Advertisement

அத்தியாயம் 17 

காதலின் வலி ஒரு நாள்

உனக்கு உணர்த்தும் எந்தன்

உண்மையான காதலை!!!

“என்ன முறைக்கிற? நீ சொன்னதை தானே சொன்னேன்? ஆனா நீ வேஸ்ட் கா. அத்தானைப் பார்க்க இன்னும் பிரம்மாண்டமா கம்பீரமா இருக்கு. ம்‌ம் யார் மாதிரி தெரியுமா? ஆன், நம்ம பொன்னியின் செல்வன் மாதிரி. அவ்வளவு ஒரு கம்பீரம் தெரியுமா?”, என்று அவன் கேட்டதும் தன்னாலே நிமிர்ந்து செழியனைப் பார்த்தாள் மாலினி.

அவள் பார்த்ததும் “என்ன அப்படியா இருக்குறேன்?”, என்று கண்களை உயர்த்தி கண்களால் கேள்வி கேட்டான் செழியன். சிவந்த முகத்துடன் தலையை குனிந்து கொண்டாள் மாலினி. அதற்கு மேல் அங்கிருந்தால் தான் அவனைப் பற்றி புகழ்ந்து தள்ளிய அனைத்தையும் பாலா உளறி விடுவான் என்பதால் அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றாலும் பாலா அனைத்தையுமே செழியனிடம் சொல்லி விட்டான். அவனை அழகு என்று வர்ணித்தது, கம்பெனியில் மற்றவர்கள் புகழ்வதைக் கேட்டு மாலினி சந்தோஷப் படுவது, அவனது திறமையை கண்டு மாலினி வியந்தது. எப்போதாவது செழியன் இயல்பான உடையில் வந்தால் அவள் அவனை அழகு என வர்ணித்தது என மாலினி சொன்ன அனைத்தையும் சொன்னான் பாலா. அது போக அவனுக்கு திருமணம் ஆனதைக் கேட்டு வருத்தப் பட்டது, அது இல்லை என்றதும் சந்தோஷப் பட்டது என அனைத்தையும் சொன்னான்.

“என்னை ரசிச்சிருக்கா. என்னோட அழகு அவளை கவர்ந்திருக்கு. என்னோட டிரஸ் கூட அவளை கவர்ந்திருக்கு. ஆனா இந்த அருண் மட்டும் இடைல வராம இருந்திருந்தா கண்டிப்பா இவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கும்”, என்று எண்ணிக் கொண்டான்.

அன்று இரவு அறைக்குள் வந்தவளை “வாங்க மேடம்”, என்று அழைத்தான். அவள் அவனை முறைத்த படி “என்ன வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு?”, என்று கேட்டாள்.

“இல்லை, உன்னோட உண்மை எல்லாம் எனக்கு தெரிஞ்சதுனால வெக்கப் பட்டுட்டு உள்ள வர யோசிக்கிறியோன்னு நினைச்சேன்?”

“அவன் ஒரு லூசு, சும்மா கற்பனை பண்ணி பேசுறான். அதை நம்பினா நீங்க தான் முட்டாள்”

“அவன் சொன்னது பொய்யா இருந்தா கூட ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு பிடிச்ச பொய்”, என்று சொல்லி விட்டு அவளைக் கண்டு கண்ணடித்தான். அவள் முகம் சிவந்து தான் போனது. அதை அவனுக்கு காட்ட மனதில்லாமல் “எனக்கு தூக்கம் வருது”, என்று சொல்லி விட்டு எப்போதும் போல் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

அவளுக்கு தூக்கம் வந்ததோ என்னவோ மனைவியின் மனதில் ரசிக்கும் படியாக தான் பதிந்திருக்கிறோம் என்று அவன் சந்தோசத்தில் மிதந்தான். தூக்கம் அவனை விட்டுச் சென்றிருந்தது.

அவளுமே அவனது அழகைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள். அவன் அவளைப் பற்றியே யோசித்த படி இருந்தான். அப்போது தான் அவன் இடையில் கையைப் போட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் மாலினி.

மனைவியின் கரம் பட்ட இடம் குளிர்ந்தது என்றால் தன்னுடைய நெஞ்சில் பதிந்த அவளது முகம் அவனை மயக்கியது. அவளது அருகாமை அவனை விண்ணுலகில் பறக்க வைத்தது. அவளது மூச்சுக் காற்று அவனது நாசியில் நுழைந்து அவனது இதயத்திற்குள் நுழைந்தது.

முதல் முறையாக தங்களுடைய வீட்டில் இன்னொரு ரூம் கட்டிய மடத்தனத்தை நொந்து கொண்டான். அவனது கரமும் தன்னாலே உயர்ந்து அவளை வளைத்து அணைத்துக் கொண்டது. இந்த அருகாமையையும் இதத்தையும் இழக்கும் எண்ணம் அவனுக்கு துளி கூட இல்லை. அதனால் அசையாமல் படுத்திருந்தான்.

அடுத்து வந்த நாட்களும் இதமாக கழிந்தது. மாலினி வீட்டினரும் செழியன் தங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது வரம் என்று எண்ணி அதை மகளிடமும் சொன்னார்கள். அதை காதில் வாங்கினாலும் கருத்தில் கொள்ள வில்லை மகள்.

அன்று மாலை “கிளம்பு வெளிய போகலாம்”, என்றான். அவளுக்கும் செல்ல ஆசை தான். ஆனால் தம்பியையும் அழைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனிடம் எப்படிச் சொல்ல என்று தெரியாமல் தடுமாறி நின்றாள்.

“அக்கா கிளம்பலையா? சரியான சோம்பேறி நீ”, என்ற குரல் கேட்டு நனவுலகத்துக்கு வந்தாள்.

அங்கே டிப்டாப்பாக நின்று கொண்டிருந்த பாலாவைக் கண்டதும் அவள் உதடுகள் மலர்ந்தது.

“டேய் நீயும் வரியா டா?”, என்று முகம் மலர்ந்து கேட்க மனைவியின் சந்தோஷத்தை ரசித்துப் பார்த்தான் செழியன்.

“ஆமா நானும் தான் உங்க கூட வரேன். நீ தான் என்னைக் கூப்பிடலை. ஆனா அத்தான் என்னை கிளம்பச் சொல்லிட்டார் தெரியுமா? சரி வாங்க. நான் கார்ல இருக்கேன்”, என்று சொல்லிச் சென்றான்.

படக்கென்று அவனைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்த படி இருக்க “தேங்க்ஸ்”, என்றாள்.

“நீ எப்படியோ தெரியாது. ஆனா இதுவும் என் குடும்பம் தான். சரி கிளம்பு, நேரம் ஆச்சு”, என்று சொல்லிச் சென்றதும் சந்தோஷமாக கிளம்பினாள்.

சுடிதார் அணிந்து தலை வாரி முடித்தவள் துப்பட்டாவை தேடிக் கொண்டிருந்தாள். அப்போது பார்த்து உள்ளே வந்தான் செழியன். அவனைக் கண்டு சும்மா இருந்தாலாவது எதுவும் தவறாக தெரிந்திருக்காது. அவன் வந்ததும் படக்கென்று கையில் கிடைத்த துப்பட்டாவை எடுத்து போட்டுக் கொண்டாள்.

அவள் வேகத்தில் அவன் பார்வை ரசனையாக அவளை மேய்ந்தது. அவன் பார்வையைக் கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மாலினி.

“இந்த சுடிதாருக்கு இந்த சால் மேட்ச் இல்லையே?”, என்று சிறு சிரிப்புடன் அவன் கேட்டதும் அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் பார்வையில் அவனது ரசனை மேலும் கூடியது.

“எப்படி பாக்குறான் பாரு? என்னமோ பொண்ணு பாக்க வந்த மாதிரி? கடவுளே எனக்கு ஏன் படபடன்னு வருது?”, என்று அவள் எண்ண அவனது ரேசர் பார்வை அவளது தலை முதல் கால் வரை பயணித்தது.

அவன் பார்வையில் அவள் முகம் சிவந்தது. அதை மறைக்க “கிளம்பச் சொல்லிட்டு இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்? போக உத்தேசம் இருக்கா இல்லையா?”, என்று கேட்டாள்.

“போகாம இங்கயே இருந்தா மட்டும் பாசமா பேசிறவா போற?”, என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு வெளியே சென்றான் செழியன்.

மாலினி வீட்டில் நான்கு நாட்கள் ஓடியதே செழியனுக்கு தெரியவில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருந்தது செழியனுக்கு. மாலினி மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்ள வில்லை என்றாலும் அவளது சுபாவங்கள் பழகி இருந்தது. அவளும் அவனுக்கு பிடித்தது பிடிக்காதது என்று அறிந்து வைத்திருந்தாள்.

சூடான டீயை அருந்த மாட்டான் என்பதால் அவனுக்கு ஆற்றி அவன் பருகும் பதத்தில் கொடுப்பது வரை முன்னேறி இருந்தாள். அவள் அவனது அன்னையையும் மறக்க வில்லை. இங்கே அவளது வீட்டில் இருந்தாலும் தினமும் சாரதாவுக்கு அழைத்து பேசி விடுவாள்.

ஒரு வழியாக மறுவீடு முடிந்து தன்னுடைய வீட்டுக்கு இருவரும் திரும்பினார்கள். உடனேயே அவர்களை ஹனிமூன் போகச் சொன்னாள் சாரதா. அன்னையிடம் மறுக்க முடியாமல் மாலினியிடம் கேட்டால் அவளோ மறுத்தாள். அதன் பின் டூர் போகலாம், சுற்றிப் பார்க்க போகலாம், அம்மாவுக்காக போகலாம் என்று சொல்லி பார்த்தான். அவள் கேட்கவே இல்லை. கடைசியில் நாம் ஒன்றாக சென்றால் அவளது குடும்பமும் சந்தோஷப் படும் என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.

ஊட்டியில் சமீபத்தில் ஒரு எஸ்டேட்டை விலைக்கு வாங்கி இருந்தான் செழியன். அது வாங்கியது அவனுடைய அன்னையைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலினிக்கு கூட தான். தெரிந்தவர்களின் இடம் போல என்று எண்ணிக் கொண்டு தான் அவனுடன் சென்றாள்.

அங்கிருக்கும் அழகை விழி விரித்து ரசித்தாள். அதை அவனிடம் சொன்னாள். புன்னகைத்தானே தவிர வேறு ஒன்றும் சொல்ல வில்லை. அங்கே சென்றதும் ஒரு தோழனுடன் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தாள் மாலினி. அவனுக்கு அதுவே போதும் போல இருந்தது.

அடுத்த நாள் ஊர் சுற்றிப் பார்க்க வெளியே அழைத்துச் சென்றான். இருவரும் சந்தோஷமாக தான் சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அவள் பசிக்கிறது என்று சொல்ல ஏதோ வாங்குவதற்காக செழியன் அங்கிருந்த கடைக்குச் சென்றான். அது தான் சமயம் என்று எண்ணி அவள் கண் முன் வந்து நின்றான் அருண்.

Advertisement