Advertisement

மலரே மலர்வாய் 2

சென்னை விமான நிலையம் வந்த இன்பச்செல்வன் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வர அவன் அப்பா அங்கே அவனுக்காக காத்திருந்தார்.

இத்தனை நாட்கள் தன் தந்தையை பிரிந்திருந்ததில் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன் “ஐ மிஸ் யூ சோ மச் டாட்” என்று மறுபடியும் அணைத்தான்.

“நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் செல்வா” என்று சொன்னவர் பேசிக்கொண்டே அவனைத் தன்னுடைய சொந்த ஊரான அணைப்பட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே அவர்களுக்கு வீடு இருக்க அவனை அங்கே கூட்டிச்சென்றார்.

வீடு முழுவதும் உறவினர்களாக இருக்க அவனுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி விட்டு அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

அவனை குளித்து களைப்பு நீங்கி வரச்சொல்ல அவனும் தயாராகி வரவும்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசுணும் செல்வா” என

“சொல்லுங்கப்பா” என்று சொல்லி அங்கிருந்த தண்ணீரைக் குடிக்க

“இல்ல செல்வா இங்க உங்க சின்னத்தா பேத்திய பார்த்தேன். பொண்ணு நல்லா குணமா அழகா இருக்கு. அதான் உனக்கு கல்யாணம் பண்ணி நம்ம கூடவே கூட்டி வந்துருலாம்” என்று சொல்ல

இவனுக்கு குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் புரையேறியது.
“டோன்ட் ப்ளே வித் மீ ப்பா” என்று இவன் கத்த ஆரம்பிக்க (சாருக்கு கோபம், சந்தோஷம் எது வந்தாலும் இங்கிலிஷ் தான் வாய்ல வரும்)

“டேய் டேய் நிறுத்து செல்வா. உன்னோட கல்யாண விஷயத்துல போய் நான் விளையாடுவானா? போன மாசம் உன்கிட்ட கேட்டப்ப நீ என்ன சொன்ன? உங்களுக்கு புடிச்சிருந்தா போதும்னு சொல்லிட்டு இப்ப ஏன்டா இப்படி கத்துற?” என்று பாவமாக கேட்கவும் அவனுக்கு அவர்களது உரையாடல் மனதில் படமாக ஓடியது.
அவன் நண்பன் கிஷோருக்கு மகன் பிறந்ததால் ஹாஸ்பிட்டல் சென்று இவர்கள் இருவரும் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும் இவன் சமைக்க ஆரம்பிக்க அவர் அப்படியே லானில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

திடீரென அவர் “செல்வா செல்வா இங்க வா” என்று கூப்பிட
சமையல்கட்டில் பாஸ்தா செய்துக்கொண்டிருந்த இன்பச்செல்வன் “என்னப்பா? எதுக்கு கூப்பிட்டிங்க?” என்று வர

“உன்னோட வயசு தான அந்த கிஷோருக்கு. அவனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்தாச்சு. நீ என்னன்னா இன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற” என்று குறைபட

“இன்னும் நான் நினைக்கிற மாதிரி பொண்ண பார்க்கலைப்பா. பார்க்கிறப்ப கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்”
போடா இதையே தான் மூணு வருஷமா சொல்லிட்டு இருக்க. உன் கல்யாணத்த பார்க்குறதுக்குள்ள எனக்கு ஏதாவது ஆயிரும் போல” என்று வருத்தப்பட

அவரைச் சமாதானப்படுத்த எண்ணி “இப்ப என்னப்பா நான் கல்யாணம் பண்ணிக்கனுமா. எனக்கு ஏத்த மாதிரி நீங்க பொண்ணு பாருங்க, உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும் நான் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆனான்.

அவனுக்கு அப்போது தெரியவில்லை இந்த வார்த்தை அவன் வாழ்க்கையில் என்னென்ன செய்யக் காத்திருக்கிறது என்று.

அவரும் கடந்த சில வருடங்களாக அவனிடம் கல்யாணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சிக்கொண்டிருந்தார். அன்று வேறு அவரை மெடிக்கல் செக்கப்பிற்காக ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்றதில் அவருக்கு மிகுந்த மனஅழுத்தம் இருப்பது தெரிந்தது.
எனவே அவருக்கு சாதகமாக பேசினால் அவர் மனம் அமைதியடையும் என்று அப்போதைக்கு எதையோ வாயில் வந்ததை கூறிச் சமாளிக்க அது அவனுக்கே திரும்பும் என கொஞ்சமும் யோசிக்கவில்லை.

அதை நினைவுபடுத்திக்கொண்டவன் தான் இவ்வாறு வசமாக தன் அப்பாவிடம் மாட்டுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்போது என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு அவன் அப்பா சொன்ன இந்திய கலாச்சார முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் நினைவில் வந்தது.
ம்ம் எப்படியும் முத பொண்ணு பார்க்கறது அப்படி இப்படினு நிறைய சடங்கு இருக்கே. அப்ப நம்ம பொண்ணு பிடிக்கல்லைனு சொல்லிரலாம் என்று யோசித்தவன் சரி என்று சொன்னான். (ஹாஹாஹா ஆடு வெட்டச் சொல்லித் தானா வந்து தலைய காட்டுதே)

அவன் சரி எனவும் திருநாவுக்கரசுக்கு எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் தன் பேச்சை கேட்டு மதித்து நடக்கும் தன் மகனை நினைத்து பெருமை பொங்கியது.

“சரிப்பா செல்வா அப்ப நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணு வீட்டுக்கு போய் ஒரு தடவ பார்த்துட்டு அப்படியே பேசி முடிச்சிட்டு வந்துருலாம்” என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து தன் சொந்தங்களிடம் முறைப்படி இன்று பூ வைக்கச் செல்லலாம் என்று சொல்லி மேலும் சிலரை கூப்பிடச் சென்றார்.

அவர்கள் அனைவரும் கிளம்பி வேன் மற்றும் பைக்குகளில் ஆலமரத்துப்பட்டிக்கு வந்தனர்.

மாணிக்கமும், அமுதாவும் அவர்கள் வருகையை இன்றே எதிர்பாராததால் அதிர்ந்து பின் சமாளித்து வந்தவர்களை வரவேற்று உள்ளே கூட்டிச்சென்று அமரவைத்து குடிக்க மற்றும் சாப்பிட ஏற்பாடு செய்தார்கள்.
அமுதா செல்வியின் தோழி அம்பிகாவை அழைத்து “செல்வி மல்லிகைத் தோட்டத்துக்கு தங்கப்பாண்டியோட போயிருக்கா. வெரசா போய் கூட்டிட்டு வா. அப்படியே போற வழில செண்பக வீட்டுலயும் மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துருக்கத சொல்லிட்டுப் போடி” எனவும்

“சரித்த” என்று சொன்னவள் மாப்பிள்ளையை ஒருமுறை நேரில் பார்க்கலாம் என்று பின்பக்க சந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க பார்த்தவளுக்கு தலைசுற்றியது.

பின் தன்னை சமாளித்தவள் தோட்டத்துக்கு போற வழியில் இருந்த செண்பக அக்கா வீட்டுக்கு வந்து,
“மதினி மதினி” என்றழைக்க

“யாரு அது அம்பிகாவா என்ன இந்தப்பக்கம்” என்று பின்கட்டில் இருந்து வெளிய வந்த செண்பகம் கேட்க

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து எல்லாரும் வந்துருக்காங்க மதினி. அதான் அத்தை உங்கட்ட சொல்ல சொன்னாக” என்று சொல்லி புறப்பட

செண்பகத்துக்கு கைகால் ஓடவில்லை. உள்ளே சென்று தன் மாமியாரிடம் கூறி விட்டு தன் கணவனிடம்; பெண் குழந்தையை கொடுத்து தூக்கிக்கொண்டு முதலில் செல்ல சொல்லிவிட்டு பின் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என்று வீட்டில் இருந்த பலகாரங்களை எடுத்துக்கொண்டு ஓடினாள்.

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ

என்று பாடிக்கொண்டே செல்வி தன் அக்கா மகன் தங்கப்பாண்டியுடன் அங்கு வேப்பமரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்.

“ஏ செல்வி செல்வி” என்று கத்திக் கொண்டே வந்தவளைப் பார்த்தவள்

“என்னடி ஏன் இப்படி என்ற பேர ஏலம் விட்டுட்டு வரவ” என

“உன்ற மாமா அமெரிக்கால இருந்து வந்துட்டாரு புள்ள”

“என்னவே உண்மையாவா சொல்றவ. நம்ம நாட்டுள்ள இருக்க டெல்லிலருந்து வரவே ராசு அண்ணன் மூணு நாளாகும்னு சொல்லுச்சு. இவுக மட்டும் எப்படி அமெரிக்காலருந்து நேத்து கிளம்பி இன்னைக்கு வந்துருப்பாக. என்னையா ஏமாத்த பாக்கிறியா” என்று திட்ட

“நான் நிசமாத்தான்டி சொல்றேன். அவுக எல்லாரும் வந்துருக்காங்க. அதான் அத்த உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாக” எனவும்

சந்தேகத்தோடே அவளுடன் தன் அக்கா மகனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள்.

முன் வாசல் வழியாக உள்ளே செல்ல முயன்ற செல்வியை வாசலிலே அவளுக்காக காத்திருந்த செண்பகம் பார்த்து “ஏன்டி கூறுகெட்டவளே இங்குட்டு போக பாக்குற அங்குட்டு வா” என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு பின்கட்டு வழியாக கூட்டிச்சென்றாள்.

அவளை முகம் கழுவி வரச்சொல்லி பட்டுப்புடவை கட்டிவிட்டு நகைகள் போட்டு செண்பகமும் அம்பிகாவும் தயார் செய்ய

அப்போது உள்ளே நுழைந்த அம்பிகாவின் அம்மா “அங்க எல்லாரும் பொண்ண கூப்புட்டு வரச்சொல்றாக வாங்க போகலாம்” என்றுவிட்டு

அம்பிகாவிடம் “நீ இங்கனவே இரு. வெளியில வராத” என்று கட்டளையிட்டவர்

அவர் ஒரு பக்கமும் செண்பகம் மறுபக்கமும் வழிநடத்தி செல்வியை கூடத்திற்குக் கூட்டிச்சென்றனர்.

செண்பகம் அவளை அனைவரையும் பார்த்து வணங்கி அமரச்சொல்ல அவளும் அவள் அக்கா சொன்னபடியே தரையில் விழுந்து குனிந்து தன் மலர்கரங்களை குவித்து வணங்கி அங்கு விரிக்கப்பட்டிருந்த போர்வையில் அமர்ந்தாள்.

அவளை வைத்தக்கண் பார்க்காமல் பார்த்த இன்பச்செல்வன் மனதில் “ம்ம் அழகாத் தான் இருக்கா. என்ன ஒரு இன்ஜினியரிங் இல்ல ஆர்ட்ஸ் படிச்சிருப்பாளா. நமக்கு இவ எப்படி கரெக்ட் மேச்சிங்கா இருக்கும்?” என்று யோசனை ஓட

அவனை பார்த்த திருநாவுக்கரசுக்கு “நம்ம பையனுக்கு பொண்ண புடிச்சிருச்சு போல அதான் இப்படி பாக்குறான்” என்று நினைத்து

சபையில் சத்தமாக “எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு. இன்னைக்கே பூ வச்சிரலாம்” என
அங்கு இருந்த அனைவருக்கும் அதுவும் சரியாகப்பட, இன்பச்செல்வனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

இன்பச்செல்வனுக்கு அத்தை முறையாகும் பெண்ணை அழைத்து செல்வியின் தலையில் பூவை வைக்கச்சொல்ல அவரும் அவன் கையில் கொடுத்து பூவை வாங்கி செல்வியின் தலையில் சூடிவிட்டார்.

அங்கிருந்த பெரிசு ஒருவர் “வர வியாழக்கிழமை நாள் நல்லா இருக்குனால நாம பேசின படி அன்னைக்கே கல்யாணம் வச்சிக்குவோம். புதன்கிழமை சாயங்காலம் நிச்சயம் பண்ணியிருவோம்” என்று பேசி

“உங்களுக்கு இதுல சம்மதமா?” என்று திருநாவுக்கரசு மற்றும் மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்க

அவர்கள் இருவரும் ஒன்றாக “சம்மதம்” சொல்ல ஒப்புத் தாம்புலம் மாற்றிக்கொண்டனர்.

நிலக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் பெண் பார்த்து பிடித்துவிட்டாலே அடுத்த நாளே கூட கல்யாணத்தை நடத்திவிடுவார்கள். அந்தப் பக்கங்களில் இரு வீட்டாருக்கு பிடித்தால் போதும். நிச்சயம் செய்யும் போது மட்டுமே மாப்பிள்ளை பெண்ணின் சம்மதத்தை சபையில் கேட்பார்கள்.
அப்போது அவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு பிடிக்காவிட்டால் கூட அங்கேயே வேறு பிடித்த முறைபெண்ணை அல்லது முறைபையனை உடனே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

அதனால் தான் திருநாவுக்கரசும் பெண்ணை பார்த்து பிடித்துப் போகவும் போன வாரமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.

இது தெரியாத அவர் மகன் பெண் தான் பார்க்க போகிறோம் என்று வந்திருக்க வந்தவனுக்கு திருமண நாளையே குறிக்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

தங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு தன் அப்பாவிடம் இது குறித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாது அமைதியாக அமர்ந்திருந்தான்.

மற்ற விஷயங்களை பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்க செந்தாமரைச்செல்வி மெதுவாக தலையை உயர்த்தாமல் கண்ணை மட்டும் சுழட்டி இன்பச்செல்வனை பார்க்க,
பார்த்தவள் “ஐய்யய்யோ என்ன இது இவுக இப்படி இருக்காக. அப்படியே செவுத்துக்கு சுண்ணாம்பு அடிச்சக் கணக்கா”

“இது அவுக தானே இல்ல வேற யாராச்சும்மா” என்று குழம்பி நன்றாக உத்துப்பார்த்தவள்

“இல்ல இது நம்ம மாமா தான். போட்டோல நல்ல கருப்பா அழகா தான இருந்தாக. ஆனா இப்ப ஏன் இப்படி வெள்ளையா இருக்காக, பாக்கவே சகிக்கல” என்று எண்ணிக் கொண்டிருக்க (ம் பிளாக் அண்ட் வெயிட் மொபைல்ல எவ்வளவு கலரா இருந்தாலும் கருப்பா தான் போட்டோ எடுக்க முடியும் என்று அவளுக்கு தெரியாதது என் குத்தமா உன் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல)

அப்போது அவனுக்கு போன் வரவும் சிக்னல் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியே செல்ல அவன் உயரத்தைப் பார்த்தவள்

“என்ன இது இவ்வளவு பெரிசா இருக்காக. இவங்களுக்காக நம்ம வீட்ட இடிச்சு உசரமாவ கட்டமுடியும்”

“நமக்கு கொக்கு மாதிரி இருக்குற இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா. நம்ம அம்மாட்ட சொல்லி எப்படியாச்சும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிரனும்” என்ற முடிவுக்கு வந்தாள்.

Advertisement