Advertisement

“நீங்க சொல்ற பொய்யான நியாயத்தை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க செஞ்ச எதையும் என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு பிடிச்ச காதல் மனைவியா மாற என்னால இந்த ஜென்மத்துல முடியாது. நீங்க அப்படி எல்லாம் நான் இருக்கணும்னு ஆசைப் பட்டா அது உங்க பேராசை. உங்க அம்மா சொன்னதுக்காக என்னால உங்க கூட டூர் எல்லாம் வர முடியாது. வீணா பிளான் போட்டு ஏமாறாதீங்க”

“நீ ஒரு கெட்டவனை கட்டிக்கிட்டு கஷ்ட படக் கூடாதுன்னு உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா அது தப்பா மாலினி?”

“முதல்ல அவன் கெட்டவன் கிடையாது. இன்னொன்னு உங்க கூட அமைஞ்சது நல்ல வாழ்க்கையும் கிடையாது”

“இதுக்கு முடிவு தான் என்ன?”

“உங்க கெட்ட எண்ணத்துக்கு நீங்க இப்படியே என் கிட்ட திட்டு வாங்கிச் சாகனும். அது தான் முடிவு. போகலாமா? எனக்கு தலை வலிக்குது”, என்று சொன்னதும் அடுத்து எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.

இருவரும் சாரதாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். சிறிது நேரம் கழித்து காரை நிறுத்திய செழியன் “மாலினி”, என்று அழைத்தான்.

“என்ன? சும்மா சும்மா கடுப்பேத்தாதீங்க. எதுக்கு கூப்பிட்டீங்க?”, என்று அவள் எரிச்சலுடன் கேட்க “உங்க வீடு வந்துருச்சு, இறங்கணும்”, என்றான். அதன் பிறகு தான் அந்த இடத்தைப் பார்த்தாள். அவனிடம் சாரி சொல்ல மனதின்றி அவன் முகம் கூட பார்க்காமல் இறங்கினாள்.

இருவரும் இறங்கி நின்றதும் அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அவர்களை நலம் விசாரிக்க வந்து விட்டனர். மனமும் முகமும் பூரிக்க அவர்களுக்கு ஆரத்தி சுற்றினாள் வசந்தா.

அனைவரும் நலம் விசாரித்து விட்டுச் வீட்டுக்குள் சென்றதும் “மாலினி மாப்பிள்ளையை ரூமுக்கு அழைச்சிட்டு போ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்”, என்றார் கனகராஜ்.

தந்தை முன்பு எதையும் காட்ட முடியாமல் “வாங்க”, என்றாள். சிறு சிரிப்புடன் அவளுடன் எழுந்து சென்றான்.

அவளுடைய அறை நன்கு விசாலமாக இருந்தது. தலையணை உறை, மெத்தை உறை எல்லாம் மாற்றப் பட்டு சுத்தமாக வைத்திருந்தார்கள்.

“ரூமை நல்லா நீட்டா வச்சிருக்க மாலினி”, என்று பேச்சு கொடுத்தான் செழியன்.

“உங்க பாராட்டு எனக்கு தேவையே இல்லை. ஏன்னா இதை எல்லாம் செஞ்சது என் அம்மா தான்”

“ஓ”

“சரி நீங்க டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடுங்க. நான் போய் உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன். இல்லைன்னா எங்க அம்மா திட்டியே கொன்னுருவாங்க”, என்று சொல்லிச் சென்றாள்.

அதன் பின் அவனுடைய உடைகளை எடுத்து வைப்பதாகட்டும், அவனுக்கு எதுவும் தேவையா என்று கேட்பதாகட்டும் அவளாகவே செய்தாள். அவளது விசாரிப்பு அவனுக்கு நிறைவையும் தந்தது. அவ்வப்போது அவனை வார்த்தையால் வறுத்தெடுத்தாலும் அவர்கள் வீட்டில் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் வந்தவன் அவளது கவனிப்பால் இயல்பாகவே இருந்தான்.

“தேங்க்ஸ்”, என்று அவன் சொல்ல “உடனே ரொம்ப பெருசா எல்லாம் யோசிக்க வேண்டாம். எங்க வீட்டுக்கு வந்தா நான் தானே கவனிக்கணும்? நீங்க இல்லை, வேற யாரா இருந்தாலும் இப்படி தான். வேற பாசம் எல்லாம் இல்லை”, என்று சொல்லிச் சென்றாள் அவன் மனைவி.

“உன் மனசு கண்டிப்பா மாறும் டி”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டான். அவன் தூங்கி எழுந்து வெளியே வரும் போது அங்கே அக்காவும் தம்பியும் டி‌வி ரிமோட்டுக்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை ரசித்த படி நின்று விட்டான் செழியன்.

அப்போது அங்கே வந்த வசந்தா இருவர் தலையிலும் ஒவ்வொரு கொட்டை வைத்து விட்டு செழியனை சுட்டிக் காட்டினாள்.

உடனே ரிமோட் செழியன் கைக்கு வந்தது. செழியன் பாலாவுடன் அமர்ந்து டி‌வி பார்க்க அவர்களை முறைத்து விட்டு அன்னையிடம் சென்றாள் மாலினி.

“நீயும் டி‌வி பாக்க வேண்டியது தானே டி?”, என்று கேட்டாள் வசந்தா.

“அதுங்க ரெண்டு, கிரிக்கட் பாக்குது மா”

“இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?”

“விடு மா”

“சரி, நீ அங்க சந்தோஷமா இருக்கியா? உன்னை நல்லா வச்சிருக்காங்களா? சம்பந்தி அம்மாவைப் பாக்க நல்லவங்களா தான் இருக்காங்க. ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு”

“அதெல்லாம் அவங்க சூப்பர் டைப் மா. உன் கூட இருக்குற மாதிரியே இருக்கும்”

“மாப்பிள்ளை எப்படி டி?”

“அவரும் நல்லவர் தான்”

“அதான் தெரியுமே? உன்னை நல்லா வச்சிருக்காரா?’

“ஹிம்”

“நல்லதா போச்சு அந்த அருண் கிட்ட இருந்து நீயும் நம்ம குடும்பமும் தப்பிச்சது”

“ஒரு வேளை அந்த அருண் நல்லவனா இருந்தா என்ன மா செஞ்சிருப்ப?”

“அவன் நல்லவனா இருந்தா கூட இப்படி ஒரு மாப்பிள்ளையா இருந்துருக்க மாட்டான் டி. அவங்க அம்மா உன்னை நான் பாக்குற மாதிரி பாத்துப்பாங்களான்னு தெரியாது? அங்க நீ நிம்மதியா இருந்துருக்க முடியாம கூட போயிருக்கலாம்”

அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் மாலினி. ஆனாலும் அருண் கெட்டவன் தான் என்று மட்டும் அவள் மனம் நம்ப மறுத்தது. ஏனென்றால் அந்த உண்மையை சொன்னது செழியனாயிற்றே.

அவர்கள் வீட்டில் இருந்த நான்கு நாட்களும் செழியன் சந்தோசமாகவே இருந்தான். சிறு வயதில் இருந்து தனியாகவே இருந்ததால் மாலினியும் பாலாவும் போடும் சண்டை செழியனுக்கு சுவாரசியத்தை தந்தது.

மாலினி செய்த சேட்டைகளைப் பற்றி சந்தோசத்துடன் பாலா செழியனிடம் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் இருவரையும் முறைத்த படி செல்லும் மனைவியை வெகுவாக ரசித்தான் செழியன். அவளது இயல்பான நடவடிக்கை அவனை கவர்ந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பாலாவுக்கு டி‌வி ஹீரோ மாதிரி இருக்கும் செழியனை மிகவும் பிடிக்கும். அதனால் அவனுடன் சேர்ந்து அக்காவை வாரிக் கொண்டிருந்தான்.

“அத்தான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்”, என்று பாலா சொல்லும் போதே மாலினி உசாரானாள்.

“டேய் குரங்கு நீ இவ்வளவு நேரம் சொன்னதே போதும். வாயை மூடிட்டு போ. அவர் தூங்கட்டும்”, என்று குறுக்கே வந்தாள் மாலினி.

அவள் அவசரத்தைப் பார்த்த செழியன் “எனக்கு தூக்கம் வரலை. நீ சொல்லு பாலா”, என்று சொல்லி அவளுக்கு பி.பியை ஏற்றி விட்டான்.

“அத்தானே சொல்லிட்டாங்க. அத்தான் இவ உங்க கம்பெனிக்கு வரும் போது இவளை இன்டர்வியூ எடுத்தது யாரு?”, என்று கேட்டான் பாலா.

“இது என்ன கேள்வி? சாட்சாத் நானே தான்”

“அன்னைக்கு வந்து என்ன சொன்னா தெரியுமா?”, என்று பாலா ஆரம்பிக்க “டேய் பாலா வேண்டாம், வேண்டாம் டா. உன்னைக் கொன்னுறுவேன்”, என்று மிரட்டினாள் மாலினி.

“நீ சொல்லு பாலா. என்ன சொன்னா? மொக்க பாஸ்ன்னு சொன்னாளா?”, என்று சிரிப்புடன் கேட்டான் செழியன்.

“அப்படி இல்லை. கொரியன் சீரிஸ் ஹீரோ மாதிரி இருந்தீங்களாம்”, என்று பாலா சொன்னதும் அவள் முகம் சிவந்தது.

அதைக் கேட்ட செழியனின் உள்ளமோ குளிர்ந்து போனது. தன்னுடைய மனைவியின் மனதில் முதல் பார்வையிலே பதிந்திருக்கிறோம் என்று உள்ளம் குளிர்ந்து போனான்.

“முதல் நாளே சைட் அடிச்சிட்டு பிடிக்கலைன்னா சொல்ற? பிராடு”, என்று உள்ளுக்குள்ளே மனைவியை செல்லமாக கடிந்து கொண்டான்.

அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. அதனால் தம்பியை முறைத்த படியே இருந்தாள்.

தொடரும்….

Advertisement