Advertisement

அதற்குள் வெட்டிய முட்டைக் கோஸை கூட்டு செய்ய ஆரம்பித்தாள் வசந்தா. வசந்தா அடுப்பு வேலையை முடித்து விட்டு அம்மியில் சட்னி அரைக்க பின் பக்கம் செல்ல ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து தக்காளி சாதம் செய்ய ஆரம்பித்தாள் மாலினி. 

மற்றவர்களுக்கு மதிய சாப்பாடு சாம்பார், முட்டைக்கோஸ் பொரியல் என்றால் பாலாவுக்கு மட்டும் காலேஜ் முடித்ததில் இருந்து மாலினி தான் சமையல் செய்து கொடுப்பாள். 

யூடியூப் பார்த்து விதவிதமாக சமைத்துக் கொடுக்கும் மாலினிக்கு பாலா மட்டும் அல்ல, அவனுடைய தோழர்கள் கூட விசிறிகள் தான். 

பாலாவுக்கென தக்காளி சாதம் செய்து, உருளைக் கிழங்கை எடுத்து பொரித்தாள். பின் அம்மா அறிந்ததில் தனியாக எடுத்து வைத்திருந்த முட்டைக் கோஸை எடுத்து அதில் மக்காச்சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, சிறிது சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து பக்கோடாவாக பொறிக்க ஆரம்பித்தாள். 

அதன் பின் பாலாவும் கனகராஜும் கிளம்பி வர அவர்களுக்கு காலை உணவு பரிமாறினார்கள் அம்மாவும் மகளும். 

இட்லியை பிய்த்து வாயில் வைத்த படி “மதியத்துக்கு என்ன சமையல் வசந்தா?”, என்று கேட்டார் கனகராஜ். 

“சாம்பார், முட்டைகோஸ் பொரியல் செஞ்சிருக்கேங்க”

“முட்டை, கருவாடுன்னு எதுவும் செய்யலையா? அப்ப இன்னைக்கு உள்ள போக கசக்குமே?”

“வயசு ஏறிட்டே போகுது? நாக்கு ருசி கேக்குதோ? இன்னைக்கு வெள்ளிக் கிழமை”, என்று வசந்தா கணவரை மிரட்டினார். 

“மாலு குட்டி”, என்று அழைத்தார் கனகராஜ். 

“என்னப்பா?”

“இந்த குசும்பனுக்கு ஏதாவது வெரைட்டியா செஞ்சு வச்சிருப்பியே?”

“இருக்கு பா, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டைக்கோஸ் பக்கோடா”

“அதை எனக்கும் கொஞ்சம் கொடுத்துரு மா”

“ஆன் அஸ்கு புஸ்கு, அக்கா எனக்கு மட்டும் தான் செஞ்சிருக்கா. உங்களுக்கு பங்கு கொடுத்தா எனக்கு பத்தாது”, என்று சண்டைக்கு வந்தான் பாலா. 

“டேய், உனக்கும் இருக்கு. அப்பாவுக்கும் இருக்கு டா”, என்று மாலினி சொன்னதும் தான் இருவரும் வாயை மூடினார்கள். 

“டீயை குடிச்சு குடிச்சு சக்கரை வியாதியை வாங்கியாச்சு. இப்ப எண்ணைய்ல பொரிச்சதை தின்னு பிரஸ்சரை வாங்குங்க”, என்று சொல்லி கணவரை முறைத்தாள் வசந்தா. அவர் மனைவையை நிமிர்ந்து பார்த்தால் தானே?

சிறு சிரிப்புடன் அவருக்கும் சேர்த்து தான் உணவை அடைத்து வைத்தாள் மாலினி. அப்பாவும் மகனும் கிளம்பியதும் காலை உணவை முடித்து விட்டு அடுப்படியை ஒதுங்க வைத்தார்கள் மாலினியும் வசந்தாவும். 

பின் வசந்தா நாடகத்தில் மூழ்க மாலினி அம்மாவிடம் சொல்லி விட்டு அருகில் இருக்கும் லைப்ரேரிக்கு கிளம்பிச் சென்றாள். லைப்ரேரியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் போது ஒரு கம்பெனிக்கான வேலைவாய்ப்பு செய்தியைப் பார்த்தாள். அதை ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டு அவளுக்கு தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். மறக்காமல் அந்த கம்பெனிக்கான அப்ளிகேசனை ஆன்லைனில் அனுப்பி வைத்தாள். அதை தாயிடமும் சொல்லி விட்டாள். 

வசந்தாவோ வேலை கிடைத்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு வேறு பேச ஆரம்பித்து விட்டாள். அன்றைய பகல் பொழுது அப்படியே கழிந்தது. அன்று மாலை பாலா பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மாலினிக்கு நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. 

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சிறிது கலவரமான முகத்துடன் தான் வந்தார் கனகராஜ். அவர் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டு மற்றவர்கள் திகைத்துப் போனார்கள். 

“என்ன ஆச்சுப்பா? எதுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள் மாலினி. 

“ஒண்ணும் இல்லை டா”, என்று கனகராஜ் சோர்வுடன் சொல்ல அதற்கு மேல் அவரை தொல்லை செய்யாமல் அறைக்குள் சென்று விட்டாள் மாலினி. அம்மா கேட்டுச் சொல்வார்கள் என்பதால் பிள்ளைகள் இருவரும் தந்தையிடம் துருவிக் கேட்க வில்லை. வசந்தா கேட்கும் போதும் அவர் எதுவும் சொல்ல வில்லை. 

அன்று இரவு அறைக்குள் தூக்கம் வராமல் விழித்திருந்தார் கனகராஜ். அவரைக் கவலையுடன் பார்த்த வசந்தா “அப்ப இருந்து நீங்களா என்ன ஆச்சுன்னு சொல்லுவீங்கன்னு பாத்துட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா வாயவே திறக்க மாட்டுக்கீங்க? என்ன ஆச்சுங்க?”, என்று கேட்டாள். 

“அது வந்து வசந்தா?”

“எதாவது பிரச்சனையாங்க? என்னன்னு என் கிட்ட சொல்லக் கூடாதா? என் கிட்ட சொல்ல எதுக்கு தயங்குறீங்க?”

“அது வந்து…. சொன்னா நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை டி”

“என்ன ஆச்சுங்க? உங்க முகத்தைப் பாத்தா எனக்கு பயமா இருக்கு”

“உனக்கு தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன் வசந்தா. நான் நல்லது நினைச்சு தான் பண்ணுனேன். ஆனா அது தப்புன்னு இப்ப புரியுது”

“எனக்கு தெரியாம தப்பா? சரி விடுங்க. பண்ணதை இல்லைன்னு மாத்த முடியாது. அதை எப்படி சரி பண்ணன்னு தான் பாக்கணும்? ஆமா ஏன் எனக்கு தெரியாம பண்ணுனீங்க? நீங்க என்னனாலும் என் கிட்ட சொல்லிருவீங்க தானே? இதை ஏன் சொல்லலை?”

“சொன்னா நீ செய்ய விட மாட்டேன்னு தான் சொல்லலை. இப்ப எனக்கே அது பிரச்சனையா வந்துட்டு வசந்தா”

“சரி இப்பவாது என்னன்னு சொல்லுங்க. எனக்கு திக்குன்னு இருக்கு”, என்று சொன்ன வசந்தாவின் முகத்தில் இனம் புரியாத கவலை படர்ந்திருந்தது. 

“நம்ம ஷாலினி கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி….”

“உங்க அக்கா மக தானே? அவ கல்யாணம் முடிஞ்சு தான் மூணு வருஷம் ஆச்சே? இப்ப அவளுக்கு பிள்ளையும் பிறந்துட்டு. லண்டன்ல செட்டில் ஆகிட்டா. இப்ப ஊருக்கு வந்துருக்காளாங்க? சரி அவளுக்கு என்ன?”

“இல்லை வசந்தா, அவ கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம் அன்னைக்கு எங்க அக்கா எனக்கு கால் பண்ணினா”, என்றதும் வசந்தா புருவம் குழப்பத்தில் உயர்ந்தது. 

“ஆமா நிச்சயதார்த்தம் அன்னைக்கு தான் கால் பண்ணினாங்க. நாம கூட அவசரமா காரைப் பிடிச்சு போனோமே? அதுக்கு என்னங்க? சொல்லுங்க”

“அவ கால் பண்ணினப்ப ஏதோ சொல்ல வந்தா. நீ இருக்கேன்னு நான் என்னன்னு கேட்டுக்கலை. அப்புறம் அன்னைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் அக்கா என் கிட்ட தனியா பேசினா. ஷாலினிக்கு பாத்துருக்குற சம்பந்தம் ரொம்ப பெரிய இடம். அதனால நாமளும் கல்யாணத்தை சிறப்பா செய்யணும்னு சொல்லி என் கிட்ட அஞ்சு லட்சம் கடனா கேட்டா. அப்ப தான் நாம இந்த வீட்டைக் கட்டி முடிச்சோம். அதனால என் கைல அப்ப பணம் இல்லை. என் கிட்ட இல்லைன்னே அவ கிட்ட சொல்லிட்டேன் வசந்தா”

“சரி, அப்புறம் என்ன ஆச்சு?”

“யார்க்கிட்டயாவது வட்டிக்கு வாங்கித் தரச் சொன்னா”

“என்னது வட்டிக்கா?”, என்று கேட்ட வசந்தா மனதில் கலவரம் சூழ்ந்தது. வசந்தாவைப் பொறுத்த வரை கூழை குடித்தாலும் கடன் வாங்க கூடாது என்று நினைப்பவள். அவள் கவலையை உணராமல் கனகராஜ் தொடர்ந்தார். 

“அக்கா என் கிட்ட அப்படிக் கேட்டதும் என்னால மறுக்க முடியலை.  நானும் நம்ம சேது மாதவன் கிட்ட கடனா வாங்கிக் கொடுத்தேன்”

“சேது மாதவனா? அவன் கந்து வட்டிக்காரன் தானே?”

“ஆமா”

“சரி, வாங்கிக் கொடுத்தீங்க? அதை இன்னுமா கொடுக்காம இருக்காங்க. உங்க அக்காக்கு இருக்குற வசதிக்கு கொடுத்துருப்பாங்க தானே?”

“என்ன நடந்துச்சுன்னு கேளு வசந்தா. முதல் ரெண்டு வருஷம் அக்கா தான் வட்டி கட்டினா. வட்டிப் பணத்தை மாசம் மாசம் என் அக்கவுண்டுக்கு அனுப்புவா. நான் அதை எடுத்து சேது கிட்ட கொடுத்துருவேன். ஆனா ஷாலினிக்கு குழந்தை பிறந்தப்ப இந்த மாசம் மட்டும் நீ வட்டி கட்டிரு தம்பி. நான் அடுத்த மாசம் சேத்து அனுப்புறேன்னு சொன்னா. நானும் அக்கா தானேன்னு கட்டிட்டேன்”

“என்னது? வட்டியை நீங்க கட்டினீங்களா? என் கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லலை. கேட்டா சம்பளம் கம்மி பண்ணிட்டாங்கன்னு என் கிட்ட கதை விட்டுருக்கீங்க? சரி முழுசா சொல்லி முடிங்க”

“அந்த மாசம் நான் வட்டி கட்டின பிறகு அதுக்கு அடுத்த ஆறு மாசமும் அது இதுன்னு சொல்லி என்னைத் தான் கட்ட வச்சா?”

“நீங்களும் அக்கான்னு கட்டிருக்கீங்க, அப்படி தானே?”

“ஆமா”

“அப்புறம்”

“இப்ப கடந்த ஆறு மாசமாவும் நான் தான் கட்டிருக்கேன். அக்காவுக்கு கால் பண்ணா என் போனை எடுக்கவே மாட்டிக்கா. மாமாவும் தான் போனை எடுக்க மாட்டிக்கார். இன்னைக்கு சேது எனக்கு கால் பண்ணினார். பணம் வாங்கி வருஷம் மூணாச்சு. அடுத்த மாசத்துல இருந்து வட்டியைக் கூட்டப் போறேன்னு சொல்றார். இதுக்கு மேல வட்டியைக் கூட்டினா நான் எப்படி கட்டுவேன்? எனக்கு என்ன செய்யன்னு தெரியலை வசந்தா”

“பாவி மனுசா, குடும்ப அதிகாரம் ஆம்பளை கிட்ட தான் இருக்கணும்னு நினைச்சு நான் வரவு செலவு பாக்காம இருந்தா நீங்க எங்களை பட்டினி போட்டு உங்க அக்காவுக்கு அள்ளிக் கொடுத்துருக்கீங்களோ? இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிங்களா? என்ன பண்ண? நல்லா ஆட்டையப் போட்டுட்டு கம்பி நீட்டிட்டாங்களா? சரி கடன் அஞ்சு லட்சம். நீங்க வட்டி எவ்வளவு கட்டிருக்கீங்க?”

“ஒரு லட்சம்”

“ஐயோ ஐயோ, இந்த பத்து மாசமா நான் ஏன் சம்பளம் குறையுதுன்னு கேட்டுட்டு இருக்கேன் கல்லுனி மங்கன் மாதிரி இருந்துருக்கீங்க? ஒரு லட்ச ரூபாய்க்கு என் பொண்ணுக்கு நிறைய நகை வாங்கிருப்பேனே?”, என்று அவள் அழுது புலம்ப அவளைப் பாவமாக பார்த்தார் கனகராஜ். 

“இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு வசந்தா. நான் வாங்குற நாப்பதாயிரம் சம்பளத்துல முப்பதாயிரம் வீட்டுக்கு, சீட்டு கட்ட, எல்.ஐ.சி கட்டன்னு காலியாகிருது. இப்ப பதினஞ்சாயிரம் வட்டி கட்டுனா எப்படி முடியும்?”

“ஓஹோ, இன்னும் கட்டுற முடிவுல தான் இருக்கீங்களா? உங்களுக்கு ஐயாயிரம் சம்பளம் கூடினா வட்டி கட்ட வசதியா இருக்கும் அப்படி தானே?”, என்று அவள் நக்கலாக கேட்க என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியானார். 

தொடரும்…..

Advertisement