Advertisement

“ஆமா, என் மகன் இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கயோ காணாம போய்ட்டான்”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா, நாங்களே திகைச்சு போய் தான் இருக்கோம். எப்படி இதை உங்க கிட்ட சொல்றதுன்னு தெரியலை. ஆனா சொல்லாம இருக்க முடியாதுன்னு தான் உங்களை கூப்பிட்டேன்”

“என்ன இப்படிச் சொல்றீங்க? என் பொண்ணோட வாழ்க்கைங்க. இப்ப வந்து இப்படிச் சொல்றீங்க? நிச்சயம் பண்ணிட்டு கல்யாணம் நடக்கலைன்னா என் பொண்ணு எதிர் காலம் என்ன ஆகுறது? மாப்பிள்ளை எங்க போனார்?”, என்று கலவரத்துடன் கேட்டார். 

“எங்க பையனே எங்க போனான்னு தெரியாம நாங்க தவிச்சிட்டு இருக்கோம். அவனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பண்ணினான்னு எனக்கு ஒண்ணுமே தெரியலை. இதுல உங்க பொண்ணைப் பத்தி நாங்க எங்க யோசிக்கிறது?”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார் மதியழகன். 

தலையில் கை வைத்த படி அமர்ந்திருந்த கனகராஜைப் பார்த்த வசந்தா “என்னங்க என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?”, என்று பதட்டமாக கேட்டாள். 

“நாம மோசம் போய்ட்டோம் வசந்தா. எல்லாமே போச்சு”

“என்னங்க சொல்றீங்க?”

“ஆமா வசந்தா, அந்த அருண் இந்த கல்யாணம் வேண்டாம்னு லட்டர் எழுதி வச்சிட்டு எங்கயோ போய்ட்டானாம்?”

“யாரு மாப்பிள்ளையா? நீங்க விளையாட்டுக்கு தானே சொல்றீங்க?”, என்று தவிப்புடன் கேட்டாள். 

“என் மக வாழ்க்கைல விளையாடுவேனா டி? அந்த மதியழகன் இப்ப தான் கால் பண்ணி பேசினார். தலைல இடியை தூக்கிப் போட்டுட்டார் டி”

“ஏங்க இது நம்ம பொண்ணு வாழ்க்கைங்க”

“கேட்டேனே, அதுக்கு என் மகனைப் பத்தியே தகவல் தெரியலை. இதுல உங்க பொண்ணைப் பத்தி எப்படி யோசிக்கன்னு கேக்குறான் அந்த ஆள். அவசர அவசரமா ஏற்பாடு பண்ணி நானே என் மகளை குழியில இறக்கிட்டேனே? அக்கம் பக்கம், நிச்சயத்துக்கு வந்த நம்ம சொந்தம் எல்லார்க் கிட்டயும் என்னன்னு சொல்லுவேன்.. ஐயோ, என் அக்காவுக்கு எல்லாம் விஷயம் தெரிஞ்சா கை கொட்டி சிரிப்பாளே”

“ஏங்க நீங்க கலங்காதீங்க. நம்ம பொண்ணுக்கு நாம இருக்கோம். நீங்க இடிஞ்சு போயிட்டா நாங்களும் இடிஞ்சிறுவோம். நாம தான் மாலினிக்கு ஆதவரா இருக்கணும்”

“இல்லை, என்னால என் பொண்ணை கண் கொண்டு பாக்க முடியாது. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன். நீயே பிள்ளைங்க கிட்ட பக்குவமா விசயத்தைச் சொல்லு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். 

“மாலு”, என்ற படி அறைக்குள் வந்தாள் வசந்தா. பாலா தூக்கக் கலக்கத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்க மாலினியோ கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தாள். அடுத்த நாள் பாலாவுக்கு பரீட்சை என்பதால் அவனை காலையிலே எழுப்பி படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் மாலினி. 

ஞாயிறு அன்று கூட தன்னைக் கொடுமைப் படுத்தும் அக்காவை என்ன செய்ய என்று தெரியாமல் எரிச்சலுடன் படித்துக் கொண்டிருந்தான். 

மாலினி பாலா படிக்க வேண்டும் என்பதால் தான் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் புத்தகத்தில் இருந்த எந்த வரியும் அவள் மனதில் பதிய வில்லை. 

அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு விருப்பமான பொருள் கையை விட்டுச் சென்றது போலவே வலித்தது. அது நிச்சயம் செழியன் தான். அவன் விஷயத்தில் தான் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு அவனைத் தான் பிடித்திருக்கிறது என்ற உண்மையை தாய் தந்தையிடம் சொல்லியிருக்கலாமோ என்ற யோசனை அவளைச் சுற்றியே வந்தது. 

“சொல்லிருந்தா அப்பா சரின்னு சொல்லிருப்பாங்க. அப்பா சொன்னா அம்மாவும் சரின்னு சொல்லிருந்துருப்பாங்க. ஒரு வேளை உன்னை நம்பி வேலைக்கு அனுப்பினோமேன்னு கோபப் பட்டிருந்தா கூட ரெண்டு மூணு நாள்ல சமாதானம் ஆகிருந்துருப்பாங்களே. ஏன் அவன் கிட்ட காதலை மறுத்தேன்? அவனுக்கு சம்மதம் சொல்லி இருக்கணும். அப்படி இல்லைன்னா எங்க வீட்ல வந்து பேசுங்கன்னு சொல்லி இருக்கணும். அன்னைக்கு மறுத்து பெரிய தப்பு பண்ணிட்டேன். இப்ப இந்த அருணை என் மனசு ஏத்துக்க மாட்டிக்குது. இன்னைக்கு பத்திரிக்கை வந்துரும். ஆனா எனக்கு செழியன் நினைப்பு தான் வருது. கடவுளே இதுல இருந்து நான் எப்படி வெளியே வருவேன்?”, என்று எண்ணி எண்ணி அவளுக்கு தலை வலி வந்தது. 

“அன்னைக்கு காதலை சொன்னவன் எதுக்கு இன்னொரு தடவை வந்து என் கிட்ட கேக்கலை? இன்னொரு தடவை கேட்டுருந்தா கூட சரின்னு சொல்லியிருப்பேனே? அவன் உண்மையிலே என்னைக் காதலிச்சிருந்தா என் கிட்ட மறுபடியும் சொல்லி இருப்பான் தானே?”, என்று யோசித்தாள். 

“மாலினி”, என்று அழைத்த படி அறைக்குள் வந்தாள் வசந்தா. ஆனால் மாலினி காதில் அவள் அழைத்தது விழவே இல்லை. 

“அக்கா அக்கா…”, என்று பாலா கத்திய பிறகு தான் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“என்ன யோசிச்சிட்டு இருக்க? புத்தகத்துலே மூழ்கிட்டியா என்ன? அம்மா அப்ப இருந்து உன்னைக் கூப்பிட்டுட்டு இருக்காங்க?”, என்று அவன் சொன்னதும் “ஆன் என்ன மா?”, என்று கேட்டாள். 

“பாப்பா ஒரு விஷயம் பேசணும் டா”, என்று சொன்ன வசந்தா முகம் கலங்கி இருந்தது. 

“என்ன ஆச்சு மா? ஏதோ போல இருக்கீங்க?”, என்று கேட்ட மாலினி பாலாவைப் பார்த்தாள். அவன் வசந்தாவின் வாயை பார்த்துக் கொண்டிருக்க “அம்மா, நாம அப்புறம் பேசலாமா? இவனுக்கு படிக்க நிறைய இருக்கு. நாம பேச ஆரம்பிச்சா இவனும் படிக்கிறதை விட்டுருவான்”, என்றாள்.

“சரி நான் அப்புறம் சொல்றேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள். வசந்தா சென்றதும் பாலா மாலினியை முறைக்க “என்ன லுக்கு? படிக்கிற வேலையைப் பாரு. அந்த கேள்வியை முடிச்சிட்டியா இல்லையா?”, என்று கேட்டதும் புத்தகம் புறம் திரும்பி விட்டான். 

காலை ஒன்பது மணிக்கு தான் அக்கா தம்பி இருவரும் புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு சாப்பிட வந்தார்கள். சமையல் அறையில் நின்ற வசந்தா முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன மா ஆச்சு? அப்ப என்ன சொல்ல வந்தீங்க?”, என்று கேட்டாள் மாலினி. 

“அது வந்து மாலு… நான்… நீ.. உன் கிட்ட அதை எப்படிச் சொல்வேன்?”

“என்ன மா? என்னன்னு சொல்லுங்க? ஏதாவது பிரச்சனையா?”

“உனக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை எங்கயோ ஓடிப் போய்ட்டான். உன் கல்யாணம் நடக்காதுன்னு நான் எப்படிச் சொல்வேன்?”, என்று மனதுக்குள் புலம்பினாள் அந்த தாய். பாலாவின் கவனம் கூட அன்னையின் மீதே இருந்தது. 

மாலினியும் வசந்தா என்ன சொல்லப் போகிறாள் என்ற குழப்பத்தில் அவள் வாயைப் பார்த்துக் கொண்டிருக்க அதே நேரம் கடுங் கோபத்துடன் தன்னுடைய அறையில் நடந்து கொண்டிருந்தான் செழியன். 

அவனுக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை. மாலினியின் தந்தையிடம் அருணைப் பற்றி சொல்லியாயிற்று. அருணையும் மிரட்டியாயிற்று. ஆனால் அருண் அவனுடைய மிரட்டலுக்கு பயந்த மாதிரி தெரிய வில்லையே. மாலினியின் தந்தையும் அவன் சொன்னதை நம்பினாரான்னு தெரியலையே? என்று எண்ணிக் கொண்டிருந்தான். 

ஆனால் என்ன நடந்தாலும் மாலினியைக் காப்பாற்றியே ஆக வேண்டும். அவள் யாரை திருமணம் செய்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எதிர் பார்த்தான். ஆனால் மாப்பிள்ளை அருண் நல்லவன் இல்லையே. 

“கடவுளே மாலினியை இந்த இக்கட்டுல சிக்க வைக்க கூடாது. எப்படியாவது அவ வாழ்க்கையைக் காப்பாத்தணும். அவ வாழ்க்கை காப்பாத்த படணும்னா அவ எனக்கு வேணும். என் கிட்ட இருந்தா தான் அவ வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்”, என்று முடிவு எடுத்தான். என்ன செய்யலாம் என்று எண்ணிய படியே அலுவலகம் வந்தான். 

அவன் கண்ணில் ‘வர்மா குருப் ஆப் கம்பெனிஸ்’ என்று எழுதி இருந்த பைல் தென்பட அவன் கண்கள் ஒளிர்ந்தது. தன்னுடைய போனை எடுத்தான். 

“அம்மா சொல்லு மா. ஏதோ பேச வந்துட்டு ஒரு மாதிரி நிக்குற? டேய் பாலா என்னன்னு கேளு டா”, என்றாள் மாலினி.

“அது வந்து… மாப்பிள்ளை….”, என்று வசந்தா தயங்க அப்போது மாலினி போன் அடித்தது. 

“ஒரு நிமிஷம் மா”, என்று சொல்லி விட்டு அதை எடுத்துப் பார்த்தாள். செழியன் பெயர் வரவும் ஏதோ மனதில் ஒரு அமைதி வந்தது போல இருந்தது அவளுக்கு. 

தொடரும்….

Advertisement