Advertisement

மோகனச் சிலை போல இருந்த தோற்றம் சாதாரணமான அவனைக் கவிஞனாக மாற்ற ஆரம்பித்தது. லேசாக ஈரப் பதத்துடன் இருந்த அவளது உதடுகளைக் கண்டவன் “வாயா டி இது? இந்த பேச்சு பேசுற?”, என்று புன்னகைத்துக் கொண்டான்.

அவள் சற்று அசைந்து நேராக படுக்க, உணர்வு வந்தவன் அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து வந்த பின்னும் அவள் எழ வில்லை. அவள் எழுந்து விடாதவாறு உடையை மாற்றியவன் அவசரமாக வெளியே வந்து விட்டான்.

அவனது அன்னை சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க அங்கே சென்றான்.

“கண்ணா எழுந்திட்டியா?”, என்று கேட்ட தாயின் கண்கள் மகனை அளவிட்டது. அவள் எதிர்பார்த்த பூரிப்பு அவன் முகத்தில் இல்லை என்பது புரிந்தது. ஆனால் அதைக் கேட்க வில்லை.

“ஆமா மாம் எப்பவும் எந்திரிக்கிற நேரத்துக்கு விழிப்பு வந்துருச்சு. மாலினி இன்னும் எழுந்துக்கலை”

“பரவால்ல டா. அவளுக்கு எப்ப தோணுதோ அப்ப எழுந்துக்கட்டும். சரி உனக்கு காபி தரவா?”

“சரி மாம், தாங்க. நான் நியூஸ் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் அவனுக்கு ஒரு டம்ப்ளர் காபியைக் கொடுத்து விட்டு அவன் அருகே அமர்ந்தார் சாரதா. ஒரு மிடறு விழுங்கியவன் அப்போது தான் நினைவு வந்தவனாக “மாம்”, என்று அழைத்தான்.

“சொல்லுப்பா”

“மீனா வீட்ல பேசுனீங்களா?”

“பேசுனேன் டா”

“என்ன மா சொன்னாங்க?”

“ராகவன் கிட்ட தான் பேசினேன். முதல்ல அவருக்கு அதிர்ச்சி தான். அப்புறம் நடந்ததைச் சொன்னேன். ஆனா தப்பித் தவறி கூட நீ மாலினியை விரும்புனதைச் சொல்லலை. அருண் ஏமாத்தி அவ கல்யாணம் நின்னு நீ அவளைக் கட்டிக்கிட்டதா தான் சொன்னேன்”

“ஏன் மா?”

“சில நேரம் உண்மையை மறைக்கிறதும் நல்லது தான் பா. அவங்க மனசும் கொஞ்சம் அமைதி அடையனும்ல?”

“என்ன சொன்னார் மா?”

“தம்பிக்கு பெரிய மனசு. எங்க பொண்ணுக்கு தான் கொடுத்து வைக்கலைன்னு சொன்னார். ஆனா….”

“ஆனா, என்ன மா?”

“மீனா புரிஞ்சிக்கிற பொண்ணு தான். ஆனா பாவம் அவ. அவளுக்கும் வலிக்கும்”

“அதான் எனக்கும் கஷ்டமா இருக்கு மா”

“நடக்குறது தான் பா நடக்கும். எல்லாமே நல்லதுக்கு தான். ஒரு வேளை அவளை மட்டும் விரும்புற நல்லவன் அவ வாழ்க்கைல வரலாம் தானே?”

“கண்டிப்பா மா. கண்டிப்பா அவ நல்லா இருப்பா. அவ ஏதாவது உதவி கேட்டா செய்யணும்”

“நிச்சயம் ஏதாவது செய்யனும் டா. என்னனு யோசிப்போம். சரி சரி அமைதியா இரு. மருமக வரா”, என்று சொன்னதும் அவனும் அமைதியாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

திடீரென்று பதறி அடித்து எழுந்த மாலினி ஒரு நொடி இருக்கும் இடம் உணர்ந்து திணறி பின் அவசர அவசரமாக குளித்து முடித்து வெளியே வந்தாள். அவள் வந்ததும் சீரியசாக பேசிக் கொண்டிருந்த தாயும் மகனும் அமைதியானது அவளுக்கு வியப்பைத் தந்தது.

கூடவே அவளுக்கு எரிச்சலும் வந்தது. ஆனாலும் முகம் மாறாமல் அவர்கள் அருகே வந்தாள். சாரதா அவளைப் பார்த்து அன்புடன் புன்னகைக்க “என்னை மன்னிச்சிருங்க அத்தை. நாளைக்கு சீக்கிரம் எழுந்துறேன்”, என்றாள்.

“இதுல என்ன இருக்கு டா? நீ சீக்கிரம் எந்திச்சு என்ன பண்ணப் போற சொல்லு. உன் வீட்ல எப்படி இருப்பியோ அப்படியே இரு”, என்று சாரதா சொன்னதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“சரி வா, உனக்கு டீ தரேன். காபி பிடிக்குமா? டீ பிடிக்குமா?”, என்று கேட்டுக் கொண்டே எழுந்து செல்ல அவள் பின்னே சென்றாள் மாலினி. தப்பித் தவறி கூட அவள் செழியனைப் பார்க்க வில்லை.

காலை உணவு உண்ணும் போது மறுவீடு பற்றிய பேச்சு வார்த்தை வந்தது.

“உங்க வீட்ல என்ன சொன்னாங்க மா?”, என்று கேட்டார் சாரதா.

“கொஞ்ச நேரம் கழிச்சு அப்பா கூப்பிட வறேன்னு சொன்னாங்க அத்தை”

“அதெல்லாம் வேண்டாம் மா. அப்பாவை வர வேண்டாம்னு சொல்லிரு”, என்று அவர் சொன்னதும் மாலினிக்கு திக்கென்று இருந்தது. “என்ன இப்படிச் சொல்றாங்க? நான் என் வீட்டுக்கு போகக் கூடாதா? என் அப்பாவும் என்னைப் பாக்க வரக் கூடாதா?”, என்று யோசித்தாள் மாலினி.

“இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க ரெண்டு பேரும் கிளம்பி கார்ல அங்க போகப் போறீங்க? இதுக்கு எதுக்கு அவரை வீணா அலைய வைக்கணும்?”, என்று சாரதா கேட்டதும் தான் நிம்மதியானாள்.

“அங்க நாலஞ்சு நாள் இருங்க சரியா? அதுக்கப்புறம் கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வாங்க”, என்று சாரதா சொல்ல இருவரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.

பின் அவளைக் கிளம்பச் சொல்லி விட்டு அவன் டி‌வி பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து “கிளம்பலாமா?”, என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்த செழியன் அவள் அழகில் சற்று அசந்து தான் போனான்.

அரக்கு நிறத்தில் இருந்த அந்த சேலை அவளது சந்தன மேனியை சற்று தூக்கி காட்டியது. கழுத்தில் அரக்கு கலரில் கல் வைத்த அட்டிகையும் மஞ்சள் தாலியும் அவளுக்கு பொலிவைக் கொடுத்தது.

நெற்றியில் பொட்டு, வகிட்டில் குங்குமம், அளவான நகைகள், மல்லிகைச் சரம் என சாரதா சொன்ன படி அழகாக தயாராகி இருந்தவளை ரசித்த படியே இருந்தான்.

அவன் பார்வையில் வெட்கம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு “என்ன லுக்கு? போகலாமா?”, என்று கேட்டாள் மாலினி.

“இருந்தாலும் நீ என்னை இவ்வளவு டார்ச்சல் செய்யக் கூடாது?”, என்று சலிப்புடன் சொன்னான்.

“யாரு நானா? நான் என்ன செஞ்சேன்? நீங்க தான் கல்யாணம் பண்ணி என்னை டார்ச்சல் பண்ணுறீங்க?”

“நான் அதைச் சொல்லலை”

“வேற என்ன?”

“இவ்வளவு அழகா இருக்குறது டார்ச்சல் இல்லையா?”

“வாட்?”, என்று கேட்டாலும் அவள் மனதில் சிறு மெல்லிய மலைச்சாரல்.

“யெஸ் பேபி, நீ ரொம்ப அழகு”

“என்ன இப்படி எல்லாம் பேசி என்னை மயக்கப் பாக்குறீங்களா?”

“ஆமா ஆமா நீ மயங்கிட்டாலும், நீ தான் ரவுடியாச்சே? நான் ஒண்ணும் சொல்லலை மா. ஆளை விடு”

“அது. அந்த பயம் இருக்கட்டும். சரி, வாங்க போகலாம்”, என்று முன்னே நடந்தாள்.

“மாலினி ஒரு நிமிஷம்”

“என்ன?”

“உங்க வீட்ல ஒரு நாலு நாள் இருந்துட்டு, அப்புறம் ஒரு ரெண்டு நாள் ஊட்டி போயிட்டு வரலாமா? அம்மா கேட்டாங்கன்னு தான். ஊட்டில தெரிஞ்சவங்க வீடு இருக்கு. எல்லா ஏற்பாடும் அவங்க பண்ணிருவாங்க. போகலாமா? நீ சரின்னு மட்டும் சொல்லு. எல்லாம் நான் பாத்துக்குறேன்”

“பிளான் எல்லாம் சூப்பரா இருக்கு”

“நினைச்சிட்டா அதை செஞ்சிரனும்ல? அதான்”

“நீங்க நினைச்சா எதையும் செய்வீங்கன்னு தான் எனக்குத் தெரியுமே?”

“வாட் யு மீன்?”

“உங்களுக்கு நான் கிடைக்கலைன்னு என் கல்யாணத்தை நிறுத்தி அருணை விரட்டி விட்டது உங்க பிளான் தானே?”

“நீ என்னை நம்பவே மாட்டியா?”

“ஓ நம்புவேனே. நீங்க கெட்டவன்னு நான் எப்பவுமே நம்புவேன்”

“எரிச்சலா இருக்கு. பேசாம இரு”

“நான் அமைதியா தான் இருந்தேன், நீங்க தான் என் கிட்ட கேள்வி கேட்டீங்க”

“ஏன் டி இப்படி பண்ணுற? என் பக்கமும் நியாயம் இருக்கும்னு நீ ஏன் யோசிக்க மாட்டிக்க? நான் உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டது மட்டும் தான் என் தப்பு. வேற எதுவுமே நான் பண்ணலை”

“எங்க அப்பா கிட்ட அருணைப் பத்தி தப்பா சொல்லலையா?”

“அது உண்மை தானே?”

“யாருக்கு தெரியும்? அவன் வந்து சொன்னா தான் தெரியும்”

“நான் நியாயமா தான் நடந்துக்குறேன் மாலினி. பிளீஸ் புரிஞ்சிகோ”

Advertisement