Advertisement

அத்தியாயம்

விரும்பியே உயிருக்குள்

சுமக்கிறேன் அழகான

சுமையான உன்னை!!!

அன்று ஞாயிறு தாமதமாக எழுந்த மாலினி பாலாவை எழுப்பாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கு விடுமுறை என்பதால் ஒன்பது மணி வரை அவனைத் தூங்க விட்டாள். 

பின் அவனுக்கு உணவு கொடுத்து படிக்க வைத்தாள். வசந்தாவும் கனகராஜும் ஊருக்கு சென்றதும் அவர்களுக்கு அங்கே கிடைத்தது அதிர்ச்சி தான். புஷ்பா வீடு பூட்டியிருக்க, காம்பவுண்ட் கேட்டிலும் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. 

“என்னங்க இது? உங்க அக்கா வீட்ல யாரையும் காணும்? எங்க போயிட்டாங்க? இது தெரியாம கிளம்பி வந்துட்டோமே? ஒரு வேளை நாம வரோம்னு தெரிஞ்சு எங்கயும் ஓடிட்டாங்களா?”, என்று கேட்டாள் வசந்தா. 

“தெரியலை வசந்தா, எங்க போயிருப்பாங்க? நம்ம அண்ணாமலை கிட்ட கேப்போம், வா”, என்று சொல்லி பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார் கனகராஜ். 

அவர்களைக் கண்டதும் “அடடே கனகு அண்ணனா? வாங்க வாங்க. வாங்க மதினி”, என்று வரவேற்றான் அண்ணாமலை.

“எப்படி இருக்க அண்ணாமலை?”, என்று கேட்டார் கனகராஜ். 

“எனக்கு என்ன? ராஜாவாட்டம் இருக்கேன். சரி பிள்ளைகள் வரலையா?”

“அவங்க வரலை. நீ கடைசி வரை கல்யாணம் பண்ணாம ஒண்டியாவே இருந்துட்டியே தம்பி?”, என்று கேட்டாள் வசந்தா. 

“விடுங்க மதினி. எனக்கு இது பழகிருச்சு. சரி காப்பி தண்ணி போடவா?”

“அதெல்லாம் வேண்டாம் அண்ணாமலை. ஆமா அக்கா எங்க? வீடு பூட்டியிருக்கு. எங்கயும் வெளிய போயிருக்காங்களா?”, என்று கேட்டார் கனகராஜ். 

“அட உங்களுக்கு விஷயமே தெரியாதா? உங்க அக்காவும் மாமாவும் தான் மக வீட்டுக்கு போய்ட்டாங்களே?”, என்று அவர்கள் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டான். 

“மக வீட்டுக்கா? என்ன சொல்ற அண்ணாமலை?”

“ஆமாண்ணே, உங்களுக்கு தெரியாதா? அவங்க பாரின் கிளம்பிப் போய்ட்டாங்களே?”

“எப்ப போனாங்க அண்ணாமலை?”

“நாலஞ்சு மாசம் ஆச்சு”

“கடைசில நான் சொன்ன மாதிரி கம்பி நீட்டிட்டு தான் போயிருக்காங்களா?”, என்று வசந்தா கேட்க “அமைதியா இரு வசந்தா”, என்றார் கனகராஜ். 

“எப்படிங்க அமைதியா இருக்க? இன்னும் எப்படி அமைதியா இருக்க முடியும்?”

“என்ன ஆச்சுண்ணே? என்ன ஆச்சு மதினி?”, என்று கேட்டான் அண்ணாமலை. 

…..

“என்ன ஆச்சு மதினி? எதுக்கு இப்படி ரெண்டு பேரும் கவலைப் படுறீங்க?”

“என்னத்த சொல்ல தம்பி? அக்கா நொக்கான்னு அள்ளி அள்ளி கொடுத்தார் இந்த மனுஷன். நான் ஏதாவது சொன்னேனா? இப்ப எனக்கு தெரியாம அஞ்சு லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துருக்காரு. வட்டியையும் இந்த மனுஷன் தான் கட்டிருக்கார். அவங்க கடன் வாங்கிட்டு நாட்டை விட்டே போயாச்சு. போன் பண்ணினாலும் எடுக்கவே இல்லை. இப்ப கடன் காரங்க எங்களை விரட்டுறாங்க. வாங்காத கடனுக்கு எத்தனை வருஷம் வட்டி கட்ட முடியும் சொல்லு”

“அடப்பாவமே, எதுக்குண்ணே இப்படி பண்ணின? நீ என்ன என்னை மாதிரி ஒண்டிக்கட்டியா? நான் உன் அக்காவைப் பத்திச் சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்றேன். புஷ்பம் அக்கா சும்மாவே பேராசை பிடிச்சது? அவங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்க? அப்பவும் உன் ஆசை அடங்கலையா? இப்ப உன் பொண்டாட்டி பிள்ளைகளை யார் பாப்பா?”

“நல்லா கேளு தம்பி. உங்க அண்ணன் வேலைக்கு சேந்தப்ப இவருக்கு சம்பளம் வெறும் ஐநூறு ரூபா தான். அதை வச்சு நான் குடும்பத்தை ஓட்டிருக்கேன். ஆனா யார்க் கிட்டயும் கடன்னு வாங்கினது இல்லை. கால் வயிறு கூல் குடிச்சிட்டு பட்டினியா கிடந்தாலும் கடன் வாங்க கூடாதுன்னு நினைக்கிறவ நான். ஆனா இந்த மனுஷன் எங்க தலைல பாராங்கல்லைத் தூக்கிப் போட்டுட்டார். இப்ப நான் என்ன பண்ணுவேன்?”

“உங்களை பத்தி எனக்கு தெரியாதா மதினி? உங்க மாமியார் உங்களை புகழாத நாள் இல்லை”, என்று அண்ணாமலை சொல்ல “என்ன புகழ்ந்து என்ன பண்ண? என் புருஷன் என்னையும் என் பிள்ளைகளையும் ஏமாத்தினது தெரியாம தானே இருந்துருக்கேன்?”, என்று சொல்லி அழுதாள். 

“அழாதே வசந்தா. அக்கா பாரின் போனதுனால தான் நம்ம கிட்ட பேசலை. இல்லைன்னா பணம் தந்திருக்கும். போன் நம்பர் இல்லாம இருந்துருக்கும்”, என்று கனகராஜ் சொன்னதும் வசந்தா அவரை முறைத்தாள். 

“இன்னுமா அண்ணே நீ புஷ்பா அக்காவ நம்பிட்டு இருக்குற? பாரின் போயிட்டு எனக்கே பத்து தடவைக்கு மேல கால் பண்ணிட்டாங்க. உனக்கு சொல்லலையா?”, என்று அண்ணாமலை கேட்டதும் அவர் புருவம் உயர்ந்தது. 

“என்ன அண்ணாமலை சொல்ற?”, சற்று கோபமாகவே கேட்டார். 

“ஆமாண்ணே. எனக்கு அடிக்கடி பேசும். அதுவும் காரணமா தான். நீ உன் அக்காவுக்கு கொடுத்த இந்த வீட்டை விக்கப் போறதாவும் அதுக்கு நல்ல ஆளா பாக்கச் சொல்லியும் எனக்கு சொன்னாங்களே? நானும் விக்க தான் ஆள் பாத்துட்டு இருக்கேன்”

“என்னது என் பூர்வீக வீட்டை விக்குறதா? விக்குறதுக்கா நான் அவளுக்கு கொடுத்தேன்? நீ சொல்றது உண்மையா அண்ணாமலை?”, என்று கேட்டவருக்கு கோபம் கொப்பளித்தது. 

“அண்ணே நான் என்ன பொய்யா சொல்றேன்? இதுல ஏதோ விஷயம் இருக்கு. புஷ்பாக்கா திட்டம் போட்டு தான் உன்னை ஏமாத்திருக்குனு எனக்கு தோணுது. இரு வரேன். உனக்கு உண்மையை புரிய வைக்கிறேன்”, என்று சொல்லி உள்ளே சென்றான். 

கனகராஜால் மனைவியை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. “நான் யாருக்கும் கொடுக்காதீங்கன்னு சொல்லலையே? அள்ளிக் கொடுக்காதீங்க, கிள்ளிக் கொடுங்கன்னு தானே சொல்வேன். இப்படி அள்ளிக் கொடுத்து ஆண்டியா ஏமாந்து நிக்குறீங்களே?”, என்று புலம்பினாள். 

அப்போது அவர்கள் எதிரே வந்து அமர்ந்த அண்ணாமலை “நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க”, என்று இருவரிடமும் சொல்லி விட்டு தன்னுடைய போனை எடுத்து புஷ்பாவை அழைத்து ஸ்பீக்கரில் போட்டான். 

அதை எடுத்த புஷ்பா “சொல்லு அண்ணாமலை, எப்படி இருக்க? ஏதாவது தகவல் வந்துச்சா?”, என்று கேட்டாள். அவள் குரலைக் கேட்டு ஆத்திரமாக வந்தது கனகராஜ்க்கு. வசந்தாவுக்கோ சொல்லவே வேண்டாம். மென்னியைத் திருகும் வேகம் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். 

“ஆமாக்கா, ஒரு நல்ல பார்ட்டி வீட்டை விலைக்கு கேக்குறாங்க. நீ கேட்ட விலையை விட ஒரு லட்சம் அதிகமா தான் சொல்லிருக்கேன். அவங்களும் இடத்தைப் பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க. வீட்டுச் சாவி இல்லாததுனால வீட்டுக்குள்ளே காமிக்க முடியலை”

“இங்க வந்த அப்புறம் தான் வீட்டை விக்குற ஐடியாவே வந்தது அண்ணாமலை. அதான் சாவியைக் கொடுத்துட்டு வரலை. நீ அந்த ஆள் கிட்ட கண்பார்மா வாங்குவாங்களான்னு கேளு. நான் கிளம்பி வரேன். நான் கேட்ட பணத்தை தறேன்னு சொல்றவங்களை விடக் கூடாது அண்ணாமலை. அந்த ஒரு லட்சத்துல பாதியை நீ எடுத்துக்கோ”

“என்ன ஒரு தாராள மனசு? நம்ம சொத்தை வித்து அவனுக்கு பங்கு கொடுக்குறா பாருங்க உங்க அக்கா”, என்று கனகராஜின் காதைக் கடித்தாள் வசந்தா.  

“அமைதியா இரு வசந்தா. எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு”, என்று சொன்ன கனகராஜ் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 

“ரொம்ப நன்றிக்கா உங்களுக்கு பெரிய மனசு. பத்திரம் முடிக்க நீங்க கண்டிப்பா வரணும்”, என்றான் அண்ணாமலை. 

“நீயே எல்லாம் பேசிட்டு சொல்லு. வேணும்னா என் நம்பர் வேணும்னா கொடு. எல்லாம் முடிவானதும் நாங்க வரோம்”

“ஆமா சொந்த ஊர்ல இருக்குற வீட்டை வித்துட்டு அப்புறம் என்ன பண்ணுவீங்க?”, என்று போட்டு வாங்கினான். 

“எங்க மருமகன் தான் மகன் மாதிரி கிடைச்சிட்டாரே? எங்களை இங்கயே இருக்கச் சொல்லிட்டார். வீட்டை வித்துட்டு நிலத்தையும் விக்கணும். அதை எங்க பேர்ல பேங்க்ல போட்டுட்டு கடைசி வரை எங்க பேரன் கூட மக வீட்லயே இருக்க போறோம்”

“அக்கா நான் ஒண்ணு கேக்குறேன்னு தப்பா எடுக்க மாட்டீங்களே?”

“நீ என் தம்பியை விட எனக்கு உசத்தி தான் அண்ணாமலை. என்ன வேணும்னாலும் கேக்கலாம்”

“இல்லை, நீங்க விக்குறது பூர்வீக சொத்து. என்னைக்கு இருந்தாலும் இதுக்கு வாரிசு உங்க தம்பி தானே? நான் வித்துக் கொடுத்த அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா நான் தான் கம்பி எண்ணனும்”

Advertisement