Advertisement

அத்தியாயம் 15 

நிலையில்லாத உலகில்

நிரந்தரமாக நிற்கிறது நம்

காதல் என்னும் நங்கூரம்!!!

“என்ன விஷயம் மேடம்?”, என்று கேட்டாள் மாலினி. 

“உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் மா”

“மேடம், நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேக்குறதா?”

“அப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்”, என்று சாரதா சொன்னதும் தலை குனிந்து கொண்டாள் மாலினி. “இவன் அதை எல்லாம் இவங்க கிட்ட சொல்லிட்டானா?”, என்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. கூடவே அவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பமும் வந்தது. 

“செழியன் எல்லாம் சொன்னான் மா. ஒரு பொண்ணா என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியுது. அவனை இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். நீ அவனுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு”, என்று அவர் சொன்னதும் “என்ன செழியன் இங்க வந்துருக்கானா?”, என்று எண்ணி அதிர்ந்து போனாள். 

“அவனை உள்ள கூப்பிடவா மா? அவன் உன் கிட்ட மன்னிப்பு கேக்கனுமாம்”

“வேண்டாம், வேண்டாம் மேடம்”, என்று அவசரமாக மறுத்தாள். அவனை எதிர்கொள்ளும் மனதிடம் அவளுக்கு இன்னும் வரவில்லை. 

“என் மகன் அப்படிங்குறதுனால இதைச் சொல்லலை மா. செழியன் உண்மையிலே ரொம்ப நல்லவன். இத்தனை நாள் நீ அவன் கூட இருந்திருக்க. அவன் உன் கிட்ட தப்பா நடந்துகிட்டானா? நேத்து அவன் உன் வாழ்க்கையை காப்பாத்தணும்னு இப்படி முட்டாள் தனமா நடந்துக்கிட்டான். அவனை மன்னிச்சிரு மா”

“விடுங்க மேடம். நான் எல்லாத்தையும் மறக்க நினைக்கிறேன். இந்த விஷயம் அம்மா அப்பாவுக்கு தெரிய வேண்டாம்”, என்று சொன்ன மாலினி அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தாள்.

“சரி மா, நான் கிளம்பவா?”

“மத்த நேரமா இருந்தா உங்களை வெளிய வந்து வழி அனுப்பிருப்பேன். இப்ப என்னால உங்க மகன் முகத்துல முழிக்க முடியுமான்னு தெரியலை மேடம்”

“பரவால்ல மாலினி, நீ ரெஸ்ட் எடு. நாங்க கிளம்புறோம். எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் மறந்துரு. உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அது வரை வேலைக்கு போகணும்னா என்னோட நம்பருக்கு கூப்பிடு”

“சரிங்க மேடம்”

“சரி மா வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தார் சாரதா. 

சாரதா பின்னால் மாலினி வருவாளா என்று ஆவலாக பார்த்தான் செழியன். ஆனால் அவள் வரவில்லை என்றதும் அவன் முகத்தில் ஏமாற்றம் கவிழ்ந்தது. 

வெளியே வந்த சாரதாவிடம் எப்படி திருமண விஷயம் பேச என்று கனகராஜ் மற்றும் வசந்தா இருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். 

“அப்ப நாங்க கிளம்புறோம். போகலாம் செழியா”, என்றார் சாரதா. 

அவர் அப்படிச் சொன்னதும் அவன் திருதிருவென்று விழிக்க “என்ன டா?”, என்று கேட்டார். 

“மாலினி அப்பா உங்க கிட்ட ஏதோ கேக்கனுமாம்”, என்று அவன் சொன்னதும் அவரைத் திரும்பிப் பார்த்தார். அவன் அப்படிச் சொன்னதிலே அவன் மனது மாலினி மீது இருக்கிறது என்று புரிந்தது கனகராஜ் மற்றும் வசந்தாவுக்கு. அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அது வந்து மா…. மாலினியை உங்க பையனுக்கு….”, என்று ஆரம்பித்தார் கனகராஜ். 

அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட சாரதா மகன் முகத்தைப் பார்த்தார். அவன் முகமும் ஆவலைக் காட்ட அவனை வெளிப்படையாகவே முறைத்தார். பின் “அது சரி வராதுங்க. என் பையனுக்கு மீனான்னு ஒரு பொண்ணை முடிவு பண்ணியாச்சு. இப்ப அவங்க கிட்ட மறுத்து பேச முடியாது. மாலினி ரொம்ப தங்கமான பொண்ணு. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும். நாங்க கிளம்புறோம். செழியா வா”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். 

வசந்தா மற்றும் கனகராஜ் இருவரும் செழியனையே ஆவலாக பார்க்க “எனக்கு மாலினியை மட்டும் தான் பிடிக்கும். அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு தான் நான் அந்த பொண்ணுக்கு சரின்னு சொன்னேன். அதுவும் அம்மாக்காக தான். நான் அம்மா கிட்ட பேசுறேன். என்னால மனசுல மாலினியை வச்சிட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ண முடியாது. அம்மாவை நான் சம்மதிக்க வைக்கிறேன். அப்புறம் மீனா பத்தி எதுவும் மாலினிக்கு தெரிய வேண்டாம். இப்ப நான் கிளம்புறேன். அம்மாவே உங்க கிட்ட பேசுவாங்க மாமா. வரேன். வரேன் அத்தை”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

அவன் பேசியதைக் கேட்டு வசந்தா மற்றும் கனகராஜ் முகம் மலர்ந்தது என்றால் அவன் சொன்ன அத்தை, மாமா என்பதைக் கேட்டு அவர்களின் அகமும் மலர்ந்தது. ஏதோ பெண்ணுக்கு திருமணம் முடிந்தது போல சந்தோஷப் பட்டு அவனுக்கு விடை கொடுத்தார்கள். 

வீட்டுக்குச் சென்றதும் “அது உன் வேலையா டா?”, என்று கேட்டார் சாரதா.

“எது மா?”, என்று நல்ல பிள்ளையாக கேட்டான் செழியன். 

“மாலினியை கல்யாணம் பண்ணப் போறேன்னு அவங்க கிட்ட சொன்னியா?”

“அதுல தப்பு என்னமா இருக்கு?”

“செழியா”, என்று அவர் கத்த “மாம் பிளீஸ், நான் சொல்றதைக் கேளுங்க”, என்ற படி அவர் அருகில் வந்தவன் அவருடைய கையைப் பற்றி அமர்ந்து கொண்டான்.

“மீனா ரொம்ப நல்ல பொண்ணு தான் மா. இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னா அவளுக்கு ஏமாற்றமா தான் இருக்கும். ஆனா கல்யாணம் முடிஞ்சாலும் அவளுக்கு ஏமாற்றமா தான் இருக்கும். நான் உங்களுக்காக மீனாவைக் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சாலும் என்னால அவ கூட பிசிக்கலா ஒரு உறவை வாழ முடியாது மா. உங்களுக்கு புரியுதா?”

“செழியா”

“அப்படியே, கடமைக்காக வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவடையாது மா. என்னால மாலினியைத் தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா இருக்க முடியாது. என்னோட முதல் லவ் அவ தான். என் மனசை தொட்டது அவ தான். என்னோட உணர்வுகளுக்கு உயிர் கொடுக்குறதும் அவ மட்டும் தான் மா. என்னோட கனவுல வரது கூட அவ முகம் தான் மா”

…..

“அவளை நினைச்சிட்டே நான் மீனா கூட வாழ்ந்தா அதை விட பாவம் வேற எதுவுமே இல்லை மா. நான் மீனாவுக்கு வாக்கு கொடுத்தேன் தான், மாலினியை மறந்துருவேன்னு. ஆனா இப்ப அது முடியுமான்னு எனக்கு தெரியலை மா. மாலினி எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்றாளாம். எனக்கு என்னமோ அதுக்கு நான் நேத்து அவ கிட்ட நடந்துக்கிட்டது தான் காரணமா இருக்கும்னு தோணுது. அவ வாழ்க்கை பாழா போச்சுன்னா கண்டிப்பா அதுக்கு நான் மட்டும் தான் மா காரணம். எனக்கு மாலினியை தான் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் உங்களைக் கட்டாயப் படுத்தலை. ஆனா எல்லாரோட மனசையும் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க மா”

“மீனா பாவம் இல்லையா டா?”

“அவ புரிஞ்சிக்குவா. அவ அன்னைக்கே சொன்னா. கல்யாணம் முடியுற வரைக்கும் யாரையும் விரும்ப மாட்டேன்னு. இப்ப அவ மனசுல நான் நல்ல பிரண்டா தான் இருக்கேன் மாம். அவளுக்கு வேற நல்ல வாழ்க்கை கண்டிப்பா கிடைக்கும். ஆனா மாலினியை இப்படியே விட்டா அவ கண்டிப்பா கல்யாணத்தையே வெறுத்துருவா. நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க மா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். 

சிறிது நேரம் யோசித்தவருக்கு மகனது சந்தோஷம் பெரியதாக பட உடனே மீனாவின் தந்தைக்கு தான் அழைத்தார். 

அதை எடுத்த அவரோ “நானே பேசணும்னு நினைச்சேன் சம்பந்தியம்மா. நாம நிச்சயதார்த்ததை ஒரு பதினாறு நாள் தள்ளிப் போடலாமா? திடீர்னு எங்க அண்ணன் இறந்துட்டாரு. அதுக்கு தான் எல்லாரும் ஊருக்கு போயிட்டு இருக்கோம். இப்ப எந்த நல்லதும் பண்ண முடியாது”, என்றார் அவர். 

தூக்கம் விசாரித்த சாரதா “சரி பாருங்க, நானும் கிளம்பி வரவா?”, என்று கேட்டார். 

“வேண்டாங்கம்மா. அங்க நீங்க வந்தா மீனா கல்யாண விஷயம் பேச வேண்டியது வரும். துக்க வீட்ல அது வேண்டாமே? ஊருல இருந்து வந்ததும் நானே கூப்பிடுறேன்”, என்று அவர் சொன்னதும் போனை வைத்தார் சாரதா. அவர் மனதில் பல குழப்பம். அன்று முழுவதும் யோசித்த படியே இருந்தார். 

Advertisement