Advertisement

அத்தியாயம் 20

பெண்ணின் அக்கறையான அன்பும்

ஆணின் அரவணைப்பான

பாதுகாப்பும் காதலுக்கு இலக்கணமே!!!

அவன் கிளம்பிச் சென்ற பின்னர் அவனைத் தவிற வேறு நினைவே மாலினிக்கு இல்லை. தனக்குள் மூழ்கி இருந்த அவனது தோற்றமே திரும்ப திரும்ப நினைவில் வந்து அவளைச் சோர்வடைய செய்தது. 

அடுத்து வந்த நாட்களில் சாரதா தான் அவளது தனிமையை விரட்டினார். கூடவே அவளது மனமாற்றம் அவருக்கு நிறைவைத் தந்தது. அதை மகனிடம் சொல்ல முயன்றால் அவனோ இருவருக்கும் அழைக்கவே இல்லை. வேலை அதிகம் என்பதால் சாரதாவும் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். 

மாலினி அவன் வரும் நாளை ஆவலாக எதிர் பார்த்தாள். ஆனால் பத்து நாட்கள் கழித்து வருவேன் என்று சொன்னவன் அன்று சாரதாவுக்கு அழைத்து மேலும் பத்து நாட்கள் ஆகும் என்று சொன்னான். 

“என்ன நினைச்சிட்டு இருக்க செழியா? இந்த பிஸ்னஸ் டீல் நமக்கு வேண்டாம். ஒழுங்கா புக் பண்ணிருக்குற டிக்கட்ல கிளம்பி வா”

“அது வந்து மா”

“இங்க ஒருத்தி உன்னையே நினைச்சு உருகிட்டு இருக்கா டா. வாழ்க்கையை விட பணம் பெருசு இல்லை செழியா. வெண்ணை திரண்டு வர நேரத்துல தாழியை உடைச்சிறாத”, என்று சாரதா சொல்ல அதை அவனால் நம்பத் தான் முடிய வில்லை.

அப்போதும் அவன் தயங்க “அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா டா?”, என்று கேட்டார் சாரதா. 

“நாளைக்கு சாயங்காலம் வீட்ல இருப்பேன் மா”

“ஹிம், பத்திரமா வா”, என்று சொல்லி போனை வைத்தார். 

அவள் தனக்காக உருகுவாள் என்றெல்லாம் ஆசைப் படாமல் அடுத்த நாள் ஊருக்கு வந்து சேர்ந்தான் செழியன். வீட்டு ஹாலில் அவனை ஆவலாக வரவேற்றது மாலினி தான். 

“நான் வந்ததுல இவளுக்கு இவ்வளவு சந்தோஷமா? அப்படின்னா இவளுக்கு என் மேல கோபம் இல்லையா?”, என்று எண்ணிக் கொண்டு தாயைப் பார்த்தான். 

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு. ஏதாவது இருந்தா பேசி சரி பண்ணிக்கோங்க. நான் கிளம்புறேன்”, என்றார் சாரதா. 

“எங்க மா திடீர்னு?”, என்று கேட்டான் செழியன். 

“வசந்தா ரொம்ப நாளா என்னை ஒரு கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டே இருந்தா. நான் போயிட்டு வரேன். வர நாலு நாள் ஆகும்னு நினைக்கிறேன்”, என்று சொன்னவர் கிளம்பியே விட்டார். 

சாரதா சென்றதும் இருவருக்கும் இடையே அமைதியே நிலவியது. “மாலினி, அன்னைக்கு சாரி… என் மேல கோபமா?”, என்று பேச்சை ஆரம்பித்தான் செழியன். 

“முதல்ல குளிச்சிட்டு வாங்க. நான் கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னவளின் கண்களில் காதல் தெரிந்தது. அதை நம்பலாமா வேண்டாமா என்ற பாவனையோடு குளிக்கச் சென்றான்.

குளித்து முடித்து வந்ததும் அவனுக்கு சூடான உணவை பரிமாறினாள். அவள் கோபம் போய் விட்டதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்த செழியன் ஒரு வாய் இட்லியை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான். 

ஒரு நொடி அவனைத் திகைப்பாக பார்த்தாலும் அடுத்த நொடி அதை பெற்றுக் கொண்டாள். அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. 

இருவரும் உண்டு முடித்ததும் “கொஞ்ச நேரம் தோட்டத்துல உக்காரலாமா?”, என்று கேட்டாள் மாலினி. 

அவள் பேச மாட்டாளா என்று ஏங்கியவன் செல்லாமல் இருப்பானா? உடனே அவளுடன் சென்றான். 

இருவரும் அருகருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தார்கள். “முதல்ல என் மனசுல இருக்குறதை நான் சொல்லிறேன்”, என்று ஆரம்பித்த மாலினி அவனை முதல் நாள் பார்த்து மயங்கியது முதல் அனைத்தையும் ஆதியோடு அந்தமாக சொல்லி முடித்து விட்டாள். 

அவனை ரசித்தது, அவன் தொடுகையில் வந்த தடுமாற்றம் என அனைத்தையும் அவள் உரைக்க கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு எப்படி இருக்குமாம்?

அவன் அவளிடம் தவறாக நடந்த போது கூட அவளுக்கு அது பிடிக்காமல் இல்லை என்று சொன்னதும் அவளுக்கும் தன் மீது காதல் இருந்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டான். மீனாவிடம் பேசியதையும், அருணிடம் பேசியதையும், அருணைப் பற்றியும் சொன்னாள். 

அனைத்தையும் கேட்ட செழியன் “அன்னைக்கும் சரி, ஏர்போர்ட் போற அன்னைக்கும் சரி, உன் விருப்பம் இல்லாம உன்னைத் தொட்டது மட்டும் தான் என்னோட தப்பு. மத்த படி நான் எந்த தப்பும் செய்யலை மாலினி. அதுக்கு என்னை நீ மன்னிக்கணும்”, என்றான். 

“உங்க மன்னிப்பு எனக்கு அவசியம் இல்லை. அன்னைக்கு நீங்க அப்படி நடந்துக்கிட்டது எனக்கு அதிர்ச்சி தான். என் செழியனா இப்படின்னு தான் எனக்கு தோணுச்சு”, என்று அவள் சொன்னதும் அவளுடைய ‘என் செழியன்’ என்ற வார்த்தையில் அவன் உடல் சிலிர்த்தது. 

“நான் உண்மையா தான் சொல்றேன் செழியன். உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அங்க நடந்ததே வேறா தான் இருக்கும். நான் முழு மனசா அன்னைக்கு உங்களை தடுக்கலை, அது தான் உண்மை. அன்னைக்கு தப்பா தெரிஞ்ச அந்த விஷயம் இப்ப தப்பா தெரியலை. ஏர்போர்ட் போற அன்னைக்கு பாதியிலே நீங்க விட்டுட்டு போனப்ப கூட ஏன் இப்படின்னு தான் தோணுச்சு. சில உணர்வுகள் ரெண்டு பேருக்குமே பொது தான். அது எப்படி தப்பாகும்? நீங்க அதுக்கு சாரி எல்லாம் கேக்க கூடாது. என் மேல இருக்குற தப்புக்கும் நீங்க என்னை மன்னிக்கணும்”

“இப்படி மன்னிப்பு கேட்டே நேரத்தை ஓட்ட ஐடியாவா?”, என்று கேட்டவன் அவளை நெருங்கி அமர அவனைக் காதலாக பார்த்தாள் மாலினி. அவள் கண்களில் காதலைக் கண்ட பிறகு அவனால் தள்ளி நிற்க தான் முடியுமா? சுவையான பாலை ருசிக்கத் துடிக்கும் பூனையைப் போல அவளை ருசிக்கத் துடித்தான்.

அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் அவள் முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தி கடைசியில் அவள் இதழ்களில் இளைப்பாறினான்.  அவன் கைகள் அவள் மேனியில் பதிய அவனது இம்ஸைகள் அவளை எங்கோ அழைத்துச் சென்றன. சூரியன் சுட்டெரிக்கும் வேளையில் நதிக்குள் கால் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வை அனுபவித்தாள் மாலினி. 

மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கும் முத்தங்களும் இறுக்கமான அவனது அணைப்புகளும் ரோஜாவாய் அவளை சிவக்க வைத்தது. 

அவளிடம் அனுமதியோ விருப்பமோ எதுவுமே கேட்கவில்லை. நீ எனக்கானவள் என்ற உரிமையைக் வார்த்தையால் கூறாமல் செய்கையால் செயல் படுத்திக் கொண்டிருந்தான் அந்த கள்வன். அவனது வெப்பமான மூச்சுக்காற்று அவள் மேனியை தகிக்க வைத்தது. 

எதிர்க்க விரும்பாத அவனது தாக்குதல்களில் அவன் மார்பிலே அடைக்கலமானாள். இருவர் உடலும் உராய்ந்ததில் மாலினிக்கு இனம் புரியாத உணர்வுகள் உருவாகின. சுற்றி இருந்த இருள் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. 

அத்து மீறி அவளது உடலில் பயணிக்கும் அவனது கரங்களுக்கு தடை போட அவள் விரும்ப வில்லை. என்னமும் செய்து கொள் என்று அவள் அவன் நெஞ்சில் அடைக்கலமாகி இருந்தாள். அவளது சரணாகதியில் இது வரை அவன் மனதில் இருந்த வலி எல்லாம் காணாமல் போயிருந்தது. 

உள்ளமும் உடலும் உருக தனது கரங்களுக்குள் அடைக்கலமாகி இருக்கும் அவளது செய்கை அவனுக்கு திருப்தியைக் கொடுத்தது. தொழிலில் சாதித்த போது கிடைத்த வெற்றியை விட அவளது அடைக்கலம் மிகப் பெரிய வெற்றி அல்லவா? அவள் காதல் கிடைத்த கர்வம் அவனது புன்னகையில் மிளிர்ந்தது. 

“மாலு”

“ம்ம்”

“ஏன் டி இத்தனை நாளா உன் மனசை சொல்லலை?”

“உங்களைப் பிடிச்சிருந்தாலும் எனக்கு சொல்லத் தைரியம் இல்லை. உங்களை வேற கெட்டவன்னு நானே நினைச்சிக்கிட்டேன்”, என்று சொன்னவளின் முகத்தை கைகளில் ஏந்தி காதலுடன் பார்த்தான். 

அவன் பார்வையில் இருந்த ஏக்கத்தைப் பார்த்தவள் அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு விலகினாள். ஆவலாக அவள் கொடுத்த முத்தத்தில் மயங்கி கிறங்கிப் போனான் செழியன். புதுவித பரவசம் அவனுக்குள் வந்தது. இது வரை அவள் காதல் கிடைக்குமா என்று அலைபாய்ந்து கொண்டிருந்தவனின் மனதில் அவளுடைய முத்தம் ஒரு வித அமைதியைக் கொண்டு வந்தது. 

அவனும் அவளுக்கு முத்தங்களை வாரி வழங்கினான். இருவரும் மெய் மறந்து அமர்ந்திருக்க அவர்கள் மீது மழைத்துளி பூந்தூரலாய் விழுந்தது. 

“ஐயோ நனைஞ்சிருவியே?”, என்று சொல்லிக் கொண்டே அவளை இழுத்து தனக்குள் புதைத்துக் கொள்பவன் போல அணைத்துக் கொண்டான். 

அணைத்துக் கொண்டால் மட்டும் அவள் நனைய மாட்டாளா என்ன? இருவரும் முழுதாக எல்லாம் நனைந்து போக வில்லை. லேசான தூறல் தான் என்பதால் அவர்களும் அதை பெரியதாக எடுக்க வில்லை. லேசான குளிர் காற்று அவர்களைத் தீண்டினாலும் அங்கிருந்து செல்ல தான் இருவருக்கும் மனதில்லை. 

சிறிது நேரம் கழித்து “வீட்டுக்குள்ள போவோமா?”, என்று கிறக்கத்துடன் கேட்டாள் மாலினி. 

“போகலாம் டி? ஆனா என்னால பொறுமையா இருக்க முடியாது. பரவால்லயா?”, என்று அவள் கன்னத்தில் முத்தமிட்ட படியே கேட்க அவன் செய்கையும் அவன் டி என்று சொன்னதும் அவளுக்குள் இம்ஸையைக் கிளப்ப தன்னுடைய முகத்தை மீண்டும் அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். 

Advertisement