Advertisement

அடுத்த நாளே மகனை அழைத்து திருமணத்துக்கு அரை மனதாக சம்மதம் சொன்னார். அவன் முகம் அப்படியே மலர்ந்து போனது. 

“செழியா எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணுறோமோன்னு தோணுது டா. ஒரு பக்கம் மீனா வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு. இன்னொரு பக்கம் மாலினி உன் முகத்தைக் கூட பாக்க விரும்பலை. அவ எப்படி உன் கூட வாழ்வா?”, என்று குழப்பத்துடன் தான் கேட்டார் சாரதா. 

“அவ மனசை நான் மாத்துவேன் மா. நான் செஞ்ச தப்புக்கு அவ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குவேன். மீனாவையும் கண்வின்ஸ் பண்ணிருவேன் மா. அவ புரிஞ்சிப்பா”

“சரி டா, மாலினி வீட்ல பேசணும்”

“நம்பர் இருக்கு மா”, என்று சொல்லி கனகராஜ்க்கு அழைத்தான். அதை யாரோ என்று எடுத்தவர் செழியன் என்றதும் சந்தோஷப் பட்டார்.

அதுவும் சாரதா அவரிடம் திருமணத்துக்கு சம்மதம் சொல்ல அவர் சந்தோசத்துக்கு அளவே இல்லை. 

“ரொம்ப நன்றிங்க மா”

“நன்றி எல்லாம் வேண்டாம். நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம். ஏற்கனவே மாலினிக்கு குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணத்தை வச்சிக்கலாம்”, என்று சாரதா சொன்னதும் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது. 

அதன் பிறகு வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. முதலில் பாலாவிடம் சொல்லி விட்டு தான் மாலினியிடம் சொல்ல நினைத்தார்கள். அதன் படி அன்று இரவு உணவு முடிந்ததும் “பாப்பா, அப்பா உன் கிட்ட ஏதோ பேசனுமாம்”, என்றாள் வசந்தா. 

“என்னப்பா சொல்லுங்க”, என்றாள் மாலினி. அவள் இப்போது சாதாரணமாக இருந்தாள். அவள் விரும்பிய படி திருமணம் நின்றது அவளுக்கு சந்தோஷம் தான். அவ்வப்போது செழியன் மீது இருந்த கோபம் மட்டும் அவளை எரிச்சலடைய செய்தது. மற்ற படி பழைய மாலினியாக தான் இருந்தாள். 

“குறிச்ச தேதியில பண்ண முடியலை. ஆனா அடுத்த வாரம் உனக்கு கல்யாணம் பண்ணப் போறோம் டா”, என்றதும் அதிர்ந்து போனாள். 

“கடவுளே, என்ன இது? உடனே கல்யாணமா?”, என்று எண்ணிக் கொண்டு “என்னப்பா சொல்றீங்க?”, என்று கேட்டாள்.

“ஆமா மா, பத்திரிக்கை எல்லாம் அடிக்க கொடுத்தாச்சு”, என்றதும் அவரையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மாப்பிள்ளை உனக்கு நல்லா தெரிஞ்சவர் தான் மா. செழியன் தான்”

“என்ன?”

“ஆமா மா, அவங்க வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்க. எனக்கும் உன் அம்மாவுக்கும் இப்ப தான் நிம்மதியா இருக்கு. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க முன்னாடி அசிங்கப் படப் போறோமோன்னு நினைச்சோம். உனக்கு சம்மதம் தானே டா?”

“எல்லாம் முடிச்சிட்டு சம்மதம் கேக்குறாங்க பாரேன். இந்த செழியன் நினைச்ச மாதிரியே காயை நகர்த்திட்டான். கல்யாணத்தை நிறுத்தப் பாத்து முடியாம, அருணை விரட்டி விட்டு, கல்யாணத்தை நிறுத்தி, இப்ப எனக்கு வாழ்க்கை கொடுக்குற மாதிரி அவன் நினைச்சதை சாதிச்சிட்டான்”, என்று உள்ளுக்குள் பொறுமியவள்  “உங்க இஷ்டம் பா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள். 

அதற்கு மேல் வேலைகள் மளமளவென்று நடந்தது. எல்லா செலவுகளையும் சாரதாவே ஏற்றுக் கொண்டார். மீனாவுக்கென்று வாங்கிய நகை, புடவை அனைத்தையும் அப்படியே லாக்கரில் வைத்து பூட்டி விட்டு மாலினிக்கென்று வாங்க ஆரம்பித்தார். 

செழியனும் சந்தோசமாகவே இருந்தான். பத்திரிக்கை அடிக்கப் பட்டு வந்து விட எல்லாருக்கும் கொடுத்தார்கள். மாப்பிள்ளை மாறியதை பற்றி சிலர் கேள்வி எழுப்ப அருணுக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பதைச் சொன்னதும் இந்த முடிவுக்கு சந்தோஷப் பட்டார்கள். 

மாலினி மட்டும் செழியன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டாள். ஆனால் அதை மற்ற யாரிடமும் காட்ட வில்லை. தன்னைக் காண வரும் சாரதாவிடம் கூட காட்ட வில்லை. அந்தா இந்தா என்று ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. 

மணமக்கள் அலங்காரத்தில் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தார்கள். அழகு தேவதையாக இருந்த மாலினியைப் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவே இல்லை. அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. 

கனகராஜ் மற்றும் வசந்தா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பாலா கூட செழியனிடம் நன்கு ஒட்டிக் கொண்டான். மாலினி மனநிலையைத் தவிர மற்ற எல்லாம் நல்ல படியாக நடந்தது. 

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் சொன்னதும் தன்னுடைய கையில் இருந்த தாலியை மாலினி கழுத்தருகே கொண்டு சென்றான் செழியன். 

அப்போது அவன் பார்வை தன்னாலே அவள் முகத்தில் நிலைத்தது. அவள் முகத்தில் ஒரு பிடித்தமினையும் எரிச்சலும் இருந்தது. அது கட்டாயம் அவள் அணிந்திருக்கும் நகைகளை வைத்தோ, அவளது அலங்காரத்தை வைத்தோ அல்ல. நிச்சயம் அது மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் செழியனை வைத்து தான் என்று அவனுக்கே தெரிந்திருந்தது. 

திருமணப் பேச்சு ஆரம்பித்து இத்தனை நாளில் அவள் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க வில்லை. அவன் நடந்து கொண்ட முறையால் கட்டாயம் அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான் செழியன். 

ஆனாலும் அவளுடைய பாராமுகத்தை எண்ணி அவன் மனம் வேதனை கொண்டது. தனது அன்னையை நிமிர்ந்து பார்த்தான். அனைத்தும் சரியாகி விடும் என்பது போல கண்களை மூடித் திறந்தாள் அந்த தாய். 

அவளது பெற்றோர்களைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் நிம்மதியே இருந்தது. தனது மகளை நல்லவன் கையில் ஒப்படைத்த திருப்தி அவர்கள் முகத்தில் கண்டான். அது எப்போதும் அவர்கள் முகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலோடு பாலாவைப் பார்த்தான். அவனோ கதாநாயகனை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். 

அந்த சூழ்நிலையிலும் அவன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. “மாங்கல்யத்தை கையில் வச்சுண்டு என்ன யோசனை செய்றேள்? அதை அவா கழுத்துல கட்டுங்கோ”, என்று ஐயர் சொன்னதும் அவள் கழுத்தில் அதைக் கட்டினான். 

மூன்று முடிச்சையும் அவனே போட்டு விட்டு நிமிர்ந்த போது அவன் மனதில் வாழ்வை நினைத்து கவலை மேகம் சூழ்ந்தது. மற்றவர்களுக்காக அதை மறைத்துக் கொண்டான். ஆனாலும் அவள் மனதை தன்னால் மாற்ற முடியும் என்றும் பிடித்தவளை திருமணம் செய்த திருப்தியும் அவனுக்கு வந்தது. 

அவளோ “போச்சு, எல்லாம் போச்சு. என் வாழ்க்கையே போச்சு. எல்லாம் தெரிஞ்சு என்னால எப்படி இவன் கூட வாழ முடியும்? இவன் ஏன் நல்லவனா இல்லாம போனான்?”, என்ற கவலையில் இருந்தாள். 

“கடவுளே இவன் செஞ்ச தப்பு எனக்கு தெரியாமலே போயிருக்க கூடாதா? அன்னைக்கு நான் ஆஃபிஸ்க்கு போகாமலே இருந்திருக்க கூடாதா? அப்படிப் போகாம இருந்திருந்தா இந்த கல்யாணம் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை தந்திருக்கும்?”, என்று கவலை கொண்டாள். 

தன்னுடைய நினைப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரக் கண்ணால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது ஐயர் சொல் படி அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட வந்தான். படக்கென்று தலை குனிந்து கொண்டாள். அதன் பின் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். மாலை மாற்றும் போது அவள் கைகள் மட்டும் அல்ல, அவள் உடலும் சேர்ந்து நடுங்கியது. 

மண்டபத்தில் இருந்து நேராக அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு தான் சென்றார்கள். அதை வீடு என்று சொல்லி விட முடியாது. பிரமாண்டமான மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும். கண்டிப்பாக அந்த மாளிகை பல தலைமுறை பார்த்திருக்கும் என்னும் படியாக இருந்தது. 

முதலில் மணமக்களுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள். உள்ளே சென்றதும் அவளை விளக்கேற்றி வைக்க சொன்னார்கள். சொன்ன படி அனைத்தையும் செய்தவள் அவர்கள் அமரச் சொன்ன இடத்தில் அமர்ந்தாள். 

அவள் அருகில் செழியனும் அமர்ந்ததும் அவளுக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது. இப்போது அவள் அணிந்திருக்கும் சேலை நகையாலும் அலங்காரத்தாலும் கூட எரிச்சல் உண்டானது. எப்போதடா இதை எல்லாம் அவிழ்த்து எறிவோம் என்ற மனநிலையில் இருந்தாள். அப்போது பாலும் பழமும் மணமக்களுக்கு கொடுக்கப் பட்டது. 

அதை உண்டதும் “தம்பி, மாலினியை உள்ளே கூட்டிட்டு போ”, என்று சாரதா சொன்னதும் “வா”, என்ற ஒற்றைச் சொல்லோடு எழுந்து நடந்தான். அவன் பின்னே வேண்டா வெறுப்பாக சென்றாலும் அந்த கூட்டத்தில் இருந்து செல்வது அவளுக்கு நிம்மதியாகவே இருந்தது. 

“இது தான் நம்ம ரூம். உங்க அம்மா… சாரி அத்தை உன்னோட டிரஸ் எல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிட்டாங்க. அப்புறமா உன் பீரோல இதை எல்லாம் அடுக்கிரு. இப்ப ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயங்காலம் ரிசப்ஷன் இருக்கு. அது வரைக்கும் ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டு அவள் முகம் பார்த்தான். 

அவள் சரி என்றும் சொல்ல வில்லை. முடியாது என்றும் சொல்ல வில்லை. சொல்லப் போனால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. அமைதியாக பதுமை போல நின்றிருந்தாள். ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து சென்று விட்டான் செழியன். 

Advertisement