“ஆமா மாமா, செழியன் குடும்பமே பொறாமை பிடிச்ச குடும்பம். எங்க பெரியப்பா நல்லவர் தான். ஆனா எங்க பெரியம்மா அப்படி கிடையாது. இவனைத் தூண்டி விடுவாங்க. இவனும் எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டான். அதெல்லாம் நாங்க பொறுத்து தான் போனோம். ஆனா இப்ப இவன் என் வாழ்க்கையையும் கெடுக்க பாக்குறானே? இவனை…”, என்று பல்லைக் கடித்தான்.
அவரும் செழியனைப் பற்றி கோபமாக எண்ணிக் கொண்டார். அவர் கோபத்தை அதிகப் படுத்துவதற்காக “இன்னொரு ஆளும் இவனைப் பத்தி உங்களுக்கு சொல்லுவாங்க மாமா”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அத்தை சாவித்ரியை அழைத்தான்.
“சொல்லு டா அருண்? எப்படி இருக்குற? கல்யாண மாப்பிள்ளை நைட் நல்லா தூங்குறியா டா? மருமக கிட்ட பேசுனியா? அங்க எல்லாம் ஓகே தானே?”
“அத்தை, நான் நல்லாவே இல்லை”
“என்ன டா சொல்ற?”
“இந்த செழியன் இருக்கானே, அவன் என்ன பண்ணினான் தெரியுமா?”
“இந்த நேரத்துல அவனைப் பத்தி எதுக்குப்பா பேச்சு? என் கைக்குள்ள வளந்த பிள்ளை இப்ப என்னையே யாருன்னு கேக்குறான். சரி அவன் என்ன செஞ்சான்?”
“அவன் நல்லா இருப்பானா? சொத்தை எல்லாம் எடுத்தப்பவே நாம கேஸ் போடலாம்னு சொன்னேன். இந்த அண்ணந்தான் கேக்கலை. பெரிய அண்ணன் உயிரோட இருந்தா இப்படி எல்லாம் ஆகிருக்குமா? அவனை எல்லாம் அப்பவே தட்டிருக்கணும் டா. எவ்வளவு பெரிய வேலை பாத்துருக்கான் பாரு. சம்பந்தி நம்பிட்டாரா டா?”, என்று கவலையாக கேட்டாள்.
“இல்லை அத்தை, மாமா நல்லவர். கண்டிப்பா இந்த புரளியை எல்லாம் நம்ப மாட்டார்”, என்று சொல்லிக் கொண்டே கனகராஜைப் பார்த்தான்.
அவரும் “நான் உங்களை நம்புறேன் மாப்பிள்ளை”, என்று சொல்லி அவன் கையைப் பற்றிக் கொண்டார்.
“சரி அத்தை, நான் அப்புறம் பேசுறேன். நான் இப்ப சொன்னதை நீ மனசுல போட்டுக்கோ. யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். நம்ம சொந்தத்துக்குள்ளே இப்படி அடிச்சிக்கிட்டா நாளைக்கு யார் நம்ம குடும்பத்தை மதிப்பா சொல்லு? இதை இப்படியே விட்டுரு”
“சரி டா”
“சரி வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் கனகராஜைப் பார்த்தான்.
“இப்ப நான் சொல்றதை நம்புறீங்களா மாமா?”, என்று நயமாக கேட்டான்.
“நம்புறேன் மாப்பிள்ளை, நம்புறேன். இனி யார் சொன்னாலும் நான் உங்களை சந்தேகப் பட மாட்டேன்”
“ரொம்ப தேங்க்ஸ் மாமா. அப்புறம் உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்லணும்”
“என்ன மாப்பிள்ளை?”
“என் அண்ணன் மாலினியை ஒருதலை பட்சமா விரும்பினான்”
“மாப்பிள்ளை, அவனும் அதையே தான் சொன்னான். நீங்களும் சொல்றீங்க? அது உண்மையா?”
“ஆமா மாமா, எனக்கு முதல்ல இது தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் விட்டுக் கொடுத்துருப்பேன். ஆனா இப்ப நானும் மாலினியை விரும்புறேன். என்னால எப்படி அவளை விட முடியும்?”
“அவன் கிடக்கான் மாப்பிள்ளை. அவனுக்கு எல்லாம் நான் பொண்ணைக் கொடுத்துருவேனா? ஆனா அவனுக்கு எப்படி மாலினியைத் தெரியும்னு தான் குழப்பமா இருக்கு”
“உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா? மாலினியோட எம்.டி அவன் தான்”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?”
“ஆமா மாமா. எஸ். எஸ் இண்டஸ்ட்ரிஸ் அவனோடது தான். எங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டு அவன் பேக்டரி, மில், ஹோட்டல் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டான். அவன் கொஞ்சமா கொடுத்த பணத்தை வச்சு தான் அப்பா இந்த மீன் பண்ணையை ஆரம்பிச்சாங்க. அத்தை அவங்க பங்கு பணத்தை வச்சு தான் அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க”
“அப்படியா மாப்பிள்ளை? அவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி ஏமாத்திருப்பான்?”, என்று கோபத்தில் குதித்தார்.
“விடுங்க மாமா, இப்ப நமக்கு அது முக்கியம் இல்லை. அவன் கிட்ட இருந்து மாலினி தப்பிச்சிட்டா”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? ஆனா பாப்பா அவரை ரொம்ப நல்லவர்னு சொல்லுவாளே?”
“அப்படி நடிச்சிருக்கான் மாமா. அப்படி நடிச்சு அவளை ஏமாத்தினவன் அவ கிட்ட எதுக்கு காதலைச் சொன்னானாம்?”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?”
“நான் சொல்றது சத்தியம் மாமா. அவன் சொன்னதும் மாலினி நான் எங்க அப்பா அம்மா சொல்றதை தான் கேப்பேன்னு சொல்லிருக்கா. அதான் கல்யாணத்தை நிறுத்த உங்க கிட்ட வந்து நாடகம் ஆடிருக்கான். அவன் மாலினி கிட்ட காதலைச் சொன்னது எனக்கு எப்படித் தெரியும்னு நினைக்கிறீங்க?”
“எப்படி மாப்பிள்ளை?”
“அன்னைக்கு பத்திரிக்கை செலெக்ட் பண்ண போனப்ப மாலினி தான் சொல்லுச்சு”
“அப்படியா?”
“ஆமா மாமா, அவ கிட்ட கேட்டுறாதீங்க? நீங்களும் அத்தையும் கேட்டா மனசு வருத்தப் படுவீங்கன்னு தான் அவ சொல்லலையாம். ஆனா என் கிட்ட மறைக்க கூடாதுன்னு தான் எல்லாம் சொன்னா. அவ கிட்ட நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க. அப்புறம், அவளுக்கு அவன் என் அண்ணன்ன்னு எல்லாம் தெரியாது. கல்யாணம் ஆகுற வரைக்கும் நாம உசாரா இருக்கணும் மாமா. மாலினியை எங்கயும் வெளிய விடாதீங்க”
“சரிங்க மாப்பிள்ளை”
“அப்புறம் அவன் வேற ஏதாவது சொன்னானா மாமா?”
“ஒரு நம்பர் கொடுத்து அவனைப் பத்தி தெரிஞ்சிக்க சொன்னான்?”
“அதானே? நான் ஒரு கூறு கெட்டவன். நல்லவன் மாதிரி வந்து பேசினதும் உங்க கிட்ட கேட்டுட்டேனே? நீங்க நல்லவரா இருக்கப் போய் இதைப் பெருசு பண்ணலை. இல்லைன்னா என்ன ஆகிருக்கும்?”
“பரவால்ல மாமா, நேர்ல பேசினதுனால தானே பல உண்மைகள் தெரிய வந்தது. என்னைப் பத்தி நீங்க புரிஞ்சிக்கிட்டது எனக்கு சந்தோஷம் தான். நாம வாழ்க்கை முழுக்க ஒண்ணா இருக்கப் போறவங்க மாமா. நமக்குள்ள சந்தேகம்னு ஒண்ணு வரவே கூடாது”
“சரி தான் மாப்பிள்ளை. நான் இனி நிம்மதியா இருப்பேன்”
“சரிங்க மாமா, இந்த விஷயம் எல்லாம் நம்மளோடவே இருக்கட்டும். அத்தைக்கு கூட தெரிய வேண்டாம். வீணா அவங்களுக்கு மனக் கஷ்டம்”
“நீங்க தான் எவ்வளவு நல்லவரா இருக்கீங்க?”, என்று அவனை புகழ்ந்து தள்ளி விட்டுச் சென்றார். அவர் சென்றதும் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து மற்றொரு போனை எடுத்து சாரதாவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான்.
ஏதோ மெஸ்ஸேஜ் வரவும் எடுத்துப் பார்த்த சாரதா அதில் வந்திருந்ததைக் கண்டு திகைத்துப் போனார். “செழியா”, என்று அவர் கத்திய கத்தலில் அவசரமாக அங்கே வந்தவன் “என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான்.
“நீ மாலினியோட அப்பாவைப் போய் பாத்தியா?”
“அம்மா”
“சொல்லு பாத்தியா இல்லையா? அருணைப் பத்தி வேற தப்பா சொல்லி வச்சிருக்க? அதை தெரிஞ்ச எவனோ என்னை என்ன கேள்வி கேட்டுருக்கான் பாரு?”, என்று சொல்லி அந்த மெஸ்ஸேஜை காண்பித்தாள்.
குழப்பமாக அதை வாங்கிப் பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அதில் வந்திருந்தது இது தான். “என்ன சாரதா, உன் மகனுக்கு வள்ளி தெய்வானை மாதிரி ரெண்டு பொண்டாட்டிகளை கட்டி வைக்கணும்னு நினைக்கிற போல? ஒரு பக்கம் கமுக்கமா நிச்சயம் பண்ணிட்டு, இன்னொரு பக்கம் ஏற்கனவே அவன் லவ் பண்ணின பொண்ணைக் கல்யாணம் பண்ணத் தூண்டி விடுற போல? உனக்கு எதுக்கு இந்த கோத்து விடுற அல்ப்ப புத்தி? வேற யாருக்கோ நிச்சயம் பண்ணிருக்குற பிள்ளையோட அப்பா கிட்ட போய் உன் பிள்ளை மாப்பிள்ளையைப் பத்தி தப்பு தப்பா சொல்லிருக்கான்? இதெல்லாம் அவனுக்கு தேவையா? சொல்லி வை, இல்லை ரெண்டு பொண்டாட்டி என்ன? கை கால் கூட இல்லாம ஊனமா கிடப்பான் உன் மகன்”, என்று வந்திருந்தது.