Advertisement

அவனைக் கண்டதும் மாலினி கண்கள் வியப்பில் விரிந்தது. சத்தியமாக அவள் அவனை அங்கே எதிர் பார்க்க வில்லை. “அருண் நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“எப்படி இருக்க மாலினி?”, என்று கேட்டான் அருண்.

“நல்லா இருக்கேன். நீங்க? இங்க எப்படி? எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இல்லை மாலினி. உன்னை மாதிரி ஒரு பொண்ணை இழந்து நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?”, என்று அவன் உருக்கமாக பேச “என்னை வேண்டாம்னு… நீங்க தானே போனீங்க?”, என்று கேட்டே விட்டாள்.

“அது செழியன் செஞ்ச சதி. எல்லாத்தையும் நீ சென்னை வந்த பிறகு விவரமா சொல்றேன். இப்ப பேச நேரம் இல்லை. உன்னோட நம்பர் எனக்கு தான் தெரியுமே. நான் கூப்பிடுறேன். என்னை நம்புறேன்னா என் காலை அட்டண்ட் பண்ணி பேசு”, என்று சொல்லி விட்டு சடுதியில் மறைந்தான். “அதுக்குள்ள எங்க போனான்?”, என்று குழம்பிப் போனாள்.

குழப்பத்துடன் அதே இடத்தில் நின்ற மாலினி “அப்படின்னா நிஜமாவே செழியன் தான் ஏதோ செஞ்சி இவனை விரட்டிருக்காரா? பின்ன இல்லைன்னு ரொம்ப நல்லவன் மாதிரி பேசுறார்?”, என்று எண்ணினாள். இது வரை இருந்த அவளது மனநிலை முற்றிலும் மாறியது. செழியன் மீதான கோபமே அவள் மனதில் மேலோங்கியது.

அவளுக்கு என்று உண்ண தின் பண்டங்களை அவன் வாங்கி வர “எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவனுக்கு தான் ஏதோ போல ஆனது. “இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா? திடீர்னு என்ன ஆச்சு?”, என்று குழம்பினான்.

வீட்டுக்கு போகும் வழியில் அதை கேட்கவும் செய்தான். “ஒண்ணும் இல்லை”, என்பதைத் தவிர அவள் வேறு ஒன்றும் சொல்ல வில்லை.

“என்ன ஒண்ணும் இல்லை? எனக்கும் பொறுமை ஒரு அளவுக்கு தான் இருக்கு மாலினி. என்னன்னு சொன்னா தானே தெரியும்? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த? பசிக்குதுன்னு சொன்னதுனால தானே வாங்கப் போனேன்?”, என்று சற்று கோபமாக கேட்டான். அவனும் தான் என்ன செய்வான்? ஜான் ஏறினால் முழம் இறங்குகிறது.

“எல்லாத்தையும் எல்லார்க் கிட்டயும் சொல்லணும்னு அவசியம் இல்லை. நீங்க முதல்ல எல்லா விசயங்களையும் என் கிட்ட சொல்லிருக்கீங்களா?”, என்று அவளும் எரிச்சலுடன்  கேட்டாள்.

மீனா விஷயத்தை அவளிடம் சொல்ல வில்லை என்பதை எண்ணி அமைதி காத்தான். ”இல்லை தானே? அப்படின்னா என்னாலயும், எதையும் உங்க கிட்ட சொல்ல முடியாது. எனக்கு தலை வலிக்குது”, என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவள் தூங்க வில்லை என்பதை அவளது கண்கள் பறைசாற்றியது. கடவுளே எதுக்கு இந்த வேதனை என்று இருவருக்குமே தோன்றியது.

வீட்டுக்கு சென்று படுத்தவள் தான். அதிகப் படியான மன உளைச்சலில் காச்சலில் விழுந்தாள். காச்சல் அவளைப் படுத்தி எடுத்தது. அவளை அக்கறையாக கவனித்துக் கொண்டான் செழியன். அவனது பரிவில் அவள் மேலும் குழம்பத் தான் செய்தாள்.

குழப்பத்துடனே ஊருக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கு சென்றாலும் மாலினி எப்போதும் ஏதோ யோசனையிலே இருந்தாள். அதை செழியன் கண்டு கொள்ள வில்லை. கேட்டாலும் கண்டிப்பாக முகத்தில் அடிப்பது போல தான் பேசுவாள் என்பதால் எதுவும் அவளிடம் பேச வில்லை.

அவனைப் பொறுத்த வரை அவள் அவனுடன் இருக்கிறாள். அவனுடைய அம்மாவுடன் நன்கு பேசுகிறாள். அதுவே போதும் என்று எண்ணியது அவன் காதல் கொண்ட மனது.

“நான் இன்னைக்கு லேட்டா தான் வருவேன் மாலினி”, என்று சொன்ன செழியன் ஆபீஸ் கிளம்பினான்.

“அதை என் கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. நான் அதை எதிர் பாக்கவும் இல்லை”, என்று அவள் பதில் கொடுக்க முகத்தில் அறை வாங்கிய உணர்வுடன் அங்கிருந்து சென்றான்.

முகம் சுண்டிப் போய்ச் சென்ற அவனைக் கண்டதும் அவளுக்கே கஷ்டமாக இருந்தது. மாலினி இது வரை யாரையுமே இப்படி எல்லாம் பேசியது இல்லை. அதனால் அவளை நினைத்து அவளுக்கே எரிச்சலாக வந்தது. கூடவே செழியன் அவளைத் திட்டாமல் அமைதியாக போவது வேறு அவளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது.

“நான் ஏன் இப்படி மாறிட்டேன்? இவன் நல்லவனா கெட்டவனா? என்னைப் பழி வாங்க கல்யாணம் பண்ணினா இவன் என்னை எதுக்கு நல்லாப் பாத்துக்கணும்? அந்த அருணை விரட்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் என்ன வொர்த்தா? சரி அப்படியே பிடிச்சு பண்ணிக்கிட்டாலும் என் கிட்ட இருந்து எதுக்கு இப்ப விலகி இருக்கணும்? தாலின்னு ஒண்ணு கட்டின பிறகு இந்த விலகல் அவசியம் இல்லையே? ஒரு வேளை நான் செத்துருவேன்னு மிரட்டினதுனால இப்படி விலகி இருக்கானா?”, என்று குழம்பினாள்.

“இவ்வளவு யோசிக்கிற நீ அவன் பக்கத்துல வந்தா சந்தோஷமா ஏத்துக்குவியா?”, என்று அவளிடம் கேட்டது அவள் மனசாட்சி.

அன்று ஆபீஸில் வைத்து நடந்த நிகழ்வு நினைவில் வந்தது. கண்டிப்பாக அந்த நேரம் அவள் செழியனை முழு மனதாக தடுத்து நிறுத்த வில்லை என்ற உண்மையை அவள் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அதே மாதிரி அருண் தன்னிடம் அப்படி தவறாக நடந்து கொண்டிருந்தால் மாலினி முழு பலம் கொண்ட மட்டும் போராடியிருக்க மாட்டாளா? தன்னுடைய நகக்கண் கொண்டு அவனைக் காயப்படுத்தி இருக்க மாட்டாளா? ஆனால் செழியன் அப்படி செய்த போது ஏன் அப்படிச் செய்யாமல் இருந்தாள்?

அவளையே அறியாமல் அவன் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறான் என்ற உண்மை இப்போது தெளிவாக புரிந்தது. திருமணத்திற்கு பின்னரும் அவன் மீது கோபப் படுகிறாளே தவிர, அவன் மீது எந்த வெறுப்பும் வரவில்லை.

அவன் தன்னுடைய குடும்பத்தை மதிக்கும் விதமா? தன்னுடைய தம்பியை பார்த்துக் கொள்ளும் விதமா? தன்னுடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அவன் விலகி இருப்பதாலா? தான் என்ன சொன்னாலும் கோவப் படாமல் தன்னை சமாதானப் படுத்த நினைக்கும் அவன் செயலா? ஏதோ ஒன்று அவளை அவன் பக்கம் இழுக்க தான் செய்கிறது.

அவன் எதிர்த்து சண்டை போட்டு தன்னை வலுக்கட்டாயமாக அடைந்து அவன் குணத்தை நிலை நாட்டி இருந்தால் அவள் மனது இந்த அளவுக்கு வேதனைப் பட்டிருக்காதோ என்னவோ?

ஆனால் தூக்கத்தில் கூட கண்ணியம் காக்கும் அவனை கஷ்டப் படுத்துவது அவளுக்கே கஷ்டமாக இருந்தது. இத்தனை பிளான் செய்து தன்னை எதற்காக மணக்க வேண்டும்? முதலில் தன்னைப் பார்த்து ஒரு மாதத்தில் எதற்கு தன்னிடம் காதலைச் சொல்ல வேண்டும்? தான் மறுத்ததும் ஏன் விலகிச் செல்ல வேண்டும்? அருண் சொன்னது உண்மையா? அருண் நல்லவனா கெட்டவனா?

இப்படி பல கேள்விகள் வந்தது. இருக்கும் பணத்திற்கு தினமும் ஒரு பெண்ணுடன் சுற்றும் வாய்ப்பு இருந்தும் தன்னிடம் கூட அவன் கண்ணியம் காக்க காரணம் என்ன? அது மட்டுமில்லாமல் பெண்ணை மதிக்காத கெட்டவன் தாய் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பானா? தாயை மதிப்பவன் மற்ற பெண்களையும் மதிக்க தானே செய்வான்? அப்படின்னா அன்னைக்கு என் கிட்ட எதுக்கு அப்படி நடந்துக்கிட்டான்?

பணத்திலும் பதவியிலும் உயரத்தில் இருப்பவனுக்கு பெண் கொடுக்க நினைப்பவர்கள் பலர் இருக்கும் போது இவன் எப்படி மிடில் கிளாஸ் வீட்டில் திருமணம் செய்ய சாரதா ஒத்துக் கொண்டார்?

அம்மாவும் மகனும் அடிக்கடி கூடி கூடி பேசும் விஷயம் தான் என்ன? எதை தன்னிடம் மறைக்கிறார்கள்? எனக்கு தெரியக் கூடாது என்று நினைக்கும் விஷயம் என்னவாக இருக்கும்?

தன்னிடம் காதலை யாசகம் கேட்டு நிற்கும் செழியன் எப்படி அருணை விரட்டி இருக்க முடியும்? முதலில் அருணிடம் உண்மையை விசாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள். ஆனால் அவன் அவளை அழைக்கவே இல்லை. அவளுக்கும் அவனுடைய எண் தெரியாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டாள்.

நேரம் போகாமல் அந்த பெரிய வீட்டை வளைய வந்தாள் மாலினி. சாரதாவுடன் நேரம் செலவழித்தாள். அந்த வீட்டின் அருமை பெருமை, பாரம்பரியம் நடைமுறை அனைத்தையும் கேட்டுக் கொண்டாள். அவள் கேட்காமல் போனாலும் செழியனைப் பற்றிய விசயங்களும் அவள் காதில் விழுந்து அவள் மனதை நிறைத்தது.

தோட்டத்தில் பூ பறித்து அவள் கையால் மாலை கட்டி அதை சாமி படங்களுக்கு போடும் போது ஆத்ம திருப்தி கொண்டாள். மாலை அவன் வரும் போது ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து அவனை அசத்தினாள்.

Advertisement