Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 4

வான்மதியை காணவில்லை என்ற செய்தியைக் கேட்ட அவர்கள் தந்தை கந்தவேலும் ரத்னவேலும் உடனே பதறியடித்து கல்லூரிக்கு வர, அவர்கள் கல்லூரி வாயிலிருகிலேயே வெற்றியை பார்த்துவிட்டனர்.

கந்தவேல் “என்ன நடக்குது இங்க. நீ பாப்பா உன்னோட இருக்கிறதாக சொன்ன. இப்போது காணோம்னு சொல்லுற” என

“அப்பா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்க” என்று நடந்தவை அனைத்தையும் கூறினான்.

“சுமிக்கிட்ட கேட்டியா” என ரத்னவேல் கேட்க

“அவங்க பாட்டிக்கு உடம்பு முடியாததால் ஊருக்கு போயிருக்கா” என

“மத்த ப்ரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சுட்டியா”

“இல்ல சித்தப்பா. இன்னைக்கோட எக்ஸாம் முடியறதால்ல யாரும் இங்க இல்ல. எல்லோரும் வீட்டுக்கு போயிட்டாங்க” என

ரத்னவேலும், கந்தவேலும் இடிந்து போய்விட்டனர்.

வயது வந்த ஒரு பொண்ணை காணவில்லையெனில் ஊர் உலகம் என்னென்ன பேசும். அதுவும் பெரிய வீட்டுப் பெண் காணவில்லையென்றால் சொல்லவா வேண்டும்.

கந்தவேலை வீட்டிற்குச்சென்று விஷயத்தை கூறச் சொல்லி அனுப்பிவிட்டு, ரத்னவேலும் வெற்றியும் ஏதாவது விஷயம் கிடைத்தாலும் கிடைக்கும் என்று எண்ணி சுமித்ராவிடம் விசாரிக்கலாம் என அவள் பாட்டி வீட்டுக்குச் சென்றனர்.

கந்தவேல் சோர்வாக வீட்டிற்குச் செல்ல,

லட்சுமி “ என்னங்க எங்க மதி பாப்பா” என
அவர் உண்மையைத் தெரிவிக்க, தெய்வானை அழுதழுது மயங்கிவிட்டார்.

விசாலம் ஆச்சிக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

அவர்களை அங்கு எதிர்பார்க்காத ராஜசேகர் அதிர்ந்து பின் வரவேற்றார்.

அவர்களோடு தனியாக பேசவேண்டும் என ரத்னவேல் கூற, அந்த அறையில் சுமித்ரா, ராஜசேகர், ரத்னவேல் மற்றும் வெற்றிவேல் மட்டும் தனியாக விடப்பட்டனர்.

அனைவரும் அமைதியாக இருக்க “என்ன மாப்பிள்ளை இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க, ஏதாவது பிரச்சனையா” என ராஜசேகர் வினவ

அதற்கு வெற்றி “மதியை காணவில்லை” என அவர் அதிர்ந்துவிட்டார்.

ரத்னவேல் தொண்டையை செருமிக்கொண்டு “ஏதாவது விஷயம் தெரியுமான்னு சுமித்ராகிட்ட கேட்க வந்தோம்” என

“எனக்கு எதுவும் தெரியாது மாமா”

“இல்லம்மா. காலேஜ்ல மதிக்கு ஏதாவது பிரச்சனையா”

“அப்படி எல்லாம் இல்ல மாமா”

சிறிது இடைவெளி விட்டு, “அப்படி இல்லேன்னா யாரையாவது விரும்புச்சா” எனக் கேட்க
சுமித்ரா யோசித்து தயக்கமாக,

“மாமா எங்க காலேஜ்ல ஒரு சீனியர் வான்மதி பின்னாடி சுத்தி தொல்லை பண்ணுனான். நான் அவருகிட்ட(வெற்றி) சொல்றேன் சொன்னதுக்கு மதி அதெல்லாம் வேண்டாம் அண்ணாக்கு தெரிஞ்சா பயங்கரமாக கோபப்படும் நானே பார்த்துக்கிறேன் சொன்னாள். ஒருநாள் அந்த சீனியர் அவக்கிட்ட நேரடியா தன் விரும்புறத சொன்னப்ப இவ முடியாது சொல்ல அவரும் சாரி சொல்லிட்டு போயிட்டார். அப்புறம் அவங்க தொந்தரவு பண்ணலை” என

வெற்றி “இத முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கனும்ல. அப்பவே அவனே ஒரு கைப் பார்த்திருப்பேன். அவ சொல்ல வேண்டாம்னு சொன்னா உனக்கு எங்க அறிவு போச்சு” எனத் திட்ட

ராஜசேகரோ “நீ என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கனும்” என்று சொல்லி கோபத்தில் சுமியை அறைந்துவிட்டார்.

பின் ரத்னவேல் தான் ராஜசேகரை சமாளித்து “சொல்லுமா யார் அந்த பையன்” எனக் கேட்க

அவள் அழுதுக்கொண்டே வெற்றியை பார்த்து “அருண் பாண்டியன்” எனக் கூற கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் கல்;லாக சமைந்தனர்.

மதுரையிலிருந்து தேனிக்கு போகும் வழியில் அமைந்துள்ள கிராமம் நடுப்பட்டி. எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் என நெல் வயல்களும், கரும்பு தோட்டமும், வாழை தோப்பும் சூழ்ந்து, விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் அழகே உருவான அமைதியான கிராமம்.

இதுதான் கதிரவனுடைய சொந்த ஊர். இங்கு செல்ல மதுரையிலிருந்து ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.

மதுரை விமான நிலையத்திலிருந்து கிரிதரன், காவ்யா, கதிர் மற்றும் கதிரின் தோளில் வர்ஷ_க்குட்டி ஜம்மென்று தூங்கிக் கொண்டிருக்க வெளியே வந்தனர்.

சரியாக இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இப்போது தான் இங்கு வருகின்றனர்.
அவர்களுக்கு கடைசியாக இங்கு வந்த போது நடந்த சம்பவங்கள் அவர்களை கேட்காமலேயே நினைவில் வந்து நிழலாடியது. அவர்கள் கதிரைப் பார்க்க அவன் முகமோ பாறையாய் இறுகிக்கிடந்தது.

அப்போது அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த ராமு அவர்களை பார்த்துவிட்டு அருகில் சென்று நலம் விசாரித்துவிட்டு, அவர்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டுப் போய் காரின் பின்னால் வைத்தார்.

அவர்களுக்காக வந்திருந்த காரில் அனைவரும் ஏற கதிர் மட்டும் ஏறாமல் நின்றிருந்தான். கிரி என்னவென்று கேட்க, கதிர் வர்ஷாவை காவ்யாவிடம் கொடுத்துவிட்டு தான் சரியாக ரிசப்ஷனுக்கு வந்துவிடுவதாகக் கூறி தன்னுடைய பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

கதிர் அவ்வாறு சொல்லி தனியாக சென்றதால் காவ்யா வருத்தப்பட,

கிரி தான் “என்ன காவ்யா, ரிசப்ஷன் இங்க தான நடக்குது. நாமளே ஊருக்குப் போயிட்டு திரும்பி இங்க தானே வரணும். எப்படியும் நாளைக்கு கல்யாணத்துக்கு ஊருக்கு வந்துதானே ஆகணும்” என்று சமாதானப்படுத்த

“இருந்தாலும்……” என காவ்யா இழுக்க

“என்ன இருந்தாலும். நாம முக்கியமா இங்க வந்திருக்கது பொண்ணு பார்க்கத் தான். அதனால கதிர் இப்ப முன்னாடியே நம்ம கூட வராததும் நல்லதுதான். எப்படியோ இப்பவாவது ஏதாவது நல்லது நடந்தா சரிதான்” எனவும்; காவ்யா அமைதியானாள்.

அங்கிருந்து சென்ற கதிரவன் பக்கத்திலிருக்கும் ஓர் உயர்தர ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டு போய் கதவை திறந்தவன் நேராக படுக்கையில் விழுந்தான்.

அவனுக்கும் அந்த யாருமில்லாத தனிமையான அமைதியான சூழ்நிலை தன்னை நிதானப்படுத்திக்கொள்ள தேவைப்பட்டது.

அவன் வெகுநேரம் தன் சிந்தனையிலேயே உழன்றுக் கொண்டிருந்ததால் தலைவலிப்பதாகத் தோன்ற கீழே இருக்கும் ஹோட்டலில் காபி ஆர்டர் செய்தான்.
அவன் ஆர்டர் செய்து சில நிமிடங்களிலே அறையிலுள்ள அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அதுக்குள்ளவா காபி கொண்டு வந்திட்டாங்க என்று எண்ணிக் கொண்டு அவன் போய் கதவை திறந்தான்.

அருண் பாண்டியன் என்ற பெயரைக் கேட்ட வெற்றிக்கு அவனை கொலை செய்யும் அளவுக்கு கோபம் தலைக்கேறியது.

அருண் பாண்டியன், முத்து பாண்டியன்-தங்கலெட்சுமியின் சீமந்த புத்திரன். வெற்றியின் அம்மாவிற்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறை முத்து பாண்டியன்.

முன்னாள் அமைச்சர். சரியான ஏமாற்றுக்காரன். மக்களை ஏமாற்றி ஏழைகள் வயிற்றில் அடித்து மற்றும் பிற கெட்ட வழிகளில் சொத்து சேர்ப்பவன். தங்கலெட்சுமியோ அவருக்கும் மேல். அவர் வாயை திறந்தாலே சண்டை தான் வரும். அவருக்கு ஏற்ற ஜோடி.

அவர்களுடைய மகன் மட்டும் எப்படி இருப்பான். அச்சு அசல் அவனது தந்தையைப் போலவே.
எனவே இவர்கள் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆகவே ஆகாது. இவர்களின் பரம எதிரி வெற்றி வீட்டினர்.

பிறகு நேராக ரத்னவேல் மற்றும் வெற்றிவேல் தங்கள் வீட்டிற்குச் சென்று கந்தவேலையும் அழைத்துக் கொண்டு அருண் பாண்டியனுடைய வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு வராண்டாவில் அமர்ந்திருந்த முத்துப் பாண்டியனிடம்,
கந்தவேல் “உன்னோட புள்ளை எங்கே” என்று கோபமாக உறும

அவரோ அசராமல் “இங்க இல்ல. ஊருக்குப் போயிருக்கான். உங்க வீட்டுப் பொண்ணும் எங்க பையன் கூட தான் இருக்கா” என

வெற்றிவேல் அவரை கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போக, ரத்னவேல் தடுத்து
“உனக்கு என்ன வேணும். எங்க சொத்து முழுதும் வேணுமா? வாங்கிக்க. இல்ல வேற என்ன வேணும்னாலும் சொல்லு தரேன். என் பொண்ண மட்டும் விட்ரு. அவ குழந்தை. அவ உங்கள என்ன பண்ணுனா. அவள எதுக்கு கடத்துனிங்க” எனக் கேட்க

அதற்கு தங்கலெட்சுமியோ நக்கலாக “என்ன உங்க பொண்ண நாங்க கடத்தினோமா. நல்ல கூத்தால்ல இருக்கு. உங்க பொண்ணு தான் விரும்பி என் பையனோட ஓடிப்போயிருக்கு. ஒழுங்கா பொண்ண வளர்க்காம தெரியாம இங்க வந்து வெட்டியா கத்திட்டு இருக்கிங்க” என்று கத்த

அவர் போட்ட சத்தத்தில் வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் அனைவரும் வெளியே வந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.

கந்தவேல் “நீங்க சொல்றது மட்டும் உண்மையா இருந்தா எங்க பொண்ணு இன்னையோட செத்துப் போயிட்டா. ஆனா பொய்யா இருந்துச்சு உங்கள உயிரோட எரித்துக் கொன்றுவேன்” என்று விட்டு
இதற்கு மேல் இங்கு இருந்தால் மிச்சமிருக்கும் தங்கள் மான மரியாதையும் போய்விடும் என்று அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் அவர்கள் வீடு போய் சேருவதற்குள் “வான்மதி அருண்பாண்டியனுடன் ஓடிப் போய்விட்டாள்” என்ற செய்தி தீயாக ஊருக்குள் பரவியது.

Advertisement