Advertisement

“வா டா அண்ணா, சூடான வெயிலுக்கு ஜூஸ் குடிக்க வந்தியா? ஜூஸ் குடிச்சும் நீ கூலா ஆன மாதிரி தெரியலையே? உள்ளுக்குள்ள தக தகன்னு எறியுற மாதிரி இருக்கு?”, என்று நக்கலாக கேட்டான்.

“எனக்கு எரியுறது இருக்கட்டும்? உனக்கு மாலினி கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு?”, என்று கேட்டான்.

“அடப்பாவி, இது உனக்கு தெரியாதா? உன் காதலி இதை உன் கிட்டச் சொல்லலையா?”

“என்ன டா உளறுற?”

“என் வருங்கால பொண்டாட்டி தான் மாலினின்னு அவ உன் கிட்ட சொல்லலையா? வாட் எ பிட்டி? வாட் எ பிட்டி?”, என்று நக்கலாக சிரித்தான்.

“என்ன டா சொல்ற? அப்படின்னா நீ தான் மாலினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளையா?”

“சாட்சாத் நானே தான் பிரதர்”

“எவ்வளவு தைரியம்? உனக்கு எல்லாம் கல்யாணமே ஒரு கேடு. உனக்கு மாலினி கேட்குதோ? அவ தேவதை டா. அவ வாழ்க்கையைக் கெடுக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?”, என்று அவன் சட்டையைப் பிடித்தான்.

“என் சட்டையை பிடி, என்னை அடி, தூக்கிப் போட்டு வேணும்னா மிதி. நான் கண்டுக்கவே மாட்டேன். ஏன்னா நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். நான் நினைச்சது நடந்த சந்தோசத்துல இருக்கேன்”

“அந்த சந்தோஷத்தை இப்பவே அழிக்கிறேன் டா. மாலினி கிட்ட எல்லாம் சொல்றேன்”

“சொல்லு, நானும் சொல்றேன். நீ மாலினியை அடையணும்னு வெறில தான் என்னைப் பத்தி தப்பா சொல்றேன்னு சொல்லுவேன்”

“அவ நம்ப மாட்டா டா”

“கண்டிப்பா நம்புவா. ஏன்னா நீ மாலினியை விரும்புற விஷயம் எனக்கு தெரியும்னு சொல்லுவேன். அதையும் நீ தான் என் கிட்ட சொன்னேன்னு சொல்லுவேன். எனக்கு மாலினியை விட்டுக் கொடுன்னு கேட்டான், நான் முடியாதுன்னு சொன்னதும் என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லிக் கொடுக்குறான்னு சொல்லுவேன். அப்ப அவ என்னைத் தானே நம்புவா”

“டேய்… அருண்… என்னை கொலைகாரனா ஆக்காதே. முதல்ல நான் அவளை விரும்புற விஷயம் உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு?”

“அப்ப நீ அவளை உண்மையாவே லவ் பண்ணுறியா?”, என்று போலி அதிர்ச்சியுடன் கேட்க அவனை முறைத்துப் பார்த்தான் செழியன்.

“நான் சும்மா டவுட்ல தான் கேட்டேன். ஆனா நீயா தான் உளறிட்ட பிரதர். அன்னைக்கு பார்க் ஹோட்டல்ல ரெண்டு பேரும் உக்காந்திருந்தப்ப உன் கண்ணுல வழிஞ்ச காதலைப் பாத்தேன் டா. அதைப் பாத்ததும் எனக்கு வந்துச்சு பாரு வெறி? எங்க சொத்தை எல்லாம் ஆட்டைய போட்ட உன்னை நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு அந்த நிமிஷம் முடிவு பண்ணினேன். உன் நிம்மதியைக் கெடுக்க அவளை உன் கிட்ட இருந்து பிரிக்க திட்டம் போட்டேன். நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு”

“என்ன டா பண்ணின?”

“இன்னுமா உனக்கு புரியலை பிரதர்? மாலினி வீட்டு அட்ரஸ் கண்டு பிடிச்சு எங்க அப்பா கிட்ட சொல்லி பொண்ணு கேக்கச் சொன்னேன். அவரும் கேட்டார். மாலினி அப்பாவும் பொண்ணு தறேன்னு சொல்லிட்டார்”

“அவ நான் லவ் பண்ணுற பொண்ணு டா”

“அதைக் கெடுக்கணும்னு தானே நான் பிளான் பண்ணினேன். இப்ப பிளான் சக்ஸஸ். இனி அவ உனக்கு இல்லை டா. என் வீட்ல வேலைக்காரியா இருப்பா. சொத்துல பங்கு கேட்டு வந்த எங்க அப்பாவை வெளிய துரத்தி விட்டு அசிங்கப் படுத்தி மொத்த சொத்தையும் எடுத்துகிட்டல்ல? அதுக்கு தான் நீ லவ் பண்ண பொண்ணை காலம் முழுக்க என் வீட்டுக்கு வேலைக்காரியா மாத்த முடிவு பண்ணினேன்? எப்படி என் மாஸ்டர் பிளான்?”

“சகிக்கலை. நான் இதை நடக்க விட மாட்டேன். மாலினியை உன் கிட்ட இருந்து காப்பாத்தியே தீருவேன் டா. உன்னைப் பத்திச் சொல்வேன். உன் சாக்கடை புத்தியை எல்லாருக்கும் புரிய வைப்பேன்”

“நீ என்ன வேணும்னாலும் செய். ஆனா கடைசில உனக்கு தான் பிரதர் கெட்ட பேர் வரும். அதுவும் எனக்கு சந்தோஷம் தான். என்னைப் பத்தி உனக்கு மட்டும் தான் தெரியும். அதுக்கு சாட்சியே இல்லை. நீ என்னைப் பத்தி தப்பா சொன்னா மாலினியை அடையுறதுக்கு என்னைப் பத்தி தப்பா சொல்றேன்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. மாலினி கூட அப்படித் தான் நினைப்பா. அவ கிட்ட நீ கெட்டவனா மாற மாற எனக்கு ஹீரோ அந்தஸ்து உயரும் டா”

“டேய்….”, என்று கோபத்தில் கர்ஜித்தான்.

“ஆமா உனக்கு எதுக்கு கோபம் வருது? இந்த பக்கம் காதல் சரி வரலைன்னதும் அந்த பக்கம் வேற பொண்ணு பாத்துட்ட போல? இன்னும் நாலஞ்சு நாள்ல நிச்சயதார்த்தமாமே? நீ எனக்கு மேல வில்லன் டா. இதுல என்னை குறை சொல்ல வந்துட்ட? நீ வேற பொண்ணை ஒரு வாரத்துல பாத்துட்ட அப்படிங்குற விஷயம் மாலினிக்கு தெரிஞ்சதுன்னு வை, இவ்வளவு தான் உன் காதலான்னு மாலினியே கேப்பா. இப்ப அவ உன் காதல் தெய்வீக காதல்ன்னு நினைச்சிட்டு இருக்கா. அது பிஸ்கோத்து காதல்ன்னு அவளுக்கு தெரிஞ்சது… எனக்கு கொண்டாட்டம் தான் பிரதர்”

“டேய்…”

“நீ இப்படியே கத்திக்கிட்டு கிட. நான் போறேன். என் வருங்கால பொண்டாட்டி வெயிட்டிங். சாரி சாரி, என் வீட்டு வேலைக்காரி வெயிட்டிங். பாய் பிரதர்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

தளர்ந்து போய் அமர்ந்தான் செழியன். அவனால் இவ்வளவு பெரிய விசயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

மாலினி நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தால் அவள் மொத்த வாழ்வுமே பாழாக போகிறதே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. என்ன ஆனாலும் இந்த திருமணத்தை நடத்த விடக் கூடாது என்று முடிவு எடுத்தவன் தாயைத் தேடிச் சென்றான்.

அவன் பதட்டத்தைக் கண்டு திகைத்துப் போன சாரதா “என்ன ஆச்சு கண்ணா?”, என்று கேட்டார்.

“மாம், மாலினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை யார் தெரியுமா?”

“மாலினியா… இப்ப என்ன அவளைப் பத்தி பேச்சு? சரி யார் மாப்பிள்ளை?”

“அருண் தான் மாம்”

“என்ன டா சொல்ற? நம்ம அருணா?”

“ஆமா அவனே தான்?”

“நம்ம அருணுக்கு கல்யாணமா? நிஜமாவா டா? எனக்கு சந்தோஷமா இருக்கு. மாலினி அவனுக்கு ஏத்த பொண்ணு தான்”

“மா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவன் எல்லாம் ஒரு ஆள்ன்னு”

“என்ன டா இப்படிச் சொல்லிட்ட? நீங்க ரெண்டு பேரும் ரெண்டு மாசம் முன்னப் பின்ன தான் பிறந்தீங்க டா. சின்ன வயசுல என் கைக்குள்ளே தான் கிடப்பான். அவனும் எனக்கு மகன் தான் டா”

“அவன் குணம் தெரிஞ்சா நீங்க தாங்க மாட்டீங்க மாம்?”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “அதெல்லாம் சின்ன வயசுல மாம். இப்ப அவன் உங்களையும் என்னையும் எதிரியா பாக்குறான். நம்மளை அழிக்க நினைக்கிறான்”, என்றான்.

“என்ன டா சொல்ற?”

“ஆமா மா, சித்தி, சித்தப்பா, அத்தை மாமா நாலு பேரும் அவன் கிட்ட நம்மளைப் பத்தி தப்பு தப்பா சொல்லி எதிரி மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க?”

“அப்படியா டா? அவங்க சொன்னா அருண் கேக்க மாட்டான் டா. அவனுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்”

“ஐயோ அம்மா, உங்களுக்கு எப்படி சொல்றது? நம்மளைப் பழி வாங்க தான் அவன் மாலினியை கல்யாணம் பண்ண பிளான் போட்டுருக்கான் மா”

“செழியா”

“ஆமா மா, சத்தியமா இதான் உண்மை. அதை அவனே சொல்றான். இந்த கல்யானத்தை நிறுத்தணும் மா”

“வாயை மூடு டா”

“அம்மா”

“அவன் என்ன நோக்கத்துக்காக வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்கட்டும். ஆனா நடக்க இருக்குற நல்ல காரியத்தை நாம நிறுத்தக் கூடாது”

“அப்படின்னா நம்ம மாலினி வாழ்க்கை”

“மாலினியோட நல்ல குணத்தை கல்யாணம் முடிஞ்சதும் அருண் புரிஞ்சிக்குவான் டா. அவன் அவ மூலமா திருந்தணும்னு கடவுள் முடிச்சு போட்டுட்டார் போல?”

“அம்மா கண்டவன் எல்லாம் திருந்துறதுக்கு என் மாலினி வாழ்க்கை தான் கிடைச்சதா?”, என்று அவன் கொந்தளிக்க “செழியா..”, என்று கத்தி விட்டார் சாரதா.

Advertisement