Advertisement

“அம்மா”

“நாளைக்கு மாலினி வீட்ல போய் பேசணும். அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதுக்கப்புறம் அவ என்ன செய்யுறாளோ அது நடக்கட்டும்”

“அம்மா”

“விடு டா, போய் ரெஸ்ட் எடு”, என்று அவனைத் தேற்றி அனுப்பி வைத்தவரின் மனதில் பாரம் சூழ்ந்தது.

மாலினி வீட்டுக்கு போன போது பாலா மட்டும் தான் வீட்டில் இருந்தான். வசந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தாள். கனகராஜ் வேலைக்கு சென்றிருந்தார்.

டி‌வி பார்த்துக் கொண்டிருந்த பாலா அவளைக் கண்டதும் “ஐயோ வந்துட்டாளே, படிக்காம டி‌வி பாக்குறதுக்கு திட்டுவாளே”, என்று எண்ணி அவன் அவளைப் பார்க்க அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டாள்.

கட்டிலில் விழுந்து குமுறி அழுதாள். அவள் அழுகுரல் கேட்டு அறைக்கு வந்த பாலா “அக்கா, என்ன ஆச்சு? ஏன் அழுற?”, என்று கேட்டான்.

“ஒண்ணும் இல்லை, நீ போ. நான் கொஞ்சம் தனியா இருக்கணும்”, என்று அவள் அழுத படியே சொல்ல அவனும் வெளியே சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் வந்த வசந்தா “அக்கா வந்துட்டாளா டா? செருப்பு கிடக்கு”, என்றாள்.

“வந்துட்டா மா, வந்ததுல இருந்து ஒரே அழுகை”

“என்ன டா சொல்ற?”

“அந்த சார், அருணைப் பத்தி எல்லாம் சொல்லிருப்பார் போல மா. அதான் அழுறா”

“நமக்கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு இருக்காதா? சரி நான் போய் பாக்குறேன்”, என்று சொன்ன வசந்தா மகளைத் தேடிச் சென்றார்.

அங்கே குப்புற படுத்து மாலினி அழுது கொண்டிருக்க “பாப்பா”, என்ற படி அவள் அருகில் அமர்ந்து அவள் முதுகை வருடி விட்டார்.

“அம்மா”, என்ற படி எழுந்து அமர்ந்த மாலினிக்கு தாயிடம் என்ன சொல்ல என்று தெரிய வில்லை. “கடவுளே இப்ப அழுததுக்கு காரணம் கேப்பாங்களே? நான் என்ன சொல்ல?”, என்று எண்ணி அவள் திணற “எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ டா. அவன் இந்த அளவுக்கு அயோக்கியனா இருப்பான்னு நாம நினைச்சோமா என்ன?”, என்று கேட்டாள் வசந்தா.

“இவங்க யாரைச் சொல்றாங்க?”, என்று மாலினி முழிக்க “கொஞ்ச நாளுக்கு முன்னாடியே உங்க முதலாளி வந்து அந்த அருண் கெட்டவன்னு அப்பா கிட்ட சொல்லிருக்கார். இந்த அப்பா தான் நம்பலை. அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்காம் டி. இன்னைக்கு பத்திரிக்கை வாங்க போகலாம்னு அப்பா நினைச்சப்ப அவங்க வீட்ல இருந்து போன் வருது. அந்த அருண் இந்த கல்யாணம் வேண்டாம்னு லட்டர் எழுதி வச்சிட்டு ஓடிப் போயிட்டானாம்? அதைச் சொல்லத் தான் வந்தேன். நீ கிளம்பிட்ட. உன் முதலாளி சொல்றது எல்லாம் உண்மை தான். இவன் போனா போறான் டா. அப்பா உனக்கு வேற மாப்பிள்ளை பாப்பாங்க சரியா?”, என்று கேட்டாள் வசந்தா.

“செழியன் அப்பா கிட்ட அருண் பத்தி பேசினானா? அந்த அருண் திடீர்னு எதுக்கு ஓடணும்? அதுக்கு செழியன் தான் காரணமா இருக்கணும். இந்த செழியனை நல்லவன்னு நினைச்சா அவன் தான் பயங்கர திருடனா இருந்திருக்கான்”, என்று தவறாக நினைத்தாள். ஆனாலும் திருமணம் நின்றது அவளுக்கு சந்தோஷமாக தான் இருந்தது.

வசந்தா தன்னையே பார்ப்பது புரிய “எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் மா. நான் கடைசி வரை உங்க கூடவே இருந்துறேன்”, என்றாள். அதைக் கேட்டு திக்கென்று இருந்தது வசந்தாவுக்கு.

“சரி நீ கொஞ்ச நேரம் படு”, என்று சொல்லி மகளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள். அன்று முழுவதுமே மாலினி உடைந்து போய் தான் இருந்தாள். ஆனால் அவள் அழுதது செழியனை நினைத்து தான். ஆனால் கனகராஜ், வசந்தா இருவரும் அவள் அருணை நினைத்தும் திருமணம் நின்றதை நினைத்தும் அழுகிறாள் என்று எண்ணினார்கள்.

“நம்ம மாலினிக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்”, என்றாள் வசந்தா.

“ஏன் வசந்தா இப்படி சொல்ற?”

“மாலினி ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க. மதியம் என்ன சொன்னா தெரியுமா? எனக்கு கல்யாணமே வேண்டாம், நான் உங்க கூடவே இருக்கேன்னு சொல்றா. அவளை இப்படியே விட்டா அவ கல்யாணத்தையே வெறுத்துருவா”

“இப்ப என்ன செய்ய சாந்தா?”

“அந்த தம்பி வீட்ல பேசிப் பாப்போமாங்க?”

“யாரு செழியனையா சொல்ற?”

“ஆமாங்க, நம்ம பொண்ணுக்காக இப்பவே இப்படி யோசிக்கிறவர் அவளை நல்லா பாத்துக்குவார்? அவங்க அம்மாவும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க?”

“ஆனா அவருக்கு வேற பொண்ணு பாத்ததா சொன்னாங்க தானே?”

“அது சும்மா பேச்சு தானே? நாம கேட்டுப் பாப்போமே? வேண்டாம்னு சொல்லிட்டா விட்டுறலாம்”

“சரி வசந்தா, நாளைக்கு மாலினி போன்ல இருந்து செழியன் நம்பர் எடுத்து அவர் கிட்ட முதல்ல பேசிப் பாப்போம்”, என்றார் கனகராஜ்.

அடுத்த நாள் அனைவருக்கும் எப்போதும் போல விடிந்தது. பாலாவுக்கு தேர்வு என்பதால் அவன் அவசரமாக கிளம்பிப் போனான்.

சரியாக ஒன்பது மணிக்கு செழியனும் சாரதாவும் மாலினி வீட்டுக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்த வசந்தா சந்தோஷமாக வரவேற்று அமர வைத்தாள். அவர்கள் எதிரே வந்து அமர்ந்த கனகராஜும் அவர்களை வரவேற்றார்.

“நாங்க மாலினியை பாக்கணும்னு வந்தோம்”, என்றார் சாரதா.

“உள்ள தான் படுத்திருக்கா. நான் எழுப்பவா?”, என்று கேட்டாள் வசந்தா.

“இல்லை பரவால்ல, அவ உள்ள இருக்கட்டும். நான் போய்ப் பாக்கவா?”

“போய்ப் பாருங்க”, என்று வசந்தா சொன்னதும் சாரதா மட்டும் உள்ளே சென்றார்.

சாரதா சென்றதும் “அருணைப் பத்தி என் கிட்ட நீங்க சொன்னதைக் கூட நான் நம்பலை தம்பி. என்னை மன்னிச்சிருங்க”, என்றார் கனகராஜ்.

“பரவால்ல சார், அவன் நம்புற மாதிரி பேசிருப்பான். என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது”, என்றான் செழியன்.

அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். செழியனுக்கு மாலினியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவள் கட்டாயம் தன்னை மன்னிக்க மாட்டாள் தான். ஆனாலும் அவள் முகத்தை மட்டுமாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்கினான்.

வசந்தா கனகராஜ் புறம் கண்ணைக் காட்டினாள். அவரும் செழியனைப் பார்த்தார். “தம்பி நான் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு இருந்தேன்”, என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார்.

“சொல்லுங்க சார்”

“மாலினி, இதுக்கப்புறம் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா”

“என்ன சார் சொல்றீங்க?”

“ஆமா தம்பி, ரொம்ப விரக்தில இருக்கா”, என்று அவர் சொன்னதும் “இவ அருணை அந்த அளவுக்கு நேசிச்சாளா?”, என்று எண்ணினான் செழியன். அவன் மனம் சுருண்டது.

“நான் ஒண்ணு கேட்டா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“என்ன சார் சொல்லுங்க?”

“உங்களுக்கு மாலினியை கல்யாணம் பண்ணிக்க எண்ணம் இருந்துச்சுன்னு சொன்னீங்க தானே?”

“ஆமா சார், அது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிருங்க”

“இல்லைங்க தம்பி, உங்களுக்கு இப்பவும் அந்த எண்ணம் இருக்கா?”

“சார்?”

“உங்க அம்மா உங்களுக்கு வேற பொண்ணு பாத்ததா சொன்னாங்க. அதனால இதைக் கேக்குறது நியாயம் இல்லை தான். ஆனா ஒரு பொண்ணோட அப்பாவா இதை இப்ப கேக்கலைன்னா வேற எப்பவுமே கேக்க முடியாம போயிரும். இப்ப உங்களுக்கு மாலினி மேல விருப்பம் இருந்தா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”

“சார்?”

“நான் உங்களை கட்டாயப் படுத்தலை தம்பி. தர்ம சங்கடப் படுத்தவும் சொல்லலை. ஒரு வேளை மாலினி மேல உங்களுக்கு விருப்பம் இருந்தா…..”, என்று அவர் கேட்டதும் இந்த சந்தர்ப்பத்தை விட அவனுக்கு மனதில்லை. ஆனால் மீனா என்று எண்ணியவனுக்கு அவன் மனத்தராசு மாலினி பக்கமே தாழ்ந்தது.

“எனக்கு மாலினியை எப்பவுமே ரொம்ப பிடிக்கும் சார். அவளைக் கல்யாணம் பண்ண நான் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா”

“ஆனா என்ன தம்பி?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டார் கனகராஜ். வசந்தாவும் ஆவலாக அவன் முகம் பார்த்தாள்.

“மாலினி என்ன சொல்லுவான்னு தெரியலை. அதை விட அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை”

“உங்க அம்மா கிட்ட நாங்க பேசுறோம் தம்பி. மாலினியை ஒத்துக்க வைக்கிறதும் எங்க பொறுப்பு. உங்களுக்கு சம்மதமா தம்பி?”

“எனக்கு பரிபூரண சம்மதம் சார்”, என்றதும் இருவரும் முகமும் மலர்ந்தது.

உள்ளே சென்ற சாரதாவோ “மாலினி”, என்று அழைத்தார்.

விழித்திருந்தாலும் கண்களை மூடிப் படுத்திருந்த மாலினி சாரதா குரல் கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தாள். “மேடம் நீங்களா, வாங்க. உக்காருங்க”, என்று மாலினி சொன்னதும் கட்டிலில் அமர்ந்தார் சாரதா. அவளையும் தன்னருகே அமர வைத்துக் கொண்டார்.

“எப்படி இருக்க மா?”, என்று அவர் கேட்க “நல்லா இருக்கேன் மேடம்”, என்றாள் மாலினி.

“உன் நல்ல மனசுக்கு நீ கண்டிப்பா நல்லா தான் இருப்ப. நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன் மா”, என்றதும் அவரை குழப்பமாக பார்த்தாள் மாலினி.

தொடரும்….

Advertisement