Advertisement

“என்னது பெரியம்மாவா?”

“கடவுளே, அதுவும் உனக்கு தெரியாதா? செழியன் என் அண்ணன்”

“என்ன?”

“ஆமா, அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் ஒண்ணாப் பிறந்தவங்க. எங்க சொத்தை எல்லாம் அவன் பிடுங்கிக் கிட்டான். எனக்கு நல்லது நடந்தா அவனுக்கும் சரி அவனோட அம்மாவுக்கும் சரி பிடிக்காது. அதான் என்னை மிரட்டி இங்க இருந்து ஓட வச்சான். ஆனா அவன் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணினான்? செழியன் லவ் பண்ணின பொண்ணுக்கும் அவனுக்கும் நிச்சயமும் நடந்துச்சே? ஆனா ஏன் அவளை விட்டுட்டு உன்னைக் கல்யாணம் பண்ணினான்னு தெரியலை”

“நீங்க சொல்றது உண்மையா?”, என்று குழப்பமாக கேட்டாள் மாலினி. அவன் சொன்ன உறவு முறையிலே அவளுக்கு தலை சுற்றியது. இதில் அவனுக்கு நிச்சயம் ஆனதைக் கேட்டு மண்டை காய்ந்து போனாள். 

“வேணும்னா அவன் கிட்டயே கேளு மாலினி. அந்த பொண்ணு பேர் மீனா”, என்று அவன் சொன்னதும் இடி விழுந்தது போல துடித்துப் போனாள். 

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “சரி இப்ப மட்டும் வந்து எப்படி உண்மையைச் சொல்றீங்க? இவ்வளவு நாள் ஏன் வரலை?”, என்று கேட்டாள். 

“அம்மா அப்பா பாரின் போயிட்டாங்க. அந்த தைரியம் தான். என் அண்ணனால எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. ஆனா உனக்கு உண்மை தெரியணும்னு தான் சொல்ல வந்தேன். இப்ப என்ன முடிவு எடுக்கணுமோ அதை நீ எடு”, என்று அவன் சொல்லும் போதே அவனுடைய போன் அடித்தது. அதை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் சிறிய படபடப்பு. அவனையே பார்த்துக் கொண்டிருந்த மாலினிக்கு அவனது படபடப்பு எதுவோ சரி இல்லை என்று உணர்த்தியது. 

“ஒரு நிமிஷம் மாலினி. ஒரு முக்கியமான கால்”, என்று சொல்லி விட்டு பாத்ரூம் பக்கம் நகர்ந்தான். 

அவனுக்கு தெரியாமல் அவன் பின்னேயே சென்றாள் மாலினி. போனை எடுத்த அருண் “சொல்லு பேபி மா”, என்றான். அவன் குரல் குழைந்து உருகியது. 

அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ? “சே சே, அவளை எல்லாம் நான் பாக்க போவேனா? எனக்கு தான் செல்லப் பொண்டாட்டி நீ இருக்கியே? குழந்தை எப்படி இருக்கா?”, என்று கேட்டான்.

…..

“நிஜமாவே நான் அவளைப் பாக்கப் போகலை பேபி மா. எங்க அம்மா அப்பா கட்டாயப் படுத்தினதுனால தான் நான் அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். ஆனா உன் அண்ணன் கிட்ட இருந்து குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு கால் வந்ததும் நான் இங்க கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு எழுதி வச்சிட்டு உன்னைத் தேடி வந்துட்டேனா இல்லையா?”, என்று கேட்டான். 

…..

“சரி சரி, இன்னைக்கு நைட் கிளம்பிருவேன் பேபி மா”

….

“வேண்டாம் வேண்டாம். நீ வராதே. நான் அப்பா கிட்ட இன்னும் உன்னைப் பத்திச் சொல்லலை. நான் சொல்லிட்டு உன்னை வந்து கூட்டிட்டு வரேன். சரி டா வைக்கிறேன்”, என்று சொல்லி அவன் வைத்ததும் மாலினி அங்கிருந்து செல்லப் பார்த்தாள். 

அப்போது அருண் மீண்டும் போனை வைத்து பேச ஆரம்பித்தான். “சொல்லுப்பா”, என்றான் அருண்.

“எங்க டா இருக்க?”

“இங்க சென்னை தான்”

“நீ என்ன நினைச்சிட்டு இருக்க? திடீர்னு வந்த, அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணணும்னு சொன்ன? அப்புறம் காணாம போயிட்ட? இன்னைக்கு காலைல வந்த, இப்ப ஆளைக் காணும்”

“அப்பா, நான் வீட்டுக்கு வந்து எல்லாம் சொல்றேன்”

“எனக்கு இப்பவே தெரியணும். இப்ப விட்டா நீ வீட்டுக்கே வராம ஓடிருவ. எங்களைப் பத்தி என்ன டா நினைச்சிட்டு இருக்க? ஒரு பையனைப் பெத்து வச்சிருக்கோம். ஆனா உனக்கு நாங்க பெருசாவே தெரியலைல?”

“உங்களுக்காக உங்க சந்தோசத்துக்காக தான் எல்லாம் செஞ்சேன் பா”

“என்ன கதை இது?”

“உங்களை கஷ்டப் படுத்தின செழியனை நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு தான் அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ண பிளான் போட்டேன்”

“என்ன டா சொல்ற?”

“ஆமா பா, ஒரு நாள் மாலினியையும் செழியனையும் சேர்த்து பாத்தேன். அவன் அவ கூட அவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருந்தான். அதுல அவ மேல அவனுக்கு அவ்வளவு காதல்னு புரிஞ்சது. அவங்களைப் பிரிக்க தான் நான் அவளைக் கல்யாணம் பண்ண அவங்க வீட்ல பேசச் சொன்னேன்”

“அப்புறம் எல்லாம் சரியா தானே டா போச்சு. அப்புறம் ஏன் டா ஓடிப் போன? அந்த செழியன் தான் உன்னை விரட்டினானா?”

“என்னை யாரும் விரட்ட முடியுமா பா? செழியன் வந்து மாலினியை விட்டுருன்னு கெஞ்சினான். நான் கேக்கலை. மாலினியோட அப்பா கிட்ட என்னைப் பத்தின உண்மையைச் சொன்னான். அவர் என் கிட்ட வந்து கேட்டார். நான் அவனைப் பத்தி தப்பா சொல்லி அனுப்பிட்டேன்”

“அப்புறம் என்ன தான் டா நடந்தது? ஏன் அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு போன? இப்ப அவளுக்கு செழியன் கூட கல்யாணம் ஆகிருச்சு”

“செழியனுக்கும் மாலினிக்கும் கல்யாணம் ஆகும்னு நான் யோசிக்கவே இல்லை பா. கண்டிப்பா அவன் மீனா அப்படிங்குற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணுவான்னு நினைச்சேன். எப்படி அந்த பொண்ணைக் கழட்டி விட்டான்னு தெரியலை. நீதி நேர்மைன்னு பேசுற அவங்க அம்மா எப்படி இதுக்கு சம்மதிச்சாங்களோ? உண்மையிலே அவளைக் கல்யாணம் பண்ணி டார்ச்சல் பண்ண தான் பா நினைச்சேன். ஆனா வேற ஒரு பிரச்சனைல சிக்கி கிட்டேன்”

“என்னது டா?”

“சொல்றேன் பா. இதை உங்க கிட்ட நேர்ல சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா அதுக்கு தைரியம் இல்லை. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு பா. நான் இன்னொரு கல்யாணம் பண்ணப் போற நியூஸ் தெரிஞ்சு அந்த பொண்ணோட அண்ணன் என்னை மிரட்டினான். கூடவே என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதான் ஓடிப் போயிட்டேன். மிச்ச கதையை நான் வீட்ல வந்து சொல்றேன். ஆனாலும் அந்த செழியன் நல்லா இருக்க கூடாதுப்பா. நம்மளை அஞ்சுக்கும் பத்துக்கும் கை ஏந்த வச்ச அவன் நிம்மதியைக் கெடுக்கணும். அதான் அவன் பொண்டாட்டியை தூண்டி விட்டேன். அது நல்லாவே வெடிக்கும். சரி நான் இப்ப வீட்டுக்கு வரேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 

எல்லாவற்றையும் மறைந்திருந்து கேட்ட மாலினிக்கு எல்லா உண்மையும் விளங்கியது. இப்போது அருண் கண் முன் நின்றால் அவள் அனைத்தையும் கேட்டு விட்டாள் என்று அவனுக்கு தெரிந்து விடும் என்பதால் அருகில் இருந்த ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டாள். வெளியே வந்த அருண் அங்கே மாலினி இல்லாததால் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் போல என்று எண்ணி பில்லைக் கட்டி விட்டுச் சென்று விட்டான். அதன் பிறகு தான் வெளியே வந்து அமர்ந்தாள் மாலினி. 

ஆதியோடு அந்தமாக எல்லாமே புரிந்தது. அருணைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டாள். எல்லாம் சரியானாலும் அவள் மனதில் ஒரே ஒரு குழப்பம் மட்டுமே வந்தது. அது மீனா. 

மீனா யாரா இருக்கும்? இன்னைக்கு அவன் கூட பேசிட்டு இருந்த பொண்ணு தான் மீனாவா? அப்படின்னா செழியன் எதுக்கு அவ கூட பேசுறான்? என்னை விரும்பினானா? அவளை விரும்பினானா என்று பல கேள்விகள் அவளுக்குள் வந்தது. 

குழப்பான மனநிலையில் வீட்டுக்கு வந்தாள். அவளை வரவேற்ற சாரதா என்னவென்று கேட்க அவரிடம் அவள் எதுவுமே சொல்ல வில்லை. அமைதியாக அறைக்குள் சென்று விட்டாள். 

அன்று மாலை வீட்டுக்கு வந்த செழியன் “என்ன, எல்லாம் பேசிட்டு வந்தாச்சா? அவன் சொன்னது எல்லாம் நம்பிருப்பியே? நீயெல்லாம் திருந்தவே மாட்ட?”, என்று கத்தினான். 

“தப்பை எல்லாம் உங்க மேல வச்சிக்கிட்டு என்னைக் குறை சொல்ற வேலை வச்சிக்காதீங்க”, என்று மாலினி சொல்ல “அப்படியே நினைச்சிக்கோ. எல்லாமே என் தப்பு தான். உன்னை லவ் பண்ணினது என் தப்பு தான்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டான். 

அதன் பின் வாழ்க்கை நரகம் ஆனது போல இருந்தது. ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் விதியின் சதியால் மனம் ஒன்று படாத பறவைகள் போல வாழ்ந்து கொண்டிருந்தனர். 

உண்மையை சொல்லி என்ன நடந்தது என்று விசாரிக்கப் போன சாரதாவை அவன் தடுத்து விட்டான். ஆனாலும் சாரதா ஒரு முறை “என்ன நடந்துச்சுன்னா மா…”, என்று ஆரம்பிக்க “அதைப் பத்தி பேச வேண்டாம் அத்தை”, என்று சொன்ன மாலினி அவரைப் பேச விட வில்லை. 

அவருக்குமே அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை. அந்த வீட்டில் இருந்த மூன்று ஜீவன்களுமே நிம்மதி இல்லாமல் தான் இருந்தார்கள். வீட்டில் இருப்பது பைத்தியம் பிடிப்பது போல இருப்பதால் மாலினி சாரதாவிடம் “ஆபீஸ் போகலாம் அத்தை”, என்று சொல்லி விட்டாள். அதன் பிறகு மூவருமே அலுவலகம் சென்றார்கள். மாலினி பழைய வேலையைத் தான் பார்த்தாள். அந்த அறைக்குள் அவனுடன் இருப்பது மூச்சு முட்டுவது போல தான் அவளுக்கு இருந்தது. ஆனாலும் வைராக்கியமாக இருந்தாள். 

“இப்போது வரை மீனாவைப் பற்றி ஒரு விஷயமும் தெரிய வில்லையே?”, என்ற கடுப்பு தான் அவன் மீது கோபமாக திரும்பியது. 

எல்லாம் எப்போதும் போல நடந்தது. அப்போது ஒரு நாள் அலுவலகத்தில் மீட்டிங் இருக்க மாலினியின் முன்பு வந்து நின்றாள் சாரதா. 

“என்ன அத்தை?”

“எனக்கு ஒரு உதவி செய்றியா மா?”

“சொல்லுங்க அத்தை?”

“செழியன்க்கு ஒரு மீட்டிங் இருக்கு”

“ஆமா அத்தை. அதுக்கு தான் எல்லா பைலையும் எடுத்து கொடுத்துட்டு வந்தேன்”

“ஆமா மா, அதான் அவன் என்னை ஹோட்டல் வரைக்கும் விசிட் போயிட்டு வரச் சொன்னான். ஆனா என்னால இன்னைக்கு போக முடியாது. நம்ம வக்கீல் சார்க்கு ஹார்ட் அட்டாக்ன்னு கால் வந்துச்சு. நான் ஹாஸ்பிட்டல் போகணும். நீயும் செழியனும் சாயங்காலமா அவரைப் போய் பாத்துட்டு வந்துருங்க. நான் இப்ப போறேன். ரொம்ப நல்ல மனுஷன். இப்ப நான் அவரோட மனைவி கூட இருக்கணும். நீ நம்ம ஹோட்டல் வரைக்கும் போய் ஒரு பார்வை பாத்துட்டு வந்துறியா மா? உனக்கு தான் கார் ஓட்டத் தெரியுமே? நம்ம செழியன் காரை எடுத்துட்டு போ. இந்தா கீ”

“சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டாள். அவள் சென்ற பிறகு தான் அவளுக்கு நினைவு வந்தது மீனா அங்கு வேலைப் பார்ப்பது.

இப்போது வரை மீனா யாரென்று முழுமையாக மாலினிக்கு தெரியாது. ஆனால் ஹோட்டலில் வேலை செய்பவர்களுக்கு அவள் தான் சம்பளம் போடுவாள் என்பதால் அவள் அங்கே வேலை பார்ப்பதை தெரிந்து வைத்திருந்தாள். இப்போது அவளைப் பார்க்க வேண்டும் என்று தான் அவளுக்கு மூளைக் குடைச்சலாக இருந்தது.  

மாலினி அங்கே இறங்கியதும் எப்போது போல அங்கு வந்தான் தினகர். அவளைக் கண்டதும் “மேடம் நீங்களா? சார் வரலையா? வாங்க மேடம்”, என்றான். 

“அண்ணா என்ன இது? இந்த மரியாதையை எல்லாம் உங்க நண்பரோட நிறுத்திக்கோங்க. நான் எப்பவும் உங்க தங்கச்சி தான்”, என்று சிரித்த படி அவனுடன் நடந்தாள். 

“சரி மா, உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? உள்ள வா. இன்னைக்கு என்ன உன்னை அனுப்பிட்டானா?”

“ஆமா அண்ணா, அவங்களுக்கு மீட்டிங் இருக்கு. அத்தையும் வெளிய போயிட்டாங்க”

“சரி வா, முதல் முதலா உங்க ஹோட்டல்க்கு.. சாரி சாரி முறைக்காதே. நம்ம ஹோட்டல்க்கு வந்துருக்க. வா சுத்தி காட்டுறேன். அப்புறம் பைல்ஸ் பார்க்கலாம்”

“சரிங்கண்ணா”, என்று கேட்டுக் கொண்டவள் அவனுடன் நடந்தாள். 

காதல் தொடரும்…. 

Advertisement