Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 16

சுந்தரேசன் பார்வதி தம்பதியினருக்கு மாணிக்கம், மூர்த்தி மற்றும் மகேஸ்வரி என கதிரின் தாத்தா மாணிக்கத்தோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இருவர்.

மாணிக்கம் தன்னுடைய தங்கை மகேஸ்வரியை பக்கத்து ஊரில் தான் கட்டிக்கொடுத்தார். அவர்களுக்கு ஒரே மகன் கிருஷ்ணன்.

மாணிக்கம் தனக்கு பிறந்த மகனிற்கு தன் தந்தை பெயரையே வைத்தார். அவர் தான் நம் கதிரின் அப்பா சுந்தரேசன்.

சுந்தரேசனின் மூர்த்தி சித்தப்பாவிற்கு ஒரே மகள் மட்டும் தான், பெயர் சுந்தரி. சுந்தரி பெயருக்கேற்றார் போல் நல்ல அழகி.

எனவே அவளை பெண் கேட்டு நான், நீ என எல்லோரும் போட்டிப் போட்டனர்.

ஆனால் சுந்தரேசனின் சித்தப்பா மகள் சுந்தரியை தங்களுடைய அத்தை மகன் கிருஷ்ணனிற்கு தான் கட்டிக் கொடுத்தனர்.

கதிரின் தாத்தா மாணிக்கம் நல்ல உழைப்பாளி. அவர் சொந்தமாக ஏகப்பட்ட விவசாய நிலங்களை வாங்கிச்சேர்த்தார். ஆனால் என்ன தான் சொத்து இருந்தாலும் மழை பொய்த்துப்போனதால் சில நேரங்களில் சற்று கஷ்டமான ஜீவினம் தான்.
அதனால் அவர் தன் மகன் சுந்தரேசனை வெளியூரில் இன்ஜினியரிங் படிக்க வைத்தார்.

சுந்தரேசன் விவசாயமும் பார்த்துக்கொண்டு படித்து தன் குடும்பத்தையும் தாங்கிக் கொண்டார்.

படிப்பு முடிந்ததும் சிறிது நிலங்களை விற்று சொந்தமாக பிஸ்னஸ் ஆரம்பித்தார். தன் தங்கை சுந்தரிக்கு திருமணம் செய்த பிறகு வீட்டினரின் வற்புறுத்தலால் அவர்கள் ஊரிலிலே இருந்த உடன் மூன்று சகோதரிகளுடன் பிறந்த மீனாட்சியை திருமணம் செய்துக்கொண்டார்.

அப்போது மீனாட்சி பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்தார். அந்த ஏழ்மையான நிலையிலும் அவர் படிப்பது சுந்தரேசனைக் கவர்ந்தது. எனவே மீனாட்சியை திருமணம் செய்துக் கொண்டு அவரைப் படிக்க வைத்தார்.

அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் கழித்து பிறந்தவன் தான் கதிரவன்.

அவன் பிறக்கவும் வாழ்ககையில் அவருக்கு இறங்கு முகம் என்ற வார்த்தையே இல்லாத அளவிற்கு பிஸ்னஸ் வளர்ச்சியடைந்தது. பின் சில வருடம் கழித்து காவ்யா பிறந்தாள்.

அவர் கடின உழைப்பு, விடாமுயற்சி காரணமாக வெகுவேகமாக அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்தது.

கதிர் பள்ளியில் சேர்க்கும் போது உடன் ஒன்றாக சேர்ந்தவன் தான் கிரிதரன். அங்கே ஆரம்பித்த அவர்கள் நட்பு இன்று ஆலமரமாக வேரூன்றி நிற்கிறது.

கிருஷ்ணனுக்கும் சுந்தரிக்கும் திருமணமாகி எட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கோவில் கோவிலாக குழந்தை வரம் கேட்டுச் சென்று பிறந்தவள் தான் சஞ்சனா. பிறக்கும் போதே தன் தாயின் அழகைக் கொண்டு பிறந்தவள்.

காவ்யாவை விட ஆறு மாதம் இளையவள்.
சஞ்சனா பிறந்து இரண்டு வருடத்திலேயே அவள் அப்பா கிருஷ்ணன் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
சுந்தரி தன் கணவர் இறக்;கவும் தங்கள் பாதுகாப்பிற்காக தன் பிறந்த வீட்டிற்கே மகள் மற்றும் மாமியாருடன் வந்துவிட்டார்.

சுந்தரேசன் தன் தங்கையிடம் தங்களோடு சென்னைக்கு வருமாறு வற்புறுத்த அவர் வரமறுத்ததால் சஞ்சனாவையாவது வளர்ப்பதாக சொல்லி கேட்டுப் பார்த்தார்.

சுந்தரி தான் “எப்படியிருந்தாலும் அவ உங்கவீட்டுக்குத் தான் மருமளா வரப் போறா. அதுவரைக்கும் எங்க கூட இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார்.

சஞ்சனாவை வளர்த்தது அவள் தாயும் பாட்டியும் தான்.
வயது மூப்புக் காரணமாக அவள் பாட்டி, கதிர் பாட்டி தாத்தா என பெரியவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
சுந்தரியும் ஊரில் உள்ள நிலபுலன்களை பார்த்துக்கொண்டு தன் மகளை பள்ளி படிப்பு தங்கள் சொந்த ஊரிலே படிக்க வைத்தார்.

பின் அவர் கதிர் அளவுக்கு அவளும் படித்தால் தானே பொருத்தமாக இருக்கும் என்ற நினைத்து மேலே படிக்க தன் அண்ணனோடு சென்னைக்கு அனுப்பினார்.

மீனாட்சிக்கு தன்னையும் ஒரு சகோதரி போல் ஏற்றுக்கொண்ட சுந்தரியை மிகவும் பிடிக்கும். ஊரிலிருந்த தன் தங்கைளின் திருமணத்தின் போது அவர் உதவியது மறக்கவே இயலாது. அவர் தான் ஆரம்ப காலத்தில் மீனாட்சி படித்துக்கொண்டு இருக்கும் போது வீட்டையும் கதிரையும் பார்த்துக்கொள்ள உதவியாக இருந்தவர்.

அவர்களுக்கு சஞ்சனா பிறந்த போதே தன் மருமகள் வந்து விட்டாள் என்று தான் அனைவரிடமும் கூறுவார். அப்போதே கதிரிடம் அதைத்தான் கூறுவார்.

சஞ்சனா வயதுக்கு வந்த போது கூட அவளுக்கு எல்லா சீரும் கதிர் தான் குடுத்தான். எனவே சஞ்சனா சென்னைக்கு படிக்க வருவதைக் கேட்டு அவர் தான் மிகவும் சந்தோஷப்பட்டார்.

சுந்தரேசனும் தான் ஒர்க்கிங் பாட்னராக இருக்கும் காலேஜிலேயே தன் தங்கை மகளை சேர்த்திருந்தார். அப்போது காவ்யாவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு முடித்திருந்தாள்.

கதிர் அப்போது தான் அண்ணா யுனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டே யுபிஸ்சி எக்ஸாம் எழுதியதில் இந்திய அளவில் இரண்டாம் பெற்று டெல்லியில் பயிற்சி பெறச் சென்றான்.

சஞ்சனா இங்கு வரவும் மீனாட்சி அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். சுந்தரேசனும் தன் மருமகள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். காவ்யாக்குமே சஞ்சனா என்றால் மிகவும் பிரியம். எனவே அவளை தன் உடன் பிறந்த சகோதரி போல் தான் எப்பொழுதும் பாவிப்பாள்.

தன் மாமன் வீட்டில் சஞ்சனா ஒரு இளவரசி போல் வலம் வந்தாள்.

கதிர் பயிற்சிக்கு பிறகு மேகலயாவில் வேலையில் சேர மூன்று வருடங்கள் எந்தவித இடையிறுமின்றி கழிந்தது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவான்.

சஞ்சனா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் கடைசி வருடத்தில் இருந்தாள்.

காவ்யாவும் பி.இ முடித்துவிட்டு எம்.பி.ஏ டெல்லியில் படிக்க சேர்ந்தாள்.

காவ்யா டெல்லிக்கு படிக்கச் சென்றது சஞ்சனாவுக்குத் தான் சிறிது வருத்தம்.

காவ்யாவிடம் “நீ இங்கேயே படிக்கலாம்ல காவி”

“நீ இல்லாம தனியா இருக்க எனக்குபோரடிக்கும் ப்ளிஸ் போகாத காவி” என்று வருத்தமாகச் சொல்லியும்
அவள் “இரண்டு வருஷம்தான் சஞ்சு. சீக்கிரமா படிச்சுட்டு இங்க வந்துருவேன். இரண்டு நாள் லீவ் விட்டாக்கூட உன்ன பாக்க வந்துருவேன்” என்று இவளை சமாதானப்படுத்தி டெல்லிக்குச் சென்றாள்.

அப்போது கதிருக்கு வேலை ஆந்திராவுக்கு மாற்றலாக ஒவ்வொரு வார விடுமுறையிலும் அவன் வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

கிரி லண்டனிலிருந்து படித்து முடித்து வரவும் தங்கள் குடும்ப தொழில்களை பார்க்கலானான். கிரிதரன் கதிர் ஆந்திராவுக்கு மாற்றலாகவும் கதிருடன் இணைந்து சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி தொடங்கினான். பின் அவர்கள் இணைந்து சாப்ட்வேர் கம்பெனியை ஹைதராபாத்திலும் ஆரம்பித்தனர்.

ஏற்கனவே வீட்டில் சஞ்சனாவைத் தான் கதிருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்திருந்ததால் அதனை பற்றி அவன் முன்னிலும் பேசியதால் சஞ்சனாவோடு மிகவும் உரிமையாக பேசுவான்.

சென்னைக்கு வந்தபிறகு சஞ்சனாவின் அழகு பன்மடங்கு அதிகரித்திருந்தது.

கதிரும் வாரம் வாரம் அவளை பார்த்து பேசுவதில் மகிழ்ந்து ஒருகட்டத்தில் அவளுக்காக அவளைப் பார்க்க என்றே ஊருக்கு வரத்தொடங்கினான்.

ஓர் அழகிய பெண் தன்னோடு பேசுவதை அதுவும் வருங்காலத்தில் தன் மனைவி என வீட்டினரால் கூறப்படுபவள் மீது அந்த இளம் வயதில் அனைவருக்கும் ஏற்படும் ஈர்ப்பு தான் கதிருக்கும் ஏற்பட்டது.

என்ன தான் படித்து பெரிய பதவியில் இருந்தாலும் இருபத்தைந்து வயது என்பது ஆண்கள் முதிர்ச்சியடையாத வயதே. இதுவே பெண் என்றால் அந்த வயதிலே ஒரு தெளிவு இருக்கும். ஆணுக்கு இன்னும் சில வருடங்கள் கழித்தே தெளிவு பிறக்கும்.

அப்பொழுது கதிர் சஞ்சனாவுடன் தன் காதலைப் பகிர்ந்துக் கொள்ள அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்.

அவள் ‘கதிர் அத்தான் கதிர் அத்தான’; என்று அழைக்கும் போது அவன் வானத்தில் பறப்பது போன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான்.

சஞ்சனா பி.இ முடித்துவிட்டு எம்.இ படிக்க, காவ்யாவும் படித்து முடித்து சென்னை வந்தாள்.
அப்போது தங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாட கிரியை கதிர் அழைத்திருக்க வந்தவன் அன்று தான் முதன் முதலாக காவ்யாவை புடவையில் பார்த்ததில் மயங்கி நின்றுவிட்டான்.

அப்போது அங்கே வந்த கதிர் “என்னடா வெளியிலேயே நின்னுட்ட உள்ள வாடா” என்று அழைக்க
“ம் வரேன் மச்சான்” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாக பார்த்தான்.

எப்பவும் கிரி கதிரை பெயர் சொல்லித் தான் அழைப்பான். இன்று அவன் அழைப்பிலே அவன் மனதை புரிந்துக் கொண்டவன் கிரியிடம் தனியாக “ஏன் மச்சானு கூப்பிட?” என்றுக் கேட்க

“நான் எப்ப கூப்பிட்டேன்”

“ம் வீட்டுக்குள்ள வராம வெளியில நின்னக்கிட்டு இருந்தில அப்பதான் கூப்பிட்” என்று விளக்க

ஐயோ காவ்யாவ பார்த்துக்கிட்ட கூப்பிட்டோம் போல என்று தலையை தட்டிக்கொண்டு ‘எதாவது சொல்லி சமாளி கிரி’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பேச வர

“இங்க பாரு உண்மைய மட்டும் தான் சொல்லனும்” என்று மிரட்ட

கிரியும் தனக்கு காவ்யாவின் மேல் விருப்பு ஏற்பட்டதையும் ஆனால் தன்னோட நண்பன் தங்கையை அப்படி நினைக்கக் கூடாது அது தான் நட்புக்கு செய்யும் துரோகம் என்று தன் காதலை மனதில் குழிதோண்டி புதைத்ததையும் கூற

கதிருக்கு தன் நண்பனை நினைத்து பெருமையாக இருந்தது.

கிரி உணருவதற்கு முன்பே அவன் பெற்றோர் இறந்த போது அவன் வருத்தத்தில் தன்னையறியமால் உளறியதை கேட்ட போதே காவ்யா மேல் கிரி வைத்திருந்த பாசத்தை தெரிந்துக் கொண்டவன்,

அப்பவே கிரிக்கு தான் காவ்யாவை திருமணம் செய்விக்க வேண்டும் என்று முடிவெடுத்து கதிர் தன் அப்பாவோடு பேசி சம்மதம் வாங்கியிருந்தான்.

கிரியே தன் வாய் விட்டு கூறவும் அனைவரிடம் பேசி காவ்யாவின் முழு சம்மதத்தைப் பெற்று அவர்ளின் திருமணப் பொறுப்பை அவன் ஏற்றான்.

ஒரே மாதத்தில் காவ்யாவிற்கும் கிரிக்கும் ஒரு சுபயோக நன்நாளில் ஊரே மெச்சும் படியாக திருமணம் செய்தனர்.

திருமணம் முடிந்து குலதெய்வ பூஜை செய்ய ஊரிலிருந்து வந்தவர்களிடம் சஞ்சனாவின் அம்மா தன் அண்ணன் சுந்தரேசனிடம், சஞ்சனாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் செய்யலாமா ஏன்என்;றால் சஞ்சனாவுக்கு திருமணம் யோகம் வந்துவிட்டது என்று ஜோசியர் கூறியதைக் கூற அவர்களும் யோசிப்பதாகச் சொன்னார்கள்.

மீனாட்சி சஞ்சனா கதிருக்கு இப்போது திருமணம் செய்யலாமா என்று தன் கணவரிடம் மறுபடியும் ஜோதிடரிடம் கதிருடைய ஜாதகத்தைப் பார்க்கச் சொல்ல, அங்கு கதிருக்கு இன்னும் ஒரு மாதத்தில் மிகப்பெரிய கண்டம் இருப்பதாகவும் மாங்கல்ய பலம் பெற்ற சஞ்சனாவோடு கல்யாணம் நடக்காவிட்டால் உயிரக்கே ஆபத்து ஏற்படும் என்றுக் கூற அதைக் கேட்டு உடனே அனைவரும் சம்மதித்தனர்.

அடுத்து வரும் முகூர்த்தம் குறிக்கப்பட்டு அன்று நிச்சயதார்த்தமும் அதற்க்கடுத்து இருபது நாட்கள் கழித்து வரும் முகூர்த்தத்தில் திருமணமும் செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

கிரியும் காவ்யாவும் தேன்நிலவிற்காக சுவிட்சர்லாந்து போய் இருந்ததால் நிச்சயத்திற்கு வரமுடியாமல் போயிற்று.

நிச்சயம் நல்லபடியாக முடிய காவ்யா இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக இருந்தது.

திருமணம் இங்கு மதுரையிலே நடப்பதால் இன்று கல்யாணத்திற்கு நகைகள் வாங்க சஞ்சனாவும், மீனாட்சியும் மற்றும் சில உறவுப் பெண்களும் கடைக்குச் செல்ல தயாராயினர்.

காவ்யா வந்த பிறகு தாலி செய்யலாம் என்று முடிவு செய்தனா.

கதிர் சஞ்சனாவின் அறைக்குவந்து “ உனக்கு பிடிச்சத வாங்கிக்கோ” என்று தன் கிரெடிட் கார்டை அவள் கைகளில் திணிக்க

அவளோ “நான் உங்ககூடவே இருக்கேன் கதிர் அத்தான். அத்தை மட்டும் கடைக்கு போகட்டும். என்னால உங்கள தனியாவிட்டு போக முடியாது” என்று கொஞ்ச

சிரிப்புடன் “ம்கூம் அப்ப நான் உன் கூடவே வரலாம்னு நினைச்சேன் வேணாமா” என

“ஐய் ஜாலி நீங்களும் வர்றிங்களா” என்று குதித்து சந்தோஷப்பட

அவன் விஷமமாக “வரேன் வந்தா எனக்கு என்ன பரிசு தருவ” என்று கேட்க

அவள் அப்பாவியாக “உங்களுக்கு இல்லாததா அத்தான். என்ன வேணும் கேளுங்க அத்தான்?” என

அவன் தன் உதட்டைக் காட்டி முத்தம் கேட்க,

“ச்சீசீ போங்க அத்தான்” என்று சிணுங்கிக் கொண்டே அவள் உதட்டில் தராமல் அவன் கன்னங்களிலே முத்தம் கொடுத்தாள்.

“சரி இப்போதைக்கு இது போதும். அப்புறம் இங்க கண்டிப்பா தரணும்” என்றுவிட்டு அவளை ரெடியாகி வரச்சொல்லி அவனும் அவர்கள் உடன் கடைக்கு கிளம்பிச் சென்றான்.

நகைகள் எல்லாம் வாங்கிவிட்டு துணிக்கடைக்குச் செல்ல ‘ஏன்டா இவங்க கூட வந்தோம்’ என்று தோணும் அளவிற்கு அவர்கள் கடையையே தலைகீழாக புரட்டிப்போட

அவன் சஞ்சனாவிடம் தான் காரில் இருப்பதாகவும் அவர்கள் முடித்ததும் தன்னை அழைக்குமாறு சொல்லிக் கீழே வந்தான்.

அனைவருக்கும் உடைகள் வாங்கிவிட்டு அவர்கள் வர அவர்களை அங்கேயே நிற்கச் சொல்லி விட்டு சஞ்சனா பார்க்கிங்கில் இடமில்லாததால் வெளியே நிறுத்தியிருந்த அவர்களது காரைத்தேடினாள்.
அவர்கள் கார் ரோட்டுக்கு அந்தப் பக்கம்; நிற்பதைப் பார்த்து

மீனாட்சியிடம் “நீங்க இங்கயே இருங்க அத்தை” என்று சொல்லி

சாலையை கடக்க முயற்சிக்க கதிர் சஞ்சனாவைப் பார்த்து காரிலிருந்து இறங்க, அவளுக்கு எதிர்ப்புறத்திலிருந்து வந்த லாரி அவளை அந்த இடத்திலே அடித்து தூக்கிப் போட்டது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலே அவள் இறந்தாள்.

அதனை நேரில் பார்த்த மீனாட்சி அதிர்ச்சியில் மயங்கி விழ அவனுக்கு நடந்த சம்பவங்களைப் பார்த்தும் நம்ப இயலவில்லை.

பின் சுதாரித்து மீனாட்சியையும் சஞ்சனாவின் உயிரற்ற உடலையும் எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல அங்கே சஞ்சனா இறந்துவிட்டதை சொல்லி மீனாட்சியை மட்டும் அட்மிட் செய்துக்கொள்ள விபத்து என்பதால் சஞ்சனாவின் உடலை பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.

அவனும் அவள் உடலோடு அரசுமருத்துவமனைக்குச் சென்று அனைத்து பார்மாலிடிசையும் முடித்து வீட்டிற்குக் கொண்டு சொல்லாமல் அவள் உடலை அங்கேயே தகனம் செய்து சென்னைக்கு புறப்பட்டவன் தான் பின் இப்போது வான்மதியை பார்த்த அன்று தான் மதுரைப் பக்கமே வந்தான்.

சஞ்சனா இறந்த துக்கத்திலேயே சில மாதங்களில் அவள் அன்னையும் இறந்துவிட்டார்.

சஞ்சனா இறந்து ஒரு மாதம் வரை மீனாட்சி ஹாஸ்பிட்டலில் தான் இருந்தார்.

தான் தூக்கி வளர்த்த குழந்தை தன் கண்முன்னாலே துடிதுடித்து இறந்ததை அவரால் தாங்கவே இயலவில்லை. அதற்கு எல்லாம் கதிரின் ஜாதகமே காரணம் என்று நினைத்தார். எனவே கதிரின் மேல் கோபத்தில் இருந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல இதில் கதிருக்குக் தான் மனவருத்தம் அதிகமாக இருக்கும் என்ற புரிந்துக்கொண்டு இன்றைய கதிரின் நிலையை கண்டு கவலைக் கொண்டார்.

என்ன இருந்தாலும் தான் பெற்ற பிள்ளை இப்படி ஏனோ தானோவென்று இருக்கும் நிலையை பார்த்து அடிவயிறு கலங்கியது.

தன் வம்சம் விருத்தியடைய வேண்டும் என்று அவனுக்கு எப்டியாவது கல்யாணம் செய்திட முடிவெடுத்தார். ஆனால் கதிர் தான் எதற்கும் மசியாமல் வேலையை வடஇந்தியாவிற்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.

பின் இப்போது தான் ஆறுமாதங்களுக்கு முன்பு சென்னைக்கு பணிமாற்றலில் வந்தான்.
அதற்குப்பின் வான்மதியோடு கதிரின் திருமணத்திலிருந்து இப்போது வரை நடந்தவைகள் அனைவருக்கும் தெரியும்.

மேலும் மூன்று மணி நேரம் கழித்தே வான்மதிக்கு மயக்கம் தெளிய டாக்டர் பரிசோதித்துவிட்டு வந்து,
“ஒன்னும் பிரச்சனையில்ல. கொஞ்ச நேரம் நல்லா தூங்குனா சரியாயிரும். நாளைக்கு வரைக்கு டிரிப்ஸ் போட்டுக்கங்க. ரொம்ப வீக்கா இருக்காங்க. நல்ல சத்தான உணவு கொடுங்க சீக்கிரம் சரியாயிரும்” என்ற சொல்லவும் தான் அவர்கள் அனைவருக்கும் உயிரே வந்தது.

வான்மதியை வேறொரு அறைக்கு மாற்றி அவளைப் பார்க்க அனுமதி தரவும் உள்ளே சென்று ஒவ்வொருவராக பார்த்து விட்டு வந்தனர்.

Advertisement