Advertisement

அத்தியாயம் 13 

நீ சண்டையிடும் போது வரும்

வலியை விட நீ பேசாமல்

இருக்கும் போது வரும்

வலி பெரியது பெண்ணே!!!

“யார் மாலினி கால் பண்ணுறா?”, என்று கேட்டாள் வசந்தா.

அவளுக்கு அழைப்பது ஒரு வேளை அருணாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.

“எங்க கம்பெனி எம்.டி தான் மா கூப்பிடுறார். இரு என்னன்னு கேட்டுக்குறேன்”, என்று சொல்லி அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ சார், எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.

அவனிடம் பேசுவதால் தான் அவள் குரலில் அப்படி ஒரு சந்தோஷம் வந்தது. அதை செழியன் அறிய வில்லை. அவள் சந்தோஷம் அவனுக்கு உவப்பானதாக இல்லை.

“உன்னால ஒவ்வொரு நிமிசமும் செத்துட்டு இருக்கேன் டி”, என்று எண்ணிக் கொண்டு “பைன் மாலினி. எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”, என்று கேட்டான்.

“சொல்லுங்க சார்”

“இன்னைக்கு ஒரு நாள் நம்ம ஆஃபிஸ்க்கு வர முடியுமா? வர்மா கம்பெனி பைல் எங்க மிஸ் ஆச்சுன்னு தெரியலை. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தேடிட்டேன். எங்கயும் காணலை. அதை தேடித் தர முடியுமா? இல்லைனா வேற ரெடி பண்ணித் தர முடியுமா? உங்களுக்கு தான் டீட்டேயில்ஸ் தெரியும். இன்னைக்கு சண்டே, இங்க ஸ்டாப் யாரும் இல்லை. வேற யாராவது இருந்தா உங்களை தொல்லை பண்ணிருக்க மாட்டேன்”

“என்ன சார் இதைக் கூட செய்ய மாட்டேனா? தொல்லை அது இதுன்னு சொல்றீங்க? நான் ரெடி பண்ண பைல் அங்கே தான் இருக்கும். இருங்க, நான் வந்து தேடித் தரேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

“வா மாலினி, வா. உன் கிட்ட நான் பேசியே ஆகணும். என்ன ஆனாலும் சரி. உனக்கும் அருணுக்குமான கல்யாணத்தை நிறுத்தணும். என் காதலை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா நீ அவனை கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு உன் காலுல வேணும்னாலும் விழுவேன்”, என்று எண்ணிக் கொண்டான் செழியன்.

அவள் இங்கே வந்தால் தன் மீது அதிகமான வெறுப்பை அவள் வளர்த்துக் கொள்வாள் என்று அவனுக்கு தெரிந்திருந்தால் அவளை வரச் சொல்லி சொல்லாமல் இருந்திருப்பானோ என்னவோ?

வசந்தா மாலினியை குழப்பமாக பார்க்க “அம்மா, நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு பைலை சாருக்கு எடுத்துக் கொடுக்கணும். கல்யாணப் பொண்ணு வெளியே போகக் கூடாதுன்னு ஏதாவது சொல்லி என்னைத் தடுக்காதே. நான் சீக்கிரம் வந்துறேன்”, என்றாள் மாலினி.

“நான் ஒண்ணும் தடுக்கலை. ஆனா அப்பா உன்னை வெளியே அனுப்பக் கூடாதுன்னு சொன்னாங்க. உனக்கு நேரம் சரியில்லையாம் பாப்பா”

“பிளீஸ் மா, இன்னைக்கு ஒரு நாள் தான்”

“சரி போயிட்டு வா. நீ வந்த பிறகு நான் ஒரு விஷயம் சொல்லணும்”

“சரி மா”

“பாலாவை துணைக்கு கூட்டிட்டு போ மாலினி”

“ஆமாக்கா, நான் துணைக்கு வரேன்”, என்றான் பாலா.

“படிக்க ஓப்பி அடிக்க நினைப்பியே? உனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு. ஒழுங்கா படி. நான் போயிட்டு வரேன். நான் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் மா. அப்பா கேட்டா சொல்லிரு என்ன?”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

அவள் சென்றதும் “என்ன ஆச்சு மா? அப்ப இருந்து எதுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டான் பாலா.

“நம்ம அக்காவுக்கு பாத்துருந்த மாப்பிள்ளை எங்கயோ ஓடிப் போய்ட்டானாம் டா தம்பி”

“என்ன மா சொல்ற?”

“ஆமா பாலா, இன்னைக்கு அவனோட அப்பா கால் பண்ணி சொல்றான். எனக்கு பத்திக்கிட்டு வருது. நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க கிட்ட என்ன சொல்லப் போறேன்னே தெரியலை. அதை விட மாலினி. அவளை எப்படி சரி செய்யப் போறேன்னு தெரியலை. அப்பா இடிஞ்சு போய்ட்டார். எப்படியாவது மாலினி கிட்ட சொல்லு, என்னால அவ முகத்தை பாக்க முடியாதுன்னு சொல்லிட்டு கோவிலுக்கு போய்ட்டார்”

“அம்மா அழாதே மா. அவன் குணம் இப்பவே தெரிஞ்சிட்டுனு சந்தோஷப் படு மா. அவன் போனா போகட்டும்”

“என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு டா. படிக்கிற இடத்துலயும் சரி, வேலை பாக்குற இடத்துலயும் சரி. யாரையும் காதலிக்கிறேன்னு வந்து என் பொண்ணு நின்னதில்லை. அப்படிப் பட்டவளை இப்படிக் கஷ்டப் படுத்துறோம்னு இருக்கு டா”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. அதான் கல்யாணம் ஆகலையே. எனக்கு என்னமோ எல்லாம் நல்லதுக்கே நடக்குதுன்னு தோணுது மா. வேற நல்ல மாப்பிள்ளை அக்காவுக்கு வருவார்”

“ஆமா வேற மாப்பிள்ளை தான் பாக்கணும். இப்ப உடனே வேற மாப்பிளைன்னு சொன்னா அவ எப்படி தாங்குவாளோ?”

“நீங்க அழதீங்க மா. அக்கா வரட்டும். என்னன்னு பேசுவோம்”, என்றான் பாலா.

அதே நேரம் தன்னுடைய போன் அடித்ததும் எடுத்துப் பார்த்தார் சாரதா. பத்மஜா தான் அழைத்திருந்தார்.

“சொல்லு பத்து, விசாரிச்சியா?”, என்று அவர் கேட்டதும் விலாவாரியாக எடுத்துச் சொன்னாள் பத்மஜா.

அவள் சொன்னதைக் கேட்ட சாரதாவுக்கு தலையே சுற்றியது. பத்மஜா போனை வைத்ததும் சிறிது நேரம் யோசித்தவர் குளித்து கிளம்பி மாலினி வீட்டை நோக்கி காரைச் செலுத்தினார். அவர் மாலினி வீட்டின் முன்பு காரை நிறுத்தும் போது தான் கனகராஜும் கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

யார் இது என்று அவர் பார்க்க “என் பேர் சாரதா. நான் மாலினி வேலை பார்க்கும் கம்பெனி ஓனர் செழியனோட அம்மா”, என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.

அருணைப் பற்றி தெரிவதற்கு முன் சாரதா வந்திருந்தால் கனகராஜ் கண்டிப்பாக அவரை மரியாதை இல்லாமல் தான் பேசியிருப்பார். ஆனால் இப்போது அவரால் அப்படி பேச முடியவில்லை. மகள் நிலைமை ஒரு புறம் அவரை அழுத்தியது. மற்றொரு புறம் மரியாதையான தோற்றத்தில் இருந்த சாரதாவிடம் அப்படி பேச அவருக்கு மனதில்லை.

“உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தார்.

வசந்தா சாரதாவை கேள்வியாக பார்க்க “ஹாய் நீங்க பெரிய மேடம் தானே? சே சாரதா மேடம் தானே நீங்க?”, என்று கேட்டான் பாலா.

“ஆமா என்னை உனக்கு தெரியுமாப்பா?”, என்று கேட்டார் சாரதா.

“பாத்தது இல்லை. ஆனா அக்கா உங்களைப் பத்தி நிறையச் சொல்லிருக்கா. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவ சொன்னப்ப தன்னாலே உங்க உருவம் என் மனசுல பதிஞ்சிருச்சு. அதே மாதிரி நீங்க இருக்கீங்க”, என்று சொல்ல அவன் தலையை கோதி விட்டார்.

“மாலினி வேலை பாக்குற கம்பெனி ஓனர் தான் இவங்க”, என்று கனகராஜ் சொன்னதும் “உக்காருங்க, நான் டீ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி அவரை அமர வைத்தாள் வசந்தா.

அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்த சாரதா “மாலினி இல்லையா?”, என்று கேட்டார்.

“மாலினி உங்க ஆபீஸ்க்கு தான் போயிருக்கா. ஏதோ பைல் காணும்னு கால் பண்ணிருந்தாங்க”, என்றாள் வசந்தா. கனகராஜ் குழப்பமாக மனைவியைப் பார்க்க “அங்க எந்த பயிலும் காணாம போயிருக்காது. சில உண்மைகளைச் சொல்ல என் மகன் தான் மாலினியை அங்க வர வச்சிருக்கணும். அதுவும் நல்லது தான். நீங்களும் சில உண்மைகளை தெரிஞ்சிக்கணும்னு தான் நான் இங்க வந்தேன்”, என்றார் சாரதா.

அனைவருக்கும் குழப்பமாக இருந்தது. “நீங்க நினைக்கிற மாதிரி அருண் நல்லவன் இல்லைங்க”, என்று ஆரம்பித்தார் சாரதா.

“அவன் நல்லவனா கெட்டவனான்னு இருக்குறது அப்புறம். முதல்ல நீங்க நல்லவங்களா? அது எப்படி எல்லா சொத்தையும் அமுக்கி கிட்டு உங்க வீட்டுக்காரரோட பிறந்தவங்களை ஏமாத்துவீங்களா நீங்க? அது உங்க குடும்ப கதை. இப்ப இங்க எதுக்கு வந்தீங்க? உங்க மகன் என் மகளை விரும்புறதைச் சொல்லி பொண்ணு கேக்க வந்தீங்களா?”, என்று கோபமாக கேட்டார் கனகராஜ். அவர் சொன்னதைக் கேட்டு வசந்தாவும் பாலாவும் அதிர்ச்சியானார்கள் என்றால் “இவருக்கு செழியனோட காதலைப் பத்தி தெரிஞ்சிருக்கு”, என்று எண்ணிக் கொண்டார் சாரதா.

“நான் என் வீட்டுக்காரர் கூட பிறந்தவங்களை ஏமாத்திட்டதா மதியழகன் உங்க கிட்ட சொன்னானா?”, என்று பொறுமையாக கேட்டார் சாரதா.

“இல்லை, அருண் தான்…”

Advertisement