Advertisement

மலரே மலர்வாய் 3

வந்தவர்கள் அனைவரும் கிளம்பவும் வீட்டுப் பெண்கள் மட்டுமே இருக்க சமையல்கட்டுக்கு வந்தவள் “அம்மா” என்று ராகம் இழுக்க

“சொல்லு செல்வி என்ன வேணும்?” என பாசமாகக் கேட்க

“எனக்கு கல்யாணம் வேண்டாம்மா. நீங்க ஐயாட்ட சொல்லி இத நிறுத்தியிருங்க” எனவும்

சீக்கிரம் திருமணம் வைத்ததில் கவலையுற்ற அவள் பேசுவதாக எண்ணி “இப்ப அப்படித் தான் பயமா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் நீ யாருனு கேள்வி கேட்டு உன்ற மாமன் பின்னாடி போவ” என்று கேலி போல் ஆறுதல் கூற

“அம்மா எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கல. அவுக அவ்வளவு வெள்ளையா அசிங்கமா இருங்காங்கம்மா” எனும் போது

“பாக்க அசப்புல அப்படியே எம்.ஜி.ஆர் கணக்கா அழகா இருக்கப்பல எம்பேரன். அவன கட்டிக்க ஒனக்கு என்னடி” என்று பஞ்சு பாட்டி இடையிட

“அப்பத்தா உனக்கு பிடிச்சிருந்தா நீயே கட்டிக்க. என் தலைய உருட்டாதே”

“ஆமாடி பேசுவடி பேசுவ எல்லாம் வாய்க்கொழுப்பு. படிக்காத கழுதை உனக்கு படிச்சவன், அமெரிக்கால கவர்மென்ட் வாத்தியரா கண்ணுக்கு இலட்சணமா கைநிறையா சம்பாதிக்கற எம் பேரன பாத்தா எப்படி இருக்கு. இத விட உனக்கு எந்த மாதிரி மகராசன் வேணுமாம்” என்று திட்ட

அவளோ அவர் திட்டியதை எல்லாம் விட்டுவிட்டு ‘என்னனது வாத்தியாரா?’ என்று அதிர்ந்து
தான் கேட்டது சரிதானா என்று நினைத்து
மெதுவாக தன் அம்மாவிடம் “என்ன ஜோலி அவங்க அங்க பாக்குறாங்க” என காதை கடிக்க

அவர் பெருமையாக “அங்க காலேஜ்ல கணக்கு வாத்தியாருன்னு உங்கய்யா சொன்னாரு” எனவும்

அவளுக்கு ‘என்ன கணக்கு வாத்தியா’ என்று வேப்பங்காயை கடித்துபோல் முகம் அஷ்டகோணலானது.

ஒரு முறை அவள் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, வகுப்பில் கணக்கு வாத்தியார் ஒன்னும் ஒன்னும் எத்தனை? என்று
கேள்வி கேட்க அவள் பதினொன்னு என தவறாக பதில் சொல்லவும் மண்டையில் குட்டிவிட அன்று அவர் வெளியே வரும் நேரம் பார்த்து சிறு கல்லால் அடித்துவிட்டாள்.
அது பெரிய பிரச்சனையாகி தலைமையாசிரியர் வரை போக அன்றிலிருந்து செல்விக்கு கணக்கு என்றால் சுத்தமாக பிடிக்காது. இதில் கணக்கு வாத்தியார் என்றால் அவ்வளவு தான்.

“என்ன கணக்கு வாத்தியா? எனக்கு கணக்குனாவே பிடிக்காதுனு தெரியும்ல அப்பத்தா. கண்டிப்பா இந்தக் கல்யாணம் எனக்கு வேணாம் நிப்பாட்டுங்க” என்று குரலுயர்த்திக் கத்த

“கத்தாதடி உங்க ஐயா வந்துறப் போறாரு அவுக காதுல விழுந்துச்சு அம்புட்டுத்தென் அப்புறம் உன்னைய தோலுரிச்சு உப்புக்கண்டம் போட்டுறுவாரு. எனக்கல்லாம் உங்கய்யன் முகத்தையே கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரியும். உனக்கு அப்படியில்ல, நமக்கு சொந்தம் வேற. ஒழுங்கா கல்யாணப் பெண்ணா அமைதியா இரு” என அமுதா கூற

அவளுக்கும் அவள் தந்தையை பற்றி தெரியுமாதலால் உள்ளறையில் சென்று அடைந்துக்கொண்டாள்.

அவள் அப்பா பாசமானவர் தான், அதே சமயம் கண்டிப்பானவர். ஊரிலுள்ளவர்கள் எல்லாம் இரண்டாவதும் பொண்ணா போச்சே என வருத்தப்படுவது மாதிரி பிரச்சனையை கிளறிவிட
மாணிக்கத்துடைய அக்காக்கள் மூவரும் வேற கல்யாணம் பண்ணிக்க என்று கூறி பெரிய அக்காவின் மகளை இரண்டாம் தாரமாக கட்டிக்கச்சொல்லியும் அவர் கேட்காது தன்னுடைய இளைய மகளை கொண்டாடினார்.

ஆனால் அவளுடைய சேட்டைகளை பார்த்து பாசத்தை வெளிக்காட்டாது மறைத்து மிரட்டி வைத்தார். அப்படியும் அவள் அடங்கமாட்டாள்.
என்ன திட்டினாலும் எதாவது செய்து அவரிடமே மறுபடியும் வந்து மாட்டிக்கொள்வாள். அதை நினைத்து அவருக்கு சிரிப்பாக இருக்கும். அவளும் எது செய்தாலும் வெளியே அவளை காப்பற்றுபவர் வீட்டிலே வந்து நன்றாக சாமியாடுவார்.
தன் பெரிய மகளை கட்டிக்கொடுத்த பிறகுதான் அவரும் கொஞ்ச நாளில் இவளும் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்லும் பெண் என்றுபுரிந்து இவளை திட்டுவதை கொஞ்சம் குறைத்துக்கொண்டு பாசத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
ஆனால் இது மாதிரி திருமணம் மற்றும் சில விஷயங்களில் அவர் பேச்சை மீறி அவரை எதிர்த்து ஒரு பார்வை கூட பார்க்க முடியாது.

அவள் மனதில் ‘நம்ம எப்படி இத நிறுத்தலாம்’ என்று யோசனையோட அமைதியாக படுத்திருந்தாள்.
இங்கே இன்பச்செல்வன் வீட்டிலோ “டாட் நீங்க எப்படி என்ன கேட்கமாலே இப்படி கல்யாணத்த முடிவு பண்ணலாம்?” என்று கத்த

“ஏன்டா பொண்ணு நல்லா உனக்கு ஏத்த மாதிரி தான இருக்கு. உனக்கும் பிடிச்ச மாதிரி தான் தெரியுது. அப்புறம் என்ன?”

“என்ன டாட் பார்த்த ஒரு சில நிமிஷத்துல எப்படி டாடி பிடிச்சுருக்குனு சொல்ல முடியும். எனக்கு அந்த பொண்ண பத்தி ஒன்னுமே தெரியாது. அவங்களுக்கு என்ன பத்தி என்னத் தெரியும்னு தெரியாது” என்று பொரிய

“இங்கப் பாரு செல்வா. நான் எல்லாம் உங்க அம்மாவ என் கல்யாணத்த அன்னைக்கு மணமேடைல தான் பார்த்தேன். இந்த ஊருல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண பார்க்குறதே பெரிசு. நீ என்னன்னா ஆயிரம் குறை சொல்லிட்டு இருக்க”

“…………………..”

“நாம கல்யாணம் பேசியே முடிச்சுட்டு வந்துட்டோம். இனி அந்தப் பொண்ணு தான் இந்த வீட்டு மருமக. இதுக்குமேல எதுவும் கேட்காத. கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு” என்று எஸ்கேப்பாகி வெளியே வந்துவிட்டார்.

அவனுக்கு மண்டையை எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்று இருந்தது. தன்னுடைய சம்மதமே கேட்காமல் தன் திருமண தேதியை குறித்த தன் அப்பா மேல் கடுங்கோபத்தில் இருந்தான். அது போகட்டும் அந்தப்பெண்ணின் பெயர் கூட தெரியாமல் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பது?

அவர்களை வழியனுப்பிவிட்டு கொஞ்சம் வெளியே சென்று இருந்த மாணிக்கம் வீட்டிற்கு வர இரவானது.

அவர் வந்ததும் “கைகால் கழுவி சாப்பிட வாங்க மாமா” என்று அமுதா அழைக்க

அவர் அமரவும் பரிமாறிய தன் மனைவியிடம் அவர் “எங்க செல்விய காணாம்? சாப்பிட்டுட்டு அதுக்குள்ள உறங்கிருச்சா?” எனவும்

அவரிடம் வீட்டில் நடந்ததை சொல்ல மனதில்லாமல்,

“இல்ல இன்னும் சாப்பிடலை களைப்பா இருக்கும் போல உள்ளத் தான் படுத்திருக்கா” எனவும்

“ஏன்டி புள்ள சாப்பிடாம படுத்துருக்கு நீ என்னன்னா எனக்கு சாப்பாடு போடுற” என்ற திட்டி செல்விக்கு உணவு எடுத்துக்கொண்டு உள்ளறைக்குச் செல்ல
அவள் காலருகில் சென்றமர்ந்து “செல்வி, ஏத்தா செல்வி” என எழுப்ப

அவளோ குப்புறப்படுத்து யோசித்துக்கொண்டு இருந்தவள் தன்னையறியாமல் உறங்கியும் இருந்தாள்.

யாரோ தன்னை கூப்பிடும் சத்தம் கிணற்றுக்குள் கேட்பது போல் மெதுவாகக் கேட்க ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.
தன்னோட அப்பா காலடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து வேகமாக எழுந்தவள் “என்னய்யா கூப்பிட்டிங்களா?” என

“ஆமா ஆத்தா. வெறும் வயித்தோட உறங்குறிங்க சாப்பிட்டு படுத்துருக்கலாம்ல”

“இல்லய்யா பசிக்கல”

“ஏன்த்தா”\

“எனக்கு என்னமோ கல்யாணத்தை நினைச்சு பயமா இருக்குய்யா”

“நான் இருக்கப்ப உங்களுக்கு என்ன பயம்?”
அவள் அமைதியாக இருக்கவும்,

அவரே “நம்ம ஊரே கண்ணே உங்கமேல தான். உங்க மாமன் பாத்து பொறாமைல இருக்கு. சல்லடை போட்டு தேடுனாக்கூட இப்படி நல்லவரு கிடைக்கமாட்டாரு. நம்ம ஊருல படிச்ச பையன் கிடைக்கிறதே கஷ்டம். எல்லாரும் கூலி வேலை தான். வெளி இடத்துலயும் கம்பி கட்டுறது, மேஸ்திரி இப்படித்தான் ஜோலி பாக்குறாங்க. ஆனா உனக்கு நல்லா படிச்ச, வேலைல இருக்கற மாப்பிள்ளை தானா கிடைச்சுருக்காரு” என்று தொடர்ந்து

“உனக்கு தெரியாது ஆத்தா. ஊருல உன்ன விட வயசு கம்மியான பிள்ளைகளுக்கு எல்லாம் சீக்கிரம் கல்யாணம் முடிய உனக்கு மட்டும் இப்ப வரைக்கும் தள்ளிப்போனதுல நான் ரொம்ப பயந்துட்டேன் சாமி. ஆனா இப்பத்தேன் தோணுது. இப்படி ராசா மாதிரி மாப்பிள்ளை வரதுக்காக தான் இவ்வளவு நாள் நீ காத்துட்டு இருந்தயோனு”

“உனக்கு சீர் கூட பெரிசா கேட்கலை உங்க இஷ்டப்படி செஞ்சுக்கங்கனு சொல்லிட்டாங்க. இப்படி குடும்பம் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும். உங்கத்த வீட்டுல செண்பகத்த கொடுத்தப்பக்கூட என் கூடபிறந்த பிறப்பே அவ்ளோ சீரு கேட்டாங்க.
அதுக்கு அப்புறம்மாச்சு விட்டாங்காள. ம்கூம் அந்த வீட்டுக்கு கொஞ்சம் அதிக சீரோட மருமக வர உங்கக்காவ அந்த வீட்டு வேலையாளு மாதிரி நடத்துறாங்க. ஏதோ மாப்பிள்iளை நல்லவர்னால இப்ப வரைக்கும் உங்கக்கா அங்க தாக்கு பிடிக்க முடியுது.
அதனால் தான் உன் சின்னத்த உன்ன கேட்டப்ப மாட்டேனு சொல்லிட்டேன். அரசு அவுக குடும்பம் ரொம்ப நல்லவங்க. மாப்பிள்ளை அம்மா அவுக சின்ன வயசுலயே இறந்துடாக. நீ தான் அவங்களுக்கு தாயா புரிஞ்சி பதமா நடந்துக்கனும். உன்ற மாமன நல்ல பாத்துக்கனும்” என்று தன் மனதில் இருப்பதைக் கொட்ட

தன் ஐயன் சொன்னதையெல்லாம் கேட்டபிறகு அவளால் அந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சிகூட எடுக்கமுடியவில்லை.

தன்னுடைய ஐயா எந்த அளவுக்கு இந்த கல்யாணத்தை நடத்த ஆசைப்படுகிறார் என்று அவளுக்கு புரிந்தது.

தன் அக்கா கல்யாணத்திற்கு பட்ட கடனே இன்னும் அவர்களால் அடைக்கமுடியாமல் இருக்க மேலும் சீமந்தம், குழந்தை பிறப்பு, காதுகுத்து என்று கடன் வாங்கியிருக்க, இப்போது இந்தக் கல்யாணத்தை நிறுத்தினால் அவர் உடனே வேறு இடம் பார்த்து இருப்பதை வைத்து செய்ய முடியாமல் தனது கல்யாணத்திற்காகவும் கடன் பட்டால் தங்கள் குடும்பத்திற்கு தான் கஷ்டம் என்று உணர்ந்தாள்.
எனவே தன்னால் மேலும் கஷ்டம் ஏற்படக்கூடாது என்று அமைதி காத்தாள்.
நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

இன்பச்செல்வனோ தன்னுடைய அப்பாவிடம் இன்னோரு முறை பேசி பார்க்கலாம் என்று தன்அறையை விட்டு வர உறவினர்கள் அவனை சூழ்ந்து பேச ஆரம்பித்தனர்.

மற்றவர்கள் முன்னிலையில் அவரை எதிர்த்து எப்படி பேசுவது என்று அவரிடம் தனியே பேசலாம் என்று சந்தர்ப்பத்துக்காக எதிர் நோக்கிக்கொண்டிருந்தவனுக்கு அது கிடைக்கவேயில்லை.
தன் மகனின் மனநிலையை பற்றி நன்கறிந்த அரசும் அவனிடம் சிக்காமல் இருக்க தன்னுடன் உறவினர்கள் யாரையாவது உடன் வைத்திருந்தார்.
அவர் மேலிருந்த கோபத்தில் செல்வன் லேப்டாப்லில் தன் நண்பனுக்கு அழைத்து இங்கு நடப்பதை சொல்ல
அதைக்கேட்ட அவன் ‘உன் மனதுக்கு தோன்றியதை செய்’ என்று சொல்லவும்

‘நம்மகிட்ட எப்படியும் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு பிடிக்குதானு கேட்பாங்க அப்ப பிடிக்கலைனு சொல்லிறனும்’ என்று முடிவெடுத்தான்.

இன்பச்செல்வன் அறியவில்லை இந்தியப் பெற்றோருக்கு பிறந்தாலும் அமெரிக்க கலாசாரத்தில் வளர்ந்து திருமணம் செய்துக் கொண்ட தன் நண்பனிடம் என்ன கேட்க வேண்டும் கேட்கக் கூடாது என்று.
இவனும் அமெரிக்காவில் வளர்ந்தவன் தான். ஆனால் சில விஷயங்களில் தன் அப்பாவால் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டால் வளர்க்கப்பட்டவன்.

ஒருவேளை இங்குள்ளவர்களிடம் யாரிடமாவது தன் விருப்பத்தை சொல்லியிருந்தால் நடக்க இருப்பதை தடுத்திருக்கலாம். அல்லது தன் சந்தேகங்களை கேட்டிருந்தால் கூட எதை எப்போது செய்யனும் என்று விடை கிடைத்திருக்கும்.

ஆனால் எதையும் செய்யாமல் தான் எடுத்த முடிவை செயலாற்ற காத்திருந்தான்.

Advertisement