Advertisement

மலரே மலர்வாய் 4
திருமணத்திற்கு முதல் நாள் காலை பதினொருமணியளவில் நிச்சயம் செல்வி வீட்டில் வைக்கப்பட அங்கு அனைவரும் கூடியிருந்தனர்.
இடைப்பட்ட நாட்கள் புடவை வாங்க, திருமாங்கல்யம் செய்ய என அனைத்து வேலைகளுடன் நகர்ந்துச் சென்றிருந்தது.
செல்விக்கு தன் ஐயன் இந்த திருமணத்தின் காரணமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று பார்த்துக்கொண்டிருப்பதில் அவளும் நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்தை மனதார ஏற்றுக்கொண்டாள்.
அவள் மனதில் இதுவரை எந்த சலனமும் ஆசையும் யார்மேலும் எதுமேலும் ஏற்படாததால் அவளுக்கு அவனை ஏற்றுக்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.
நமக்கு கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும் அதை வைத்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என வாழ்க்கையில் இன்பம் துன்பம் எது கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பக்குவாக வளர்க்கப்பட்டவள்.
மேலும் அவளுக்கு அவர்கள் ஊரில் எத்தனையோ திருமணங்கள் பெண்ணின் சம்மதம் கூட கேட்காமல் நடைபெறுவதை பார்த்திருப்பவள். ஏன் தன் அக்காவிற்கு கூட தன் மாமாவை திருமணம் செய்து வைக்கும்போது அவளின் சம்மதம் ஒப்புக்கு நிச்சயத்தின்போது கேட்கப்பட்டதை அறிந்திருந்தவள்.
ஆனால் தனது திருமணத்திற்கு மாப்பிள்ளை போட்டோ காட்டி இவள் சம்மதம் பெற்றபிறகே இவள் வீட்டிலும் இத்திருமணத்திற்கு சம்மதித்தது என அனைத்திலும் முதலில் இவள் விருப்பத்தை கேட்டே நடந்தது நினைவில் வர அவளுக்கு மனம் மகிழ்ந்தது.
இதில் மாப்பிள்ளை வீட்டிலும் புடவை எடுப்பதிலிருந்து அனைத்து விஷயங்களுக்கும் அவளிடம் கேட்டு அவளுக்கு விருப்பப்பட்டதை செய்ததால் அவளுக்கும் இத்திருமணத்தை மற்றும் இன்பச்செல்வனை பிடிக்கவே செய்தது.
என்ன அவங்க நம்மளோட ரொம்ப அழகா வெள்ளையா உசரமா இருக்காங்களே
அவன் உருவத்தை நினைவில் கொண்டு வந்தவள், ம் மீசை இருந்தா இன்னும் அழகா இருக்கம் ஆனாலும் பாக்க நல்லா நம்ம ஊரு ஹீரோ மாதிரி அழகாத் தான் இருக்காக என்று எண்ணியவள் இந்த இடைப்பட்ட நாட்களில் அவனை தன் மணாளனாக மனதில் வரித்திருந்தாள்.
நிச்சயம் நடைபெற்றுக் கொண்டிருக்க பெரியவர்கள் இணைந்து பெண்ணை அழைத்து வரச் சொல்ல செல்வியை கூட்டிவந்தனர்.
அணைப்பட்டி ராஜதுரை-சின்னத்தாயி அவர்களின் பேரனும் திருநாவுக்கரசு-மங்கையர்கரசி அவர்களின் திருநிறைச்செல்வன் இன்பச்செல்வனுக்கும், ஆலமரத்துப்பட்டி கருப்பசாமி-பஞ்சவர்ணம் அவர்களின் பேத்தியும் மாணிக்கம்-அமுதா அவர்களின் திருநிறைச்செல்வி செந்தாமரைச்செல்விக்கும் வரும் வைகாசி மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 5.40 மணிக்கு மேல் 6.10க்குள் திருவோண நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் கூடிய சுபயோக சுபதினத்தில் திருமணம் நடைபெறும் என்று பெரியவர்களால் முடிவுசெய்யப்பட்டுள்ளது என நிச்சய ஓலை வாசித்து,
ஒருவர் இன்பச்செல்வனிடம் “இந்த திருமணத்திற்கு சம்மதமா?” என
அவன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் “சம்மதம்” என்று பதில் சொல்ல
செல்வியை பார்த்தும் அதேபோல் “உனக்கு சம்மதமா ஆத்தா?” எனக் கேட்க
அவளும் “சம்மதம்” சொல்ல மணப்பெண் மற்றும் பையனின் தாய் மாமன்கள் தாம்பூலத் தட்டை மாற்றிக்கொண்டனர்.
நிச்சயம் நல்லபடியாக முடிய செல்விக்கு காப்பு கட்டி கல்யாணவளையல் அணிவித்து அவர்கள் கிளம்பினர்.
அனைவரும் மாலை கல்யாண மண்டபத்திற்கு செல்ல அங்கு மணமக்களுக்கு நலங்கு வைக்க ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.
திருநாவுக்கரசும் அவரது சொந்தங்களும் வந்தவர்களை உபசரிப்பது, அவர்களை அமரவைப்பது என்று பம்பரமாக சுழன்றுக்கொண்டிருக்க, பஞ்சு பாட்டியோ தன் பேத்தியை அமெரிக்க மாப்பிள்ளைக்கு கொடுக்கும் சந்தோஷத்தில் அனைவரையும் நலம் விசாரித்துக்கொண்டு வலம் வந்தார். செல்வியின் பெற்றோர்களும், உடன்பிறந்தவளும் சந்தோஷமாக இருந்தார்கள்.
அவளின் உறவினர்களோ ‘இவளுக்கு வந்த வாழ்வைப் பார்’ என்று பொறாமை, சில நல்ல உள்ளங்களோ ‘எங்க இருந்தாலும் அந்தப் பொண்ணு நல்லா இருக்கனும்’ என்று மகிழ்ச்சியாக வாழ்த்தியும், சிலரோ தங்கள் மகளுக்கும் இதே மாதிரி நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டும் சிலர் ஏன் நமக்கு மட்டும் இப்படி அமையவில்லை என்று வருத்தத்தோடும் என பல கலவை உணர்வுகளோடு அங்கிருந்தவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
முதலில் இன்பச்செல்வனுக்கு நலங்கு வைத்து முடிக்க, அடுத்து பெண்ணை அழைக்கவும், செந்தாமரைச்செல்வி மஞ்சள் நிற பட்டுப்புடவையில் வந்து அமர அவளுக்கு அவன் மீது பூசிய அதே மஞ்சள் சந்தனத்தை பூசி ஒரு வயதான சுமங்கலி ஆரம்பிக்க எல்லோரும் வரிசையாக வைத்துமுடித்தனர்.
இறுதியில் இன்பச்செல்வனை வைக்கச் சொல்ல அவனும் அமைதியாக எழுந்து வந்து அவளுக்கு கன்னங்களில் அழுத்தமாக மஞ்சள் சந்தனத்தை பூசிவிட அவள் அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.
அவளது மகிழ்ச்சியான முகத்தை பார்த்த அவனுக்குத் தான் காலையில் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னது மிகவும் நல்லதே என்று தோன்றியது.
எல்லாம் நிகழ்ச்சிகளும் முடிந்து அனைவரும் படுக்கச்செல்ல அவனும் சென்று போய் படுத்தான். ஆனால் அவனுக்கு உறக்கம் தான் வரவில்லை. அப்படியே அன்று நடந்த சம்பங்களை நினைத்துப் பார்க்கத்தொடங்கினான்.
காலையில் பதினொருமணிபோல் தான் நிச்சயம் என்பதால் லேட்டாக எழுந்தவன் மெதுவாகவே தன் அறையை விட்டுவர அப்போது அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த வீட்டுப் பெண்ணுக்கும் இன்றே அதிகாலையில் நிச்சயதார்த்தம் நடந்துக்கொண்டிருந்தது.
அப்போது அந்த பையன் அப்பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லவும் அப்பெண் தோட்டசெடிகளுக்கு போடும் பூச்சிமருந்தை எடுத்துக்குடித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்க, அப்பெண்ணை தூக்கிக்கொண்டு அப்போது தான் சென்றனர்.
அதைப் பார்த்த அவனுக்கு செல்வியை அதே போல் தூக்கிச்செல்லும் காட்சி மனக்கண்ணில் வர அப்படி நடக்கக் கூடாது என்று வேகமாக தலையை உலுக்கிக்கொண்டான்.
தன்னிலை அடைந்தவன் மெதுவாக அங்கிருந்தவர்களிடம் “அந்த பையனுக்கு பிடிக்கலைன்னு சொன்னதுக்கு எதுக்கு விஷம் சாப்பிடனும்? வேற நல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கவேண்டியதுதானே” என்று விசாரிக்க
அதற்கு அங்கிருந்த ஒரு பாட்டி “என்ன தம்பி நீங்க இப்படி சொல்றிக. ஒருத்தன பார்த்து மனசுல நினைச்சுட்டா வேற ஒருத்தன எப்படி கட்டமுடியும். இத்தன நாளு அவென் சொல்லாமா அந்தப் புள்ள மனசுல ஆசைய வளத்துட்டு, இப்ப வந்து நிச்சியதன்னைக்கு அந்த கூறுகேட்டவன் பிடிக்கலைனு சொன்னா அவளால தாங்கமுடியுமா? இல்ல வேற யாரும் தான் அந்தப்புள்ளய கட்டுவாங்களாம்” என்று கூறி அந்த பையனை அசிங்கமாகத் திட்டவும் தான் இவனுக்கும் தான் செய்யவிருக்கும் செயல் புரிந்தது.
ஒருவேளை அப்பெண்ணிடம் அன்றே தான் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று ஞானோதயம் இப்போது ஏற்பட, ஒரு பெண்ணின் மனதில் தெரிந்தோ தெரியாமலோ தன்மீது ஆசையை வளர்த்துவிட்டு இப்போது அவளுக்கு துரோகம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தவன் செல்வியை கல்யாணம் செய்யும் முடிவை மனப்பூர்வமாக எடுத்தான்.
பிறகு தான் அவன் நிச்சயத்திற்குகாக செல்வி வீட்டிற்கு வர அங்கு தன்னுடைய சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிய மதியம் வீட்டிற்கு வந்தவனை பக்கத்து வீட்டில் இருந்துவந்த அழுகை ஒலியே வரவேற்றது.
அந்தப்பெண் இறந்துவிட்டதாகத் தெரியவர இவனுக்கு மனசெல்லாம் கனத்துவிட்டது. இப்போது அவனுக்கு தான் எடுத்த முடிவு மிகச்சரியே என்று தோன்ற மனம் அமைதியானது.
இவர்கள் வீட்டில் நிச்சயம் முடிந்து காப்பு கட்டிவிட்டதால் அங்கு செல்லக்கூடாது எனவே அவர்கள் அப்போதே மண்டபத்திற்கு வந்துவிட்டனர். அப்படியே படுத்தவாறே யோசித்துக்கொண்டே இருந்தவனை நித்திராதேவியும் ஆட்க்கொண்டது.
அன்றைய நாள் அழகாக விடிய பிரம்ம முகூர்த்தத்தில் இன்பச்செல்வன் பட்டுப்வேஷ்டியில் மணமேடையில் அமர்ந்திருக்க, கூறைப் புடவையில் அந்த செந்தாமரை மலர் போன்று தன்னருகில் அழகாக அமர்ந்திருந்த செந்தாமரைச்செல்வியின் சங்கு கழுத்தில் மங்கல நாண் பூட்டி அவளை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
அவளது தோளைச் சுற்றி நெற்றியில் குங்குமம் வைக்க அவன் மனது அவனையறியாமலே “இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் எனக்கு மனைவி” என்று அவளுக்கு சத்தியம் செய்துக்கொடுத்தது.
அதைதொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்த்தல் என அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு ஒருமணிக்கு மேல் தான் சாப்பிட்டுவிட்டு முதலில் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றனர்.
பின் அவர்கள் வழக்கப்படி மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணை முதலில் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்.
எனவே திருநாவுக்கரசு தன் மகனிடம் “செல்வா மொத நம்ம வழக்கப்படி பெண்வீட்டுக்குதான் போகனும். அப்புறம் மறுவீட்டுக்கு வரப்பதான் நம்ம வீட்டுக்கு மருமகளோட மூணாவது நாள் வரனும்னு” சொல்ல
அவனும் சரியென்று கேட்டுக்கொண்டான்.
அதன்படி அவர்களும் செல்வி வீட்டிற்குச் சென்றனர்.
அவர்கள் வீட்டிற்கு வரவும் செண்பகம் ஆலம் சுற்றி வரவேற்க, செல்வி உள்ளே சென்றுவிட அங்கிருந்த செல்விக்கு தங்கை முறையாகும் பெண்கள் இன்பச்செல்வனை மட்டும் வீட்டிற்குள் செல்ல விடாமல் பிடித்துக்கொண்டனர்.
மாணிக்கம் தான் “உங்களுக்கு என்ன பிள்ளைகளா வேணும்? எதுக்கு மாப்பிள்ளைய இப்படி வெளியிலே நிக்க வைக்கிறிக?” என
“அதெல்லாம் சும்மா உள்ளார விட முடியாது பெரியஐயா. எங்களுக்கு ஏதாச்சும் பெரிசா கொடுத்துட்டுத்தான் மாமா உள்ளார நுழையனும்” என்றுவிட்டு
“மாமா எங்களோட பரிச கொடுத்துட்டு நீங்க உள்ளார போய் உங்க பொஞ்சாதிய பார்க்கலாம் இல்ல என்ன வேணும்னாலும் பண்ணலாம்” என்று இன்பச்செல்வனை வம்பிளுக்க
சட்டைப் பையில் கைவிட்டு பணத்தை எடுத்தவன் எவ்வளவு இருக்கு? என்று எண்ணிக்கூட பாராமல் அவர்களுக்கு கொடுத்துவிட்டு ‘விட்டால் போதுமடா சாமி’ என்று உள்ளே செல்ல
அதற்கும் அவர்கள் “என்ன மாமா அதுக்குள்ள அக்காவ பாக்க அவசரமா இல்ல அக்காக்கு பயமாஆஆஆ” என்று சிரித்து கிண்டல் செய்தனர்.
அவன் வரவும் முத்துப்பாண்டி அவனை அழைத்துக்கொண்டு உள்ளறைக்கு கூட்டி வந்து,
“நீங்க கொஞ்சநேரம் தூங்கறதுனா தூங்குங்க தம்பி” என
“நீங்க என்னைய விட வயசுல மூத்தவர். நீங்க செல்வானே பேர் சொல்லி கூப்பிடலாம். எனக்கு தூக்கம் வரலை. நீங்க ப்ரீயா இருந்திங்கனா கொஞ்சநேரம் அப்படியே பேசிட்டு இருக்கலாம்” என்றுக் கூற
முத்துப்பாண்டியும் தன்னைப்பற்றியும் தன் வேலையான இயற்கை விவசாயத்தைப் பற்றியும் கூற அவனும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டான்.
அவர்கள் பேச்சு மெல்ல அப்படியே செல்வி பக்கம் திரும்ப அவளின் குணநலன்களைப் பற்றிசொல்லிய முத்துப்பாண்டி தன் சந்தேகத்தை தெளிவுப்படுத்த எண்ணி அவனிடம்
“நீங்க தப்பா நினைச்சுக்குள்ளைனா ஒன்னு கேட்கலாமா?” என்று வினவ
“நீங்க என்கிட்ட என்ன வேணும்னாலும் கேட்கலாம். கேளுங்க அண்ணா”
“நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்கிங்க. செல்வி எட்டாவது வரைக்கும் தான் படிச்சுருக்கு. நீங்க அத எப்படி கல்யாணம் பண்ண சம்மதிச்சிங்க?” என்று கேட்க
அதைக்கேட்டு ‘என்ன அவ எட்டாவது தான் படிச்சுருக்காளா’ என்ற அதிர்ச்சியில் உறைந்து அவன் சிலையாகிவிட்டான்.

Advertisement