சரியாக பதினொரு மணிக்கு அருண் வீட்டினர் வந்தனர். அருணின் அப்பா, அம்மா, அத்தை, மாமா மட்டும் வந்திருந்தார்கள். வசந்தா சொல் படி தயாராக இருந்தாள் மாலினி.
முதலில் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தாள் மாலினி. சிறிது நேரம் கழித்து “அவங்க எல்லாம் உன்னைப் பாக்கணும் சொல்றாங்க டா. வா, வந்து வணக்கம் சொல்லிட்டு போ”, என்று அழைத்தாள் வசந்தா. அப்போதும் மாலினி முகத்தில் மறுப்பைத் தான் காட்டினாள்.
“அம்மா”, என்று அவள் கலங்கிய படி உரைக்க “இதெல்லாம் எல்லார் வீட்லயும் நடக்குறது தான். வா டா. அம்மா தான் இருக்கேன்ல? நான் அவங்களுக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்துட்டேன். நீ சும்மா என் பக்கத்துல வந்து நின்னாப் போதும்”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.
வேண்டா வெறுப்பாக அவர்கள் முன்னால் வந்து நின்றாள் மாலினி. வசந்தா சொல் படி கேட்டு அவர்களுக்கு வணக்கம் சொன்னாள். அவர்கள் அனைவருக்கும் மாலினியை பிடித்து விட்டது. போட்டோவை விட நேரில் இன்னும் அழகாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது? அதான் அருண் மயங்கி விட்டான் போல என்று மனதில் எண்ணிக் கொண்டார்கள்.
“நீ உள்ள போ மா”, என்று கனகராஜ் சொன்னதும் நிம்மதியாக உள்ளே சென்றாள். அவளுக்கு அங்கே நிற்பது முள் மேல் நிற்பது போல இருந்தது.
“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. என் மகனும் போட்டோவைப் பாத்தே பிடிச்சிருக்குன்னு சொன்னான். நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியாம தான் அவனைக் கூட்டிட்டு வரலை. உங்களுக்கு விருப்பம்னா ஜாதகம் எல்லாம் பாத்துட்டு சொல்லுங்க. நாங்க மகனைக் கூட்டிட்டு வரோம்”, என்றார் மதியழகன்.
“ஜாதகம் என்ன சார் ஜாதகம்? அதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைங்க. என் அக்கா பொண்ணு லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டா. இப்ப பாரீன்ல அவ்வளவு சந்தோஷமா இருக்கா. எதுக்கு வேஸ்ட்டா ஜாதகக்காரனுக்கு அழணும்? நீங்க பாக்குறதா இருந்தா பாருங்க”, என்றார் கனகராஜ்.
“எங்களுக்கும் அதுல விருப்பம் இல்லை. பிள்ளைகளுக்கு பிடிச்சிருக்கான்னு தான் பாக்கணும். எங்க மகனுக்கு பிடிச்சிருக்கு. நீங்க உங்க பொண்ணு கிட்ட பேசிட்டு சொல்லுங்க. எங்க குடும்பம் பத்தி நல்லா விசாரிச்சிக்கோங்க. எங்களுக்கு பூர்வீகம் இங்க தான். என் பேர்ல இருக்குற சொத்து எல்லாம் என் மகனுக்கு தான். உங்க பொண்ணை எங்க மக மாதிரி பாத்துக்குவோம். அப்புறம் வரதட்சணை அது இதுன்னு எல்லாம் யோசிக்காதீங்க? பணம் என்னங்க பணம்? இன்னைக்கு இருக்கும், நாளைக்கு போகும்? அதனால நாங்க அவ்வளவு போடுங்க, இவ்வளவு போடுங்கன்னு எல்லாம் கேக்க மாட்டோம். உங்க மகளுக்கு நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க. அப்புறம் கல்யாண செலவு முழுக்க எங்களோடது தான். மறுவீடு மட்டும் நீங்க பாத்துகிட்டாப் போதும். எங்க தரப்புல இருந்து பொண்ணுக்கு பதினொரு பவுன்ல தாலி போடுறோம்”, என்று மதியழகன் நயவஞ்சகமாக மகன் சொல்லித் தந்த படி பேச கனகராஜ் மற்றும் வசந்தா இருவரும் இப்படி ஒரு குடும்பமா என்று வியந்து போனார்கள்.
“சரிங்க கனகராஜ் சார், நாங்க கிளம்புறோம். நீங்க கலந்து பேசிட்டு தகவல் சொல்லுங்க. நாங்க பையனைக் கூட்டிட்டு வரோம். அன்னைக்கே சின்னதா நிச்சயம் வச்சிக்கலாம். அப்புறம் பையனுக்கு இப்ப இருபத்தி ஏழு வயசு நடக்குது. இன்னும் ரெண்டு மாசம் கழிஞ்சா இருபத்தி எட்டாகிரும். என்ன தான் ஜாதகம் பாக்கலைன்னாலும் ரெட்டைப் படைல முடிக்க கூடாதுன்னு பெரியவங்க சொன்னதை கேட்டு தானே ஆகணும்? சரி முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க. நாங்க கிளம்புறோம். வரோம் சார். வரோம் மா”, என்று சொல்லி விட்டுக் கிளம்ப அவர்களுக்கு சந்தோஷமாக விடை கொடுத்தார்கள் மாலினியின் பெற்றோர்கள். ஜாதகத்தில் வயது குறைவாக போட்டிருந்ததை கனகராஜ் பெரியதாக எடுக்க வில்லை.
அவர்கள் சென்றதும் “குட்டி மா, எங்களுக்கு பையனையும் அவங்க குடும்பத்தையும் ரொம்ப புடிச்சிருக்கு டா. நீ என்ன சொல்ற? இந்தா பையனோட போட்டோ. நீ பாத்து சொல்லு. நீ சரின்னு சொன்னா நானும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப் படுவோம்”, என்றார் கனகராஜ்.
“இந்த கல்யாணம் வேண்டாம் பா. இந்த மாப்பிள்ளை வேண்டாம் பா”, என்று கதற வேண்டும் போல் இருந்த உணர்வை அடக்கிக் கொண்டாள். மனதை மறைத்து “நான் என்னப்பா போட்டோ பாத்துக்கிட்டு? உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா போதும்”, என்று பதில் கொடுத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“ரொம்ப சந்தோஷம் டா”, என்று கனகராஜ் சொல்ல “அப்புறம் என்னங்க, நீங்க உடனே மாப்பிள்ளை வீட்ல சொல்லுங்க”, என்று அவசரப் படுத்தினாள் வசந்தா.
கனகராஜ் மதியழகனை போனில் அழைத்து பேச ஆரம்பிக்க “முடிஞ்சது, எல்லாமே முடிஞ்சது”, என்று எண்ணிக் கொண்டு அவளுடைய மன உணர்வுகளுக்கு சமாதி கட்ட ஆரம்பித்தாள் மாலினி.
அதே நேரம் “மாலினிக்கு என்ன ஆச்சு? நான் காதலைச் சொன்னதுல கோபத்துல ஆபீஸ் வரலையோ?”, என்று தவித்துக் கொண்டிருந்தான் செழியன். அவன் அன்று காலை ஆபீஸ் வரும் போது அவனை வரவேற்றது அவள் இல்லாத அறை தான். எப்போதும் அவனுக்கு முன்பாக வந்து விடும் மாலினி அன்று வரவில்லை என்றதும் அவனது மனம் தடதடத்தது.
பத்து மணி வரைக்கும் அவள் வரவில்லை என்றதும் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் மேனேஜரை அழைத்துக் கேட்டான்.
“இன்னைக்கு ஒரு நாள் லீவ் வேணும்னு கேட்டாங்க சார். அவங்க எப்பவும் லீவ் எடுத்ததில்லை. அதனால நான் எந்த காரணமும் கேட்காமல் சரின்னு சொல்லிட்டேன் சார். ஆனா அவங்க குரல் மட்டும் சோர்வா இருந்தது மாதிரி இருந்துச்சு. உடம்பு சரியில்லையோ என்னவோ? உங்களுக்கு ஏதாவது அவசரமான வேலை இருந்தா சொல்லுங்க சார். நான் செய்யுறேன்”, என்று தகவல் கொடுத்தார் மேனேஜர்.
அவரைப் போகச் சொல்லிய செழியன் தளர்ந்து போய் சீட்டில் அமர்ந்தான். “நான் காதலைச் சொன்னதுனால தான் வேலைக்கு வரலையா டி? ஐயோ உன்னை நான் இனி எப்படிப் பாப்பேன்? இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தான் என் காதலைச் சொல்லாம இருந்தேன்? இனி நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்?”, என்று உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்தான்.
“இனி வேலைக்கே வர மாட்டியா மாலு? உன்னை என் கண்ணால பாக்கவே முடியாதா? உனக்கு கால் பண்ணவும் தயக்கமா இருக்கு டி. இனி எனக்கு மதியச் சாப்பாடு யார் எடுத்துட்டு வந்து தருவா? என் மனசை திறந்து காட்டினதுக்கு என்னை விட்டுட்டே போய்ட்டியா டி?”, என்று கலங்கிப் போனான்.
அன்று மகனது வாழ்க்கை முடிவைப் பற்றி தெரிந்து கொள்ள வந்த சாரதா கூட அவள் வரவில்லை என்று தெரிந்து குழப்பத்துடன் மகனுக்கு ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றார்.
அன்று இரவு மாலினியும் சரி, செழியனும் சரி ஒரு பொட்டு கூட தூங்க வில்லை. மனம் முழுக்க மற்றவரைப் பற்றிய நினைப்பில் இருக்க எப்படி அவர்களை தூக்கம் தழுவுமாம்?
அடுத்த நாள் காலையில் அவனை எப்படி எதிர்க் கொள்ளப் போகிறோம் என்றும் அவனுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறோம் என்றும் தவித்துக் கொண்டிருந்தாள். உண்மையைச் சொன்னால் அவன் என்ன செய்வான் என்றும் அவளுக்கு பயமாக இருந்தது. அவளுக்கு வலிப்பதைப் போல தானே அவனுக்கும் வலிக்கும் என்று கவலையாக இருந்தது.
“நல்லதாப் போச்சு, அவன் சொல்லும் போதே அவன் கிட்ட எனக்கும் உன்னைப் பிடிக்கும்னு சொல்லாம போனோம். ஒரு வேளை பிடிக்கும்னு சொன்ன பிறகு இப்படி ஆகிருந்தா என்ன ஆகிருக்கும்?”, என்று நிம்மதியும் பட்டுக் கொண்டாள்.
அவனோ “நாளைக்காவது அவ வருவாளா? இல்லை வேலையை விட்டு மட்டும் இல்லாம என் வாழ்க்கையை விட்டும் போய்ட்டாளா? உனக்கு ஏன் டி என்னைப் பிடிக்கலை? இத்தனை நாள்ல உனக்கு என் மேல ஒரு சின்ன ஈர்ப்பு கூட வரலையா? என்னை நீ லவ் கூட பண்ண வேண்டாம் டி. என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது டி”, என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் ஆவலாக எதிர் பார்த்த அந்த விடியலும் வந்தே விட்டது. எப்போதும் பரபரப்பாக ஆபீஸ் கிளம்பும் மாலினி அன்று நிதானமாக கிளம்பினாள். அவள் சோர்வைக் கண்ட வசந்தா “வேலையை வேணும்னா விட்டுறேன் டா. அடுத்த வாரம் உனக்கு நிச்சயம் பண்ணப் போறோம். நிச்சயம் முடிஞ்சு பதினஞ்சு நாள்ல கல்யாணம்னு பேசிட்டோம். இன்னும் எதுக்கு வேலைக்கு போய்க்கிட்டு?”, என்று கேட்டாள்.
“சரி மா வேலையை விடுறேன். ஒரு நாலு நாள் வேலை மட்டும் இருக்கு. அதை மட்டும் முடிச்சுக் கொடுத்துறேன். வரேன் மா”
“இந்தா டி, லஞ்ச் பேக். சாப்பாடை மறந்துட்டு போற? உன் பிரண்டுக்கும் சேத்து தான் வச்சிருக்கேன்”, என்று கொடுத்தாள்.
அதை வாங்கிய மாலினி “இனி அவனால எனக்கு பிரண்டா கூட இருக்க முடியாது மா”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“வரேன் மா”, என்று சொல்லி விட்டு கிளம்பியவளுக்கு மனது முழுவதும் ரயில் ஓடியது.
“எதுவுமே கேக்காம அவன் அமைதியா இருந்துட்டா நல்லா இருக்கும்ல?”, என்று எண்ணினாள்.
“பூனை கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருட்டா ஆகிருச்சுன்னு சொல்லுச்சாம்? அது மாதிரி இருக்கு நீ சொல்றது. அவனே பதில் என்னன்னு கேக்க தான் ஆர்வமா இருப்பான்? அவன் எப்படி உன் கிட்ட எதையும் கேட்காம இருப்பான்? அவனுக்கு இப்ப வரைக்கும் உன் மனசுல இருக்குறது தெரியாது. அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணு. அவனை பிடிக்கலைன்னு சொல்லிட்டு வேற மாப்பிள்ளை பாத்துருக்குற விஷயமும் சொல்லிட்டா விஷயம் முடிஞ்சிரும். அவனும் ஒன் சைடு லவ்வை உடனே மறந்துருவான். அதை விட்டுட்டு எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனா அதை சொல்றதுக்குள்ள நிலைமை மாறிருச்சு. ஒரே நாள்ல கல்யாணம் பேசி நிச்சயம் வரைக்கும் வந்துருச்சுன்னு எல்லா உண்மையும் சொன்ன செழியன் நிச்சயம் அப்பா கிட்ட வந்து பேசுவான். அப்புறம் நிலைமை வேற மாதிரி ஆகிரும்”, என்று எச்சரித்தது அவள் மனது.
தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள். செழியன் இன்னும் வந்திருக்க வில்லை. “அப்பாடி”, என்ற நிம்மதியுடன் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.