Advertisement

அத்தியாயம்

உந்தன் கண்களை தழுவும்

உறக்கம் என்னை மட்டும் நெருங்காமல்

தள்ளி நிற்பது ஏனோ?!!!

“ஏய் என்னை விடு டா. விடு. ஆ வலிக்குது விடு. எருமை மாடே, முடியை விடு டா”, என்று கத்திக் கொண்டிருந்தாள் மாலினி. 

“முடியாது, நான் கிரிக்கட் விளையாட போனதை அப்பா கிட்ட போட்டுக் கொடுத்த தானே? நீயெல்லாம் ஒரு அக்காவா? உன்னை இன்னைக்கு ஒரு வழி ஆக்காம விட மாட்டேன்”, என்ற படி அவளின் கையை முறுக்கி தலை முடியை இழுத்து வைத்திருந்தான் அவளது தம்பி பாலா.  

நீ எருமை மாதிரி வளந்துருக்க டா? உன் பிடியை நான் தாங்குவேனா? பதினஞ்சு வயசு பையன் மாதிரியா இருக்க? முழு மாடு முழு மாடு”

“நீ வளராம போனா அதுக்கு நானா பொறுப்பு? அம்மா எனக்கு கொடுக்குற பங்கை எல்லாம் நீ தான் திங்குற. எனக்கு வர வேண்டிய சத்து எல்லாம் உன் எலும்புல தான் ஓடுது. இன்னைக்கு உன்னோட ஒரு எலும்பையாவது உடைச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”

“ஐயோ வலிக்குது டா, விடு பிளீஸ்”

“வலிக்கிறதுக்கு தானே அடிக்கிறது? நேத்து அப்பா பெல்ட் வச்சு என்னை விளாசும் போது நீ வேடிக்கை தானே பாத்த? அதுல உனக்கு சந்தோஷம் வேற. அதுக்கு பழி வாங்க வேண்டாம்?”

“என்னை விட்டுரு டா. இல்லைன்னா இன்னைக்கும் அப்பா கிட்ட உன்னைப் போட்டுக் கொடுப்பேன்”

“என்னது மறுபடியும் போட்டுக் கொடுப்பியா? நீ திருந்தவே மாட்டல்ல? நீ என்ன வேணும்னாலும் அப்பா கிட்ட சொல்லிக்கோ போ. நான் அடி வாங்கினாலும் பரவால்ல. இன்னைக்கு உன்னை அழ வைக்காம விட மாட்டேன்”

“ஆ அம்மா, எங்க போன? இவனைப் பாரு மா”, என்று மாலினி அன்னையை அழைக்க “ஐயோ ஐயோ அவளை என்ன பண்ணுற? விடு டா. பாலா, அக்கா தலைல இருந்து முதல்ல கையை எடு”, என்ற படி வந்தாள் அவர்களின் தாய் வசந்தா. 

அன்னை சொன்னதும் கையை விலக்கியவன் “நீ வந்ததுனால இவ தப்பிச்சா மா. இல்லைன்னா இவ கையை இன்னைக்கு கண்டிப்பா உடைச்சிருப்பேன்”, என்றான். 

“அப்படி எல்லாம் செஞ்சிறாத தம்பி? இவளுக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்குறோம். கை நொண்டியாச்சுன்னா எவன் வந்து இவளைக் கல்யாணம் பண்ணிப்பான்? உன் இஷ்டப் படி இவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லா சாத்து. ஆனா ஊனமா மட்டும் மாத்திறாத டா”, என்று சொன்ன வசந்தாவை முறைத்துப் பார்த்தாள் மாலினி. 

“அம்மாவா நீ? நீயே அவன் கிட்ட என்னை அடிக்க சொல்ற?”, என்று மாலினி தாயிடம் பாய “நேத்து அவனைப் பத்தி அப்பா கிட்ட சொல்லாதேன்னு எத்தனை தடவை கெஞ்சினேன் கேட்டியா டி நீ? அப்ப அவன் பதிலுக்கு கொடுக்க தான செய்வான்?”, என்று கேட்டாள் வசந்தா. 

“அவன் கிரிக்கட் விளையாடப் போனான் மா. அதை தான் சொன்னேன். நான் ஒண்ணும் பொய் சொல்லலையே?”

“இந்த வயசுல போகாம எந்த வயசுல விளையாடப் போவாங்களாம்? இத்தனைக்கும் என் கிட்ட சொல்லிட்டு தான் போனான். நான் உன் அப்பா கிட்ட பக்குவமா சொல்லிருக்க மாட்டேனா? அதுக்குள்ள நீ எதுக்கு போட்டுக் கொடுத்த?”, என்று அன்னை மகனுக்காக பரிந்து வர “இருங்க இருங்க. அப்பா வரட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு“, என்று மிரட்டினாள் மாலினி.

“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனா இனி பாலா உன்னை அடிச்சா நான் வந்து காப்பாத்த மாட்டேன்”

“தாயா நீ?”

“இல்லை, பேய் போதுமா?”

“ம்மா”

“மாடு மாதிரி கத்தாதே டி. சரி சண்டை போட்டது போதும். சூடா வடை சுட்டுருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிட வாங்க, காக்காவுக்கு வடை வச்சிட்டு வரதுக்குள்ள இந்த அக்கப் போர்”, என்று சொல்லி முறைத்து விட்டுச் சென்றாள். வசந்தா சென்றதும் அக்காவும் தம்பியும் முறைத்த படியே வடையை சாப்பிடச் சென்றார்கள். 

அடுத்து டிவியைப் போடுவதில் ஒரு பஞ்சாயத்து வர இருவருக்கும் இடையில் வந்த வசந்தா சினிமா பாடல்களை டிவியில் ஓட விட்டு ரிமோட்டை கையோடு எடுத்துச் சென்றாள். ஏனென்றால் பாடல்கள் மட்டும் தான் இருவரும் சேர்ந்து பார்ப்பார்கள். வேறு எது ஓடினாலும் மறுபடியும் கலவரம் வெடிக்கும் என்பதால் அந்த முன்னெச்சரிக்கை. 

சிறிது நேரம் கழித்து வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தார் அவர்களின் தந்தை கனகராஜ். வீட்டின் அமைதியை வைத்தே ஏதோ சண்டை என்று புரிந்து கொண்டார். அவருக்கு தெரியாதா தன்னுடைய குடும்பத்தைப் பற்றி. 

அவரைக் கண்டதும் “அப்பா”, என்ற படி மாலினி செல்லம் கொஞ்ச பாலாவோ அப்பாவை முறைத்த படி அமர்ந்திருந்தான். 

தன்னை முறைக்கும் மகனைக் கண்டு கொள்ளாமல் “வடை சாப்பிடுறியா செல்லம்?”, என்று கேட்ட படி மகளின் அருகே அமர்ந்த கனகராஜ் மகளைக் கொஞ்ச பாலாவின் காதில் புசுபுசுவென்று புகை வந்தது.

கனகராஜ்க்கு மகள் என்றால் தனிப் பிரியம். சொல்லும் சின்ன சின்னப் பொய்களைக் கூட அந்த சின்னக் கண்களை உருட்டி வாயைத் பெரியதாகத் திறந்து ஏதோ திகில் கதை சொல்வதைப் போல சொல்லும் மகளை எப்போதும் அவர் ரசிக்கத் தான் செய்வார். 

வசந்தா கூட மகளை ரசிப்பார் தான். ஆனால் அதை வெளியே காட்டாமல் “பொய் சொல்லாதே மாலினி”, என்று கண்டிக்கத் தான் செய்வாள்.  

“வடை டேஸ்ட்டா இருக்கு பா, இருங்க உங்களுக்கு சூடா எடுத்துட்டு வரேன்”, என்றாள் மாலினி. 

“நான் கை கால் முகம் கழுவிட்டு வரேன் டா குட்டி”, என்று கனகராஜ் சொல்ல “குட்டியாம் குட்டி, பன்னிக்குட்டி, குரங்குக்குட்டின்னு சொன்னா இவளுக்கு பேர் பொருத்தம் சரியா இருக்கும்”, என்று முணுமுணுத்தான் பாலா. 

“என்னடா முணுமுணுக்குற?”, என்று அவர் மகனிடம் கேட்க  அவனோ வாயைத் திறக்கவே வில்லை. 

“இந்த குசும்பன் உன் கிட்ட எதுவும் வம்பு பண்ணினா குட்டி?”, என்று மகனை முறைத்த படி அவர் கேட்க “அது…”, என்று தயங்கினாள் மாலினி. 

“சொல்லு… சொல்லித் தான் பாரேன்”, என்று தெனாவெட்டான பார்வையை பாலா அக்காவை நோக்கி வீச பின் விளைவுகளை எண்ணிப் பார்த்த படி “ஒண்ணும் பண்ணலை பா. டி‌வி பாக்க தான் சின்ன சண்டை. அம்மா ரிமோட்டை வாங்கிட்டு போயிட்டா”, என்றாள். 

என்ன தான் அவள் தம்பியைப் பற்றி போட்டுக் கொடுக்காமல் போனாலும் “ஆமா டி‌வி‌க்கு எதுக்கு சண்டை? பத்தாப்பு படிக்கிறவனுக்கு டி‌வி எதுக்கு? ஒழுங்கா போய் படி பாலா. இன்னொரு தடவை அக்கா கிட்ட சண்டைக்கு வந்த, உனக்கு இருக்கு. சீக்கிரம் வடையை தின்னுட்டு படிக்க உக்காரு”, என்று பாலாவை திட்டி விட்டே அறைக்குள் சென்றார் கனகராஜ். 

பாலா மாலினியை முறைக்க “ஐயையோ முறைக்கிறானே?”, என்று எண்ணிக் கொண்டு “நான் நிஜமாவே போட்டுக் கொடுக்கலை பாலா”, என்றாள் மாலினி. 

“போட்டுக் கொடுக்குறது உன் ரத்தத்துல ஊறிருக்குது டி. இப்ப அவர் உன் கிட்ட கேட்டாரா? டி‌விக்கு சண்டைன்னு எதுக்கு சொல்லிக் கொடுத்த? நீ திருந்தவே மாட்ட. இன்னைக்கும் என்னை இந்த கிட்லர் கிட்ட மாட்டி விட்டுட்டல்ல? என் கைல சிக்காமலா போவ? அப்ப பாத்துக்குறேன்”, என்று கத்தி விட்டு அவனுடைய அறைக்குச் சென்றான். 

“இப்ப சந்தோஷமா? அவனை ஒரு வடையை கூட ஒழுங்கா திங்க விட மாட்டியா டி?”,  என்று கேட்ட படி அங்கு வந்தாள் வசந்தா. 

“ரொம்ப கவலைப் படாதே மா. உன் மகன் பத்து வடையை உள்ள தள்ளிட்டு தான் போயிருக்கான். சரி சரி இன்னும் ரெண்டு வடையும் அந்த ரிமோட்டையும் எடுத்துட்டு வா பாப்போம். அப்பா இப்ப நீயுஸ் பாப்பாங்க”, என்று அன்னையை மாலினி அரட்ட “அதிகாரமா பண்ணுற? போற வீட்ல உன் மாமியா வந்து நல்லா எடுத்துக் கொடுப்பா”, என்றாள் வசந்தா. 

“சே சே என் மாமியார் பாவம். வயசானவங்களை வேலை செய்ய விடலாமா? அதெல்லாம் அவங்களை வேலை செய்யவே விட மாட்டேன்”

“அவ்வளவு நல்லவளா டி நீ? நம்ப முடியலையே”

“அவசரப் படாதே மா. என் புருஷன் எதுக்கு இருக்கான்? அவன் செய்வான்னு சொல்ல வந்தேன்”, என்று மாலினி சொல்ல மகளின் பேச்சில் வசந்தாவுக்கே சிரிப்பு வந்தது. 

“எப்படியோ, உன் வாயை வச்சே நீ பொழைச்சுக்குவ டி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். 

இது தான் மாலினியின் இயல்பான வீடு. கனகராஜ் அரசு பேருந்தின் ஓட்டுனர். காக்கி உடையில் இருந்து ஊதா உடைக்கு மாறி மூன்று வருடங்கள் தான் ஆகிறது. அவரது மனைவி வசந்தா அழகும் அடக்கமும் சாந்தமும் அமைதியும் ஒருங்கே கொண்ட இல்லத்தரசி. கணவனின் மீது அன்பும் மரியாதையும் இருக்கும். 

ஆனால் கணவர் மகனை ஏதாவது சொன்னால் மட்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள். கனகராஜ்க்கு மனைவியின் கோபம் பிடிக்குமோ என்னவோ? அதைக் காணவே மகனை வறுத்தெடுப்பார். ஆனால் அவருக்கு அவன் மீதும் அன்பு உண்டு. அது அவனுக்கும் தெரியும் என்பதால் வேண்டும் என்றே அவரை வெறுப்பேற்றி தாயுடன் கூட்டணி வைத்துக் கொள்வான். பாலா இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறான். 

மாலினி இருபத்தி ஐந்து வயது அழகான மங்கை. அவளுக்கு தாய் மீது இருப்பது வெறும் அன்பு மட்டும் தான். ஆனால் தந்தை மீது அதிக பற்று வைத்திருப்பவள். தந்தை மீது அவளுக்கு இருப்பது பக்தி என்று கூட சொல்லலாம். 

மூன்று வருடங்களுக்கு முன் கல்லூரி மேற்படிப்பை முடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருப்பதால் பாலாவிடம் வம்பிழுத்து அவனிடம் அடியும் வாங்கிக் கொள்ளும் அன்பு அக்கா. அழகை அவளிடம் இருந்து பிரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு அழகு என்று சொல்லலாம். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளது குடும்பம் மட்டுமே. 

தந்தை குளித்து விட்டு வந்ததும் அவருடன் அமர்ந்து அன்றைய செய்திகளைப் பார்த்தவள் தாய்க்கு சமையலில் உதவி செய்ய போனாள். பின் பாலா படிப்பதற்கு சில உதவிகளை செய்து நேரத்தைப் போக்கினாள். 

அடுத்த நாள் எப்போதும் போல் அனைவருக்கும் விடிய “டேய் எந்திரி டா. ஸ்கூல் பஸ்க்கு டைம் ஆச்சு. இன்னும் அஞ்சு நிமிசத்துல எந்திச்சு குளிக்க போகலை அப்பாவை எழுப்பக் கூட்டிட்டு வருவேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் மாலினி. 

“இவ செஞ்சாலும் செய்வா. காலைலே அந்த ஹிட்லர் கிட்ட பாட்டு வாங்க முடியாது”, என்று எண்ணிக் கொண்டு குளிக்கச் சென்றான் பாலா. 

மாலினி அடுக்களைக்குச் செல்லும் போது கீழே அமர்ந்து அருவாமனையில் முட்டைக் கோசை வெட்டிக் கொண்டிருந்தாள் வசந்தா. 

ஒரு அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மற்றொரு அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது. 

மகளைக் கண்டதும் “காலைலே குளிச்சிட்டு வந்துட்டியா? தலையை துவத்து டி”, என்றாள் வசந்தா. 

“கொஞ்சம் ஈரம் உறியட்டும் மா. சரி என்ன வேலை இருக்கு? சொல்லு. நான் செய்றேன்”

“சாம்பாரை இறக்கிட்டு மல்லி இலை கழுவி வச்சிருக்கேன் பாரு. அதை பிச்சு அதுல போடு. அப்புறம் சாம்பாரை தாலிச்சிரு”

அம்மா சொன்ன வேலைகளை செய்து முடித்து விட்டு ஒரு சட்டி இட்லியை எடுத்து விட்டு மற்றொரு முறை ஊற்றி வைத்தாள். 

Advertisement