Advertisement

அத்தியாயம்

மேல் மாடி முற்றத்திலே, உன்னுடன்

அமர்ந்து நிலவைக் கண்ட

போது வேணுகானம் கேட்டேன் நான்!!!

“எனக்கு புரியலைங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. சின்னவன் பத்து முடிக்க போறான். ரெண்டு வருசத்துல அவன் ஸ்கூல் முடிச்சு அவனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும். எல்.ஐ.சி எல்லாம் முடிய இன்னும் பல வருஷம் இருக்கு. சீட்டுப் பணம் எல்லாம் நகை எடுக்க வச்சிக்கிட்டாலும் கல்யாண செலவுக்கு கொஞ்சமாவது சேத்து வைக்க வேண்டாமா? பையனுக்கு செலவுக்கு வேண்டாமா?”, என்று கேட்டாள் வசந்தா. 

“சரி இனி கட்டலை. உன் கிட்ட சொல்லாம இருந்ததும் என் தப்பு தான். இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு வசந்தா. மூச்சு முட்டுற மாதிரி இருக்கு”, என்று பாவமாக சொன்னார் கனகராஜ். 

“நாளைக்கு காலைல ஊருக்கு கிளம்பனும். நேர்ல போய் உங்க அக்கா கிட்ட கேட்டுட்டு வருவோம். பிள்ளைங்க கிட்ட இப்ப சொல்ல வேண்டாம். அப்புறம் சொல்லிக்கலாம்”

“சரி வசந்தா”

“அப்புறம் அங்க போய் உங்க அக்கா ஏட்டிக்கு போட்டி பேசினா நானும் பேச வேண்டியது இருக்கும். அங்க நின்னு அக்கா நொக்கான்னு சொன்னீங்க, எனக்கு கெட்ட கோபம் வரும்”

“இல்லை வசந்தா, என்னை இக்கட்டுல மாட்டி விட்டுட்டு ஒரு தகவல் கூட சொல்லலை அவ. இன்னும் என்ன சொந்தம்?”

“இந்த அறிவு முன்னாடி இருந்திருந்தா, எதுவும் நம்மளை விட்டு போயிருந்துருக்காது. உனக்கு வீடு இருக்கு தம்பி, எனக்கு வீடு இல்லைன்னு சொன்னதும் உங்க பூர்வீக வீட்டை உங்க அக்காவுக்கு கொடுத்தீங்க? இதுல நாம என்ன அந்த ஊருக்கா போகப் போறோம்னு என்னையே சமாளிச்சீங்க? அத்தை, அதான் உங்க அம்மா என் மேல உண்மையான அன்பை வச்சு எனக்கு கொடுத்த நகையை அம்மா ஞாபகார்த்தமா வேணும்னு உங்க அக்கா கேட்டதும் அதை பிடுங்கி கொடுத்தீங்க? முப்பத்தஞ்சு சென்ட் இடம் கொடுத்தீங்க? நான் அப்ப கூட எதுவுமே கேக்கலை. இப்ப உங்க தலைல கடன் சுமையை ஏத்திட்டு போயிருக்கா. எல்லாத்தையும் அவளுக்கே கொடுத்துட்டு என் பிள்ளைங்களை இப்படி ஏமாத்திட்டீங்களே?”

“அவங்க எனக்கும் பிள்ளைங்க டி”

“இந்த நினைப்பு இருந்திருந்தா இப்படி பண்ணிருப்பீங்களா? அதை எல்லாம் விட்டுக் கொடுத்தேன். இனி அமைதியா இருக்க மாட்டேன். நாளைக்கு இருக்கு பாருங்க கச்சேரி. இப்ப படுங்க பேசாம”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள். 

“அக்காவுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிருக்கும் வசந்தா. நாளைக்கு நாம போன உடனே பணத்தை நம்ம கிட்ட கொடுத்துரும் பாரேன்”, என்று சொல்லிக் கொண்டே கனகராஜ் படுக்க “உங்க அக்கா பாசத்துல நாளைக்கு இடி விழாம இருக்கணும்”, என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள் வசந்தா. 

வசந்தா பொறுமையானவள் தான், அமைதியானவள் தான். ஆனால் தன்னுடைய குடும்பம், பிள்ளைகள் என்று வரும் போது சீறி விடுவாள். 

அடுத்த நாள் அவர்கள் கிளம்பும் போது மாலினிக்கு எதுவோ சரி இல்லை என்று பட்டது. ஆனால் அதை என்னவென்று கேட்டு அவர்களை கஷ்டப் படுத்த விரும்ப வில்லை. 

அவர்கள் சென்றதும் “எதுக்கு டா திடீர்னு ரெண்டு பேரும் ஊருக்கு போறாங்க?”, என்று பாலாவிடம் கேட்டாள்.

“யாருக்கு தெரியும்? ஒரு வேளை உனக்கு மாப்பிள்ளை பாக்க போறாங்களோ என்னவோ?”

“ஏய் லூசு, உன் கிட்ட போய் கேட்டேன் பாரு”

“ஆனாலும் அக்கா, எனக்கு அந்த ஆளை நினைச்சா பாவமா இருக்கு”

“எந்த ஆள் டா?”

“அதான் உனக்கு வரப் போற வீட்டுக்காரர். உன்னை எல்லாம் அவர் மேய்க்கணுமே? இந்நேரம் என்ன பண்ணிட்டு இருக்காரோ?”, என்று அவன் சொன்னதும் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள். 

அந்நேரம் காரில் இருந்து இறங்கி பிரம்மாண்டமாக எழுந்திருந்த அந்த கட்டிடத்தை பார்த்தான் செழியன். ‘எஸ்.எஸ் குருப் ஆப் கம்பெனிஸ்’ என்ற பெயர் பலகை மின்னிக் கொண்டிருந்தது. அது அவனது அப்பா சம்பாதித்த சொத்து. 

தந்தையைப் பற்றிய நினைவுடனும் பெருமையுடனும் உள்ளே நுழைந்தான். அனைவரும் அவனுக்கு காலை வணக்கம் சொல்ல அதை வெறும் தலையசைப்புடன் நிறுத்திக் கொள்ளாமல் பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு அவனுடைய அறைக்குள் நுழைந்தான். 

தன்னுடைய சீட்டில் அமர்ந்து முக்கியமான சில வேலைகளை செய்து முடித்தான். பின் அவர்கள் நிர்வகிக்கும் ஹோட்டலுக்கு சென்றான். ‘ஹோட்டல் செழியன் இண்டர்நேஷனல்’ என்ற ஹோட்டலின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கினான். அவன் வருவதைக் கண்டதும் அவசரமாக அங்கே வந்தான் தினகர். தினகர் வேறு யாரும் அல்ல. செழியனின் உயிர் நண்பன். அவன் தான்  ஹோட்டலின் பொறுப்பை பார்த்துக் கொள்கிறான்.  

“குட் மார்னிங் சார்”, என்று தினகர் சொல்ல அவனை முறைத்த செழியன் “தினா, இப்படி கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்றது?”, என்று கேட்டான். 

“வேலைன்னு வந்துட்டா, நீங்க என்னோட எம்.டி தான் சார்”, என்று அவன் சொன்னதும் “உன்னைத் திருத்த முடியாது”, என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்தான். 

அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது சித்தப்பா மதியழகன் தான். “இந்த ஆள் எதுக்கு எனக்கு கால் பண்ணுறார்?”, என்று எண்ணி எரிச்சலுடன் போனை எடுக்காமல் விட்டான். 

சொந்தங்களை நினைத்து எரிச்சல் வந்தது. சொந்தங்களால் அவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அவர்களை விட்டு வெளியே வருவதற்குள் அவன் திணறிப் போனது அவனுக்கு தானே தெரியும்?

சண்முகம் சாரதா தம்பதியருக்கு ஒரே மகன் செழியன் தான். அவனது தந்தை தான் அனைத்து சொத்துக்களையும் நிர்வகித்தார். தந்தை இருக்கும் தைரியத்தில் படித்து முடித்து விட்டு நண்பர்களுடன் சந்தோசமாக ஊரைச் சுற்றினான் செழியன். 

என்ன தான் தொழில் சாம்ராஜியத்தில் சண்முகம் கொடி கட்டிப் பறந்தாலும் தம்பி தங்கை விசயத்தில் முட்டாளாக இருந்திருக்கிறார் அவனது தந்தை. ஆம் அது மறுக்க முடியாத உண்மை. சொந்தங்களின் விஷயத்தில் அவர் முட்டாள் தான். 

சண்முகம் சிறு வயதில் இருந்தே உழைப்பை மட்டும் பெரியதாக நம்புவார். அந்த நம்பிக்கையே அவரை உயர்த்தியது. எல்லா நிலைமையிலும் சாரதா அவருக்கு பக்க பலமாக இருந்தார். இருவரும் தங்களின் ஒரே மகனை அருமை பெருமையாக வளர்த்தனர். செழியன் என்ன தான் நண்பர்களுடன் ஊர் சுற்றினாலும் அவன் எந்த தவறான வழியிலும் சென்றதில்லை. பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் பள்ளி கல்லூரிகளில் நடந்து கொண்டான். 

சண்முகம் சாதாரண நிலையில் இருந்து நல்ல நிலைக்கு வரும் வரை அவரைக் கண்டு கொள்ளாத உறவினர்கள் அவர் நல்ல நிலைக்கு வந்ததும் அவருடன் ஒட்டிக் கொண்டனர். சாரதாவும் எதுவும் சொல்வதில்லை. 

சண்முகத்துக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தார்கள். அவர்கள் பெயர் மதியழகன் மற்றும் சாவித்ரி. தான் சம்பாதித்த பணத்தில் அவர்கள் பெயரை தன்னுடன் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார் சண்முகம். அதுவும் வரி குறையும் என்ற காரணத்துக்காக மட்டுமே. அதற்காக அவர்களுக்கு என்று தனித் தொகையும் மாதம் மாதம் கொடுத்து வந்தார். சில பல சொத்துக்களையும் அவர்கள் பெயரில் வாங்கி இருந்தார். 

எந்த வித உழைப்பும் முதலீடும் இல்லாமல் மாதம் மாதம் பணம் வருவது அவர்களை சோம்பேறி ஆக்கியது. திடீரென்று சண்முகம்  ஒரு விபத்தில் இறந்தது சாரதா மற்றும் செழியனை பலமாக தாக்கியது என்றால் அவருடைய தம்பி தங்கையையும் பாதித்தது. அண்ணன் இறந்ததும் பண வரவும் நின்றது. என்ன செய்ய என்று தெரியாமல் ஒரு மாதம் அமைதியாக இருந்தார்கள். 

சண்முகம் இல்லாததால் சாரதா தான் பெரிதும் உடைந்து போனார். செழியனும் அறைக்குள்ளே முடங்க மகனைத் தேற்றி அலுவலகத்துக்கு அழைத்து வந்து எல்லா வேலைகளைச் சொல்லிக் கொடுத்தார் சாரதா. 

தாயும் மகனும் சண்முகத்தின் இழப்பில் இருந்து மீண்டு வந்த போது அலுவலகத்துக்கே வந்து நின்றார்கள் மதியழகன் குடும்பமும் சாவித்ரி குடும்பமும். 

அவர்களைக் கண்டு திகைப்பு வந்தாலும் “வாங்க”, என்று மரியாதையாக தான் வரவேற்றார் சாரதா. அந்த வரவேற்பு கூட கணவரின் உறவினர்கள் என்ற அக்கறையால் மட்டுமே. அவர்கள் வந்ததை அறிந்த செழியனும் அங்கு வந்தான். 

சாரதா மகனிடம் கண்ணைக் காட்டியதும் “என்ன அத்தை? சொல்லுங்க சித்தப்பா. எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்க? அதுவும் வீட்டுக்கு வராம ஆஃபிஸ்க்கு வந்துருக்கீங்க? என்ன விஷயம்?”, என்று கேட்டவன் அவர்களுடைய பிள்ளைகளையும் வரவேற்றான். 

“இல்லை…. இந்த மாசம் பணம்….”, என்று இழுத்தாள் சாவித்ரி. 

“என்ன பணம் அத்தை?”, என்று கேட்ட செழியனுக்கு குழப்பமாக இருந்தது. 

“மாசம் மாசம் அண்ணா எங்களுக்கு பணம் அனுப்புவார்? இந்த மாசம் வரலை. அதான் கேக்க வந்தோம்”, என்றார் மதியழகன். 

“ஓ அப்படியா? ஆனா அப்பா இப்ப இல்லையே சித்தப்பா? கம்பெனி பொறுப்பை இப்ப தான் நான் எடுத்துருக்கேன். இன்னும் எனக்கே சரி வர எதுவும் புரியலை. எல்லாம் பாத்துட்டு என்னால முடிஞ்சா நான் உங்களுக்கு செய்றேன்”, என்று நல்ல படியாகவே சொன்னான். 

“என்ன முடிஞ்சா செய்றேன்னு சொல்ற செழியா? இது நல்லா இல்லை, சொல்லிட்டேன்”, என்று மதியழகன் குரல் உயர்த்தி கேட்டார். 

அவர் குரல் உயர்த்தி பேசியதை அவன் விரும்ப வில்லை என்பதை அவன் முகச் சுளிப்பே உணர்த்தியது. 

கோபத்தில் வார்த்தையை விடக் கூடாது என்று எண்ணி அவன் அமைதியாக இருக்க “அண்ணனோட கம்பெனில நாங்களும் பங்குதாரர்கள் தான் செழியன். அதனால எங்களுக்கு வர வேண்டிய பணத்தை நீ கொடுத்து தான் ஆகணும். அண்ணா எங்களுக்கு மாசம் மாசம் பங்கை கொடுத்தார்”, என்றாள் சாவித்ரி. 

“வாட், நீங்களும் பார்ட்னரா?”, என்று திகைத்து போனவன் சாரதா புறம் திரும்பி “மாம், என்ன மாம் இது? உங்களுக்கு எதாவது தெரியுமா?”, என்று கேட்டான். 

“எனக்கும் தெரியாது டா செழியா. அப்பா என் கிட்ட எதுவும் சொல்லலை”, என்றாள் சாரதா. 

“என்ன அண்ணி தெரியாதுன்னு சொல்லி எங்களை ஏமாத்தப் பாக்குறீங்களா? அண்ணனுக்கு நாங்களும் நிறைய கொடுத்துருக்கோம். அதான் எங்களை பார்ட்னரா வச்சார். நீங்க என்னடான்னா தெரியாதுன்னு சொல்றீங்க? என்ன உங்க குல புத்தியைக் காட்டுறீங்களா?”, என்று கேட்டார் மதியழகன். 

Advertisement