Advertisement

சாரதா வேறு ஜாதி என்று பாராமல் சண்முகம் காதலித்து மணந்து கொண்டார். அதனால் அவரது சொந்தங்கள் அடிக்கடி முதுகுக்கு பின் இப்படிச் சொல்வார்கள் தான். ஆனால் சண்முகம் முன்னால் சொல்ல மாட்டார்கள். அவருக்கு முன்னால் அப்படிச் சொல்லி விட்டால் அவர்கள் உறவையே அறுத்து விடுவார். 

இன்று மதியழகன் அப்படிச் சொன்னதும் “நீங்க இருந்திருந்தா இவங்களை இப்படி பேச விட்டு வேடிக்கை பாத்துருப்பீங்களா?”, என்று மனதுக்குள் கலங்கிப் போனார் சாரதா. ஆனால் அவரது கலக்கத்தை அவர் முகத்தில் காட்ட வில்லை. அவர்களை தீர்க்கமாக பார்த்தார். அவரது கண்களை ஒரு நொடிக்கு மேல் மதியழகனால் பார்க்க முடியவில்லை. 

அவரது பேச்சைக் கேட்டு சாரதா அமைதியாக இருந்தது போல செழியன் அமைதியாக இருக்க வில்லை.

“ஹலோ, எங்க வந்து என்ன பேசுறீங்க? மரியாதை ரொம்ப முக்கியம். சொந்தம்னு மதிச்சு பேசினா வாய்க்கு வந்ததை பேசுவீங்களா? எங்க அம்மாவை இப்படி பேசினதுக்கு இப்ப இந்த நிமிஷம் மன்னிப்பு கேட்டா மேற்கொண்டு பேசலாம். இல்லைன்னா இப்பவே எல்லாரையும் வெளிய விரட்டச் சொல்லுவேன்”, என்றான் செழியன். 

“வேண்டாம் டா செழியா”, என்று சாரதா சொல்ல “சும்மா இருங்க மாம்”, என்றவன் மதியழகனைப் பார்த்தான். 

“நான் உன் சித்தப்பா செழியா. நான் ஒண்ணும் இல்லாததைச் சொல்லலை. அப்புறம் நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்?”, என்று மதியழகன் தெனாவெட்டாக சொன்னார். 

“ஓஹோ, ஓகே நீங்க மன்னிப்பு கேக்க வேண்டாம். ஆனா ஒரு நிமிஷம் கூட நீங்க யாரும் இங்க இருக்க கூடாது. எங்க அம்மாவை பேசினவங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு? செக்யூரிட்டி…..”, என்று கர்ஜித்தான். 

தன்னுடைய கணவரின் மறு பிம்பமாய் இருந்த மகனை பிரம்மிப்பாக பார்த்தார் சாரதா. 

அவன் அழைத்ததும் “சார்”, என்ற படி வந்தார் செக்யூரிட்டி. 

“இவங்களை இங்க இருந்து விரட்டி விடுங்க. ஒரு நிமிஷம் கூட யாரும் இருக்க கூடாது”, என்று அவன் தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்ல “சரி சரி நான் மன்னிப்பு கேக்குறேன். என்னை மன்னிச்சிருங்க அண்ணி”, என்றார் மதியழகன். 

“அந்த பயம் இருக்கணும். எங்க அம்மாவை மதிக்காத யாரையும் நான் மதிக்க மாட்டேன்”, என்றவன் “மேனேஜர்”, என்று அழைத்தான். 

அப்போது அங்கே வந்த மேனேஜர் சுந்தரம் “சார்”, என்று அழைத்தார். 

“உடனே நம்ம கம்பெனி லாயரை வரச் சொல்லுங்க”

“சரி சார்”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல “நீங்க எல்லாம் கான்பரன்ஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க”, என்று மதியழகனிடம் சொன்னான். அவர்களும் அங்கிருந்து செல்ல தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் செழியன். 

“கலங்காதே தம்பி, உன் அப்பா முட்டாள் இல்லை. நிச்சயம் எதுவும் தப்பா செஞ்சிருக்க மாட்டார்”, என்று மகனுக்கு தைரியம் வழங்கினாள் சாரதா. 

“இல்லை மா, அப்படி எதுவும் இல்லைன்னா இவங்க இவ்வளவு கான்ஃபிடெண்ட்டா வந்து  நிக்க மாட்டாங்க”

“சரி லாயர் வரட்டும். என்ன சொல்றார்னு கேப்போம்”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டார் சாரதா. 

சிறிது நேரத்திலே அங்கு வந்த லாயர் ராகவன், சாரதாவுக்கு வணக்கம் சொல்லி விட்டு “சொல்லுப்பா செழியா? நேத்து தானே பாத்தோம்? எதுக்கு அவசரமா என்னை பாக்கணும்னு சொன்ன?”, என்று கேட்ட படி அமர்ந்தார். 

“கூப்பிட்டதும் வந்ததுக்கு தேங்க்ஸ் அங்கிள். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் உங்களை வரச் சொன்னேன். இத்தனை நாள்ல இந்த விஷயத்தைப் பத்தி நீங்க சொல்லவே இல்லை. திடீர்னு என் அப்பா கூட பிறந்தவங்க வந்து பார்ட்னர்ஷிப் பத்தி பேசுறாங்க. அதைப் பத்தி தெரிஞ்சிக்க தான் கூப்பிட்டேன். அப்படி எதுவும் இல்லை தானே?”

“அது எல்லாம் உண்மை தான் செழியா? நான் அது உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சு தான் அதைப் பத்தி பேசலை”, என்றதும் சாரதா மற்றும் செழியன் இருவரும் அதிர்ந்து போனார்கள். 

“வாட், என்ன அங்கிள் சொல்றீங்க? அப்ப அப்பா கஷ்டப் பட்டு உழைச்சு உருவாக்கிய இந்த கம்பெனி அவங்களுக்கும் சொந்தமா?”

“சொந்தமா ஆகுற அளவுக்கு ஒண்ணும் இல்லை பா. வரி குறைப்பு செய்ய மட்டும் தான் இவங்களை உங்க அப்பா பார்ட்னரா போட்டார். அதுவும் கொஞ்சம் பங்கு தான்”, என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டான். 

“கேட்டுகிட்டியாப்பா? உங்க அப்பா நமக்கு கஷ்டம் கொடுக்க மாட்டார்”, என்றார் சாரதா. 

“எனக்கும் இப்ப தான் மா கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அங்கிள், அப்புறம் இன்னொரு விஷயம். இந்த பார்ட்னர்ஷிப்க்கு இவங்க நம்ம கம்பெனிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க?”, என்று கேட்டான் செழியன். 

“அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கலையே? அதெல்லாம் தெளிவா எழுதி வாங்கிட்டார் உங்க அப்பா. அவங்க இதுக்காக எந்த பணமும் கொடுக்கலை. ஆனா நம்மளோட கொஞ்ச சொத்து அவங்க பேர்ல இருக்கு. அதை நாம ஒண்ணும் பண்ண முடியாது. அதை உன் அப்பா அவங்களுக்கே தான் வாங்கிக் கொடுத்தார்”

“சொத்து போனா போகுது. ஆனா இந்த கம்பெனி அப்பாவோட சொத்து. அதை விட்டுக் கொடுக்க மாட்டேன்”

“அதெல்லாம் போகாதுப்பா. அவங்க பங்கு கொஞ்சம் தான்”

“சரி வாங்க, இதை அவங்க கிட்ட நேரடியாவே பேசிறலாம்”, என்று சொன்ன செழியன் ராகவனையும் சாரதாவையும் அங்கே அழைத்துச் சென்றான். 

அங்கே போனதும் “நீங்க எங்க அப்பாவுக்கு எந்த பணமும் கொடுக்கலை. ஆனா கொடுத்ததா சொல்றீங்க? என்ன பொய் சொல்லி ஏமாத்தப் பாக்குறீங்களா?”, என்று கேட்டான் செழியன். 

“நாங்க கொடுத்தது எல்லாம் எங்க அண்ணனுக்கு மட்டும் தான் தெரியும்“, என்றார் மதியழகன். 

“என்ன சார் பொய்ச் சொல்றீங்க? என் கண்ணு முன்னால தானே நீங்க பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்டீங்க? அப்படி எதுவும் கொடுக்கலைன்னு அன்னைக்கே சண்முகம் சார் எழுதி வாங்கிட்டாங்களே?”, என்று ராகவன் சொன்னதும் மற்றவர்கள் திகைத்து போனார்கள். 

“சண்முகம் எனக்கு தெரியாம யார் கிட்டயும் ஒத்த ரூபாய் கூட கடன் வாங்கினது இல்லை. மூணு வருசத்துக்கு முன்னாடி பேங்க்ல கடன் வாங்கினது கூட என் கிட்ட சொல்லிட்டார். அதையும் கட்டி முடிச்சாச்சு. செழியா, இவங்க யாரும் உங்க அப்பாவுக்கு ஒத்த ரூபாய் கொடுக்கலை. அதுக்கு நான் தான் சாட்சி. இவங்க கையெழுத்து போட்ட பத்திரமும் பத்திரமா என் கிட்ட இருக்கு”, என்றார் ராகவன். 

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்களும் பார்ட்னர்ஸ் தான். எங்களுக்கு மாசம் மாசம் பங்கு வரணும். ஒன்னாம் தேதி பணம் ஏறலைன்னா நாங்க கேஸ் போடுவோம். இத்தனை நாள் நாங்க பணம் வாங்கிருக்கோம். அதுவே உங்களுக்கு எதிரான சாட்சி தான். இந்த கம்பெனியே எங்களுக்கு தான் சொந்தம்னு கேக்க போறோம்”, என்று சொல்லி விட்டுச் சென்றனர். 

கேஸ் என்று சொன்னதும் தளர்ந்து போய் அமர்ந்தான் செழியன். “செழியா, இப்படி இடிஞ்சு போய் உக்காறாத டா”, என்றார் சாரதா. 

“இப்ப என்ன மா செய்றது? அங்கிள், இப்ப என்ன செய்றது? கேஸ் கொடுத்தா நாம தான் ஜெயிப்போம். ஆனா கேஸ் அது இதுன்னு போனா நம்ம கம்பெனி பேர் தான் கெட்டுப் போகும். இது வரைக்கும் நம்ம கூட பிஸ்னஸ் பண்ணுறவங்க கண்டிப்பா தப்பா நினைப்பாங்க. ஏதாவது வழி சொல்லுங்க”, என்று கேட்டான் செழியன். 

“இவங்களை கம்பெனில இருந்து விலக வைக்கணும் செழியா? அது தான் நல்லது. இல்லைன்னா மாசம் மாசம் இவங்களுக்கு அழனும். அதுவும் சண்முகம் இவங்க மேல உள்ள அன்புல தான் பணம் கொடுக்கச் சொன்னார். ஆனா அதே அன்பு இவங்களுக்கு இல்லை. உங்க அப்பா கெட்டதுலயும் நல்லது செஞ்சிருக்கார். அவங்க ரெண்டு பேர் பேர்லயும் வெறும் இருபது பெர்சண்ட் சேர் தான் கொடுத்திருக்கார். நாப்பது பெர்சன்ட் அவர் பேர்லயும் மீதி நாப்பது பெர்சன்ட் உங்க அம்மா பேர்லயும் இருக்கு. உங்க சித்தப்பா அத்தை கிட்ட எப்படியாவது பேசி அதை திருப்பி வாங்கணும்”

“எப்படி வாங்குறது? இவங்க மாசம் மாசம் வாங்குற பிளான்ல இருக்காங்க அங்கிள்”

“எப்படியாவது பேசணும் செழியன். இதுக்கு ஒரே வழி, அவங்க கேஸ் கொடுக்குறதுக்கு முன்னாடி நாம அவங்களை பணிய வைக்கணும்”

“எப்படி அங்கிள்?”

“பங்கை திருப்பிக் கொடுக்கலைன்னா சண்முகம் சாவுல அவங்களுக்கும் சம்பந்தம் இருக்குறதா நாம கம்ப்லைண்ட் கொடுக்கப் போறோம்னு அவங்களை மிரட்டனும்”

“அப்படி செஞ்சா?”

“கண்டிப்பா அவங்க எழுதிக் கொடுப்பாங்க. அது போக அவங்களுக்கு பணம் கொடுத்து கணக்கு முடிக்கணும். அப்ப தான் திருப்பி எந்த பிரச்சனைக்கும் வர மாட்டாங்க”

“சரி, டாக்குமெண்ட் ஏற்பாடு பண்ணுங்க அங்கிள். நாளைக்கே அவங்க எல்லாரையும் வரச் சொல்றேன்”

“சரிப்பா”

“அப்படியே என்னோட பங்கையும் என் மகன் பேருக்கே மாத்திருங்க வக்கீல் சார்”, என்றார் சாரதா. 

“எதுக்கு மாம்? உங்க காலம் வரைக்கும் அது உங்க பேர்ல தான் இருக்கணும்”

“எல்லாமே உன் பேர்ல இருக்கட்டும் டா. நான் உன் பின்னாடி நிப்பேன். எனக்கு அது போதும்”

“இல்லை மா, வேண்டாம்”

“அம்மா சொன்னா கேப்ப தானே?”, என்று கேட்டதும் சரி என்று தலையாட்டினான். “நீங்க ஏற்பாடு பண்ணுங்க சார்”, என்றதும் சரி என்று சொல்லி விட்டுச் சென்றார் ராகவன்.

பிளான் செய்த படி அடுத்த நாளே அவர்களை வரவழைத்து எல்லாம் திருப்பி வாங்கப் பட்டது. முடியாது என்று மறுத்தவர்களை மிரட்டி பணிய வைத்தான் செழியன். அவர்களுக்கு என்று தனியே பணம் கொடுத்து அப்புறப் படுத்தினான். 

அப்போது அரை மனதாக எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றாலும் அவ்வப் போது வந்து சாரதா மற்றும் செழியனையும் ஒரு வழி ஆக்கி விட்டுச் தான் செல்வார்கள். கடந்த இரண்டு வருடமாக தான் யாரும் அதிகம் வருவதில்லை. செழியன் வர விடுவதில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.  

அவர்களை தொழிலில் இருந்து அப்புறப் படுத்தி விட்டு அனைத்தையும் தன்னுடைய பெயரில் மாற்றி அந்த சாம்ராஜியத்தின் அரசனாகுவதற்குள் வெகுவாக களைத்துப் போனான் செழியன். அதன் பிறகு அவனுக்கு ஓய்வு என்பதே இல்லை. அவனுக்கு பக்க பலமாக நின்றார் சாரதா. 

ஆனால் அவன் வயதை கணக்கில் கொண்டு திருமணத்தைப் பற்றி பேசும் போது “இன்னும் சாதிக்க நிறைய இருக்கு மாம். அதுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம்”, என்று சொல்லி விட்டான். 

முதலில் அவன் போக்கில் விட்டாலும் வருடங்கள் செல்ல செல்ல மகன் திருமணத்தை வெறுத்து விடுவானோ என்று பயந்து கொண்டிருந்தார் சாரதா. 

எல்லாவற்றையும் நினைத்த படி ஹோட்டலில் கணக்கு வழக்கை முடித்த செழியன் மீண்டும் அலுவலகம் சென்றான். அங்கே அவனுக்கு வேலைகள் குவிந்திருந்தன. அன்னையின் திருமண பேச்சு சில நேரம் அவனை யோசிக்க வைக்கும் தான். ஆனால் எந்த பெண்ணின் மீதும் அவனது ஈர்ப்பு இது வரை சென்றதில்லை. அவனுக்காக பிறந்த பெண் எங்கிருந்தாலும் அவனைத் தேடி வருவாள் என்பது அவனது நம்பிக்கை. 

தொடரும்….

Advertisement