் என் முடிவு. உன் கைக்கு வந்தது எதுவும் இனி உனக்கு இல்லை. வை போனை”, என்று சொல்லி வைத்து விட்டார். 

அடுத்து பத்து நிமிடத்தில் அந்த வீட்டின் கம்பவுண்ட் பூட்டு உடைக்கப் பட்டது. பத்திரம் நகை என அனைத்தையும் கை பற்றினார்கள். அவர் எழுதிக் கொடுத்த பேப்பர் தூள் தூளானது. வீட்டின் சாவி எல்லாவற்றையும் மாற்றினார்கள். எல்லா  வேலையும் முடிந்ததும் அக்கடா என்று அமர்ந்தார்கள். பின் வீட்டுக்கு அழைத்து நடந்த விஷயத்தைச் சொன்னதும் மாலினி மற்றும் பாலாவுக்கு அதிர்ச்சி தான். 

“என்ன மா சொல்றீங்க? அத்தையும் மாமாவும் நம்மளை இந்த அளவுக்கு ஏமாத்திருக்காங்களா?”, என்று கேட்டாள் மாலினி. 

“ஆமா டா, எனக்கு வர ஆத்திரத்துக்கு அவ மட்டும் என் கையில் கிடைச்சா செத்தா. எல்லாம் உன் அப்பாவால தான். அவர் மட்டும் சரியா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா?”

“சரி விடுங்க மா. அதான் இழந்ததை எல்லாம் வாங்கியாச்சே?”

“உன் அப்பாவை ஒரு சொல் சொல்ல விட மாட்டியே?”

“அதுக்கில்ல மா. அவங்க ஏமாத்தினா அப்பா என்ன செய்வார் சொல்லுங்க? கூட பிறந்த அக்கான்னு எல்லாம் விட்டுக் கொடுத்தாங்க? நாளைக்கு பாலாவும் எனக்காக செய்ய மாட்டானா? ஆனா அப்பாவோட உண்மையான அன்பை அவங்களுக்கு அனுபவிக்க தெரியலை. இனிமே அப்பா உசாரா இருப்பாங்கல்ல? அதை நினைச்சு சந்தோஷப் படுங்க”

“சரிங்க பெரிய மனுஷி, சாப்பிட்டீங்களா? மாவு இருக்கா? காலி ஆகிருச்சா?”

“அதெல்லாம் நிறைய இருக்கு மா. சரி, நீங்க எப்ப கிளம்பி வரப் போறீங்க?”

“இல்லை மாலு, வீட்டை இப்படியே போட்டுட்டு வர முடியாது”

“என்ன பண்ணப் போறீங்க?”

“அண்ணாமலை ஏதோ ஒரு ஆள் வீட்டை வாடகைக்கு கேட்டுருக்காங்கன்னு சொல்லுச்சு. அதான் வீட்டை வாடகைக்கு விட்டுட்டு வரணும்”

“அத்தை திருப்பியும் வந்து பிரச்சனை பண்ணினா என்ன செய்ய மா? அவங்களால வாடகைக்கு இருக்குறவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுல்ல?”

“வீட்டை வாடகைக்கு கேட்டுருக்குறது ஒரு போலீஸ்காரன் குடும்பமாம். அதான் அப்பா சரின்னு சொன்னாங்க. போலிஸ்னா உங்க அத்தை கொஞ்சம் பயப்படுவா. நாளைக்கு வீட்டை ஒதுங்க வச்சு கொடுக்கணும். கண்ட படி போட்டுட்டு போயிருக்கா. உன் அத்தையோட சாமானை எல்லாம் பின்னாடி இருக்குற பழைய வீட்ல போட்டுட்டு இந்த வீட்டை கழுவி விடணும். இன்னையோட இந்த வீட்டுக்கு பிடிச்ச பீடை ஒழியட்டும். எப்படின்னாலும் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவோம் மாலு”

“சரி மா”

“சரி, நீ தம்பியைப் பாத்துக்கோ”

“என்னைக்கு இருந்தாலும் உனக்கு அவன் தான் உசத்தி இல்ல”, என்று சிணுங்கினாள் மகள். 

“அடி கழுதை, நீயும் எனக்கு முக்கியம் தான் டி”

“நம்பிட்டேன் போ”

“நிஜமா தான் டி. ரெண்டு கண்ணுல ஒரு கண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்போமா?”

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் மா. சரி, பாத்து வாங்க. அப்பா வந்ததும் என் கிட்ட பேசச் சொல்லு”

“சரி டா”

“அப்புறம் அம்மா, ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்”

“என்ன டி?”

“எஸ் எஸ் இண்டஸ்ட்ரிஸ்ல இருந்து எனக்கு இண்டர்வியூக்கு வரச் சொல்லி மெயில் வந்துருக்கு”

“அப்படியா எப்ப டி?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான். நாளைக்கு காலைல பத்து மணிக்கு மெயின் ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிருக்காங்க”

“அன்னைக்கு ஒரு நாள் அப்ளை பண்ணினேன்னு சொன்னியே? அதுவா?”

“ஆமா மா”

“ஆனாலும் மாலு…. வேலைக்குன்னா….”

“என்ன மா தயங்குற? நான் வேலைக்கு போகட்டுமா?”

“இல்லை டி, உனக்கு கல்யாணம் பண்ணணும்னு நானும் அப்பாவும் பேசினோம்”

“எனக்கு கல்யாணம் பண்ண வேண்டாம்னு யார் சொன்னா? தாராளமா பண்ணுங்க. நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்? ஆனா கல்யாணம் நாளைக்கேவா பண்ணப் போறீங்க? மாப்பிள்ளை பாத்து, ஜாதகம் பாத்து, அவனுக்கு என்னைப் பிடிச்சு, எப்படியும் அதுக்கு நாள் ஆகும். அது வரைக்கும் வேலைக்கு போறேனே? நீங்க போக வேண்டாம்னு சொன்னா நான் போகலை”

“சரி, நான் அப்பா கிட்ட கேக்குறேன்”

“அப்பா கிட்ட நான் அப்பவே கேட்டுட்டேன். அப்பா தான் சரின்னு சொல்லிட்டாங்களே? நீ தான் கடுப்பேத்திட்டு இருக்க?”

“அதானே, என்ன டா அதிசயமா என் கிட்ட முதல்ல அனுமதி வாங்குறாளேன்னு சந்தேகப் பட்டேன். இப்பவும் நான் தான் ரெண்டாவதா?”

“ரெண்டாவதா உன் கிட்ட கேட்டாலும் எனக்கு உன் சம்மதமும் முக்கியம் மா”, என்று மாலினி சொன்னதும் நெகிழ்ந்து போனாள் வசந்தா. 

“சரி அப்பா என்ன சொன்னாங்க?”

“நல்ல கம்பெனி தான். நம்பிக்கை வச்சு அனுப்புறோம். அந்த நம்பிக்கையை உன்னால காப்பாத்த முடிஞ்சா நீ வேலைக்கு போ. இல்லைன்னா வேண்டாம்னு சொன்னாங்க மா”

“சரியா தான் சொல்லிருக்காரு. நாங்க சொல்லும் போது வேலையை விட்டு நின்னுறனும் சரியா?”

“சரி மா”

“வேலைக்கு சேரும் போதே சொல்லிரு. நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த வேலையை விட்டுட்டு போய்ருவேன்னு”


“அம்மா, அப்படிச் சொன்னா நீங்க இப்பவே போயிருங்கன்னு சொல்லிருவாங்க. அப்புறம் எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. இண்டர்வியுக்கு தான் போக போறேன். அதுக்குள்ளே இப்படிச் சொல்ற? எனக்கு வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கோ மா”

“உன் திறமைக்கு கண்டிப்பா கிடைக்கும் டா”

“சரி மா”, என்று சொல்லி போனை வைத்தாள் மாலினி. 

அடுத்த நாள் எப்போதும் போல் அழகாக தான் விடிந்தது. பாலாவை  பள்ளிக்கு தயார் செய்து அனுப்பினாள். பின் வீட்டை ஒதுங்க வைத்தவள் குளித்து முடித்து இண்டர்வியூக்கு கிளம்பினாள். 

ஏற்கனவே நேர்முக தேர்வுக்கான அழைப்பை பாலா பிரிண்ட் அவுட் எடுத்துக் அவளிடம் கொடுத்திருந்ததால் நேரடியாக அந்த கம்பெனிக்கே சென்றாள் மாலினி. 

என்ன தான் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை இருந்தாலும் உள்ளுக்குள் சற்று படபடப்பாக தான் இருந்தது. 

அங்கிருந்த ரிசப்சனிஸ்ட்டிடம் அனுமதி கடிதத்தைக் காட்டினாள். பின் அவள் சொன்ன அறைக்கு சென்றாள். அங்கே இன்னும் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் இண்டர்வியூக்கு தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

அந்த அறைக்குள்ளே மற்றொரு அறையும் இருந்தது. அந்த அறைக்குள் தான் இண்டெர்வியூ நடந்தது,. சரியாக பதினொரு மணிக்கு ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப் பட்டனர். ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வெளியே வந்தனர். கடைசியாக மாலினிக்கு அழைப்பு வந்தது. 

‘செழியன் மேனேஜிங்க் டேரக்டர்’ என்ற பெயர் பலகை பொரிக்கப் பட்ட அறைக்குள் அனுமதி வேண்டியபடி நுழைந்தாள் மாலினி. முதல் முறையாக அவள் பங்கேற்கும் இண்டர்வியூ என்பதால் சற்று பயமாக தான் இருந்தது., 

அகன்ற விசாலமான அந்த அறையில் பெரிய இருக்கையில் ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்தான் செழியன். இவளைக் கண்டதும் “யெஸ் கமின்”, என்று சிறு புன்னகையுடன் கூறியவன் பைலை பார்க்க ஆரம்பித்து விட்டான். 

மாலினி கணிதப் பிரிவில் முதுகலைப் பட்டம் படித்திருந்தாள். அது போக பெர்சனல் செக்கரட்டரி பதவிக்கான தட்டச்சு பயிற்சியையும் முடித்திருந்தாள். என்ன தான் படிப்பு இருந்தாலும் கூடவே படபடப்பும் அவளுக்கு இருந்தது. தயக்கத்துடன் அவன் அருகே சென்று நின்றாள் மாலினி. 

“டேக் யுவர் சீட் மிஸ் மாலினி”, என்று அவன் தலை நிமிராமலே சொன்னதும் “தேங்க் யு சார்”, என்று சொல்லி விட்டு அமர்ந்தாள். 

அவன் குனிந்து பைலை பார்த்துக் கொண்டிருக்க அவள் கண்கள் ஆராய்ச்சியுடன் அவனை நோக்கியது. செழியனுக்கு வயது இருபத்தி ஏழு. பார்க்க சிறு வயது போல தோன்றினாலும் அவன் முகத்தில் அறிவுக் களை சொட்டியது. அது அவனுக்கு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. ஏனோ அவன் முகம் அவளை கொஞ்சம் ஈர்க்கவே செய்தது. 

“என்ன இவங்களை இப்படி பாத்துட்டு இருக்கேன்”, என்று அவளே குழப்பமாக எண்ணிக் கொண்டாள். இந்த சிறு வயதில் இப்படி ஒரு பதவியில் இருப்பதால் கூட இருக்கலாம் என்று அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாள். 

அவள் அமைதியாக அவனை நோட்டம் விட்டுக் கொண்டு இருக்கும் போது “உங்க ரெசியூம் தான் பார்த்துட்டு இருக்கேன். உங்க செர்டிபிகேட்ஸ் பைல் தாங்க”, என்று ஆங்கிலத்தில் கேட்டான். 

உடனேயே தன்னுடையதை நீட்டினாள். “போஸ்ட் கிராஜூவேசன் முடிச்சு மூணு வருஷம் ஆயிருக்கே? ஏன் இது வரைக்கும் எந்த வேலைக்கும் போகலை?”, என்று கேட்ட படி அவளுடைய பைலை ஒவ்வொரு பக்கமாக புரட்டினான். 

இதற்கு என்ன பதில் சொல்ல என்று தடுமாறினாள் மாலினி. உண்மையைச் சொன்னால் காரித் துப்பி விடுவான் என்று அவளுக்கே தெரியும். உண்மையைச் சொல்ல வில்லை என்றால் அவளுக்கு திறமை இல்லை என்றும் அதனால் தான் வேலை கிடைக்க வில்லை என்றும் எண்ணி விடுவான். 

அதனால் இப்போது என்ன செய்வது என்று வெகுவாக தயங்கினாள். 

அவளது அமைதி அவனது சிந்தனையை கலைக்க அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் இருந்த இனம் புரியாத உணர்வை வியப்பாக பார்த்தான். முகம் சிவந்து, ஒரு வித அவஸ்தையில் நெழிந்த படி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இன்டர்வியூவில் இப்படி இருக்கிறோமே என்றெல்லாம் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனுடன் பேசும் உணர்வில் அமர்ந்திருந்த அவளது இயல்பு அவனைக் கவர்ந்தது. அவள் முகத்தில் இருந்த உணர்வுகள் அவனுக்குள் சுவாரசியத்தை உண்டு பண்ணியது. 

“என்ன ஆச்சு மிஸ் மாலினி? நான் கேட்டதுக்கு பதிலையே காணும்? இத்தனை வருஷம் ஏன் எந்த வேலைக்கும் போகலை? வேலை கிடைக்கலையா? இல்லை வேற ஏதாவது காரணமா?”, என்று துருவினான். 

“அது வந்து… வந்து”, என்று அவள் திக்கித் திணற அவள் கண்களைப் பார்த்த படி இருந்தான். 

Advertisement