Advertisement

அத்தியாயம் 11 

உடலைப் புதைப்பது கல்லறை

என்றால் உயிரைப் புதைக்கும்

இதயமும் கல்லறை தான்!!!

சிறு சிரிப்புடன் மீனாவின் கையைப் பற்றி குலுக்கிய செழியன் “தேங்க்ஸ், ரொம்ப டென்சன்ல வந்தேன். எனக்கு இந்த பொண்ணு பாக்குறது எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது”, என்றான்.

“விடுங்க, இப்ப ஓகே தானே?”, என்று புரிதலுடன் கேட்டாள்.

“டபுள் ஓகே. சரி முதல்ல நான் என்னைப் பத்தி சொல்லிறேன். என்னோட பேர், படிப்பு பத்தி ஏதாவது சொன்னாங்களா?”

“எல்லாமே சொன்னாங்க?”

“சரி அப்படினா அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னொரு விஷயம் நான் உங்க கிட்ட சொல்லணும்”

“சொல்லுங்க”

“எனக்கு ஒரு லவ் இருந்துச்சு”

“வாட்?”

“யெஸ், இன்னும் லவ் இருக்குனு கூட சொல்லலாம். ஒரு பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சது. அவ கிட்ட என் காதலைச் சொன்னேன். ஆனா அவ என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா?”

“உங்களையும் ஒரு பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிருச்சா? எனக்கு ஆச்சர்யமா இருக்கு”

“யெஸ்”

“எதனாலன்னு கேட்டீங்களா?”

“பிடிக்கலைன்னு சொன்ன பிறகு அவளை டிஸ்டர்ப் பண்ணுறது சரின்னு தோணலை. அது மட்டும் இல்லை அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சாம்”

“ஓ, நீங்க அவங்களை மறந்துட்டீங்களா?”

“ஆமான்னு பொய் சொல்ல மாட்டேன். அதே நேரம் பிடிக்காத பொண்ணை நினைக்கிறது தப்புன்னு எனக்கு தெரியும். ஆனா மறக்க டிரை பண்ணுறேன். அதுக்குள்ள அம்மா இப்படி ஒரு ஏற்பாடு பண்ணிட்டாங்க”

“ம்ம்”

“என்னைப் பத்தி சொல்லிட்டேன். நீங்க ஒண்ணும் சொல்லலையே?”

“என் மனசுல இந்த லவ் எல்லாம் எதுவும் இல்லை. கல்யாணம் முடியுற வரைக்கும் லவ் பண்ணனும் அப்படிங்குற ஆசையும் எனக்கு இல்லை. பிடிச்சவங்களைப் பாத்ததும் மணி அடிக்குமாம், தேவதை பாட்டு பாடுவாங்கன்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்க மேல கூட எனக்கு தோழமையை தவிர எந்த உணர்வும் உண்டாகலை. நீங்க உண்மையை சொன்னதுனால எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. கல்யாணம் முடியுற வரைக்கும் நாம நல்ல பிரண்ட்ஸா இருப்போம். அதுக்கப்புறமும் உங்க மனசு மாறுற வரைக்கும் நாம பிரண்ட்ஸ் தான். அதுக்கப்புறம் நீங்களும் லவ் பண்ணின பிறகு நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம். எப்படி என் பிளான்? உங்களுக்கு ஒகேயா?”, என்று கேட்டதும் நிம்மதியுடன் சிரித்தான் செழியன்.

“என்ன சிரிக்கிறீங்க? பதில் சொல்லுங்க செழியன்”

“இவ்வளவு புரிதலோட நீங்க இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை மீனா. ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொன்ன பிளான் எனக்கு ஓகே தான்”

“சரி வாங்க போகலாம். நாம போற வரைக்கும் எல்லாரும் என்ன ஆகுமோ எது ஆகுமோன்னு பதட்டத்துல இருப்பாங்க”, என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றாள்.

அதன் பின் பெரியவர்கள் இருவரிடமும் சம்மதம் கேட்க இருவரும் உடனேயே சம்மதம் என்று தெரிவித்தார்கள். அங்கிருந்து கிளம்பும் போது கண்களாலே மீனாவிடம் விடை பெற்றுச் செல்லும் அளவுக்கு அவளைத் தோழியாக எண்ணினான் செழியன்.

திரும்பிப் போகும் போது “என்ன டா கண்ணா? மீனா கிட்ட பேசுனியா? உனக்கு உண்மையிலே புடிச்சிருக்கா? நம்ம வீட்டுக்கு சரி வருவாளா?”, என்று கேட்டார் சாரதா.

“யெஸ் மா, ஸ்வீட் கேர்ள்”

“உனக்கு உண்மையிலே அவளைப் புடிச்சிருக்கா செழியா? அம்மா உனக்கு தவறா எதுவும் செய்யலையே”

“இல்லை மா, என்னோட நல்லதுக்கு தான் நீங்க செய்வீங்க”

“ஆனா மாலினியை நீ….”

“இனி அவளைப் பத்தி பேச என்ன இருக்கு மா? மீனா கிட்டயும் மாலினி பத்தி சொல்லிட்டேன். அவளும் அதைப் பெருசா எடுத்துக்கலை”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் பா”

“ஆமா, நீங்க கவலை படாதீங்க மா. மாலினி என்னோட வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயம். இனி அதை திருப்பி பாக்குறதுல எந்த அர்த்தமும் இல்லை”

“சில அத்தியாயங்கள் எத்தனை முறை திருப்பிப் பாத்தாலும் அந்த உணர்வுகள் மாறாது. நம் மனதை விட்டு நீங்கவும் செய்யாது”, என்று சொல்ல வந்த சாரதா எதுவும் சொல்லாமல் அவன் தோளில் தட்டி விட்டுச் சென்றார்.

மாலினி வீட்டில் திருமண வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்க இங்கே செழியன் மற்றும் மீனாவுக்கும் அடுத்த ஒரு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் என்றும் மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்றும் பேசி முடிக்கப் பட்டது.

சாரதா மகனது நிச்சயதார்த்த வேலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்ததால் கம்பெனி பக்கம் வரவே இல்லை. புதிதாக வரப் போகும் மருமகளுக்கு நிச்சயத்தின் போது போடுவதற்காக ஒரு வைர செட் ஒன்றை முதலில் வாங்கினார். அதனுடன் சீராக கொண்டு செல்ல பட்டுச் சேலை, மற்ற அலங்கார பொருள்கள் வாங்கி விட்டு பழம் பலகாரத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டும் வந்தார்.

செழியன் தான் ஆபீஸ் சென்று வந்தான். குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று செழியன் சொன்னதால் மற்ற யாருக்கும் நிச்சயதார்த்தம் பற்றிச் சாரதா சொல்ல வில்லை.

நாட்கள் நிற்காமல் நகர ஒரு நாள் அருண் காலையிலே மாலினி வீட்டுக்கு வந்தான்.

“வாங்க மாப்பிள்ளை”, என்று வரவேற்றனர் கனகராஜும் வசந்தாவும். பாலாவும் மாலினியும் “வாங்க”, என்று மட்டும் சொன்னார்கள்.

“மாமா, இன்னைக்கு அப்பா என்னையும் மாலினியையும் போய் பத்திரிக்கை மாடல் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க”, என்றான்.

“அப்படீங்களா மாப்பிள்ளை? சம்பந்தி சரியா தான் சொல்லிருக்கார். இன்னைக்கு ரொம்ப நல்ல நாள். நீங்க போய் மாடல் கொடுத்துட்டு வாங்க. அப்புறமா நானும் சம்பந்தியும் போய் பேர் கொடுத்துட்டு வரோம்”, என்றார் கனகராஜ்.

“சரிங்க மாமா, மாலினியை கூட்டிட்டு போறேன்”, என்று அவன் சொல்ல “என்ன மாலினி, மாப்பிள்ளை சொன்னதைக் கேட்ட தானே? போய்க் கிளம்பி வா”, என்று மகளை விரட்டினார்.

வேறு வழி இல்லாமல் கிளம்பி வந்தாள். அவள் ஏறியதும் காரை எடுத்தான் அருண். ஒரு பத்திரிக்கை ஆபீஸ் சென்றவன் பத்திரிக்கையை தேர்வு செய்ய சொன்னான். அவள் அவனையே எடுக்க சொல்ல அவன் பார்த்து பார்த்து ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொடுத்தான்.

பின் அங்கிருந்து வெளியே வந்ததும் “ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாமா? எனக்கு ரொம்ப பசிக்குது”, என்றான்.

“சரி”, என்ற படி அவனுடன் போனாள். அங்கே சென்று அமர்ந்ததும் “என்ன சாப்பிடுற?”, என்று கேட்டான். செழியனுடன் ஹோட்டலுக்கு சென்ற நினைவில் மூழ்கி இருந்தவள் “எனக்கு ஜூஸ் போதும்”, என்றாள்.

அவளுக்கு ஆரஞ்ச் ஜூசும், அவனுக்கு மாதுளை ஜூசும் ஆர்டர் செய்த அருண் அவளிடம் சாதாரணமாக சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க அவனுக்கு அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் மீது அவளுக்கு வேறு எந்த சந்தேகமும் வர வில்லை. ஒரு வேளை சந்தேகப் படும் அளவிற்கு அவன் அவள் மனதில் ஆழமாக பதிய வில்லையோ என்னவோ?

இருவருக்கும் ஜூஸ் வந்து விட அதைக் குடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது தான் செழியன் அவர்களைக் கண்டான். “மாலினி பக்கத்துல இருக்குறது அருணா?”, என்று அதிர்ந்தவனுக்கு அவனுடைய கண்களையே நம்ப முடியவில்லை.

“இவ இவன் கூட என்ன பண்ணுறா? இது சரி இல்லையே?”, என்று எண்ணிய படி அவளைப் பார்த்தான். அதே நேரம் அருணும் செழியனைப் பார்த்து விட்டான்.

மாலினி வேறொரு ஆணுடன் வந்திருந்தால் அது அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை என்று எண்ணி அவர்களை கடந்து சென்றிருப்பான். ஆனால் அருணைக் கண்ட பின்னால் அப்படி போக முடியவில்லை. ஒரு வேளை அந்த அருண் தான் மாப்பிள்ளையாக இருக்குமோ என்று அவனுக்கு பதட்டமாக இருந்தது.

மாப்பிள்ளையைப் பற்றி அவளிடம் கேட்காமல் இருந்த தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன் அவர்களை நோக்கிச் சென்றான்.

செழியன் தங்களை நோக்கி வருவதை ஓரக் கண்ணால் பார்த்த அருண் “நீ போய் கார்ல உக்காரு மாலினி. நான் பில் கட்டிட்டு வரேன்”, என்றான்.

“சரி”, என்று சொல்லி விட்டு அவள் எழுந்து சென்று விட்டாள். போன அவளைப் பார்த்த படி அருண் அருகே வந்து நின்ற செழியன் அவனை முறைத்துப் பார்த்தான்.

Advertisement