Advertisement

அத்தியாயம் 16 

மூச்சுப் பேச்சில்லாமல்

தவிக்கும் எந்தன் காதலுக்கு

உயிர்க் கொடு பெண்ணே!!!

அவள் கத்தினாலும் அவன் அமைதியாக இருந்தது அவளை அதிகம் பாதித்தது. அவன் எதிர்த்து சண்டை போட்டால் அவள் நிச்சயம் பதிலுக்கு பதில் பேசியிருப்பாள். அவன் அமைதியாக இருப்பது அவளுக்கு இயலாமையைச் தந்தது. அதனால் தன்னை நினைத்தே அவளுக்கு அழுகை வந்தது.

அழுது கொண்டே “எனக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கை இது தான்னு நான் ஏத்துகிட்டேன். நீங்க எவ்வளவு பெரிய ஆளா வேணா இருங்க. நினைச்சதை சாதிச்ச இறுமாப்புல கூட இருங்க. ஆனா எதுக்காகவும் என்னை தொந்தரவு செய்யாதீங்க. தப்பி தவறி கூட உங்க கை என் மேல படக் கூடாது. அப்படி பட்டுச்சுன்னா உங்களை கொன்னுருவேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன்”, என்றாள்.

“மாலினி”

“நான் உண்மையா தான் சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் அன்னைக்கே நான் செத்துட்டேன். இப்ப அம்மா அப்பாக்காக தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தற்கொலை கோழைத் தானம் தான். ஆனா பிடிக்காத வாழ்க்கையை வாழ்றதுக்கு அது மேல் தானே? நீங்க என் கிட்ட வந்தா நான் கண்டிப்பா அதைத் தான் செய்யணும். அதுக்கு மேல முடிவை நீங்களே எடுங்க”, என்று அவனிடமே சொன்னாள்.

இதற்கு மேல் அவன் என்ன பேசினாலும் அது அவள் மனதில் பதியாது என்று செழியனுக்கு நன்கு புரிந்தது. அவனும் தவறு செய்திருக்கிறானே? அதை அவள் மன்னித்து, அந்த அருணைப் பற்றிய உண்மை தெரிந்து அவளே தன்னை ஏற்றுக் கொள்ளும் நாள் வரை காத்திருக்க தான் வேண்டும் என்று எண்ணினான்.

“நீ சொன்ன வார்த்தைகளை மட்டும் இல்லை மாலினி. உன் மனசுல ஒழிஞ்சிருக்குற உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். நீ என்னைப் பத்தி நினைச்சிட்டு இருக்குற எல்லாமே பொய் தான். ஆனா அதை என்னால நிரூபிக்க முடியாது. ஏன்னா என் மேல நீ வச்சிருந்த நம்பிக்கையை, நல்ல எண்ணத்தை நானே உடைச்சிட்டேன். அதை அவ்வளவு ஈஸியா என்னால உருவாக்க முடியாது. அது தானா வரணும். என் தப்பை நீ ஒரு நாள் மன்னிப்ப. என் காதலை நீ புரிஞ்சிப்ப. அது வரைக்கும் நான் எந்த விசயத்துலயும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நீ உங்க வீட்ல இருந்த மாதிரி சுதந்திரமா இங்க இருக்கலாம். என்னோட வேண்டுதல் ஒண்ணே ஒண்ணு தான். என்னோட அம்மாவோட மனசு கோணாம நடந்துக்கோ. நம்ம பிரச்சனை நம்மளோட போகட்டும். இப்ப நிம்மதியா தூங்கு”, என்று சொன்னவன் அந்த அறைக்குள்ளே இருந்த ஆபீஸ் அறைக்குள் சென்று விட்டான்.

அவன் சென்றதும் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள் மாலினி. அவனுடைய எளிமையான விலகல் கூட அவளுக்கு வியப்பைத் தந்தது. “என்ன சொன்னதும் சரின்னுட்டான்? ஒரு வேளை நடிக்கிறானோ?”, என்று எண்ணினாள்.

அறைக்குள் சென்று கதவை அடைத்த செழியன் அந்த ஒற்றைக் கட்டிலில் படுத்தான். அவன் மனம் முழுவதும் நிம்மதி இல்லாமல் தவித்தது. நிதர்சனம் என்னவென்று புரியாமல் பேசும் மனைவியை நினைத்து வருந்துவதா? இல்லை, நான் தான் வருங்கால கணவன் என்ற எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் மீனாவை நினைத்து வருந்துவதா என்று தெரிய வில்லை. அப்போது தான் மீனா வீட்டுக்கு இன்னும் தகவல் சொல்ல வில்லை என்பதே புரிந்தது. உடனடியாக அம்மாவை அழைத்தான்.

“கண்ணா என்ன டா இந்த நேரத்துல?”, என்று கேட்டார் சாரதா.

“அம்மா…. மீனா வீட்ல….”

“என்ன பேசுற நீ? பக்கத்துல மாலினி இல்லையா?”

“அது அது வந்து.. அவ பாத்ரூம்ல இருக்கா மா”

“அப்படின்னா சரி. அப்புறம் மீனா விஷயம் நான் பாத்துக்குறேன். நான் தானே பெண் கேட்டேன்? நானே அதை பேசி சரி செஞ்சிருவேன். நீ இதைப் பத்தி யோசிக்க கூடாது”

“இருந்தாலும் தப்பு பண்ணின மாதிரி இருக்கு மா”

“காதல்ல தப்பு சரின்னு எதுவும் இல்லை டா. எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இரு. மீனா விஷயம் மாலினிக்கு தெரிய வேண்டாம். ஏற்கனவே பிள்ளை முகம் சரியாவே இல்லை. அவளைக் கொஞ்சம் பாத்துக்கோ. நான் வைக்கிறேன்”

“சரி மா”, என்று சொல்லி விட்டு வைத்தவனுக்கு மீனாவின் நினைவு சற்று உறுத்தினாலும் அவன் மனதை இப்போது மாலினியின் நினைவுகள் ஆக்ரமித்தது. “கண்டிப்பா நீ ஒரு நாள் என் காதலைப் புரிஞ்சுக்குவ டி”, என்று எண்ணிக் கொண்டு அதிக களைப்பின் காரணமாக தூங்கி விட்டான். மாலினியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

சாரதா தான் உறக்கம் வராமல் விழித்திருந்தார். அவரும் மீனாவின் தந்தைக்கு பல முறை அழைத்து விட்டார். அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

சரி படுக்கலாம் என்று அவர் எண்ணும் போதே போன் அடித்தது. மீனாவின் தந்தை தான் அழைத்திருந்தார்.

“வணக்கம் மா, நான் ராகவன் பேசுறேன். மன்னிச்சிருங்க. ஊருக்கு போன இடத்துல பேச முடியாம போச்சு. இப்ப தான் ஊருக்கு வந்தேன். நிச்சயதார்த்தம் பத்தி பேச கால் பண்ணுனீங்களா?”, என்று கேட்டார் அவர்.

“இல்லை…. அது வந்து…. முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும் சார். இங்க நிலைமை வேற மாதிரி அமைஞ்சிருச்சு”

“என்ன ஆச்சு சொல்லுங்க? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?”

“அவனுக்கு ஒண்ணும் இல்லை. எங்க வீட்டுக்காரரோட தம்பி மகனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. ஆனா கடைசி நேரத்துல அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குறது தெரிஞ்சு கல்யாணம் நின்னுருச்சு. அந்த பொண்ணை செழியன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்”, என்று வார்த்தைகளைக் கோர்த்து சொன்னார் சாரதா.

ராகவனிடம் எல்லா உண்மையையும் சொன்னால் அவர் எப்படி வேண்டும் என்றாலும் நடந்து கொள்ளலாம். அதனால் பாதி விஷயங்களை மறைத்து சொன்னார் சாரதா.

“என்ன மா சொல்றீங்க?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டார் ராகவன்.

“உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது சார். மீனா ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். ஆனா மாலினி, பத்திரிக்கை அடிச்ச பிறகு கல்யாணம் நின்னா அவ எதிர்காலம் என்ன ஆகும்? அதான் நானும் இதுக்கு சம்மதிச்சிட்டேன்”

“சரி விடுங்க மா. யாருக்கு யாருன்னு கடவுள் எழுதி வச்சது தானே நடக்கும்? தம்பிக்கு பெரிய மனசு. எங்க பொண்ணுக்கு தான் கொடுத்து வைக்கலை. நாமளும் நிச்சயம் எல்லாம் பண்ணலையே? சும்மா பேசி தானே வச்சோம்? எங்களை நினைச்சு வருத்தப் படாதீங்க? நல்ல காரியம் பண்ணினதை நினைச்சு சந்தோஷப் படுங்க. நான் வீட்ல எல்லார்க் கிட்டயும் சொல்லிக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டார்.

அவர் போனை வைத்ததும் அப்பாடி என்ற உணர்வு சாரதாவுக்கு வந்தாலும் இந்த நல்ல மனிதரை இப்படி ஏமாற்றுகிறோமே என்ற எண்ணமும் வந்தது. பின் அவர் சொன்ன விதியை நினைத்தவர் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு படுக்கச் சென்றார்.

அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் அழகாக விடிந்தது. முதலில் கண் விழித்தது செழியன் தான். குளிப்பதற்கு ஆபீஸ் அறையில் இருந்து வெளியில் தான் வர வேண்டும் என்பதால் அந்த சின்ன அறையைத் திறந்தான். அங்கே வெளியே அவனது கட்டிலில் உடலைக் குறுக்கி நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவனது மனைவி.

அவளையே ஆழமாக பார்த்தான். சிறு குழந்தை போல தூங்கும் அவளை பார்த்த படி அப்படியே நின்று விட்டான். நிலவு போல மின்னும் அவள் முகம் அவனைக் கவர்ந்தது. அவனுக்குள் புதைந்திருந்த காதல் சற்று மேல் எழும்பி அவனை இம்சித்தது.

Advertisement