Advertisement

அத்தியாயம் 18

காயப் படுத்துவாய் என்று

தெரிந்தே உன்னைக்

காதலிக்கிறது என் இதயம்!!!

“இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”, என்பது தான்.   

அதைக் கேட்டு புசுபுசுவென்று கோபம் மேலே எழும்பியது. கோபத்துடன் கீழே வந்து விட்டாள். “ஆக இவன் கெட்டவன் தான். மீனான்னு அடுத்த ஆளைப் பிடிச்சிட்டான் போல? நான் தான் ஒரு நிமிஷம் இவனை நல்லவன்னு தப்பா நினைச்சிட்டேன். இனி இவனை நம்ப மாட்டேன். இப்ப வரட்டும் இவனுக்கு இருக்கு”, என்று கருவிக் கொண்டாள். 

அவன் வந்ததும் “போன்ல யார்?”, என்று தைரியமாகவே கேட்டாள். அதைக் கேட்டு அவன் உள்ளம் உவகை கொண்டது மட்டும் நிஜம். 

இந்த உரிமையை அவள் தன்னிடம் காட்ட வேண்டும் என்றல்லவா அவன் எதிர் பார்த்தான். அது நடந்ததில் அவளைக் கண்டு புன்னகைத்தான். 

“என்ன இளிப்பு? கேட்டதுக்கு பதில். போன்ல யாரு?”

“என் ஃபிரண்ட் மீனாட்சி போதுமா?’

“பொண்ணு தானே?”

“இல்லை, மீனாட்சி சுந்தரம்”

“என்னது?”

“ஆமா மீனாட்சி சுந்தரம் பையன் பேர் தானே?”, என்று அவன் சிரிப்புடன் கேட்க “ஆன்… ஆமா”, என்றாள் மாலினி. 

“வேற என்ன?”

“வேற ஒண்ணும் இல்லை. அத்தை சாப்பிட வரச் சொன்னாங்க”, என்று சொல்லி விட்டு கீழே சென்று விட்டாள்.

“சரி”, என்று சொல்லி விட்டு கீழே சென்றவன் மாலினி கிட்சன் உள்ளே சென்றதும் மீனா பேசியதைப் பற்றி அம்மாவிடம் சொன்னான். 

சாரதாவும் அவளுக்கு ஏதாவது செய் என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டான். அப்போது அங்கே மாலினி ஆஜர் ஆக தாயும் மகனும் பேச்சை மாற்றி விட்டார்கள். அவளது சந்தேகம் இன்னும் அதிகமானது. கூடவே அவன் மீது கோபமும் வந்தது. 

“என்னை என்ன இளிச்சவாயா ஆக்குறானா?”, என்று கோபத்துடன் அறைக்குள் அமர்ந்திருந்தாள். 

சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்த செழியன் ஆஃபிஸ்க்கு கிளம்பி “மாலினி, நீயும் ஆபீஸ் வாயேன்”, என்றான். 

“அத்தை தனியா இருப்பாங்க. நான் வரலை”, என்று கோபத்தில் சொன்னாள். 

“உங்க அத்தையை யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க. அது மட்டுமில்லாம அவங்க உனக்கு துணைக்கு தான் ஆபீஸ் வராமா இருக்காங்க. நீ வந்தா அவங்களும் வருவாங்க”

“எனக்கே தோணும் போது வரேன். அது என் ஆபீஸ் தானே? அப்புறம் என்ன? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வர முடியாது. அத்தையை வேணும்னா கூட்டிட்டு போங்க”

“சத்தியமா அது உன் ஆபீஸ் தான். நீ எப்ப வேணும்னாலும் வா. ஆனா சீக்கிரம் வா. நீ வந்தா தான் அம்மாவும் வருவாங்க. இப்ப அவங்களுக்கு வீட்ல நேரமே போகாது”, என்று சொல்லிச் சென்றான். 

“போடா நீ சொன்னா நான் வரணுமா? உண்மையை முதல்ல கண்டு பிடிக்கிறேன்”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள். 

அவன் சென்றதும் சாரதாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்து சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அதை எடுத்து “யாருங்க?”, என்று கேட்டாள். 

“நான் அருண் பேசுறேன். பக்கத்துல யாரும் இல்லையே?”

“சொல்லுங்க அருண், இங்க யாரும் இல்லை”

“என்னால இத்தனை நாள் உன் கிட்ட பேச முடியலை. இப்ப தான் நான் சென்னை வந்தேன். உன்னை பார்த்து கொஞ்சம் பேசணும் மாலினி. ஒரு உண்மையைச் சொல்லணும்”

“எனக்கும் அந்த உண்மை தெரியணும்”, என்றதும் அவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது. இவளுக்கு ஏதாவது தெரிந்திருக்கிறதா என்று போட்டு வாங்கினான். அன்று ஊட்டியில் வைத்து அவள் கேட்டதிலே அவளுக்கு உண்மை தெரிய வில்லை என்று புரிந்து சந்தோஷமாக இருந்தது. 

“க்ரீன் பார்க் ஹோட்டல் தெரியும்ல? அங்கே வரியா? உன்னால வர முடியுமா?”, என்று கேட்டான். 

“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தாள். 

பின் நைட்டியை மாற்றி விட்டு ஒரு காட்டன் புடவையை எடுத்து அணிந்து கீழே இறங்கி வந்தாள். 

“எங்க டா கிளம்பிட்ட? ஆஃபிஸ்க்கா?”, என்று கேட்டார் சாரதா. 

“இல்லைங்க அத்தை. அருண் கால் பண்ணினார்”, என்று அவள் சொன்னதும் சாரதாவுக்கு திக்கென்று இருந்தது. 

“என்ன அருணா?”

“ஆமா அவர் தான். ஏதோ பேசனுமாம். நான் போயிட்டு வரேன்”

“அது வந்து மா. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அவனைப் பாக்க நீ போகனுமா? அவன் சரியில்லை மா”

“அவன் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் அத்தை. ஆனா கண்டுப்பா போகணும். எதனால அன்னைக்கு அப்படி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போனார்ன்னு எனக்கு கேக்கணும்”

“இப்ப எதுக்கு மா அது? அவனைப் பத்தி போலிசே உண்மையைச் சொல்லிட்டாங்க. அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்காம்”

“அது உண்மையான்னு அவர் கிட்டேயே கேக்குறேன். நான் போயிட்டு வரேன்”

“நீ போறது செழியனுக்கு தெரியுமா மா?”

“தெரியாது அத்தை, வந்து சொல்லிக்கிறேன். நான் போய்ட்டு வரேன்”

“மாலினி”

“அத்தை”

“அவன் கொஞ்சம் சரி இல்லை மா. ஏதாவது தப்பா சொல்லி…”

“அதையும் தெரிஞ்சிக்கணும்ல அத்தை? ஊட்டில வச்சே அவரைப் பாத்தேன். இன்னைக்கு பேசலைன்னா திருப்பி திருப்பி இந்த குழப்பம் தொடரும். என்னன்னு விசாரிச்சிட்டா இன்னையோட முடிஞ்சிரும் தானே? நான் வரேன் அத்தை”, என்றவள் கிளம்பியே விட்டாள். 

அவனை நம்பி வெளியே செல்வதைப் பார்த்து திகைத்த சாரதாவுக்கு அவள் உண்மையைச் சொல்வதை நினைத்து சந்தோஷப் படுவதா, இல்லை அவனைப் பாக்கப் போறதை நினைத்து துக்கப் படுவதா? என்று தெரிய வில்லை. ஒரு பிரண்டைப் பாக்க போறேன்னு அவ  பொய்ச் சொல்லியிருந்தால் சாரதாவுக்கு அது தெரியாது தான். ஆனால் உண்மையைச் சொல்லிச் சென்ற மருமகளை நினைத்து அந்த நேரத்திலும் பெருமையாக தான் இருந்தது. கூடவே மகனுக்கும் மருமகளுக்கும் இடையே எதுவும் சரியாகவில்லையா என்ற குழப்பமும் அவருக்கு வந்தது. 

மாலினி அருணைக் காணப் போகும் உண்மையை மகனுக்குச் சொல்வது தான் சரி என்று பட உடனே செழியனை அழைத்தார். 

“என்ன மாம் இந்த நேரத்துல கூப்பிட்டுருக்கீங்க? சொல்லுங்க?”, என்றான் செழியன். 

“எங்க டா இருக்க? ஹாரன் சவுண்டா கேக்குது? ஆபீஸ் போகலையா?”

“ஆஃபிஸ்க்கு தான் வந்துட்டு இருந்தேன் மா. அப்ப தினகர் நம்ம ஹோட்டல்ல ஒரு வேலை வேகண்ட் இருக்குனு சொன்னான். அதை மீனாக்கு சொன்னேன். அவ உடனே கிளம்பி வறேன்னு சொன்னா மா. அதான் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அவளைக் கூட்டிட்டு போய் ஹோட்டல்ல விட்டுட்டு ஆபீஸ் போகணும்”

“இங்க ஒரு பெரிய பிரச்சனை டா செழியா”

“என்ன மா? மாலினிக்கு எதுவும்?”

“மாலினி அருணைப் பாக்க போயிருக்கா டா”

“என்ன மா சொல்றீங்க?”

“ஆமா டா. அவன் ஏதோ சொல்றேன்னு சொன்னானாம். இவ என் கிட்ட அவனைப் பாக்கப் போறேன்னு சொல்லிட்டே போறா. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை”

“விடுங்க மா, அவ பாத்துப்பா. அவளுக்கும் அவனைப் பத்தித் தெரியனும்ல? நான் சொல்றதை அவ நம்பவே இல்லை. எத்தனை நாள் இப்படியே நான் தனியா போராடுறது?”

“அப்படின்னா உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா செழியா? உன் காதலைச் சொல்லலையா அவ கிட்ட? அவ உன்னை மன்னிக்கவே இல்லையா?”

“இல்லை மா, அருணை அவ கிட்ட இருந்து நான் தான் பிரிச்சேன்னு நினைக்கிறா. என்னை உண்மையை சொல்லவும் விடலை. இது இப்படியே போச்சுன்னா சரி இல்லை மா. உண்மை தெரிஞ்சு வரட்டும்”

“சரி சரி, எதுக்கும் நீ போய் பார்“

“வேண்டாம் மா”

“அவன் ஏதாவது தப்பா சொல்லிக் கொடுத்தா என்ன பண்ண டா?”

“அதையும் அவ தான் மா உணரனும். கிட்ட தட்ட ரெண்டு மாசமா என் கூட இருந்துருக்கா. கொஞ்சமாவது என்னைப் பத்தின நல்ல எண்ணம் அவளுக்கு வந்துருக்கான்னு பாக்கலாம்”

“சோதிக்கிற நேரமா டா இது?”

“நிஜமாவே என்னால முடியலை மா. மனசுக்கு புடிச்சவளை பக்கத்துல வச்சிக்கிட்டு அவ கூட வாழ முடியாம தவிக்கிறது? எனக்கு கஷ்டமா இருக்கு மா”

“புரியுது டா. ஆனா அவனை நினைச்சா?”

“நடக்குறது நடக்கட்டும் மா. மீனா வந்துட்டா. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் “ஹாய் மீனா”, என்று சொல்லி புன்னகைத்தான்.

“ஹாய் செழியன், எப்படி இருக்க?”, என்று இருவரும் புன்னகையுடன் பேசிக் கொண்டிருக்க அந்த வழியாக போன மாலினி “அண்ணா கொஞ்சம் ஆட்டோவை நிறுத்துங்க”, என்று சொன்னாள். அவள் கண்ணில் ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்த செழியனும் மீனாவும் விழுந்தார்கள். 

மாலினி பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காரில் ஏறிச் சென்று விட்டார்கள். குழப்பத்துடன் “வண்டியை எடுங்க அண்ணா”, என்று சொல்லி விட்டு போனை எடுத்து செழியனைத் தான் அழைத்தாள். 

மாலினி அழைப்பதைக் கண்ட செழியன் அந்த அருணால் அவளுக்கு ஏதாவது பிரச்சனையோ என்று எண்ணி உடனே அதை எடுத்தான். 

“இப்ப நீங்க எங்க இருக்கீங்க?”, என்று கோபமாக கேட்டாள் மாலினி. 

அவள் கோபத்தைக் கண்ட செழியன் அருண் தன்னைப் பற்றி ஏதோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கொண்டான். “கண்டவன் பேச்சை எல்லாம் நம்புறாளே”, என்று அவனுக்கு கடுப்பாக இருந்தது. 

அதனால் “நான் எங்க இருந்தா உனக்கு என்ன? நீ எங்க இருக்கேன்னு நான் கேட்டேனா? இல்லை தானே?”, என்று கோபமாக கேட்டான். 

“ஓஹோ? ஆனா நான் எங்க போனேன்னு உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு தானே?”

“தெரிஞ்சிருச்சு. ஆனா அதை நீ சொல்லலை தானே? அப்புறம் எதுக்கு என்னைக் கேக்குற?”

“நான் சொல்லாம அத்தைக்கே அது தெரிஞ்சிருக்காது”

“ப்ச் இப்ப உனக்கு என்ன தெரியணும்?”

“நீங்க எங்க இருக்கீங்க?”

“இவ்வளவு நேரத்துக்கு எங்க இருப்பேன்? ஆபீஸ்ல தான்”

“எப்ப ஆபீஸ் போனீங்க?”

“எரிச்சல கிளப்பாத டி. என்னைப் பத்தி ஏதாவது தப்பா சொன்னானா அவன்? அப்படின்னா அவன் கிட்டயே கேளு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 

“முதல்ல இந்த அருண் சேப்ட்டரை முடிச்சிட்டு வந்து உன்னை வச்சிக்கிறேன். இந்த மாலினியை என்னன்னு நினைச்ச? கண்ணு முன்னாடி நான் நிப்பேன்? நீ என்னை விட்டுட்டு அடுத்தவளைப் பாப்பியோ?”, என்று கருவிக் கொண்டாள். 

அந்த ஹோட்டல் வெளியவே நின்றிருந்த அருண் “வா மாலினி”, என்று அழைத்தான். 

“எப்படி இருக்கீங்க அருண்?”

“அதான் அன்னைக்கே சொன்னேனே நல்லா இல்லைன்னு. சரி வா. உள்ள போய் பேசலாம்”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான். 

“என்ன சாப்பிடுற?”, என்று கேட்டான் அருண். 

“எனக்கு ஒரு டீ போதும்”, என்று சொன்னதும் பேரர் அங்கிருந்து நகர்ந்தான். 

“சரி நான் நேரடியா விசயத்துக்கு வரேன். எதுக்கு இப்படி பண்ணுனீங்க? கல்யாணம் வேண்டாம்னு எதுக்கு போனீங்க?”, என்று கேட்டாள் மாலினி.

“என்னை அப்படிப் பண்ண வச்சான் மாலினி. என்னை ஊரை விட்டு போக வச்சான் உன் புருஷன்”

“அப்படின்னாலும் நீங்க போயிருக்க கூடாது தானே? உங்களை நம்பித் தானே எங்க குடும்பம் இருந்துச்சு. யாரோ மிரட்டினாங்கன்னு எப்படி நீங்க போகலாம்?”

“என் அம்மா அப்பாவை கொன்னுருவேன்னு மிரட்டினா நான் என்ன செய்ய முடியும்?”

“அப்படியா?”

“ஆமா, ஆனா எனக்கு ஒண்ணு தான் புரியலை”

“என்ன?”

“என் மேல உள்ள கோபத்துல அவன் ஏன் உன் வாழ்க்கையை இப்படி பண்ணினான்? அதுவும் அவன் காதலியை விட்டுட்டு உன்னை ஏன் கல்யாணம் பண்ணனும்?”

“உங்க மேல அவருக்கு என்ன கோபம்? அப்புறம் என்ன சொன்னீங்க? காதலியா? என்ன உளறல் இது?”

“அதையும் உன் கிட்ட இன்னும் அவன் சொல்லலையா? அவனுக்கு ஒரு காதலி இருக்கா. அது பெரியம்மாவுக்கும் தெரியும்”

Advertisement