Advertisement

அப்போது வசந்தா அந்த அறைக்குள் வந்தாள். அம்மாவைக் கண்டதும் ஏனென்றே தெரியாமல் அழுகை வந்தது. இது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அவள் கண்ணில் இருந்து கொட்டியது. 

அவள் கண்ணீரைக் கண்டு மனம் வருந்தினாலும் அதைப் பற்றி பேசாமல் “தூங்குறதுக்கு முன்னாடி பேசலாம்னு வந்தேன் டா. டிரஸ் மாத்திகோ மாலு. அப்புறம் தைரியமா இருக்கணும். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. கோழை மாதிரி ஒடுங்கிப் போகக் கூடாது. இப்ப என்னால ரொம்ப நேரம் பேச முடியாது. நாளைக்கு மறுவீட்டுக்கு நம்ம வீட்டுக்கு வரும் போது எல்லாம் பேசலாம்”, என்று சொல்லி விட்டு அவள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டாள். 

“நல்ல வாழ்க்கையாம் நல்ல வாழ்க்கை. எது நல்ல வாழ்க்கை. இவன் கூட வாழுறதா எனக்கு நல்ல வாழ்க்கை? தினக் கூலியா இருந்தாலும் நல்லவனா இருந்திருந்தா அது நல்ல வாழ்க்கை. ஆனா எனக்கு கிடைச்சிருக்குறது?”, என்று செழியனை எண்ணி மீண்டும் எரிச்சல் வந்தது. 

அவசர அவசரமாக சேலையை கழட்டி எறிந்தவள் அப்போது தான் தலை அலங்காரத்தை கவனித்தாள். கட்டாயம் அலங்காரம் செய்தவரின் உதவி இல்லாமல் அதை கலைக்க முடியாது என்று புரிந்தது. சாதாரண உடைக்கு மாறி தன்னுடைய பேகில் இருந்து போனை எடுத்து அன்னையை அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளே வந்த அழகு நிலையப் பெண் அவளது அலங்காரத்தை மட்டும் அல்லாமல் அவளது மேக்கப்பையும் கலைத்து விட்டே சென்றாள். 

அப்பாடா என்று நிம்மதியுடன் பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு அறைக்குள் வந்து அந்த கட்டிலில் அமர்ந்தாள். அங்கே இரண்டு தலையணை போடப் பட்டிருக்கிறது. 

அவன் தலை வைத்துப் படுக்கும் தலையணை எதுன்னு தெரியலையே என்று எண்ணிக் கொண்டு ஒரு தலையணை எடுத்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டாள். 

அன்று மாலை வரவேற்பும் நல்ல படியாக நடந்தது. அன்று இரவே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 

அலங்கரிக்கப் பட்ட அறைக்குள் அனுப்பப் பட்டாள் மாலினி. அனைவரின் மீதும் கோபம் இருந்தாலும் அவளுக்கு சற்று படபடப்பாக இருந்தது. இத்தனை நேரமும் அவன் தனியாக சிக்கினால் அவனை வார்த்தை என்னும் வாள் கொண்டு விலாச வேண்டும் என்ற வெறி இருந்தது உண்மை தான். ஆனால் இந்த நிமிடம் அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லை என்பது மட்டும் நிஜம். காற்றில் கரைந்து பறந்து செல்லும் கற்பூரம் போல அவளது தைரியம் அவளை விட்டு விடை பெற்றுச் சென்றது. “அன்னைக்கு மாதிரி நடந்துக்கிட்டா என்ன செய்யுறது?”, என்று பயந்து போனாள். 

கதவு அருகிலே தலை குனிந்த படி அமைதியாக நின்றாள். அவள் கால்கள் அதற்கு மேல் செல்ல முடியாமல் தடுமாறின. கையில் இருந்த பால் டம்ப்லர் வேறு கனமாக இருப்பது போல இருந்தது. கட்டிலில் ஏற்கனவே கலவரத்துடன் அமர்ந்திருந்த செழியன் அவளது அமைதியைக் கண்டு திகைப்புடன் எழுந்து நின்றான். பின் அவளது அமைதி அவனுக்கு தைரியம் தர அவளை நோக்கி நடந்து சென்றான். 

அவனிடம் அசைவை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆறடிக்கும் குறையாத உயரம், மாநிறம், அடர்ந்தியான தலை முடி, அழுத்தமான அதே நேரம் அழகான உதடுகள், ஆனால் அவன் முகத்தில் எந்த உணர்வுகளுமின்றி இருந்தது. 

“என்ன புதுசா பாக்குற மாதிரி பாக்குற? ஏற்கனவே நாம பாத்த முதல் நாளே தான் என்னை அளவெடுத்துட்டியே?”, என்று கேட்டவனின் உதடுகள் சிரித்தது. 

…..

“என்ன இவ்வளவு அமைதி? புயலுக்கு பின்னாடி தானே அமைதி இருக்கும். இங்க புயலே இன்னும் ஆரம்பிக்கலையே?”

“என்ன நக்கலா?”, என்று கடுப்புடன் கேட்டாள். 

“அப்பா, இப்ப தான் பழைய மாலினி திரும்பி வரா”

“ப்ச், இப்ப எதுக்கு என் கிட்ட வம்பு இழுக்குறீங்க? நானே செம கடுப்புல இருக்கேன். பேசாம போயிருங்க”

“அது எப்படி பேசாம போக முடியும்?”

“உங்களுக்கு இப்ப என்ன தான் வேணும்?”

“இந்த அலங்காரத்துல இருந்து இந்த கேள்வியைக் கேட்டால் என்ன என்னமோ கேக்கணும்னு தான் தோணுது”

“என்னது? அடி பிச்சுறுவேன்”

“ரவுடி”

“பிளீஸ், உங்க கிட்ட வாக்குவாதம் செய்ய என் மனசுலயும் என் உடம்புலயும் சக்தி இல்லை. என்னை விட்டுருங்க”

“சாரி, என்னால உன் மனசை புரிஞ்சிக்க முடியுது”

“என்ன புரியுது? ஆன் என்ன புரியுது? அப்படி புரிஞ்சிருந்தா நீங்க இப்படி பண்ணிருப்பீங்களா? உங்க கிட்ட நான் டேரெக்ட்டா என் மனசை சொல்லிட்டேன் தானே? அப்புறம் எதுக்கு இப்படி என்னைப் பழி வாங்கினீங்க?”

“அருண் கூட உன் கல்யாணம் நடந்தா அது சரியா இருக்காது மாலினி”

“அது என் பிரச்சனை. என்ன நடந்தாலும் நான் பேஸ் பண்ணிருந்துருப்பேன்”

“அவன் கெட்டவன் மாலினி”

“அவன் கெட்டவனா இருந்தா என் வாழ்க்கை தானே கெட்டுப் போயிருக்கும். சரி ஒரு வேளை அவன் நிஜமாவே கெட்டவனா இருந்திருந்தா கல்யாணத்தை நிறுத்த மட்டும் செஞ்சிருக்க வேண்டியது தானே? நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணனும்? அவனைச் சொல்ற நீங்க கெட்டவங்க இல்லையா? அவனாவது என்னை ஏமாத்த தான் பாத்தான். ஆனா நீங்க… நம்பி வந்த பொண்ணை….. சே.. எனக்கு அதை நினைக்க கூட பிடிக்கலை. சொல்லுங்க நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணுனீங்க?”

“அது உங்க அப்பா”

“பொய் மேல பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு என்னைப் பழி வாங்கணும். நீங்க தான் நினைச்சதை அடையாம விட மாட்டீங்களே. நான் உங்களை வேண்டாம்னு சொன்னதும் உங்களுக்கு உள்ளுக்குள்ள எரிஞ்சிருக்கும். அதான் அருண் பத்தி தப்பு தப்பா சொல்லி நீங்க நினைச்சதை சாதிக்க நினைச்சீங்க? அது நடக்கலைன்னதும் என்னை தனியா வர வச்சு… அந்த அருணையும் ஊரை விட்டே விரட்டிட்டீங்கல்ல? விரட்டுனீங்களா? இல்லை கொன்னுட்டீங்களா?”, என்று அவள் கேட்டதும் அவளுக்கு எப்படி உண்மையைப் புரிய வைக்க என்று அவனுக்கு கவலையாக இருந்தது. 

“இங்க பாரு மாலினி, இதுல உன்னை பழி வாங்கவோ உன் வாழ்க்கையை கெடுக்கவோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான், நான் எல்லாம் செஞ்சேன்”

“அதைச் செய்ய நீங்க யாரு? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்க வேலையைப் பாத்துட்டு போக வேண்டியது தானே?”, என்று நிமிர்வுடனே கேட்டாள். 

“என்னை நம்ப மாட்ட அப்படி தானே?”

“கண்டிப்பா நம்ப மாட்டேன்”

“உண்மை ஒரு நாள் உனக்கு புரியும் மாலினி. என் காதலும், என் மனசும் உனக்கு புரியும்”

“ஆஹா, உண்மைன்னு நீங்க சொல்றது எனக்கு ஏற்கனவே தெரியும். நீங்க ஒரு கேவலமானவர். உங்க கூட ஒரு நாளும் என்னால வாழ முடியாது. எங்க அம்மா அப்பா சொன்னதுனால தானே நீங்க என்னைக் கல்யாணம் பண்ணினதா சொன்னீங்க. அப்படின்னா அதே உண்மையா இருக்கட்டும். அம்மா அப்பாக்காக தான் நான் உங்க கூட இருக்க போறேன். ஆனா என் மனசு மாறவே மாறாது. உங்க வக்கிரப் புத்தியால நீங்க என்னை கல்யாணம் பண்ணிருந்தாலும் இந்த ஜென்மத்துல என்னை உங்களுக்கு தரவே மாட்டேன். நான் அருணுக்கு கிடைக்க கூடாதுன்னு நினைச்சு தானே இத்தனை மாஸ்டர் பிளான் போட்டீங்க? உங்களுக்கும் நான் கிடைக்கவே மாட்டேன். நீங்க ஓடிப் போனதா சொன்ன அருண் ஒரு நாள் என் கண் முன்னாடி வரட்டும். அப்ப தெரியும் உங்க வண்டவாளம் தண்டவாளம் எல்லாம். அன்னைக்கு உங்களை விட்டு ஒரெடியா போய்ருவேன்”, என்று பேசிக் கொண்டே போனாள் மாலினி. 

அமைதியாக நின்றான் செழியன். ஆனால் அவன் மனதுக்குள் பல கேள்விகள். அருண் இவள் கண் முன் வந்தால் அவனைப் பற்றிய உண்மை தெரியாமல் அவனுடன் சென்று விடுவாளோ என்றும் கேள்வி எழுந்தது. அந்த கேள்வியை நினைத்தாலே அவனுக்கு அருவருப்பாகவும் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போலவும் இருந்தது. 

அதை வெளிப்படையாக கேட்டால் இப்போதிருக்கும் கோபத்தில் அவள் ஆம் என்று கூட சொல்வாள் என்பதால் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியை அவள் தனக்கு சாதமாக எடுத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தாள் மாலினி. 

தொடரும்…..

Advertisement