Advertisement

அத்தியாயம் 14 

எந்தன் உயிராகவும்

உறவாகவும் இருக்கும்

நீயா என்னை வெறுப்பது?!!!

பின் “உன்னை கண்டிப்பா சாக விட மாட்டேன் மாலினி. உன்னை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்கு தெரியும்”, என்ற படி அவளை நெருங்கினான். அவள் சுவரோடு சாய்ந்து பல்லி போல நிற்க அவளை ஒட்டி நின்றான் செழியன்.

இருவருக்கும் இடையில் ஒரு இன்ச் இடைவெளி மட்டும் தான் இருந்தது. அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தை தீண்ட அந்த நிலைமையிலும் அவள் மனம் அவனிடம் மயங்கியது தான் விந்தை.

தன்னை இந்த நிலையில் நிறுத்திய அவன் மீது அப்போது கூட வெறுப்பு வரவில்லை என்று அவள் மீதே அவளுக்கு கோபமாக வந்தது.

அவளை அடைந்தாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி நெருங்கிய செழியன் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அருகாமையில் மயங்கிப் போனான். அவனால் அவள் மீதிருந்து பார்வையைத் திருப்ப முடியவில்லை. இப்போதே அவள் தன்னுடைய கை அணைப்பிற்குள் இருக்க வேண்டும் என்ற வெறி வந்தது.

அவன் பார்வையின் மாற்றமும், அவனது அருகாமையும், அவன் கண்களில் தவழ்ந்த ஆசையும் மாலினியை விதிர்க்கச் செய்தது. கட்டாயம் அவன் தன்னைத் தொட்டால் தன்னால் முழு மனதுடன் போராட முடியாது என்று அவளுக்கே தெரிந்தது. காதல் கொண்டவனுடன் எந்த பெண்ணாவது போராடுவாளா?

ஆனால் கண்ணியவான் என்று எண்ணிய செழியனா தன்னிடம் இப்படி நடந்து கொள்வது என்ற அதிர்ச்சியைத் தான் அவளால் தாங்க முடிய வில்லை.

அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் “செழியன் பிளீஸ்”, என்று கெஞ்சினாள். அவள் தன்னுடைய பெயரை அழைப்பது கூட அவனுக்கு போதையாக இருந்தது.

“மாலு…”, என்று கிறக்கமாக அழைத்தான் செழியன். அவனது அழைப்பு அவளது அடிவயிற்றைப் பதறச் செய்தது. என்ன செய்யக் காத்திருக்கிறானோ என்று அவள் மனம் படபடவென்று அடித்தது.

“நீ எனக்கு வேணும் டி. மனசே இல்லாம தான் அன்னைக்கு உன்னை விட்டுக் கொடுத்தேன். ஆனா இப்ப முடியாது. நீ எனக்காகவே படைக்கப் பட்டவ. இந்த செழியனோட தேவதை டி. இந்த நிமிஷம் கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. அதை நான் இழக்க மாட்டேன்”, என்று சொன்னவனின் கரங்கள் அவள் இடையில் பதிந்தது.

இருவருக்கும் இருந்த இடைவெளி குறைந்து தேகங்கள் இரண்டும் உரசிக் கொண்டது.

“செழியன் பிளீஸ், என்னை விடுங்க. இது தப்பு”, என்ற படி அவன் கரத்தில் இருந்து விலக முயன்றாள்.

அவளது மறுப்பை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவள் சொல்வதைக் கேட்கும் நிலைமையை எல்லாம் அவன் தாண்டி விட்டான்.

இடையில் பதிந்த அவனது கரம் அவளைச் சுற்றி வளைத்து இறுக்கி அணைத்தது. அவனது இதழ்கள் அவசரமாக அவள் இதழ்களைத் தீண்ட அவளால் அதில் இருந்து மீளவே முடிய வில்லை.

இது தப்பு என்ற சொல்லுக்கும், இது பிடிச்சிருக்கு என்ற உணர்வுக்கும் இடையில் சிக்கி செத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதழ்களை முற்றுகையிட்டவனை அடுத்த நொடி பலம் கொண்டு தள்ளி விட்டாள்.

திடீரென்று அவள் அப்படித் தள்ளி விடுவாள் என்று அறியாத அவன் ஒரு நொடித் திணறி மீண்டும் அவளை நெருங்கி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவன் இதழ்கள் அவளுடைய கழுத்து, காது என்று பயணிக்க செழியனா இப்படி என்ற விரக்தி மனநிலைக்குச் சென்று கொண்டிருந்தாள் மாலினி.

அவன் மீது காதல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் கண்டிப்பாக அவனைக் காயப் படுத்தி இருப்பாள். ஆனால் அவன் மீது கொண்ட காதல் அதை செய்ய விட வில்லை. ஆனால் அவளது காதல் மனம் அவன் செய்கையில் செத்துக் கொண்டிருந்தது.

“நான் விரும்பிய செழியனா என் வாழ்க்கையை அழிப்பது?”, என்ற வெறுப்பு அவளுக்குள் உருவானது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

அவன் மீதான காதல் அவள் மனதில் உருவானதை அவள் எப்படி உணர வில்லையோ, அதே போல அவன் மீது உள்ளுக்குள் உருவாகிக் கொண்டிருக்கும் வெறுப்பையும் அவள் உணரவில்லை.

அவளுடைய இடையில் பதிந்த கைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தாள்.

காது, கன்னம் என்று பயணித்த அவனது இதழ்கள் அவள் கழுத்தில் இறங்கி பயணிக்க அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவன் காதில் பட்டுத் தெறித்தது.

ஜில்லென்ற அவளது கண்ணீர் பட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிய இதழ் கடித்து நின்ற அவளது தோற்றம் அவனை குற்ற உணர்வுக்குள்ளாக்கியது.

“என்ன செஞ்சிட்டு இருக்கேன் நான்? நானா இப்படி செய்றது?”, என்று எண்ணிக் கொண்டு அவளிடம் இருந்து விலகினான்.

“சாரி மாலினி, முதல்ல இங்க இருந்து போ”, என்றான். ஏனென்றால் தான் செய்வது தவறு என்று அவனுக்கே புரிகிறது. ஆனால் அவன் உணர்வுகள் அவளை கேட்கிறது. அவள் சிறிது நேரம் இங்கேயே இருந்தால் கண்டிப்பாக தவறு நடந்து விடும் என்று புரிந்தது.

அவனுடைய சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தாள் மாலினி. அவன் முதுகு காட்டி நின்றிருந்தான். அவனது உணர்வு போராட்டம் அவளுக்கு தெரியவே இல்லை.

அவசரமாக கதவு பக்கம் சென்றாள். அப்போது தான் அவன் பூட்டியது நினைவில் வந்தது. அவள் நிற்பதைப் பார்த்தவன் வேகமாக வந்து கதவைத் திறந்தான்.

பின் அவளைப் பார்த்தான். அவளது கண்ணீர் அவள் கன்னங்களில் வழிய “பிளீஸ் மாலினி, என்னை மன்னிச்சிரு. உன் கண்ணீரைப் பாக்குற சக்தி எனக்கு இல்லை. கண்ணைத் துடைச்சிட்டு போ”, என்றான்.

“உங்களுக்காக நான் விட்ட கண்ணீரை விட இந்த கண்ணீர் ஒண்ணும் எனக்கு பெருசு இல்லை. இனி உங்களை நான் என் வாழ்க்கைல பாக்கவே கூடாது. இப்ப என்ன நான் அருணைக் கல்யாணம் பண்ணக் கூடாது, அது தானே உங்களுக்கு வேணும்? அதுக்கு தானே இது எல்லாம்? சரி நான் அருணைக் கல்யாணம் பண்ணலை. ஆனா எனக்கு ஏதாவது நீங்க உதவி செய்யணும்னு நினைச்சா என் கண் முன்னாடி வராதீங்க. அப்படி வந்தீங்க, உங்களைக் கொல்லக் கூட நான் தயங்க மாட்டேன். இந்த நிமிஷம் நான் வெறுக்குற ஒரே ஆள் நீங்க தான். குட் பாய்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

அவள் சென்றதும் தலையில் அடித்த படி தன்னுடைய சீட்டில் அமர்ந்தான் செழியன். அவள் சொன்ன முதல் வரி அவன் மனதில் பதியவே இல்லை. அவளது வெறுப்பு மட்டும் அவனை வதைத்தது. அவன் ஒன்று நினைத்து செய்ய, நடந்தது வேறு ஒன்று. இவ்வளவு படித்து நல்ல பதவியில் இருந்தாலும் அவனால் அவனுடைய உணர்வுகளை அடக்க முடியவில்லையே?

தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? காமக் கொடூரன் என்றல்லவா நினைத்திருப்பாள் என்று அவன் மனம் வேதனை கொண்டது.

காதலை வைத்திருக்கும் பெண்ணை தொட்டால் நியாயம். ஆனால் பிடிக்க வில்லை என்று சொன்ன பெண்ணை இப்படி செய்தால் அவன் செய்ததற்கு பெயர் என்ன?

ஊர் உலகம் சொல்வது போல சொன்னால் அவன் அவளை கற்பழிக்கப் பாத்திருக்கிறான். இது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம் என்று அவனுக்கே புரிந்தது. சாரதாவின் வளர்ப்பா இப்படி செய்தது என்று அவன் மனம் குமுறியது.

இனி கட்டாயம் தன்னால் மாலினியையோ, தாயையோ தலை நிமிர்ந்து பார்க்க முடியாது என்று புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனது குற்ற உணர்ச்சி அவனை கொன்று கொண்டிருந்தது. வெகு நேரம் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தான்.

அறையை விட்டு வெளியே சென்ற மாலினிக்கோ மனம் குமுறியது. செழியன் மீது கொண்ட காதலுக்கும் பெற்றோர் மீது வைத்த பாசத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தவள் இப்போது செழியனின் செய்கையால் உள்ளுக்குள் மறித்துப் போனாள். அப்படி தான் அவள் நினைத்தாள்.

கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது. அவசர அவசரமாக அதை துடைத்தாள். அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். தலை கலைந்து ஆடை கசங்கி சிறிது நேரத்திற்கு முன்னர் நடந்ததை அவளுக்கு நினைவு படுத்தியது.

“கடவுளே இப்படியே என்னை செக்யூரிட்டி பார்த்தால் செழியனைப் பற்றி என்ன நினைப்பார்?”, என்று எண்ணினாள்.

“செழியனைப் பத்தி அவர் தப்பா நினைச்சா உனக்கென்ன? நீயே கூட செக்யூரிட்டி கிட்ட செழியனுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க முடியும். அதை செய்வது தான் நியாயம்”, என்றது அவள் மனது. ஆனால் அதைச் செய்ய அவளுக்கு மனதில்லை. செழியனுக்கு கெட்ட பெயர் வர அவள் ஒரு நாளும் விட மாட்டாள். அவன் தவறானவனாக இருந்தாலும் அவள் காதலில் தவறில்லையே. தன்னை சரி செய்து கொண்டவள் வெளியே சென்றாள்.

Advertisement