Advertisement

அத்தியாயம் 19

உந்தன் மேனியின் இனிமையை

தினமும் உணரக் காத்திருக்கிறது

எந்தன் இதழ்கள்!!!

ஹோட்டலை சுற்றிப் பார்த்த படி சில மாறுதல்களைச் சொன்னாள் மாலினி. அதை நல்ல விஷயம் என்று மனதார பாராட்டினான் தினகர். செழியனிடம் சொல்லி விட்டு உடனடியாக செய்வதாக சொன்னான். பின் ஹோட்டலை சுற்றி முடித்ததும் ஆபீஸ் ரூம் வந்தார்கள்.

உள்ளே சென்றதும் “மீனா”, என்று அழைத்தான் தினகர். மாலினி மனம் தடதடத்தது. மீனா என்ற அந்த பெண் திரும்ப மாலினியின் கண்களும் கூர்மை பெற்றது. அவள் நினைத்தது போல அவள் தான் அந்த மீனா என்றதும் ஏதோ உள்ளுக்குள் பொங்கியது மாலினிக்கு. ஏனென்றால் இவள் தான் அன்று செழியனுடன் பேசிக் கொண்டிருந்தது.

“மீனா, இவங்க தான் மாலினி. நம்ம செழியன் மனைவி. தங்கச்சி, இது மீனா. அட்மின் வேலை எல்லாம் இப்ப இவங்க தான் பாக்குறாங்க”, என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் தினகர்.

செழியன் வாழ்க்கையில் இருந்த பெண் என்றதும் மாலினியால் அவளைப் பார்த்து இயல்பாக சிரிக்க முடியவில்லை. ஆனால் மீனா சந்தோசமாக சிரித்தாள். அவளை வரவேற்கவும் செய்தாள். அதில் குழப்பமும் திகைப்புமாக இருந்தாள் மாலினி.

“வாங்க மேடம், நான் பைல்ஸ் காட்டுறேன்”, என்று சொல்லி கால் மணி நேரம் அவள் முந்தைய நாள் கணக்கைப் பற்றிச் சொல்ல எதுவுமே மாலினி மனதில் பதிய வில்லை. ஏதேதோ யோசனைகள் அவள் மனதை மையம் கொண்டது.

“மேம்”, என்று அழைத்தாள் மீனா.

“ஆன்”, என்று கனவில் இருந்து விழிப்பவள் போல கேட்டாள் மாலினி.

“எல்லாம் சொல்லிட்டேன், ஏதாவது டவுட் இருக்கா?”

“இல்லை”

“ஓகே, உங்களுக்கு டீ கொண்டு வரச் சொல்லவா? ரொம்ப டயர்டா தெரியுறீங்க?”

“நீங்களும் வறீங்களா மீனா? சேந்து டீ குடிக்கலாம்”, என்று மாலினி சொன்னதும் புருவம் உயர்த்தினாலும் சரி என்று சொல்லி அவளுடன் நடந்தாள்.

உணவு அருந்தும் இடத்தில் இரண்டு டீயை வாங்கிக் கொண்டு இருவரும் அமர்ந்தார்கள். இருவருக்கும் இடையில் மௌனமே நிலவியது. மீனாவுக்கு “செழியன் எதுக்கு இன்னைக்கு வரலை? இவங்களுக்கு என்னைப் பத்தி தெரியுமா?”, இப்படி பல கேள்விகள் ஓடியது. ஆனால் அவளால் கேட்க தான் முடிய வில்லை. அதனால் அமைதியாகவே இருந்தாள்.

டீ காலியாகும் தருணம் மாலினி தான் பேச்சை ஆரம்பித்தாள். “உங்க கிட்ட ஒண்ணு கேக்கவா மீனா?”

“கேளுங்க மேம்”, என்று மீனா சொன்னதும் “என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா? அவ்வளவு சந்தோஷமா என்னை வரவேற்று பேசுறீங்க?”, என்று நேரடியாக கேட்டு விட்டாள் மாலினி. அவளால் இந்த குழப்பத்தை தாங்க முடியவில்லை. செழியன் மீது அதிக அன்பு வைத்திருக்க அவனுடன் ஆடும் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் அவளுக்கு பிடிக்க வில்லை. பிடித்தவர்களை வெறுப்பது போல விலக்கி வைப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“கோபமா? உங்க மேலயா? நான் எதுக்கு கோபப் படணும்? நீங்க இந்த ஹோட்டல் ஓனர். நான் இங்க வேலை செய்யுறேன். அது மட்டுமில்லாம நாம இன்னைக்கு தான் பாத்துருக்கோம்”, என்று குழப்பமாக கேட்டாள் மீனா.

“இந்த ஹோட்டல் முதலாளியா நான் அந்த கேள்வியைக் கேக்கலை மீனா. செழியனோட மனைவியா கேக்குறேன்”

“அப்ப கூட ஏன் கோபம் வரணும்? நீங்க என்னோட நண்பனோட மனைவி. அப்படின்னா எனக்கும் தோழி தான். உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நாளா உங்களை எனக்கு அறிமுகப் படுத்தச் சொல்லி கேட்டேன். ஆனா இப்ப தான் வாய்ப்பு வந்துருக்கு”

“நண்பனா? யாரு செழியனா?”, என்று குழப்பமாக கேட்டாள் மாலினி.

“யெஸ்”

“எப்ப இருந்து?”

“உங்க கல்யாணத்துக்கு அப்புறம் இருந்து”

“அதுக்கு முன்னாடி?”

“…”

“சொல்லுங்க மீனா, அதுக்கு முன்னாடி உங்களுக்கு செழியன் யாரு? சொல்லுங்க பிளீஸ்”

“உங்களுக்கு அருண் யாரு?”

“அருணா? அவர்.. அவர் ஜஸ்ட் எனக்கு பாத்த மாப்பிள்ளை. அது போக செழியனோட தம்பி. அவ்வளவு தான்”

“அது மாதிரி செழியன் ஜஸ்ட் எனக்கு பாத்த மாப்பிள்ளை. அவ்வளவு தான்”

“என்ன சொல்றீங்க? நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணலையா?”

“வாட்? லவ்வா? இது வரை என் லைப்ல லவ் அப்படிங்குற விஷயம் வரவே இல்லையே”

“இல்லையே, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி நிச்சயம் வரை போச்சுன்னு… அத்தைக்கு கூட உங்களை தெரிஞ்சு…”

“அந்த அருண் சொன்னானா இதெல்லாம்? அவன் என்ன சொன்னாலும் நம்பீருவீங்களா நீங்க?”

“சரி அதை நம்பலை. நான் இப்ப நேரடியா கேக்குறேன். நீங்க செழியனை விரும்புனீங்களா?”, என்று தவிப்புடன் கேட்டாள்.

“சத்தியமா இல்லை?”

“என்ன இல்லையா? அது எப்படி? லவ் இல்லாம எப்படி நிச்சயதார்த்தம்?”

“உங்க கேள்வியே அபத்தம் மேம்”

“இந்த மேம் எல்லாம் வேண்டாம். மாலினின்னு சொல்லுங்க”

“சரி மாலினி, எங்களுக்கு நிச்சயமே நடக்கலை”

“அப்படியா?”

“ஆமா மாலினி. அப்புறம் நான் ஒண்ணு கேக்கவா?”

“கேளுங்க”

“மாப்பிள்ளை பாத்து நிச்சயம் முடிஞ்சு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் அருண் உங்க கூட பேசிருக்கார். அவரை நீங்க லவ் பண்ணுனீங்களா?”

“இல்லை”

“ஏன்?”

“தெரியலை, உண்மையைச் சொல்லனும்னா நான் அருணைப் பத்தி அதிகம் யோசிக்கவே இல்லை. ஏன்னு தெரியலை”

“அதே மாதிரி தான் எங்க கதையும். செழியன் விரும்பினது ஒரே ஒரு பொண்ணைத் தான். ஆனா அது நான் இல்லை”

“என்ன சொல்றீங்க? அது யாரு?”, என்று தெரிந்து கொண்டே கேட்டாள். ஏனென்றால் அவன் அவளிடம் தானே காதலைச் சொல்லியிருந்தான்.

“அது யாருன்னு எனக்கு தெரியாது மாலினி. செழியன் சொன்னது இல்லை. என்னைப் பொண்ணு பாக்க வந்தப்ப சொன்னது அது தான்.  அந்த பொண்ணு கிட்ட காதலைச் சொன்னானாம். அவங்க விருப்பம் இல்லைன்னு சொன்னதும் விலகிட்டானாம். அப்புறம் அவங்க அம்மா பாத்த பொண்ணு தான் நான். ஏனோ பொண்ணு பாக்க வந்தப்ப எங்க ரெண்டு பேருக்குமே நட்புணர்வு தான் வந்தது. செழியனுக்கு அந்த பொண்ணு மனசுல இருந்ததுனால என்னைப் பாத்து நட்புணர்வு வந்துருக்கலாம். ஆனா எனக்குமே அவனைப் பாத்ததும் சாரி அவரைப் பாத்ததும் எந்த உணர்வும் வரலை. ஒரு வேளை கல்யாணம் முடிஞ்சு வந்துருக்குமோ என்னவோ? அப்புறம் நாங்க பேசுறப்ப கூட எங்க விருப்ப வெறுப்பை தான் பகிர்ந்து கிட்டோமே ஒழிஞ்சு வேறு எதுவும் பேசிக்கலை. திடீர்னு அவருக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சது. உங்க கல்யாணம் நின்னதுனால அவசரமா கல்யாணம் நடந்ததுன்னு கேள்விப் பட்டேன். அப்ப கூட அவர் உங்களைக் கல்யாணம் பண்ணினது எனக்கு பெரிய விஷயமா தான் தோணுச்சு. ஷோ பாராட்ட தான் செஞ்சேன். அப்புறம் வீட்ல கல்யாணம் பண்ணிக்க பிரஸர் கொடுத்தாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டு செழியன் கிட்ட வேலை கேட்டேன்”

“நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை? பண்ணிக்க வேண்டியது தானே?”

“இன்னும் உங்க பயம் போகலையா? நிஜமாவே செழியன் எனக்கு நல்ல ஃபிரண்ட் மாலினி. எங்களுக்குள்ள காதல் அப்படிங்குற வார்த்தை வரவே இல்லை. நீங்க என்னை தாராளமா நம்பலாம். எங்க வீட்ல என்னோட மாமாவைக் கல்யாணம் பண்ணச் சொல்றாங்க. அது தான் எனக்கு பிடிக்கலை. வேற மாப்பிள்ளை பாத்தா உடனே சரின்னு சொல்லிருவேன். அப்புறம் நீங்க செழியனையும் தப்பா நினைக்க கூடாது. செழியன் முன்னாடி வேற பொண்ணை விரும்பிருக்கலாம். ஆனா அதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. இப்ப அவன் மனசுல…. சாரி ரொம்ப நேரமா அவன் இவன்னு பேசிட்டேன்… அவங்க மனசுல…”

“அவரை நீங்க எப்பவும் போலவே பேசுங்க மீனா. எனக்கு பிரச்சனை இல்லை”

“தேங்க்ஸ், அவன் மனசுல நீங்க தான் இருக்கீங்க மாலினி. அந்த பொண்ணை நினைச்சு டென்ஷன் ஆகாதீங்க. அவன் இப்ப உங்களைத் தான் விரும்புறான். உங்களைப் பத்தி பேசும் போது அவன் முகம் அப்படியே ஒளிரும்”, என்று அவசரமாக சொன்னாள். அவனுக்கு இருந்த காதலைப் பற்றி அவனுடைய மனைவியிடமே சொல்லி விட்டோமே என்று அவளுக்கு கவலையாக இருந்தது. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்து விடக் கூடாது என்று எண்ணி அவனுடைய காதல் மாலினி மேல் தான் என்று அவள் மனதில் பதிய வைத்தாள்.

அவளுடைய பயத்துக்கு அவசரமே இல்லை என்பது போல “கவலைப் படாதீங்க மீனா. அந்த பொண்ணை நினைச்சு கண்டிப்பா நான் டென்ஷன் ஆக மாட்டேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள் மாலினி. “அப்பாடி”, என்ற நிம்மதி வந்தாலும் அவளை வியப்பாக பார்த்தாள் மீனா.

“என்ன பாக்குறீங்க? செழியன் மனசுல இருக்குறது நான் தான். அவர் வந்து காதலைச் சொன்னது என் கிட்ட தான்”, என்று புன்னகையுடன் சொன்னாள். முதலில் இருந்து கடைசி வரை அவன் மனதில் அவள் தான் இருக்கிறாள் என்ற உண்மை தெரிந்து அவள் மனம் சந்தோசத்தில் திளைத்தது .

Advertisement