Advertisement

அவளுக்கு வேலைக்குச் செல்லும் ஆசை இருந்தாலும் அவர்களாக அதைப் பற்றி பேசாததால் அமைதியாக இருந்தாள். அவனுக்கும் அவளை ஆஃபிஸ்க்கு அழைக்க ஆசை தான். ஆனால் அங்கே நடந்ததை நினைத்து எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளை அழைப்பது என்று எண்ணி மௌனமாக இருந்தான்.

அடிக்கடி மாலினி அவளுடைய வீட்டுக்கும் சென்று வருவாள். காலையில் கிளம்பும் போது அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு செல்பவன் மாலையில் அவளை அழைக்கச் செல்வான். இரவு உணவை அங்கேயே முடித்து விட்டே வீட்டுக்கு வருவார்கள்.

அவளுடைய வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் செழியனை ஏதாவது திட்டி வசந்தாவிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொள்வாள். ஒரு நாள் அப்படித் தான். “மாலினி டி‌வி பாத்தது போதும். மாப்பிள்ளை வர நேரம் ஆச்சு. போய் முகம் கழுவி, தலைசீவி பூவை வை”, என்று விரட்டினாள் வசந்தா.

“ஆமா அவர் பெரிய மகாராஜா. அவருக்காக நான் காத்துட்டு இருக்கணும். போ மா”, என்று அவள் சொன்னது தான் தாமதம் “அப்படியே வச்சேன்னா தெரியும்? எங்களைப் பொறுத்த வரைக்கும் அவர் மகாராஜா தான். அவர் உன்னைக் கல்யாணம் பண்ணலைன்னா இந்நேரம் நாங்க கௌரவமா இருந்திருக்க முடியுமா டி? நானும் உன் அப்பாவும் கெஞ்சிக் கேட்டதுனால இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னார். சம்மதிக்காத அவங்க அம்மாவை சம்மதிக்க வச்சார். அவர் மட்டும் உன்னைக் கல்யாணம் பண்ணலைன்னா எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. பாரின்ல இருக்குற உன் அத்தைக்காரிக்கு கொண்டாட்டமா இருந்திருக்கும்”, என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி கத்துற மா? அவர் தான் உனக்கு உசத்தியா? நான் மட்டும் என்னவாம்? நீங்க சொன்னீங்கன்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? மறுக்கவா செஞ்சேன்? சும்மா சும்மா அவருக்காக என்னைத் திட்டிக்கிட்டே இருக்க?”, என்று எரிச்சலோடு கேட்டாள் மாலினி.

“நாங்க சொன்னோம்னு நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? எங்க உண்மையைச் சொல்லு, உனக்கு அவரைப் பிடிக்கலைன்னு”

“அம்மா”

“என்ன அம்மா? சின்ன வயசுல இருந்து எங்க கிட்ட எந்த விசயத்தையும் மறைக்காத நீ மாப்பிள்ளைக்கு சாப்பாடு கொண்டு போறதை மட்டும் ஏன் டி மறைச்ச?”

“அம்மா”

“காலேஜ் படிக்கும் போது உனக்கு பசங்களும் தான் பிரண்டா இருந்தாங்க. அப்ப எல்லாம் உண்மையைச் சொன்ன நீ மாப்பிள்ளை விசயத்துல மட்டும் மறைக்க என்ன காரணம்? நான் சொல்லட்டா? உன் மனசுல காதல் வந்துருச்சு. அதனால உனக்குள்ள கள்ளத்தனமும் வந்துருச்சு. அதனால தான் நாங்க மாப்பிள்ளையா அவரைச் சொன்னதும் சரின்னு சொல்லிட்ட?”

“ஏன் நீங்க அருணை மாப்பிள்ளையா பாத்ததுக்கு மட்டும் நான் மாட்டேன்னா சொன்னேன்?”

“அருணைக் கல்யாணம் பண்ண முழு மனசா சம்மதிச்சியான்னு உன் மனசாட்சியைக் கேளு. அது சொல்லும். நான் வேற எதுவும் சொல்ல வரலை. எங்களுக்கு மாப்பிள்ளை உசத்தி தான். அவரை மரியாதை இல்லாம பேசுறதா இருந்தா இங்க வராத”

“அம்மா”

“அம்மா தான். அதனால தான் உனக்கு நல்லது ஏதோ அதைச் சொல்லிட்டு இருக்கேன். புரிஞ்சு நடந்துக்கோ. போ, போய் முகம் கழுவு”, என்று சொல்லி விரட்டி விட்டார்.

செழியன் வந்த போது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த செழியன் “என்ன ஆச்சு?”, என்று பாலாவிடம் கேட்டான்.

“அம்மா கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டா”, என்று சொல்லி அவன் சிரிக்க செழியனுக்கும் சிரிப்பு வந்தது. தன்னைப் பார்த்து அவர்கள் இருவரும் சிரிப்பதைப் பார்த்த மாலினி கோபத்துடன் அவர்கள் அருகே வந்தாள். அவர்கள் என்னவென்று பார்க்க அவர்கள் எதிர்பாரா நேரம் இருவர் தலையிலும் கொட்டி வைத்தாள்.

“ஆஆ”, என்று இருவரும் அலற “என்ன ஆச்சு?”, என்று பதட்டமாக வந்தாள் வசந்தா. அம்மாவைக் கண்டு மாலினி பதற “அம்மா இவ என்னைக் கொட்டிட்டா மா. மாமாவையும்…”, என்று பாலா சொல்ல வந்தான்.

அவனை நிறுத்திய செழியன் மாலினியின் பயத்தைக் கண்டு “சும்மா அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை அத்தை. நீங்க வேலையைப் பாருங்க. மாமா எப்ப வருவாங்க?”, என்று கேட்டு பேச்சை மாற்றி விட்டான்.

“இப்ப வந்துருவாங்க மாப்பிள்ளை. வந்துட்டே இருக்கார். எத்தனை வருஷம் ஆனாலும் இதுங்க ரெண்டும் திருந்தவே செய்யாது”, என்று சொல்லி விட்டு சென்றாள். அம்மாவிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய செழியனை நன்றியோடு பார்த்தாள் மாலினி. செழியனையும் கொட்டியது தெரிந்தால் வசந்தா அவளை ஒரு வழி ஆக்கியிருப்பாள் என்று தான் அவளுக்கு தெரியுமே. அதன் பின் கனகராஜ் வந்ததும் உணவை முடித்து விட்டு கிளம்பினார்கள்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் தான். இருவரும் தனித் தனியாகத் தான் இருந்தார்கள். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு நாள் செழியனுக்கு மீனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. போனை அவன் சார்ஜ் போட்டிருந்ததால் கால் வந்ததைப் பார்த்தது மாலினி தான். “உங்க போன் அடிக்குது”, என்று குரல் கொடுத்தாள். ஆபீஸ் அறையில் இருந்து வெளியே வந்தவன் அழைப்பது மீனா என்றதும் அரண்டு போய் அவளைப் பார்த்தான். திருமணம் பேசும் போது அவள் எண்ணை ஸேவ் செய்திருந்தான். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. திடீரென்று வரவும் அவனுக்கு மூச்சடைத்தது.

மாலினி துணி மடித்துக் கொண்டிருக்கவும் அவள் பார்க்க வில்லை என்று எண்ணி அதை எடுத்து “சொல்லு டா மச்சான்”, என்று சொல்லிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்று விட்டான். அவன் பேசுவதைக் கேட்டு திகைத்து விட்டாள் மாலினி.

முதல் காரணம் அவனது பதட்டமும் தடுமாற்றமும். இரண்டாவது அவனது பேச்சு. அவள் தான் மீனா என்ற பெயரைப் பார்த்து விட்டாளே. அதனால் அவளுக்கு குழப்பமாக இருந்தது.

மொட்டை மாடிக்குச் சென்ற செழியனோ “எப்படி இருக்க மீனா?”, என்று கேட்டான்.

“ஏதோ இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். திடீர்னு என்ன கால் பண்ணிருக்க?”

“எனக்கு ஒரு உதவி செய்யனும்”

“சொல்லு மீனா”

“எனக்கு ஒரு வேலை வேணும்”

“என்னது வேலையா? சரி நம்ம ஆஃபிஸ்க்கு வறியா?”

“இல்லை, அங்க வேண்டாம். அது சரி வராது”

“சரி வேற யோசிக்கிறேன்”

“என்ன டா உரிமையா வேலை வேணும்னு கேக்குறேன்னு கோபமா?”

“சே சே, நீ கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்”

“குற்ற உணர்ச்சியினாலா?”

“சத்தியமா இல்லை. நீ என்னோட நல்ல பிரண்டா இருக்கணும்னு நான் ஆசைப் படுறேன். ஏனோ தெரியலை. ஆனாலும் கல்யாணம் பத்தி உன் கிட்ட சொல்லாதது தப்பு தான். ஆனா என்னோட நிலைமை”

“புரியுது. விடுங்க. கடவுள் சரியா தான் முடிச்சுப் போட்டுருக்கார். எனக்குள்ள எந்த வருத்தமும் இல்லை. நமக்குள்ள முதல் சந்திப்புலே உருவான நட்பை தான் நான் உணர்ந்தேன்”

“ஆமா, நானும் தான். சரி மீனா, வேலை என்னன்னு பாத்துட்டு சொல்றேன். உன் ரெசியும் அனுப்பி வை. வேலை எப்படி இருக்கணும்?”

“எதுன்னாலும் பரவால்ல”

“ஏன் திடீர்னு தெரிஞ்சிக்கலாமா?”

“உங்க கிட்ட சொல்லாம என்ன? கல்யாணம் நின்னதும் என்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வீட்ல டார்ச்சல் பண்ணுறாங்க. அதுல மாமாவுக்கும் விருப்பம் இல்லை. எனக்கும் விருப்பம் இல்லை. கொஞ்ச நாள் ரிலாக்சா யோசிக்கணும். அது வீட்ல முடியாது. வேலைக்கு போனா நல்லா இருக்கும்னு தோணுது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்க”

“நான் ஒண்ணு சொல்லவா?”

“இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”

“உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம். வா போன்னே பேசலாம்”

“மீனா, உனக்கு என் மேல கோபம் இல்லையே?”

“ஒண்ணு புரிஞ்சிக்கோ செழியன். எனக்கு உன்னைப் பாத்ததும் காதல் எல்லாம் பொங்கிடலை. நீ ஃபிரண்ட்லியா பேசினது பிடிச்சிருந்தது. அது எப்பவும் பிடிக்கும். அதை தவிர என் மனசுல வேற எதுவும் இல்லை. நீ என்னோட குட் ஃபிரண்ட் மட்டும் தான். அப்புறம் உன் வொய்ஃப்பை ஒரு நாள் எனக்கு அறிமுகப் படுத்தி வை. சரி வேலைக்கு கேட்டு சொல்லு. அம்மா வராங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள். அவனும் குற்ற உணர்வு நீங்கி சிரித்துக் கொண்டான்.

“அந்த மீனா யாரா இருக்கும்?”, என்று எண்ணிக் கொண்டு மாலினி நிற்கும் போது “மாலினி, செழியன் ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”, என்று அழைத்தார் சாரதா.

தொடரும்…. 

Advertisement