Advertisement

நிச்சயம் இதை அனுப்பினது அருண் தான் என்று செழியனுக்கு புரிந்தது. அவனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு கீழ்த் தனமாக டைப் செய்து அனுப்ப முடியாது என்று தெரிந்து கொண்டான். ஆனால் இதைச் சொன்னால் சாரதா நம்பனுமே என்று எண்ணி அன்னையைப் பார்த்தான். 

“அன்னைக்கு என் கிட்ட என்ன டா சொன்ன? பிடிக்காத பொண்ணை தொந்தரவு பண்ணுற அளவுக்கு நீங்க என்னை வளக்கலை மான்னு சொன்ன? இப்ப நீ பண்ணினதுக்கு என்ன அர்த்தம் செழியா? என் வளர்ப்பு தப்பா போச்சா? அவன் எப்படி அனுப்பிருக்கான்னு பாத்தியா? இல்லை உனக்கே ரெண்டு பொண்டாட்டி கட்டணும்னு ஆசை வந்துருச்சா?”

“அம்மா”

“நீ பண்ணுறதைப் பாத்தா எனக்கு அப்படி தான் டா தெரியுது. நீ ஒரு பொண்ணை விரும்பின. நானும் சம்மதம் சொன்னேன். அவளுக்கு உன்னைப் பிடிக்கலை. நீயும் விலகிட்ட. இப்ப உனக்கும் ஒரு பொண்ணு வரப் போகுது. இந்த நேரத்துல நீ இப்படி பண்ணினா என்ன டா அர்த்தம்?”

“அம்மா அந்த அருண் நல்லவன் இல்லை மா. இந்த மெஸ்ஸேஜ் அனுப்பினது கூட அவன் தான். ஆனா நீங்க நம்ப மாட்டீங்க. நான் மாலினியை உண்மையா விரும்பினேன் மா. இப்பவும் விரும்புறேன். நீங்க தானே சொன்னீங்க, நாம விரும்புற பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு. அதுக்கு தான் மா போராடுறேன். கண்ணு முன்னாடி அவ வாழ்க்கை அழிஞ்சு போறதை எப்படி கை கட்டி வேடிக்கை பாக்க? நான் மறுபடியும் அவ வாழ்க்கைக்குள்ள போக நினைக்கலை. அவ வாழ்க்கையை காப்பாத்தி அவ கைல கொடுக்க நினைக்கிறேன் மா. அந்த அருண் இல்லாம அவ வேற யாரைக் கல்யாணம் பண்ணினாலும் நான் அதை தடுக்க நினைக்க மாட்டேன். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிக்குது?”

“அருண் உன் தம்பி டா”

“அட போங்க மா. அவன் மனுசனே இல்லை. அதைச் சொல்லி இனி என்ன ஆகப் போகுது? நீங்க என்னையே சரியா புரிஞ்சிக்கலை? அவனையா புரிஞ்சிக்க போறீங்க? ஆனா ஒண்ணு மா. கட்டாயம் நான் இந்த கல்யாணத்தை நிறுத்துவேன். எனக்கு மாலினி வாழ்க்கை முக்கியம்”

“செழியா”

“அம்மா, என்னால அவளை அப்படியே விட்டுட முடியாது. அவளை அப்படி காவு கொடுத்துட்டு நான் மட்டும் நிம்மதியா வாழ்ந்துற முடியாது. அதனால நான் அவளைக் காப்பாத்த தான் போறேன். நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோங்க. எனக்கு உங்க கிட்ட கெட்ட பேர் வாங்கினாலும் பரவால்ல. அதை என்னால தாங்கிக்க முடியும். ஏன்னா நீங்க என்னோட அம்மா. ஆனா மாலினி அவன் கையில் மாட்டிக்கிட்டா அதுல இருந்து அவளால மீளவே முடியாது மா. பல தடவை அவ கையால சாப்பிட்டுருக்கேன். அந்த சாப்பாட்டுக்காவது நான் உண்மையா இருக்கணும். என்னை நன்றி கெட்டவனா எங்க அம்மா வளக்கலை? முடிஞ்சா என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. இல்லை அந்த அருணைத் தான் நீங்க நல்லவன்னு நினைச்சா என்னை கெட்டவனா நினைச்சு தலை முழுகிருங்க”, என்று சொல்லி விட்டு விருட்டென்று வெளியே சென்று விட்டான். 

அவன் சென்றதும் தளர்ந்து போய் அமர்ந்தவர் யோசனையில் ஆழ்ந்தார். இது வரை செழியன் ஒரு விஷயம் செய்தால் சரியாக இருக்கும் என்று நம்புபவர் தான் சாரதா. அதனால் இப்போதும் அவன் பக்கம் நியாயம் இருக்குமோ என்று நம்பினார்.

தன்னுடைய போனை எடுத்தவர் பத்மஜா என்ற எண்ணுக்கு அழைத்தார். 

அந்த பக்கம் எடுத்ததும் “பத்து நான் சாரதா பேசுறேன்”, என்றார்.

“சாரதா, எப்படி இருக்க?”

“எனக்கு என்ன? நான் நல்லா இருக்கேன்”

“செழியன் எப்படி இருக்கான்? எப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணப் போற?”

“அவன் நல்லா இருக்கான் பத்து? கல்யாண பேச்சு போயிட்டு இருக்கு. முடிவு பண்ணிட்டு சொல்றேன். சரி நீ இப்ப ஸ்டேஷன்ல இருக்கியா? இல்லை வீட்லயா?”

“ஸ்டேஷன்ல தான் சாரதா”

“எனக்கு ஒரு உதவி செய்யணுமே”

“என்ன டி உதவின்னுட்டு? என்னன்னு சொல்லு”

“நான் ஒரு நம்பர் அனுப்புறேன். அது யாரோடாதுன்னு கண்டு பிடிச்சு சொல்ல முடியுமா? நீ போலீஸ் தானே?”

“கட்டாயம் சொல்றேன். நீ அனுப்பி வை. சரி ஏதாவது பிரச்சனையா? கம்ப்லைண்ட் பைல் பண்ணுவோமா?”

“இப்போதைக்கு கம்ப்லைண்ட் வேண்டாம். ஆனா தேவைன்னா கொடுப்பேன். இந்த நம்பர்ல இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்துச்சு. அதான் விசாரிக்கலாம்னு”

“செழியன் அப்பா வீட்டு சைட் தான் எவனாவது இருக்கும் நீ அனுப்பி வை. நான் மதியம் உனக்கு பாத்து சொல்றேன்”, என்று போனை வைத்தார் பத்மஜா. 

இப்போது மெஸ்ஸேஜ் வந்த எண்ணை அவருக்கு அனுப்பி விட்டார் சாரதா. மதியம் பார்த்து சொல்கிறேன் என்று சொன்ன பத்மஜா அடுத்த பத்து நிமிடத்தில் அது அருண் பெயரில் இருக்கிறது என்று சொல்ல சாரதா அதிர்ந்து போனார். 

அது மட்டும் இல்லாமல் பத்மஜா தெளிவாக சில விசங்களை சொல்ல சாரதாவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அனைத்தையும் கேட்டு விட்டு பத்மஜாவுக்கு நன்றி சொல்லி விட்டு போனை வைத்தார். 

அம்மாவிடம் கத்தி விட்டு ஆபீஸ் வந்த செழியனுக்கு மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. “எப்படியாவது மாலினி திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும். அவளை அப்படியே விட்டா என் மனசாட்சியே என்னை மன்னிக்காது. ஆனா என்ன செய்ய? எப்படி செய்ய? இந்தக் அம்மா கூட என்னைப் புரிஞ்சிக்கலையே?”, என்று குழம்பித் தவித்தான்.  

அதற்கு அடுத்த நாள் எப்போதும் போல அனைவருக்கும் விடிந்தது. காலை ஒன்பது மணிக்கு கனகராஜ்க்கு ஒரு ஃபோன் வந்தது. அதை எடுத்துப் பேசினார். 

“சார் நாங்க பத்திரிக்கை ஆஃபிஸ்ல இருந்து பேசுறோம். நீங்க அடிக்க கொடுத்திருந்த பத்திரிக்கை ரெடி ஆகிருச்சு. வந்து வாங்கிக்கோங்க”

“சரி நான் கொஞ்ச நேரத்துல வரேன்”, என்று சொல்லி போனை வைத்த கனகராஜ் “வசந்தா… வசந்தா”, என அழைத்தார். 

“என்னங்க?”

“பத்திரிக்கை ஆஃபிஸ்ல இருந்து பேசினாங்க. கார்ட்ஸ் ரெடி ஆகிருச்சாம். நான் போய் வாங்கிட்டு வரேன்”

“சரிங்க, நாளைக்கே நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போய் பத்திரிக்கை வச்சிட்டு எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிப்போம். அப்புறம் நீங்க போகும் போது மாப்பிள்ளையோட அப்பாவையும் கூட்டிட்டு போங்க. அவங்களும் பத்திரிக்கை வாங்கணும்ல?”

“நல்லதா போச்சு நினைவு படுத்தின?”, என்று எண்ணிக் கொண்டு மதியழகனை அழைக்க நினைக்க அவரே கனகராஜை அழைத்தார். 

“சம்பந்தியே கூப்பிடுறார் வசந்தா”, என்று சொல்லி அவர் பேச ஆரம்பிக்க வசந்தா உள்ளே சென்று விட்டாள். 

“ஹலோ, நான் அருணோட அப்பா பேசுறேங்க”, என்றார் மதியழகன். 

“சொல்லுங்க சம்பந்தி, நானே உங்களுக்கு கூப்பிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே பண்ணிட்டீங்க”, என்றார் கனகராஜ். 

“நான் ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் கூப்பிட்டேன்”

“என்ன விஷயம் சம்பந்தி?”, என்று கேட்ட கனகராஜ் புருவம் உயர்ந்தது. 

“அது வந்து… எப்படி சொல்றதுன்னு தான் யோசிக்கிறேன்”, என்று தயங்கினார் மதியழகன். 

“என்ன ஆச்சு சம்பந்தி? இன்னைக்கு பத்திரிக்கை ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிருந்தாங்க. நாம அடிக்க கொடுத்த பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சாம். அதை வாங்க வரச் சொன்னாங்க. அதை வாங்க நீங்க வறீங்களா? இல்லை நானே வாங்கிட்டு வந்து வீட்ல கொடுத்துறவா?”

“இல்லை…. வந்து… அந்த பத்திரிக்கையை வாங்க வேண்டாம்”

“என்ன சம்பந்தி சொல்றீங்க?”

“ஆமா.,. அந்த பத்திரிக்கை வாங்க வேண்டாம். அது அடிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை”

“என்ன சொல்றீங்க சம்பந்தி?”

“இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்றேன்”

“என்ன?”, என்று கேட்டவர் அதிர்ந்து போனார். 

Advertisement