Advertisement

“யார் என்ன சொன்னாலும் நம்பீருவீங்களா சார் நீங்க? அவங்களுக்கு கொஞ்சமா செட்டில்மெண்ட் பண்ணிட்டு எல்லா சொத்தையும் நாங்க எடுத்தது உண்மை தான். ஆனா அவங்களுக்கு பங்கு கொடுக்க அது ஒண்ணும் பூர்வீக சொத்து இல்லை. என் கணவர் சம்பாதிச்சது. அது என் மகனுக்கு தானே போகணும்? அவரோட தம்பி தங்கைக்கா போகணும்?”

“என்னது பூர்வீக சொத்து இல்லையா?”

“ஆமா, என் கணவரோட சொத்தை அவங்க அமுக்க பாத்தாங்க. என் மகன் புத்திசாலித் தனமா அதை மீட்டு எடுத்தான். அதுல என்ன தப்பு இருக்கு?”

“இது எங்களுக்கு தெரியாது”

“விடுங்க, அருண் உங்க கிட்ட என்ன சொல்லிருப்பான்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. சரி நாம ரெண்டாவது விஷயம் பேசலாமா? நான் இப்ப வந்தது என் மகனோட காதலைச் சொல்லி உங்க பொண்ணை பொண்ணு கேக்க இல்லை”

…..

“முதல்ல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க. என் மகனுக்கு நான் வேற ஒரு பொண்ணு பாத்துட்டேன். அவனும் அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ண சரின்னு சொல்லிட்டான். இப்ப எங்க மனசுல இருக்குறது எல்லாம் ஒண்ணு தான். அது மாலினி வாழ்க்கை காப்பாத்தப் படணும்”

…..

“என் மகன் அருணைப் பத்தி சொன்னதை நீங்க நம்பிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. நானும் உங்களைத் தேடி வந்துருக்க மாட்டேன். உங்க மக கிட்ட உண்மையைச் சொல்ல செழியனும் இப்ப மாலினியை ஆஃபிஸ்க்கு கூப்பிட்டுருக்க மாட்டான்”

“ஐயோ என்ன நடக்குது இங்க? ஏங்க, இவங்க பையன் உங்க கிட்ட வந்து அருணைப் பத்தி தப்பா சொன்னாரா?”, என்று கேட்டாள் வசந்தா.

“ஆமா வசந்தா சொன்னார். அருணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குறதா”, என்று குற்ற உணர்வுடன் சொன்னார் கனகராஜ்.

“என்னது, உங்க கிட்ட வந்து இப்படி ஒரு ஆள் சொல்லியும் நீங்க அவனை சந்தேகப் படலையா?”, என்று வசந்தா கேட்க “என்ன இந்த அம்மா அருணை அவன் இவன்னு பேசுது. மாப்பிள்ளையை வா போன்னு பேசுற குடும்பமா தெரியலையே? ஏதோ நடந்திருக்கு”, என்று எண்ணிக் கொண்டார் சாரதா.

“இவங்க மகன் இப்படி வந்து சொன்னதும் நானும் முதல்ல சந்தேகப் பட்டு விசாரிச்சேன் வசந்தா”

“யார்க் கிட்ட?”

“அருண் கிட்ட தான்”

“ஐயோ, உங்க புத்தி புல் மேயப் போயிருக்கா? யாராவது திருடன் கிட்டயே விசாரிப்பாங்களா?”, என்று வசந்தா தலையில் அடிக்க “உங்களுக்கு அருணைப் பத்தி தெரிஞ்சிருச்சா?”, என்று கேட்டார் சாரதா.

“இல்லைங்க, அவனைப் பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா அவன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி லட்டர் எழுதி வச்சிட்டு எங்கயோ ஓடிட்டானாம்”, என்றார் கனகராஜ்.

“கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. உங்க பொண்ணு வாழ்க்கை தப்பிச்சிருச்சு. நான் வந்த வேலையும் முடிஞ்சிருச்சு. மாலினி நல்ல பொண்ணு. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். என் மகனை சாப்பிட வச்சு அழகு பார்த்த அன்னபூரணி”

“என்ன சொல்றீங்க நீங்க?”, என்று கேட்டாள் வசந்தா.

“ஆமா தினமும் மாலினி என் மகனுக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வந்தா”, என்று சாரதா சொன்னதும் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

சாரதாவைத் தவிர மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மாலினி தங்களிடம் யாருக்கு உணவை எடுத்துப் போகிறாள் என்று மறைத்தது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது.

“நான் முதல்ல அருண் எப்படி பட்டவன்னு சொல்லிறேன். அவன் கொஞ்ச நாள் மும்பைல தங்கி ஏதோ கோர்ஸ் படிச்சிட்டு இருந்தான். அப்ப ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்ணி கர்ப்பமாக்கிட்டு தப்பிக்க பாத்துருக்கான். அந்த பொண்ணோட சொந்தக்காரங்க எல்லாம் அவனை பிடிச்சு வச்சிக்கிட்டாங்க. அவங்க கிட்ட இருந்து தப்பிக்க செழியன் நம்பரைக் கொடுத்துருக்கான். இவனும் தம்பியாச்சேன்னு போயிருக்கான். அங்க போன பிறகு தான் தெரிஞ்சது அருணுக்கு பல பெண்களோட பழக்கம் இருக்குனு. செழியன் அந்த பொண்ணு வீட்ல எவ்வளவோ பேசியும் அவங்க அருணை விடலை. கடைசில அங்கயே அருணுக்கும் அந்த பொண்ணுக்கும் செழியன் கல்யாணம் பண்ணி வச்சிருக்கான். பெத்தவங்க சம்மதம் வாங்கிட்டு வரோம்னு சொல்லி அந்த பொண்ணை அங்க விட்டுட்டு அவனைக் கூட்டிட்டு வந்துருக்கான். அருண் அந்த பொண்ணை பத்தி வீட்ல சொல்லாம அப்ப அப்ப மும்பைக்கு போய் அந்த பொண்ணு கூட வாழ்ந்துட்டு இருக்கான். இப்ப ஒரெடியா அங்க போய்ட்டான் போல? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இப்ப அருணுக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு. அந்த குழந்தை ஏதோ கீழே விழுந்து ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிருக்காம். அந்த விஷயம் தெரிஞ்சு கூட அருண் போயிருக்கலாம். இந்த உண்மை எல்லாம் எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். என்னோட ஃபிரண்ட் போலீசா இருக்கா. அவ தான் விசாரிச்சு சொன்னா. அதுக்கு முன்னாடி வரை நானும் அருணை ரொம்ப நல்லவனா தான் நினைச்சிட்டு இருந்தேன்”, என்று சாரதா சொன்னதும் மூவரும் அதிர்ந்தார்கள்.

தங்கள் மகள் எவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து தப்பித்திருக்கிறாள் என்று அவர்களுக்கு புரிந்தது. அவர்களுடைய அதிர்ச்சியைப் பார்த்த சாரதா “கவலைப் படாதீங்க. மாலினி ரொம்ப நல்ல பொண்ணு. குடும்பத்தை நேசிக்கிற அருமையான குணம் அவளுக்கு இருக்கு. என் மகன் காதலைச் சொல்லியும் அதை ஏத்துக்காம எங்க அம்மா அப்பா சொல்றவங்களைத் தான் கட்டிக்குவேன்னு சொன்ன பொண்ணு. எனக்கு மருமகளா வரணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். ஆனா கடவுள் அதுக்கு விடலை. அப்படிப் பட்ட பொண்ணுக்கு கடவுள் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டான். அவளைப் பிடிச்ச பீடை இன்னையோட ஒழிஞ்சிருச்சுன்னு நினைச்சிக்கோங்க. அவளுக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். மாலினி கிட்ட இந்த உண்மையை எல்லாம் செழியன் சொல்லிருவான். அவ தைரியமான பொண்ணு. அவளும் இந்த கல்யாணம் நின்னதுல சந்தோஷம் தான் படுவா. அப்புறம் வேற மாப்பிள்ளை பாக்குற வரைக்கும் அவளை வேலைக்கு அனுப்புங்க. என் மகன் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் அனுப்பினா போதும். நான் வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

சாரதா போனதும் மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். “எனக்கு ஒரு விஷயம் புரியலை”, என்று ஆரம்பித்தாள் வசந்தா.

“என்ன வசந்தா?”

“ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதும் சரி, வேலைக்கு போனப்பவும் சரி, வெளிய நடக்குற எல்லாத்தையும் ஒப்பிக்கிற மாலினி கம்பெனி எம்.டிக்கு சாப்பாடு எடுத்துட்டு போறதை ஏன் சொல்லலை? எதுக்காக பிரண்டுன்னு சொல்லி இதை மறைக்கணும்?”

“எனக்கும் தெரியலை. அது மட்டுமில்லாம இந்த அம்மாவோட பையன் அவ கிட்ட காதலைச் சொன்னதையும் இவ நம்ம கிட்ட சொல்லலை. ஆனா அந்த அருண் கிட்ட சொல்லிருக்கா. டேய் உனக்கு ஏதாவது தெரியுமா டா?”, என்று பாலாவிடம் கேட்டார் கனகராஜ்.

“எனக்கு ஒண்ணும் தெரியாது பா. கடைசில என் தலையை உருட்டுறீங்க? அந்த சாரை அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும்னு மட்டும் எனக்கு தெரியும்”, என்றான் பாலா.

“என்ன டா சொல்ற?”

“ஆமாப்பா, அவரைப் பத்தியே தான் பேசிட்டு இருப்பா. அழகா இருக்கார்னு சொல்லுவா. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுன்னு நினைச்சு ரொம்ப பீல் பண்ணினா. அப்புறம் கல்யாணம் ஆகலைன்னு சந்தோஷப் பட்டா. எனக்கு அவ்வளவு தான் தெரியும். அவ வந்த உடனே அவ கிட்டயே கேளுங்க. அப்படி பிடிக்கும்னு சொன்னா அந்த சாருக்கே அக்காவைக் கட்டி வச்சிருங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.

“என்னங்க இவன் இப்படிச் சொல்லிட்டுப் போறான்?”, என்று கேட்டாள் வசந்தா.

“எனக்கு என்னமோ நம்ம பாப்பாவும் அவரை விரும்பிருப்பான்னு தோணுது”

“விரும்பிருந்தா அவர் கேட்டப்ப சொல்லிருப்பா தானே?”

“நம்ம மேல உள்ள அன்பு அதைச் சொல்ல விட்டுருக்காது டி. அவ முகத்துல கல்யாண சந்தோசமே இல்லை. அப்பவே தோணுச்சு”

“அப்பவே தோணுச்சு தோணுச்சுன்னு இப்ப வந்து சொல்லுங்க. சரி என்ன பண்ணப் போறீங்க?”

“நம்மளை மதிச்ச நம்ம பொண்ணு மனசை நாமளும் மதிக்கணும் டி. அந்த பையனையே நம்ம பொண்ணுக்கு கட்டி வைக்கணும்”

“உளறாதீங்க. அந்த அம்மா சொன்னது மறந்துருச்சா? அவங்க வேற பொண்ணு பாத்துட்டாங்களாம்”

Advertisement