Advertisement

“அம்மா”

“என்ன சொன்ன நீ? உன் மாலினியா? எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வார்த்தையை என் கிட்டயே சொல்லுவ? அப்ப மீனா யார் டா? அவளுக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போற? உன் கிட்ட கேட்டுட்டு தானே முடிவு பண்ணினேன்? பெரிய இவனாட்டம் டயலாக் பேசின. இப்ப வாய் கூசாம என் மாலினின்னு சொல்ற?”

“அம்மா புரிஞ்சிக்கோங்க மா. மாலினி பாவம் மா”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அருண் பொறுப்பான பையன். அவனை மாலினி பாத்துக்குவா”

“கடவுளே உங்களுக்கு எப்படி உண்மையை புரிய வைப்பேன்? அருண் நல்லவன் இல்லை மா”

“இப்ப அவன் மேல பழியைப் போட போறியா? பேசாம வேலையைப் போய் பாரு. இனி இந்த விஷயம் பத்தி நீ பேசக் கூடாது”, என்று சொல்லி விட்டு சாரதா அங்கிருந்து செல்ல தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை. ஆனால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவனுடைய உள் மனது எச்சரித்தது.

மாலினியிடம் சென்று பேசினால் அருண் சொன்னது போல அவள் அவனைத் தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. அவளை அடைய பொய் சொல்கிறேன் என்று தான் நினைப்பாள். அதனால் அவளது தந்தையிடம் பேச முடிவு எடுத்தான். அடுத்த நாள் அவரைக் காண டிப்போவுக்கே சென்றான்.

“சார், என் பேர் செழியன். நான் எம்.பி.ஏ முடிச்சிட்டு பிஸ்னஸ் பண்ணுறேன்”, என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். மாலினி வேலை பார்த்த கம்பெனி எம்.டி என்றெல்லாம் சொல்ல வில்லை. அப்படிச் சொன்னால் இவர் உடனே மாலினியிடம் உங்க எம்.டி இப்படிச் சொன்னார் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதால் அதை மறைத்து விட்டான்.

“சொல்லுங்க சார், நீங்க எதுக்காக என்னைப் பாக்க வந்தீங்க? அதுவும் டிப்போவுக்கு வந்துருக்கீங்க?”, என்று குழப்பமாக கேட்டார் கனகராஜ்.

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வீட்ல வந்து எப்படி சொல்லன்னு தெரியலை. அதான்”, என்று தயங்கினான்.

“பரவால்ல சொல்லுங்க, என்ன விஷயம்?”

“நீங்க மாலினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை நல்லவன் இல்லை சார்”, என்றதும் கனகராஜ் புருவம் உயர்ந்தது.

“என்ன டா திடீர்னு வந்து இப்படிச் சொல்றேன்னு நினைக்காதீங்க. மாலினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட ஆசை இருந்தது. ஆனா இப்ப நான் அதைச் சொல்ல வரலை. அவ வாழ்க்கையை முதல்ல காப்பாத்தணும். தப்பான இடத்துல தலையைக் கொடுத்துட்டீங்க சார். கவனமா வெளிய வரணும்.  நீங்க மாலினியை எனக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு பிளான் பண்ணி நான் இதைச் சொல்ல வரலை சார். என்னைப் பத்தி ஏதாவது விசாரிக்கணும்னா இந்த நம்பருக்கு பேசுங்க. என்னைப் பிடிக்கலைன்னா வேற நல்ல மாப்பிள்ளை கூட பாருங்க. ஆனா அந்த அருண் மட்டும் வேண்டாம் சார். அவனைக் கல்யாணம் பண்ணினா மாலினி வாழ்க்கை சின்னாபின்னமாகிரும். அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கு சார்”

“என்ன சொல்றீங்க நீங்க?”

“நான் உண்மையைத் தான் சொல்றேன் சார். தயவு செஞ்சு அந்த அருணுக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்து அவ வாழ்க்கையை கெடுத்துறாதீங்க”

“சரி நான் விசாரிச்சிக்கிறேன். நீங்க போங்க”, என்று கனகராஜ் சொன்னதும் அங்கிருந்து சென்றான். ஆனால் அங்கிருந்து வீட்டுக்கு போனதும் தான் “கடவுளே விசாரிப்பேன்னு அவர் சொன்னதும் நானும் சரின்னு வந்துட்டேன்? அவர் யார் கிட்ட விசாரிப்பார்? யார் கிட்ட விசாரிச்சலும் அவனை நல்லவன்னு தானே சொல்லுவாங்க? அவனைப் பத்தின உண்மை எனக்கு மட்டும் தானே தெரியும்? எல்லாம் போச்சே”, என்று தவித்துப் போனான்.

செழியன் பேசி விட்டுச் சென்றதும் “முன்னாடி எல்லாம் நல்ல காரியத்தை நிறுத்த மொட்டைக் கடுதாசி போடுவானுங்க. இப்ப எல்லாம் நேர்லே வந்து சொல்றாங்க?”, என்று தான் முதலில் கனகராஜ் நினைத்தார்.

ஆனால் நேரம் ஆக ஆக நெருப்பில்லாமல் புகையாதே என்று அவருக்கு உறுத்த ஆரம்பித்தது. கூடவே அவன் எனக்கும் மாலினியை கல்யாணம் பண்ண ஆசை என்று சொன்னது வேறு அவரைக் குழப்பியது.

“இவ்வளவு தைரியமா வந்து உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றான்னா காரணம் இல்லாமலா? மாலினிக்கு இவனைத் தெரியுமா? ஒரு வேளை அவளுக்கு அவனைப் பிடிக்குமா? அருணை அவளுக்கு பிடிச்சிருக்குன்னு தானே சொன்னா? ஆனாலும் ஏன் அப்ப அப்ப சோகமா இருக்கா?”, என்று பல கேள்விகள் கனகராஜ்க்கு வந்தது.

முதலில் அருணைப் பற்றி விசார்க்க முடிவு எடுத்து அவனை அழைத்தார். அவன் போனை எடுத்ததும் “மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.

“சொல்லுங்க மாமா”, என்று பவ்வியமாக பேசினான் அருண்.

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே”, என்றதும் அவனுக்கு திக்கென்று இருந்தது. “இந்த செழியன் எதுவும் வேலையைக் காட்டிட்டானா?”, என்று குழம்பியவன் “சொல்லுங்க“, என்றான்.

“நேர்ல பாக்கலாமா மாப்பிள்ளை?”

அவரது ‘மாப்பிள்ளை’ என்ற அழைப்பு அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அதனால் “வீட்டுக்கு வறீங்களா மாமா?”, என்று கேட்டான்.

“இல்லை மாப்பிள்ளை, வெளிய எங்கயாவது பாத்து பேசினா தேவலை”

“சரி நான் உங்களைப் பாக்க வரேன். டிப்போல இருங்க”

“சரிங்க மாப்பிள்ளை”, என்று சொல்லி போனை வைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு ஒரு ரெஸ்டாரண்ட் வந்தான்.

இருவருக்கும் டீ சொல்லியவன் “சொல்லுங்க மாமா ஏதோ பேசணும்னு சொன்னீங்க?”, என்று கேட்டான். முன்னெச்சரிக்கையாக அவன் அவருடைய கண்களைப் பார்த்து பேசியதும் அவரால் அவன் மேல் தவறு இருப்பதாக சந்தேகப் பட முடியவில்லை.

“இல்லை மாப்பிள்ளை, உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். நான் உங்களை சந்தேகப் பட்டு கேக்க வரலை. ஆனா கேள்விப் பட்டதை உங்க கிட்ட நேரடியா கேட்டுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும். பொண்ணைப் பெத்துட்டேனா? அதனால தான்”

“என்னன்னு சொல்லுங்க மாமா. என் கிட்ட என்ன தயக்கம்? நானும் உங்களுக்கு மகன் மாதிரி தான்”, என்று ஒரே போடாக போட்டான்.

“இன்னைக்கு காலைல செழியன்னு ஒருத்தர் என்னைப் பாக்க வந்திருந்தார்”

“ஓ”, என்று குழப்பமாக அவரைப் பார்த்தான். உள்ளுக்குள் கோபம் கனன்றது. அதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“அவரை உங்களுக்கு தெரியுமா மாப்பிள்ளை?”

“தெரியும் மாமா, அவன் கண்டிப்பா என்னைப் பத்தி நல்ல விதமா சொல்லிருக்க மாட்டான். அதுவும் எனக்கு தெரியும்”

“எப்படி மாப்பிள்ளை உங்களுக்கு தெரியும்? அவன் உங்களைப் பத்தி தப்பு தப்பா சொல்றான் மாப்பிள்ளை. எனக்கு கேட்டதுல இருந்து மனசே சரி இல்லை”

“முதல்ல என்ன சொன்னான்னு சொல்லுங்க மாமா?”

“உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குனு சொன்னான் மாப்பிள்ளை”

“ஓஹோ, நீங்க அதை நம்பிட்டீங்களா மாமா?”

“ஐயோ இல்லை மாப்பிள்ளை, நம்பினா உங்க கிட்ட நான் இப்படி நேரடியா வந்து கேட்டுட்டு இருப்பேனா?”

“நல்லது மாமா, ஒரு நல்ல காரியம் நடக்குறப்ப ஆயிரம் தடங்கள் வரும். அதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது. என் கிட்ட கூட தான் மாலினி வேலை பாக்குற இடத்துல யாரையோ லவ் பண்ணுறான்னு சொன்னாங்க”

“ஐயோ அப்படி எல்லாம் கிடையாது மாப்பிளை. என் பொண்ணு தங்கம்”, என்று அவர் பதற “பதறாதீங்க மாமா. எனக்கு தெரியும். நான் நம்பலை. சரி இப்ப என் மேல நீங்க வச்சிருக்குற குற்ற சாட்டை நிரூபிக்க வேண்டியது என்னோட பொறுப்பு”, என்றான்.

பின் தன்னுடைய போனை எடுத்து எதையோ தேடி அதை கனகராஜிடம் காட்டி “என்னைப் பத்தி தப்பா சொன்னது இவனா பாருங்க மாமா?”, என்று கேட்டான்.

“ஆமா மாப்பிள்ளை, இவன் தான். இவனே தான்”, என்று பதட்டத்துடன் சொன்னார். அவன் போட்டோ அருணின் போனில் எப்படி என்று அவருக்கு குழப்பமாக இருந்தது.

“இவன் வேற யாரும் இல்லை. என்னோட அண்ணன் தான். என்னோட பெரியப்பா பையன். சொந்தம் எல்லாம் எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா மாமா?”, என்று சலிப்புடன் கேட்டான்.

“என்ன மாப்பிளை சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் கனகராஜ்.

தொடரும்…..

Advertisement