சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு அறைக்குள் வந்த செழியனைக் கண்டு நிம்மதியானாள் மாலினி. அவள் முகத்தில் வந்த நிம்மதியைக் கண்ட செழியனுக்கு சாரதா சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்தான். அந்த புன்னகைக்கு பின் இருக்கும் வலி புரிந்த மாலினி அது புரியாதது போல சாதாரணமாக புன்னகைத்தாள்.

அதன் பின் இருவரும் தங்களின் வேலையில் கவனம் செலுத்த முயன்றார்கள். அதற்குள் மதிய இடைவேளை வந்து விட “சார் உங்களுக்கு சாப்பாடு”, என்று கொடுத்தாள்.

“தேங்க்ஸ் மாலினி. இங்க வச்சிருங்க. அப்புறம் ஒரு விஷயம். நாளைக்கு சாப்பாடு எடுத்துட்டு வர வேண்டாம்”, என்று அவன் சொன்னதும் அவள் முகம் கூம்பிப் போனது.

“நான் கோபப் பட்டுச் சொல்லலை மாலினி. எப்படியும் நீங்க வேலையை விட்டு போன பிறகு நான் மதியம் சாப்பிடப் போறது இல்லை. அது நாளைலே இருந்தே இருக்கட்டுமே?”

“இப்படிச் சொல்லாதீங்க சார்? எனக்கு கஷ்டமா இருக்கு. நான் வர வரைக்கும் நானே உங்களுக்கு கொண்டு வரேன். பிளீஸ் எனக்கு இந்த நிம்மதியாவது கொடுங்க”, என்று கண்ணீருடன் கேட்டாள். அவளுடைய கண்ணீருக்கு விடை தெரியாமல் போனாலும் சரி என்று மட்டும் தலையாட்டினான்.

இருவருமே தங்களின் இருக்கையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாலும் இருவருக்கும் உணவு உள்ளே செல்வேனா என்று இருந்தது. மனம் முழுக்க தீயாய் தகித்துக் கொண்டிருக்க எப்படி உணவு இறங்குமாம்? ஆனால் தான் சாப்பிட வில்லை என்றால் அவள் நிச்சயம் வருத்தப் படுவாள் என்பதால் மருந்து விழுங்குவது போல அந்த உணவை விழுங்கியவன் டப்பாவை கழுவி வைத்து விட்டு அவனுடைய பெர்சனல் அறைக்கு சென்று விட்டான். அதற்கு மேல் ஒற்றை பருக்கை கூட உண்ணாமல் மூடி வைத்தாள் மாலினி. தனக்காக அவன் சாதாரணமாக நடமாடுவதே அவளை வாள் கொண்டு அறுத்தது.

அதன் பின்னர் நாட்கள் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. மாலினி நான்கு நாட்கள் தான் வேலைக்கு வருவேன் என்று சொன்ன நான்கு நாட்களும் முடிந்தது. அந்த நான்கு நாட்களும் அவள் தான் அவனுக்கு உணவு எடுத்து வந்தாள்.

அன்று மாலை அவள் வீட்டுக்கு கிளம்பும் போது “சார்”, என்று அழைத்தாள்.

“சொல்லுங்க மாலினி”

“நான் கிளம்புறேன் சார்”

“ம்ம்”

“நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா என்னை மன்னிச்சிருங்க சார்”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க ஹேப்பியா இருங்க”

“சாரி சார், எல்லா வேலையும் எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க. ஆனா நான் கிளம்புறேன். நீங்க வேற ஆளை டிரைன் பண்ணனும்”

“ஹே மாலினி, எது நடக்கணுமோ அது தான் நடக்கும். நீங்க பாத்து போயிட்டு வாங்க. ஹேப்பி மேரிட் லைப்”, என்று அவன் சொல்ல கலங்கிய கண்களுடன் அங்கிருந்து சென்றாள். கடைசி வரை மாப்பிள்ளையைப் பற்றி கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை.

ஒரு வேளை கேட்டிருந்தால் “நான் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை, அம்மா அப்பா சொன்னதால் சம்மதம் சொன்னேன்”, என்று சொல்லியிருப்பாளோ என்னவோ?

அவள் சென்றதும் அப்படியே தலையை டேபிளில் வைத்து படுத்து விட்டான். ஏதோ அவன் உயிரே அவனை விட்டு போனது போல இருந்தது அவனுக்கு.

வீட்டுக்குச் சென்ற மாலினி பெற்றவர்களுக்காக முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். அவள் வேலையை விட்டு வந்தது பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுத்தது. தங்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் பிள்ளைகளை யாருக்குத் தான் பிடிக்காது?

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பனித்துளியாக கரைந்தது. நிச்சயத்துக்காக என்ன என்ன வேண்டும் என்று முடிவு எடுப்பதிலே அனைவரும் பிஸியாக இருந்தார்கள். அன்று மாலை கனகராஜை அழைத்தார் மதியழகன். “சொல்லுங்க சம்பந்தி”, என்றார் கனகராஜ்.

“அது வந்து சம்பந்தி… இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம் இருக்கு. இன்னும் பொண்ணும் பையனும் பாத்து பேசிக்கலைன்னா நல்லவா இருக்கும்? பிள்ளைங்க நம்ம பேச்சுக்கு மதிப்பு கொடுக்கும் போது நாமளும் அவங்க ஆசையை மதிக்கணும்ல? அருணை இப்ப உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன். மருமக கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வரட்டும். உங்களுக்கும் அவனை நேர்ல பாத்த மாதிரி இருக்கும். நீங்க பண்ணைல வச்சு அவனைப் பாத்துருந்தாலும் உங்க வீட்ல உள்ள யாரும் அவனை பாக்கலை இல்லையா? அவனும் உங்க எல்லாரையும் பாக்கணும்னு ஆசைப் படுறான். உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க?”, என்று அருண் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொன்னார்.

“மாப்பிள்ளை வரதுக்கு சம்மதம் வேணுமா சம்பந்தி? எங்க வீட்ல எல்லாரும் அவரைப் பாக்க ஆவலா தான் இருக்காங்க. நீங்க வரச் சொல்லுங்க”, என்று அனுமதி கொடுத்தார்.

மாப்பிள்ளை வரப் போகிறார் என்று மாலினி வீடே பரபரப்பானது. சிறிது நேரத்தில் நல்ல பிள்ளை போல வந்தான் அருண். எந்த ஓவர் ஆக்டிங்கும் செய்யாமல் இயல்பாக நடித்தான். ஆண்ட்டி, அங்கிள் என்று சொல்லாமல் அத்தை மாமா என்று உரிமையாக அழைத்துப் பேசினான்.

பாலாவின் படிப்பு பற்றி ஒரு நண்பனைப் போல உரையாடினான். அவர்கள் கொடுத்த தின்பண்டங்களை மறுத்து சீன் போடாமல் உரிமையாக வாங்கி உண்டான். அவனை பெற்றவர்களுக்காக வரவேற்ற மாலினியிடம் கூட வழியாமல் இயல்பாக பேசினான். அதில் அனைவரும் அவனை நல்லவன் என்று நம்பி விட்டார்கள். அது தானே அவனுக்கும் வேண்டும். அதற்காக தானே அவன் இப்படிச் செய்தது.

ஒரு வழியாக நிச்சய தினமும் வந்தது. இரண்டு பக்க உறவினர்களும் வந்திருந்தார்கள். மிதமான அலங்காரத்தில் தேவதை போல இருந்த மாலினியின் அழகு அருணைக் கவர்ந்தது. கூடவே அவள் முகத்தில் லேசாக படிந்திருந்த சோகம் அவனுக்கு நிறைவைக் கொடுத்தது. அவனுக்கு அது தானே வேண்டும். அதனால் அவன் சந்தோஷமாக இருந்தான்.

மாலினியின் சொந்தங்களிடமும் அவன் இயல்பாக பேச அவர்களும் இப்படி ஒரு மாப்பிள்ளை உண்டா என்று பெருமையாக சொல்ல மாலினியின் பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

ஆனால் அருணைப் புரிந்து கொள்ள முடியாமல் அவனது பெற்றோர் விழித்தனர். “இவன் எப்ப இப்படி குணசாலியா மாறினான்?”, என்பது தான் மதியழகனின் எண்ணம்.

நிச்சய நிகழ்வின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் வழக்கம் எல்லாம் இல்லை. அருணின் அன்னை வந்து மாலினிக்கு நெக்லஸ் அணிவித்து பூச்சூடி சென்றாள். அவர்கள் பக்கம் இது தான் வழக்கம் என்று சொல்லி விட்டார்கள்.

அருணின் தொடுகையில் இருந்து தற்காலிகமாக தப்பித்து விட்டோம் என்று நிம்மதி கொண்டாள் மாலினி.

ஒரு வழியாக நிச்சயம் முடிந்ததும் சொந்தங்கள் அனைவரும் கிளம்பிச் சென்றார்கள். மாலினி அறைக்குள் தஞ்சமானாள். அவள் இப்போதெல்லாம் தனிமையே அதிகம் விரும்பினாள். கல்யாண கனவில் அவள் இப்படி இருக்கிறாள் என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

மாலினிக்கு நிச்சயம் முடிந்த இரவு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த செழியன் அருகில் சென்றார் சாரதா.

அவரைக் கண்டதும் “மாம், நீங்க என்ன இங்க?”, என்று கேட்டான்.

“தரகர் ஒரு பொண்ணைப் பத்திச் சொன்னார் டா”, என்று தயக்கமாக இழுத்தாள். மகன் என்ன சொல்வானோ என்று அவளுக்கு கஷ்டமாக

இருந்தது. அவனை இந்த சோகத்தில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு திருமணம் தான் சரியான தீர்வு என்று எண்ணி தான் அவர் இந்த முடிவு எடுத்தது.

“எதுக்கு மா தயங்குறீங்க? என்னோட ஆசை நடக்கலைன்னா உங்க ஆசையை நான் மறுக்க மாட்டேன்னு சொல்லிருக்கேன் தானே?”

“உடனே உன் மனசு எப்படி டா மாறும்?”

“ஆனா எனக்கு நீங்க முக்கியம் மா. உங்க ஆசை முக்கியம். என் ஆசைக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்த மாதிரி உங்களுக்காக நான் என்னை மாத்திக்கிறதுல தப்பு என்னமா இருக்கு?”

“எனக்காக இவ்வளவு பெரிய விசயத்துக்கு உடனே சரின்னு சொல்லுவியா செழியா?”

“உங்களுக்காக நான் எல்லாம் செய்வேன் மா. நீங்க உங்களுக்கு பிடிச்ச பொண்ணு பாருங்க”

“நான் பொண்ணு பாத்தா அவளைப் பாக்க நீ வருவியா டா?”

“கண்டிப்பா வருவேன் மா”

“அப்படின்னா, தரகர் சொன்ன பொண்ணைப் பாக்க போகலாமா?”

“சரி மா”

“அவங்க வீட்ல சொல்லச் சொல்லிறவா நாளைக்கு வறோம்ன்னு?”

“சரி மா, சொல்லிருங்க”

“செழியா”

“அம்மா”

“நான் மாலினி கிட்ட பேசவா டா? இல்லை அவங்க வீட்ல பேசவா? உன் காதலைப் பத்திச் சொல்லவா?”

“அவளுக்கு என்னை ஒரு சதவீதமாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா மேற்கொண்டு பேசலாம் மா. ஆனா அவளுக்கு எந்த உணர்வும் வரலையாம். இப்ப அவளுக்கு நிச்சயமே முடிஞ்சிருக்கும். இப்ப அவளைப் பத்தி பேசக் கூடாது மா. பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணை தொந்தரவு செய்யுற அளவுக்கு நீங்க என்னை கேவலமா வளக்கலை மா”

“அப்படின்னா உன் காதல்?”

“எனக்கு வரப் போற பொண்ணை திருப்பியும் லவ் பண்ணிக்க போறேன். ஆனா என்ன கொஞ்சம் நாள் ஆகும்”

“இதற்கு மேல் பேசி அவனைக் காயப் படுத்த வேண்டாம். அவன் இந்த அளவுக்கு யோசித்ததே போதும்”, என்று எண்ணிக் கொண்டு “சரி டா, நான் தரகர் கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

தன்னுடைய அறைக்குள் வந்து தரகர் மூலமாக அந்த பெண் வீட்டில் பேசினார். சொன்னது போல அடுத்த நாள் பெண் பார்க்கச் சென்றார்கள். போகும் போதே பெண் பெயர் மீனா என்றும், அவளது படிப்பு, குடும்ப விவரம் எல்லாம் செழியனுக்கு சொல்லப் பட்டது. தினகரும் அவர்களுடன் பெண் பார்க்க சென்றான்.

அங்கே சென்றதும் அலங்காரம் செய்து கொண்டு வந்த மீனாவைக் கண்டு ஒரு நொடி அவனுக்கு மாலினி நினைவு தான் வந்தது. தலையை உலுக்கி அவளது நினைவை ஒதுக்கி விட்டு மீனாவைப் பார்த்தான்.

அவனைக் கண்டு வழியாமல் அதே நேரம் முகத்தை திருப்பாமல், வெட்கம் என்னும் போர்வையில் முகத்தையும் குனியாமல் அவனைக் கண்டு இயல்பாக சிரித்தாள் மீனா. அந்த புன்னகையில் செழியன் முகமும் மலர்ந்தது.

மீனா மற்றும் செழியனுக்கு தனியே பேச சந்தர்பம் அமைத்துக் கொடுத்தார்கள். மொட்டை மாடியில் இரண்டு சேர் போடப் பட்டிருக்க இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்.

“ஹாய்”, என்றான் செழியன்.

“ஹாய்”, என்று பதிலுக்கு சொன்னாள் மீனா.

அதற்கு பின் இருவருக்குமே என்ன பேச என்று தெரியாததால் மாறி மாறி பார்த்தார்கள்.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன்? சும்மா பிரியா பேசுங்க செழியன். முதல்ல நாம பிரண்ட்ஸ் ஓகே வா?”, நட்புடன் மீனா கை நீட்ட அவனது இறுக்கமும் பதட்டமும் குறைந்தது.

தொடரும்…..